இங்கிருந்து தப்பித்துச் செல்ல எந்த வழியும் இல்லை, நீங்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் பார்த்தே ஆக வேண்டும். உங்களின் உடல் நடுங்கினாலும், கண்கள் வலியால் துடித்தாலும், உங்களின் சுவாசம் தடுமாறினாலும் நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். தலை துண்டித்துக் கொல்லப்படுவர்களையும், குண்டுகளால் பிய்த்து எறியப்பட்டு தெறித்துக் கிடக்கும் உடல்களையும், பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்களால் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு வீசி எறியப்பட்ட குழந்தைகளையும், துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டவர்களையும், இன்னும் தினம் தினம் நீங்கள் இந்த உலகில் மிகவும் நேசிக்கும் மனிதர்களின் மரணத்தையும் நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். இதில் எந்த தயவு தாட்சண்யமும் யாருக்கும் கிடையாது.

srilanka blast 645மரணம் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்று விடுகின்றது. ஆனால் மரணம் ஒரு நாளும் ஒரு தேர்ந்த திருடனாக இருப்பதில்லை. அது தனது தடயங்களை தாராளமாக விட்டுவிட்டே செல்கின்றது. மரணம் திருடிய வீடுகள் தனியாகத் தெரிகின்றன. ஒப்பாரி சத்தங்கள் ஓய்ந்த பின்னும் அந்த வீடுகளில் இருந்து வரும் விசும்பல் காற்றில் கலந்து, காலம் கடந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றது. மரணம் விழுந்த வீடுகளை கடந்து செல்லும்போதெல்லாம் பல முறை நம்மால் அவதானிக்க முடிந்திருக்கின்றது, பிணம் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு விட்டது என்பதை நிரந்தரமாக மறந்து, இன்னும் பிணத்தோடு பிணமாக வாழ்பவர்களை. அவர்கள் தங்கள் மனைவியிடமும், கணவரிடமும், பிள்ளைகளிடமும், நண்பர்களுடனும், காதலர்களுடனும் முடிவற்று உரையாடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

இயற்கையான மரணங்களுக்கும், செயற்கையாக இந்த சமூகம் திணிக்கும் மரணங்களுக்குமான கோடுகள் அவ்வளவு தெளிவாக நமக்குத் தெரிவதில்லை. நாம் எல்லாவற்றையும் ஒன்று போலவே பாவிக்கின்றோம். துர்மரணங்களுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் சதிக் கோட்பாடுகள் சில சமயம் வெளிப்படாமல் அதுவும் மரணித்து விடுகின்றது. எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமல் வாழ்வது எவ்வளவு துயரமானதோ அதைவிட பலமடங்கு துயரமானது எதற்காக சாகின்றோம் எனத் தெரியாமல் சாவது. ஒவ்வொரு நொடியும் நாம் பதற்றமாக வாழ நிர்பந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம், அடுத்த நொடி உங்களுக்கு சொந்தமில்லாமல் போகலாம். அதை உங்களுக்கு சொந்தமில்லாமல் ஆக்க இந்த உலகில் யாரோ ஒருவர் அல்லது ஒரு கும்பல் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கின்றது. அவர்களால் எந்த நேரத்திலும் உங்களது வாழ்க்கை முடித்து வைக்கப்படலாம்.

அவர்களை எப்படி அடையாளம் காண்பது? மனிதர்களைப் போன்றே இருக்கும் அவர்களை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமமான காரியமாக இருந்தாலும் சில குறியீடுகளை உற்று நோக்குவதன் வாயிலாக அவர்களை நீங்கள் அடையாளம் காணலாம். அவர்கள் அல்லா, ஏசு, புத்தன், ராமன் போன்ற குறியீட்டு சொற்களைப் பயன்படுத்துவார்கள். ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தி உங்களின் வறுமைக்கும், பட்டினிக்கும், கந்தலாகிப் போன, சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் இந்தக் கடவுள்கள் தான் காரணமென்று கற்பிப்பார்கள். முதலாளிகளைப் பார்த்தால் மண்டியிட்டு முகமன் செய்வார்கள். அவர்களை துன்பங்களில் இருந்து மீட்டெடுக்க வந்த தேவதூதனாக சித்தரிப்பார்கள். எப்பொழுதும் அமைதியையும், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் தங்களின் மதமே, தங்களின் கடவுளே இந்த உலகில் அளிக்கவல்லது என பிரசங்கம் செய்வார்கள். ஆனால் அந்த அமைதியும், சமாதானமும், நல்லிணக்கமும் ஒரு அடிமையின் விசுவாசமாக, சாமானிய மக்களை ஒட்டச் சுரண்டி கொள்ளையிடும் லாபவெறியர்கள் மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்.

