அடிப்படைவாதங்களை கேள்வி கேட்கையில் எல்லாம் ஒரு மாற்றம் நிகழும். ஆனால் அந்த மாற்றத்துக்கு கொடுக்கும் விலை சில போது உயிராகவும் இருக்கும்.- கவிஜி 
 
ஆதி இசை 
**************
அடிக்க அடிக்க 
அதிரும் பறை 
தலைமுறை கோபம் 
 
kalai ilakkkiya perumanramஎன்றொரு கவிதை இருக்கிறது. அப்படித்தான் இருந்தது. 
 
"நிகர்" தோழர்கள் இசைத்த பறையின் அதிர்வு. பரவச நிலை. மனமெங்கும் ஊடாடும் அசைவுகளின் நிமித்தம் கலையின் கண்கள் எங்கும்.......எங்கெங்கும் திறந்து கொண்டு உரிமையை இசைத்தன. சுற்றி இருக்கும் மாயைகளை அசைத்தன. ஆதி இசையின் அடிநாதம், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை என்பதே. அதிர்வலைகள் அங்கே எண்ண அலைகளில் கலந்ததை அதிரூபத்தில் ஆக்ரோஷமாக உணர முடிந்தது. 
 
தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் - கோவை மாவட்டம் - 9 வது மாநாடு  - ஆதி இசையின் அதகளத்தில் தான் ஆரம்பித்தது. 
 
சிவப்பு சிந்தனை மனிதர்கள் நிறைந்தார்கள். ஒவ்வொரு முகத்திலும் மாற்றத்துக்கான தேவை குறித்தான கவலை இருந்தது. பாசிச அரசியல் முறைமையை எதிர்க்கும் தேடல் இருந்தது. எதையாவது சரி செய்து விட வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
 
கல்வி... சுகாதாரம்.... வேலைவாய்ப்பு.... அரசியல் அடிப்படைவாதம்......மானுட அடிப்படை தேவை.......உழைப்பின் வசீகரம்......நிஜத்தின் தோலுரிப்பு.....பெண்களின் பாதுகாப்பு...... பெண்கல்வி..... தமிழ் மொழியின் தீவிரம்......மாற்றத்தின் வழி நின்று பேசும் கருத்தியல்கள்... தேவையில்லாத சாதி என்ற ஆணி புடுங்குதல் பற்றி..... சமயம் என்பதின் தேவையும்.. அணுகுமுறையும் என்று ஒரு நாள் முழுக்க மாநாட்டில் பேசியதெல்லாம்.. காலத்தின் கட்டாயத் தேவைகள்.
 
முழு நாளும் தொடர்ந்து நிகழ்வுகள் இருந்த வண்ணம் இருந்தன. சிறந்த சிந்தனையாளர்களின் பேச்சு அடுத்தடுத்து நம்மை கட்டி போட்டன. மதிய உணவுக்கு பின் (சோறு கொஞ்சம் வெந்திருக்கலாம் - ரசம் நன்றாக இருந்தது) நடந்த கவியரங்கம்.. நாடகம்.... ஜனசக்தி குழுவின் நடனம்......அதன் பிறகு "தோழர் பா ப ரமணி" அவர்களின் "மாநாட்டின் தீர்மானம் குறித்த அறிக்கை" அதன் பிறகு இறுதியில் "அய்யா ரவீந்திரன் பாரதி" அவர்கள் பேசிய உரை என்று அறிவுக்கு தீனி போட்ட பகுதிகள் ஏராளம். அறிவுப் பசி கொண்டோருக்கு அடுக்கடுக்காய் ஒரு நாளின் காலம் துண்டாக்கி துண்டாக்கி அமுதம் செய்யப்பட்டது, சிவப்பு சிந்தனைக்காரர்களுக்கு துண்டிலெல்லாம் வானம்பாடி. 
 
வண்ணங்கள் சூழ் உலகு. வாழ்வின் மீதான ஈர்ப்பு கூடும் நிகழ்வு இது.
 
நிகழ்வில் இருந்து சில குறிப்புகள்:
***************************************************
K.S அவர்களின் வரவேற்புரையோடு மாநாடு, சன்மார்க்க அரங்கினுள் தொடங்கியது. வழக்கம் போல வாழ்வின் சீற்றங்கள். 
 
அதன்பிறகு V.S அவர்களின் தலைமையுரை. 
 
