நக்சல்பாரி  இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் தோழர் எல். அப்புவின் மரணத்தைப்போலவே மறைக்கப்பட்டுவிட்டது அவரின் புரட்சிகர தியாக வரலாறும். மகத்துவம் மிகுந்த அவரின் தியாக வாழ்வு குறித்தே இந்த சிறு குறிப்பு.

கோவையை பூர்வீகமாமக் கொண்டவரான தோழர் அப்புவுக்கு அற்புதசாமி என்பதே இயற்பெயர். அற்புதசாமி பிறகு அப்புவாக மாறினார். தந்தையார் பெயர் லியோ என்பதாகும். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அவர் இளமைப்பருவந் தொட்டே பெதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர்.1958 வாக்கில் கோட்டை மேட்டில் கிருத்துவர் வாழும் பகுதியில் 'இக்பால் மன்றம்' இஸ்லாமியர் வாழும் பகுதியில் 'மக்கள் மன்றம்' என் இரண்டு மன்றங்கள் இருந்தன. அங்கு பல இளைஞர்களுடன் உலக நடப்புகளையும் சமகால அரசியலையும் பற்றி அப்பு போதித்தும்,விவாதித்தும் வந்தார்.

appu and balan

தொழிற்சங்களில்....

தோழர் அப்பு முனிசிபல் தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம் மில் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களில் பங்கெடுத்து அவற்றுக்கு முன்னணி பொறுப்பாளரானார். தோழரின் மனதிடம் காரணமாகவும், விசாலமான அரசியல் பார்வை காரணமாகவும் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே தொழிற்சங்கம் தொடர்பான இயக்கப் பணிகளில் தேர்ந்தார்.

நிலமீட்சிப் போராட்டம், பஞ்சாலைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கி சிறை சென்றார். அவர் மாநில அளவில் முன்னோடியான தொழிற்சங்க செயல்பாட்டாளராக வளர்ச்சியடைந்தார்.அவரின் நினைவு கூறத்தக்க முக்கியப் போராட்டம் என்பது  1961ம் ஆண்டில் தோழர் சீனிவாசராவ் தலைமையில் நிலச் சீர்திருத்தம் கோரி கோவையில் இருந்து சென்னைவரை நடைபெற்ற நடை பயணத்தில் அப்பு தனது 20 தோழர்களுடன் முக்கிய பொறுப்பாளராக கலந்து கொண்டார் என்பதே.இதுகுறித்து அவருடன் இருந்த பலதோழர்கள் இதுற்றி சிலாகித்து இருக்கிறா்கள்.

கட்சி மீது அதிருப்தி

இந்நிலையில்  சி.பி.ஐ. கட்சியின் 1951ம் ஆண்டைய கல்கத்தா கட்சி மாநாடு தொடங்கி, கட்சியின் மையக்குழுவால் முன்வைக்கப்பட்ட திருத்தல்வாதக் கோட்பாட்டுகளினால் கட்சியில் உள்ள புரட்சிகரமான சக்திகள் தொடர்ந்து அதிருப்தி அடையத் தொடங்கினர். அணிகளின் எந்தவித கருத்துக்களுக்கும் காதுகொடுக்காமல் மதுரை மாநாடு, அமிதசரஸ் பேராயம், விஜயவாடா பேராயம்  என;  கட்சியின் தியாகத்தையும் லட்சிய உணர்வையும் மெல்ல மெல்ல டாங்கே, அஜய்கோஷ் உள்ளிட்ட திரிபுவாத குப்பல்கள் பலிகொடுக்கத் தொடங்கினர். அப்பு உள்ளிட்ட கட்சியில் உள்ள பெரும்பகுதியான தோழர்கள் கட்சியின் கீழ்கண்ட நிலைபாட்டில் அதிருப்தி அடைந்திருந்தனர்.

1.'இந்தியாவின் சுதந்திரம் போலியானது'என்ற தோழர்.  இராஜேஸ்வரராவ் கால 1950 ம் ஆண்டைய பழைய வரையரைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு 1955-ம் ஆண்டுக்குள்ளாக சி.பி.ஐ. இந்தியாவை முழு சுதந்திரம் படைத்த இறையாண்மையுடன் கூடிய நாடு என ஏற்றுக் கொண்டது.

2.தரகு, தேசியம் என எந்த வரையரையும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு முதலாளிகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என வகைபடுத்தியது.

3.மக்கள்  ஜனநாயகத்தை அடையவும், பிறகு சோசலிசத்தை எட்டவும் பராளுமன்ற பாதையை தீர்மானித்தது.