அவருக்குள் நிறைந்திருக்கும் கோவை மண்டல வாழ்வியல் வரலாறு..... ஒரு நூலகம் போல. எப்போது மேடை ஏறினாலும்.. அவர் கடந்து வந்த சித்தாந்தங்களை நம்மை போன்ற புதிய / இளைய தலைமுறைக்கு மிக நுட்பமாக கடத்தி விடுகிறார். கேட்டலும் படித்தலே. அலங்காரத்தன்மை ஒருபோதும் அவரிடம் நான் கண்டதில்லை. ஆனால் ஆழமாக, தேவையான கருத்துக்களை ஒவ்வொரு முறையும் காண்கிறேன். அத்தனை வரலாற்று நிகழ்வுகள் அவருள் சேமிக்கப்பட்டிருக்கிறது. எளிமையின் வாயிலாக நிஜம் உரக்க சொல்லும் அய்யாவின் பேச்சு மாநாட்டின் வழி நடத்தலுக்கு அற்புதமான ஓர் ஆரம்பமாக இருந்தது.  
 
அதன் பிறகு தொடக்கவுரை வழங்கியவர் "தோழர் முஸ்தபா".  அடர்ந்த மீசையில்..... முறுக்கி இருந்தது தமிழ். தமிழ் வண்ணத்தில் மிளிர்ந்து பிழிந்தது சொற்கள்.
 
"மண்டோ"வின் "திற" கதையைப் பற்றி பேசினார். ஏற்கனவே அந்த கதை தீராத வடுவை திறந்து கொண்டேயிருப்பதை அறிந்திருந்த போதிலும் மீண்டும் ஒரு முறை அதிரவும் அதன் நீட்சியில் அப்படியொரு சம்பவம் இனி எங்கும் எப்போதும் நிகழக் கூடாது என்ற பரிதவிப்பும் நம்மை அலைக்கழித்தது. மண்டோவின் கதைகள்.. அந்த காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் தேவையாய் இருப்பதை உறுதி செய்தது அய்யாவின் பேச்சு. இன்னமும் பெண்களை பணைய பொருளாகவே வைத்திருக்கும் சமூகத்தின் மீது மூன்றாம் கண் சுருங்க வெறிக்க பார்க்க வைக்கிறது மண்டோவின் தேவை.
 
கோவையின் நீர் வளத்தை சூயஸ் நிறுவனத்துக்கு தாரை வார்த்த கையாலாகாத்தனத்தை பற்றி பேசுகையில்... கோவையின் நீர் வளம் பற்றிய எதிர்காலம் சற்று கொதிக்கத்தான் செய்தது. நீரில்லாத கோவையை நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. பயங்கள் வாயிலாகவாவது கேள்விகள் பிறக்கட்டும்.
 
பள்ளிகளில் சாதி குறியீடாக பிள்ளைகள் கையில் வண்ண கயிறு கட்டுதலுக்கு சாக்கு போக்கு சொல்லி அனுமதியும் அளித்த அரசை கழுத்திறுக்கி கொன்றால் தான் தகும். தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று உள்ளே சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளி சேர்வதற்கு சாதி சான்றிதழ் கேட்கும் கேடுகெட்ட அரசியலமைப்பு தான் நமக்கு வாய்த்திருக்கிறது. சாதிப்பெருமை பேசும் பெற்றோர்களின் பிள்ளைகள் கண்டிப்பாக நல்ல சமூகத்துக்கு தூண்களாக இருக்க முடியாது. புண்களாகத்தான் இருப்பார்கள். பெரியவர்கள் மனம் மாற வேண்டிய காலம் இது. ஆற அமர உட்கார்ந்து யோசித்தால் சாதியில் ஒன்றுமே இல்லை என்று தெரிந்து விடும். நீங்கள் அணியும் உள்ளாடையை உங்கள் சாதிக்காரன் மட்டுமே செய்திருக்க முடியாது. உள்ளாடையிலேயே வேறு சாதிக்காரன் தான் இருக்கிறான் என்றால்... மற்றதை நீங்களே யோசியுங்கள். 
 
காஷ்மீர் பிரச்சனை பற்றி பேசினார். அது பற்றிய புரிதலே இன்னமும் பெரும்பாலைய இந்திய மக்களுக்கு போதுமானதாகயில்லையோ என்ற அச்சம் நம்மைக் கொள்வதை இதுபோன்ற கருத்தரங்குகள் தான் வெளிக்கொணர்கின்றன.
 
மும்மொழி திட்டத்தின் நோக்கம், எதுவென்று அவர்கள் சொல்கிறார்களோ அதுவல்ல அது என்பது தான் நிஜம். நிஜம் புரிதலுக்கு சற்று கூடுதல் கடினமாக இருக்கும் என்பதை யதார்த்தத்தின் மீறலில் நின்றும் புரியலாம். ஹிந்திக்காரனுக்கு மூன்றாவது மொழி என்ன என்ற கேள்வியை அவர்கள் கேட்டுக்கொள்ளவே இல்லையா...? 
 
"எங்களூர் தூண்களில் எல்லாம் ஹிந்திக்காரன் கால்கள்"  
 
தமிழகம் முழுக்க நீக்கமற நிறைந்திருக்கும் ஹிந்திக்காரன்களில் எத்தனை பேர் இங்கு வருகையில் தமிழ் புலமை பெற்று வந்தார்கள்.... என்ற கேள்வியை சற்று நுணுக்கமாக உற்று நோக்கினால்.. ஹிந்தி நோக்கம் திணித்தல் என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.  எம்மொழிக்கும் தமிழ் எதிரியல்ல. தமிழையே திணித்தாலும் தமிழுக்கு ஒவ்வாது என்பது தான் தமிழின் உயர்வு.
 
அடுத்து வாழ்த்துரை வழங்கிய தோழர் "தங்க முருகேசன்" அத்தி வரதனை வறுத்தெடுத்தார். 40 வருடங்களுக்கு பின் நயன்தாரா தரிசனம் அவருக்கு கிடைத்ததில் ஆன்ம திருப்தி பூசாரிகளுக்கு. அந்த பூசாரி நின்று கொண்டே நயன்தாரா முன் மண்டியிட்ட காட்சிக்கு வரதனே சாட்சி. எங்கு திரும்பினும் காவி மாயம் என்பதை வெளிப்படையாகவே பேசினார். இந்த பாசிச ஆட்சிக்கு பயந்து நமக்குள்ளாகவே பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. வெளியேயும் பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம். கொன்று விடுவார்கள் என்று பயந்தால் கொன்று தான் விடுவார்கள். வென்று விடுவோம் என்றே நினைப்போம். நினைப்பு தான் வாழ்வு. 
 
நல்ல அடிமைகள் சிக்கியிருக்கிறார்கள். அடிமைகளுக்கெல்லாம் அடிமைகளும் நம்மை ஆட்சி செய்யும் அவர்களாகவே இருக்கிறார்கள். அடிமைத்தனம் ஒரு வகை சுகம். அது ஒரு வகை சோம்பேறித்தனம். அது ஒரு வகை பாட்டம் கலவியல் முறை. அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் சிவப்பு சிந்தனைக்காரன் மிகப்பெரிய தேசத் துரோகியாக சித்தரிக்கப்படுகிறான். சித்தரிப்புகள் எப்போதும் பெரிதாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். 
 
"இப்போதிருக்கும் கல்விக் கொள்கை 450 பக்கத்துக்கு மேல். படித்து தொலைத்தோம். உருப்படியில்லாதது" என்றார். 
 
இருந்திருந்தால் நாடு உருப்பட்டிருக்குமே என்பது தான் சாட்சி.
 
"ஊரெல்லாம் சாராயம்.... உல்லாச வியாபாரம்...."
 
என்று, மதுவுக்கு எதிராக வெண்கலக்குரலில் வீரிய வரிகளை பாடலாக்கி பாடினார் "தோழர் ராஜ்". குடியை கட்டுக்குள் வைத்திருந்த போது கள் மனோதிடத்தைக் கொடுத்தது. இன்று குடியின் அர்த்தம் மாறி விட்டது. குடிப்பவனின் மனநிலையும் மாறி விட்டது. மாற்றி விட்ட அரசுக்கு கல்லா கட்டுவது தான் முதல் தொழில். மணல் கொள்ளைக்கு உதவுவது.... மாபியாவுக்கு உதவுவதெல்லாம் உப தொழில். கள் இறக்க அனுமதிக்காக அரசு மதுபானத்தை விற்பதெல்லாம் வடிகட்டிய கொடுஞ்செயல். கொடுஞ்செயலை கூறு போட்டுக் கொள்வது குடிப்பவனுக்கு ஜகஜம்.
 
அடுத்து தோழர் "சுந்தரம்" பேசினார்.
 
நமக்கெல்லாம் இந்த அரசு பெரும் சவாலாக இருக்கிறது என்று பதைபதைப்போடு பேசினார். நம் கலைஞர்கள் நிறைய இளைஞர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். நல்ல நாட்டை கட்டி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் நாடு கலை இலக்கிய மன்றத்திற்கு உண்டு என்றார். பொதுத்துறை என்பது இந்தியாவின் சொத்து. அதை ஒருசாரர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. 
 
அடுத்து தோழர் "ராதாகிருஷ்ணன்" பேசினார்.

இந்த மாநிலமே ஒரு சிறைச்சாலைக்குள் இருப்பதாக கூறினார். 
 
இன்னமும் சுதந்திர இந்தியாவில் கூண்டுக்குள் நின்று தானே கொடி ஏற்ற முடிகிறது. அது தான் சாட்சி.....நம் நாட்டின் இலக்கு இன்னும் கூராக்க படவில்லை என்பதற்கு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்திய தத்துவம். அதை கொலை செய்யும் பாசிச அரசின் ஒற்றை ஆட்சி முறை கேலிக்கூத்து. அதே நேரம் அபாயகரமான வளையம். ஒற்றை ராணுவம்.. ஒற்றை முறை... ஒற்றை மொழி என்றால்...  அது இந்தியா போன்ற பல இனங்களைக் கொண்ட பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டுக்கு எப்படி பொருந்தும்......? 
 