கட்சியின் இப்போக்கினால் மெல்ல மெல்ல புகையத் தொடங்கிய உட்கட்சிப் பூசல் 1962ம் ஆண்டு வாக்கில் வெடிக்கத் தொடங்கியது.  101உறுப்பினர்களைக்  கொண்ட ஒன்றுபட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களில் ஒருவராக அப்பு அப்போது இருந்தார். அப்பு, கட்சியின் திரிபுவாதப் போக்கை கட்சி அணிகள் மத்தியில் கொண்டுபாேகும்  தீவிர முயற்சியில் செயல்பட்டு வந்தார். 1962 ம் ஆண்டு பாலக்காடு சென்று ஏ.கே. கோபாலனைச் சந்தித்து அதிருப்தியாளர்கள் சார்பாக ஓர் பத்திரிக்கையை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். அப்புவுடன் (பின்னாளில் என்.சி.பி.எச்.  மேலாளராக பொறுப்பு வகித்த) தோழர். கீதானந்தனும் உடனிருந்தார். ஏ.கே.கோபாலன் சாத்தியமிருந்தால் பத்திரிக்கை நடத்துங்கள் என ஆலாசனை வழங்கினார். கோவை திரும்பிய தோழர்.அப்பு; ராமுண்ணி, கண்ணாக்குட்டி , பூபதி, உள்ளிட்ட தோழர்களின் உதவியோடு பத்திரிக்கைக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டார். 

பத்திரிக்கை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான் நேரு தலைமையிலான இந்திய அரசு இந்திய- சீனப்போரில் தேசதுரோகம் இழைத்துவிட்தாகக் கூறி கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது.

நாடு முழுவதும்  சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தோழர் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த தோழர் அப்பு, வெளிவந்த பிறகு  கோவை தொழிலாளர்களிடம் நிதி திரட்டினார். அவரின் முன்முயற்சியால் 'கோவைத் தொழிலாளர் வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்' எனும் வாசகத்தோடு தீக்கதிர் வார இதழ் 1963-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதியன்று அப்புவை ஆசிரியராகக் கொண்டு  வெளிவந்தது.  சி.பி.ஐ. அமைப்பு ரீதியாக பலமுறை பத்திரிக்கையை நிறுத்தக் கோரியும் அதை ஏற்காது அப்பு தொடர்ந்து நடத்திவந்தார்.

சி.பி.எம். தோன்றுதல்...

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி  போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்த்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப கலகத்தாவில் 1964- ம்ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. "ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி" யாக விளங்கிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு  தொடங்கியது பேராயம். 

appu balan memorialசி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகமும், புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களின் உணர்ச்சி மயமான உரைகளும் ஆக்கபூர்வமான தோழர்கள் பலரையும் அதில் இணைத்தது. ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதிய கட்சியின்( தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி.ஐ எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடு தொட்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படியே சி.பி. ஐ.(எம்) என ஆனது.) தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும், மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது. மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்மூலம் ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி.ஐ.யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த அப்பு போன்ற தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்பு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.  தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கூட்டணி மூலம்  தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா  மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, இ.எம்.எஸ் பாக்கிஸ்தானுக்கு எதிராக போர்செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம் செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம். மின் மீது தோழர் அப்புவுக்கும் இதர புரட்சிகரத் தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம் மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபு வாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். தோழர் அப்புவின் தலைமையில் உட்கட்சியில் நவீன திரிபுவாதம்  குறித்தும் அதை அம்பலப் படுத்தியும் போராடினர்.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி....

தோழர்களின் உட்கட்சிப் போராட்டம் இப்படியிருக்க இந்தச் சூழலில்தான்  மேற்கு வங்கத்திலிருந்து செவி குளிரும் சேதியொன்று ஒட்டுமொத்த இந்திய புரட்சியாளர் உள்ளங்களிலும் வசந்தத்துக்கான இடி முழக்காமாய் இறங்கியது. அதுதான் நக்சல்பாரி.

1. நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய நான்குமே இந்திய மக்களின் அடிப்படையான எதிரிகள்.

2. உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசு யந்திரத்தை தூக்கியெறிய  ஆயுதப்போராட்டம் ஒன்றே தீர்வு.

3. பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம். 

4.திரிபுவாதிகள் மற்றும் நவ திரிபுவாதிகளின் மக்கள் விரோதப் போக்கை சித்தாந்த ரீதியில் உறுதியாக அம்பலப் படுத்துவோம்.

என அது அழைத்த போது பெரும் புரட்சி வேட்கையோடு தோழர் அப்பு அதன்பால் ஈர்க்கப்பட்டார். இது தொடர்பாக சி.பி.எம். முடன் நடைபெற்ற விவாதத்தின் போது எவ்வித ஜனநாயக மத்தியத்துவமும் அற்று அப்பு உள்ளிட்ட பல தோழர்கள் கட்சியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கட்சியில் இருந்த மாவட்டக் குழு உறுப்பினர்களில் 21 பேரில் 14 பேர் நீக்கப்பட்டனர். பல கட்சி அமைப்புகள் கலைக்கப் பட்டன.