நிறை- குறை 
******************
 
"ஜீவா" என்ற மிகப்பெரிய ஆளுமையின் எண்ணத்தில் உதித்த இந்த கலை இலக்கிய பெருமன்றம் காலத்தின் அவசியம். 
 
அறிவார்ந்த கருத்துக்களை அவரவர் அறிவின் வழி நின்று பேசியதெல்லாம் பல புத்தகங்களை படித்தது போன்ற நிறைவு. வாழ்வியலின் தத்துவத்தை பறை சாற்றும் இயக்கம் இது என்பதையும் இதன் சேவை இன்னும் இன்னும் இந்த சமூகத்துக்கு தேவை என்பதையும்  பறந்து பறந்து கூற வேண்டிய பொறுப்பு ஒரு படைப்பாளியாக இருக்கிறது என்று நம்புகிறேன். நாம் யாரென்று வெளிப்படையாக அறிவிக்காமல் ஒரு பப்பும் வேகாது என்பது தான் சிவப்பு சிந்தனைக்காரனாக புரிந்து கொள்ள வேண்டிய காலத்தின் நியதி. எந்த ஒரு நாடு ஏற்றுமதியை விட இறக்குமதியை அதிகம் செய்கிறதோ அது அழிவின் ஆரம்பத்தில் இருக்கிறது என்று பொருளாதார தத்துவம் சொல்கிறது. நம் நாடும் அத்தகையதொரு விளிம்பில் தான் நிற்கிறது. அலைபேசி சந்தைக்கு பலி போன நாடு நம் நாடு என்றால் ஆம் என்றே ரிங் அடிக்கும்.
 
நிறைய இளைஞர்கள் வந்திருந்தது மகிழ்வான விஷயம். ஆனால் அவர்களுக்கான விருது பகுதி முடிந்தவுடன் மதியத்துக்கு மேல் அநேகமாக எல்லாரும் கிளம்பி விட்டதை மிக கடுமையாக சாடுகிறேன். பரிசு, கோப்பை, செர்டிபிகேட் என்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. அதே நேரம் முழு நாள் விழா என்கையில் என்கேஜாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். நமது சித்தாந்தங்களை காலத்துக்கு தகுந்தாற் போல வறட்சியின்றி கொண்டு சேர்ப்பதில் நாம் தொழில் நுட்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது யோசனை. 
 
பரிசுகள் இலக்கல்ல, சமூக மாற்றமே. 
 
கூட்டத்தில், பெண்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. பெண்கள் இல்லாத கூட்டம் ஒரு போதும் வெற்றி அடையாது என்பது வரலாற்று உண்மை. சீரிய சிந்தனை கொண்ட சிவப்பு மனிதர்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கள் கருத்துக்களை நிலை நாட்டி அவர்கள் நம்பும் படியான ஒரு வாழ்வை அவர்கள் முன் வாழ்ந்து காட்ட முடியவில்லையோ என்ற நேர்மையான வலி நிறைந்த கேள்வி எழாமல் இல்லை.
 
பூங்கொத்து 
*****************
41 ஆண்டுகளாக ஒரு பால்காரர் பாரதிதாசன் பேரவையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் தமிழ் ஒரு போதும் சாகாது என்பதற்கு சாட்சி இது தான். இந்த பெரிய மனிதர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
 
பா மீனாட்சிசுந்தரம் அவர்கள்... இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேச மாட்டாரா என்று ஏங்க வைக்கும் குரலும் உச்சரிப்பும். ஏங்கி நிற்கும் தமிழும் ஆங்கிலமும். இவரைப் பார்த்தாலே மனதுக்குள் ஒரு வகை சந்தோசம் பிறக்கிறது. கும்பிடலாம்.
 
கவிஞர் அம்சப்ரியா..... அற்புதமான மனிதர். இவர் கூட இருந்தாலே கவிதை வந்து விடும். கவிதைகள் ஒரு போதும் உங்களை கை விடாது என்று இவர் சொல்லும் போதே கண்கள் நிறைந்து விடும். கவிதையின் காதலனான இவரோடு அமர்ந்திருந்தது காலத்துக்கும் பொக்கிஷம்.
 
வேண்டுதல் 
*****************
மக்கள் மொழியில் கம்யூனிசத்தை இலகுவாக்க வேண்டும்.... கம்யூனிசத்தையே இலக்காக வேண்டும்...ஆனால் கம்யூனிச முதலாளித்துவம் ஒருபோதும் வந்து விட கூடாது.
 
 - கவிஜி
Pin It