இந்நிலையில்தான்   தோழர் அப்பு  கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முக்கியக் கதாநாயகரான தோழர்  சாரு மஜூம்தாரைச் சந்தித்தார்.  நவம்பர் 11,1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் உன்னதம் குறித்து  உரையாற்றினார். அதைத் தொடர்ந்த நாட்களில் " கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு"விலும் பங்கெடுத்தார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி.ஐ.(மா.லெ) மையக் குழுவிலும் தமிழகத்திலிருந்து ஒரே ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு

கல்கத்தாவிலிருந்து அவர் வந்தவுடன் பழைய கட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்த, கட்சியின் அராஜகப் போக்கினால் நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் முயற்சியால் 1968 மார்ச் மாத வாக்கில் 16 தோழர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கினார். ஏழத்தாழ ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மற்றும் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன.தோழர் சாருமஜும்தார் தமிழகத்துக்கு வந்து ஒருங்கிணைப்பு தொடர்பான பணிகளைச் செய்ததை இன்றைக்கும் மூத்த நக்சல்பாரி தோழர்கள் நினைவு கூர்கிறார்கள்.

தமிழ் மாநிலஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிட்ட அறிக்கையில் "உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படும் அரசு எந்திரத்தை உடைத்தெறியாமல்  முதலாளித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தைக்  கைப்பற்ற முடியும் என்று எண்ணுவதைக் காட்டிலும் வேறெந்த மாயையும் இருக்க முடியாது. வர்க்க ஆட்சியின் கருவிகளை உடைத்தெறிவதற்கான குருக்குவழி வேறெதுவும் இல்லை. மாசேதுங் சிந்தனையால் வழிநடத்தப் படுகின்ற நக்சல்பாரிதான் இந்தியப் புரட்சியின் பொதுப் பாதையாக விளங்குகிறது. இந்தியப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான பாதையும் அதுவே" என அறிவித்தது. தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழுவானது 'புரட்சிக்கனல்' எனும் பத்திரிக்கையை நடத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.

நக்சல்பாரிப் பாதையை ஏற்று தமிழக ஒருங்கிணைப்புக் குழுவும் பல்வேறு  மக்கள் விரோத சக்திகளை களையெடுக்கும் வேலையைக் கையாண்டததோடு பலஇடர்களுக்கு மத்தியிலும் ஒரு வலிமையான புரட்சிகர கட்சியினை கட்டியமைக்கும் மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. 

தோழர் அப்பு1970 ஆண்டு அக்டோபர் மாதம் பீகாரில் நடக்கவிருந்த மையக் குழுவின்அரசியல் தலைமைக குழு கூட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தார். இது தொடர்பா அவர் செயல் பட்டுக் கொண்டிருந்த போது வேலூரில் ஓர் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது நிலப்பிரபுத்துவ கைகூலிகளான  காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு  எவ்வித தடயமும் இல்லாமல் கொலைசெய்யப்பட்டு விட்டார். தோழர் அப்புவின் படுகொலையை வெளிப்படையாக அறிவித்தால் மக்களிடம் எதிர்ப்பு நேரிடும் என்று கருதிய காவல்துறை அதை மூடி மறைத்துவிட்டது.இன்றளவும் காவல் துறை ஆவணங்களில் காணாமல் போனதாகவே பதிவு உள்ளது.

இறுதியாக...

நச்சல்பாரியின் விதைநெல்லாய் விளங்கும் தோழர் அப்புவின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைய வளரும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும். கம்யூனிஸ்டுகளுக்கு சுயசரித்திரம் ஒன்றும் பெரிதில்லைதான் என்றாலும் ஓர் இயக்கத்தின் முதுகெலும்பாய் வீற்றிருக்கும் அப்புவின் வாழ்வினை விரிவாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நக்சல்பாரியின் நியாயம் குறித்தும் அதன் சாத்தியப்பாடு குறித்தும் அவரின் வாழ்கை பேசும்.புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் பல தோழர்களும் இதுநாள் வரையிலும் அப் பணியை செய்யாது இருப்பது வேதனை மிக்க ஒன்றாகும்.

ஒருபக்கம் நக்சல்பாரி தோல்வி அடைந்து விட்டது என்றும், அது தவறான தத்துவமாகி விட்டது என்றும் காலம் கனிவதற்கு முன்பாகவே முந்திக்கொண்டது என்றும்  நிழலுக்கு ஒண்ட வந்தாேரெல்லாம் இன்றைக்கு பக்கம் பக்கமாக எழுதிக் குவித்தாலும், (இது குறித்து இன்னொரு பதிவில் பேசுவோம்) ஒன்றாய் பத்தாய் நக்சல்பாரி இயக்கம் சிதறுண்டு கிடந்தாலும் இன்றளவுக்கும் விடுதலைக்கு நெருக்கமாய், தியாகத்தின் வடிவமாய் இதைவிடவும் இந்த உலகமய சூழலில்  இந்திய மக்களின் விடுதலைக்கு வேறு என்ன பாதை இருக்க முடியும்?

நக்சல் பாரிகள் தேச பக்தர்கள்!

- பாவெல் இன்பன்

Pin It