இதை சரியாக அடையாளம் காணும்போதுதான் நம்மால் நமக்கு எதிராக செயல்படும், அதே சமயம் சுரண்டல் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் மதவாதிகளையும், சாதியவாதிகளையும், இனவாதிகளையும் அம்பலப்படுத்த முடியும். அவர்கள் தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை உங்கள் மனங்களில் விதைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அது உங்களின் சக மனிதர்களுக்கு எதிரான வெறுப்பு என்பதை நீங்கள் உணர முடியாத அளவிற்கு அது உங்களுக்குப் புகட்டப்படுகின்றது. அனைத்துப் பிரச்சினைகளுக்குமான காரணமாக, போலியான மையத்தை உருவாக்கி உங்களை நிஜமான மையத்தை நோக்கி சென்று விடாமல் தடுக்கின்றார்கள்.

உங்களைப் போன்றே ரத்தமும், சதையும், எலும்பும், உணர்வுகளும் உடைய ஒரு மனிதனை உங்களை வைத்தே கொல்லும் அரசியல் எவ்வளவு இழிவானது, மலிவானது, அருவருப்பானது!. மரணத்தின் வலியை விட அந்த மரணத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது எவ்வளவு வலியானது என்பதை உணர முடியாத மிருகங்கள் தான் கடவுளின் அன்பைப் பற்றி உங்களுக்குப் போதிக்கின்றார்கள். மசூதியில் புகுந்து சுட்டுக் கொல்வதும், தேவாலாயங்களில் குண்டுவைத்து மனித உடல்களை சிதறடிப்பதும், ஊருக்குள் புகுந்து சூலாயிதத்தை ஏந்தி நரவேட்டையாடுவதும், சாதியின் பெயரால் உடமைகளையும் உயிரையையும் சிதைப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. உலகம் முழுவதும் தினம் தினம் எதற்காக கொல்லப்படுகின்றோம் என்பதே தெரியாமல் பலர் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் யாருக்காகவோ தங்களின் விலைமதிப்பற்ற உயிரை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்

வெறுப்பு அரசியலின் விலை என்ன? அவை யாருக்காக நிகழ்த்தப்படுகின்றன? மதவாதிகளும், சாதியவாதிகளும், இனவாதிகளும், அரசியல்வாதிகளும் அவர்களுக்கு நிதியளிக்கும் முதலாளிகளும் கொழுக்க, அப்பாவி மக்கள் வேட்டையாடப்படுகின்றார்கள். உங்களின் சக மனிதர்கள் ஆளும் வர்க்கத்தின் நலன்களை காக்க பலியாக்கப்படுகின்றார்கள்.ஆனால் நாம் பிரக்ஞையற்றவர்களாய், அடிமைகளாய் திரும்பத் திரும்ப அவர்களிடமே பலி ஆடுகளாய் மகிழ்ச்சியோடு விரும்பி செல்கின்றோம். அவர்களின் பாசாங்கான, பாசிசத்தை உள்வாங்கிய வார்த்தைகளை பரவசத்தோடு கேட்கின்றோம்.

துப்பாக்கிகளின் சத்தமும், குண்டுகளின் பேரொலியும் யாரோ ஒருசில மனித ரத்தம் குடிக்கும் விலங்குகளுக்காக இந்த உலகில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாளை உங்களின் மனைவியோ, கணவனோ, குழந்தைகளோ, நண்பர்களோ, உங்களின் காதல் இணையோ துடிதுடிக்க கொல்லப்படலாம். மரணத்தின் பெருவலி உங்களையும் கவ்விக் கொள்ளலாம். மனிதத்தை சக மனிதர்களிடம் தேடாமல் அதை சாதியிடமும், மதத்திடமும், கடவுளிடமும், இனத்திடமும் தேடியதற்கான விலையை நீங்கள் வலுக்கட்டாயமாக கொடுக்க வேண்டி வரும்.

உங்களின் மன அமைதிக்கான இடமாக கோயிலையும், மசூதியையும், தேவாலயங்களையும், விகாரைகளையும் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் இன்று உங்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும் அதுதான் குலைத்திருக்கின்றது. நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டியது மதத்தின் அழிவு சமூக மாற்றத்தை கொண்டு வந்துவிடுவதில்லை, சமூக மாற்றமே மதத்தின் அழிவைக் கொண்டு வருகின்றது என்பதைத்தான். நம்முடைய எதிரி இந்தச் சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் அரசும், அவர்களை வழிநடத்தும் முதலாளிகளும்தான். அவர்கள்தான் உங்களுக்கு இதயமற்ற உலகின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும், மக்களுக்கு அபினியாக மதத்தைத் தருகின்றார்கள்.

நம்முடைய போராட்டத்தை இந்தச் சாதியவாதிகளையும், மதவாதிகளையும், இனவாதிகளையும் கட்டிக் காப்பாற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றாமல் குறுகிய சட்டவரம்புக்குள் நின்று சாதி எதிர்ப்போ, மத எதிர்ப்போ, இனவாத எதிர்ப்போ செய்வோமானால் நாமும் ஆளும் வர்க்கத்தின் ஒரு கைக்கூலியாக அதற்கு சோரம் போனவர்களாக மாறவே செய்வோம். ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க, அவர்களை விரட்டி அடிக்க திராணியற்ற கூட்டத்திடம் சரணடைந்து சாதியையோ, மதத்தையோ, இனவெறியையோ ஒழிக்க முடியும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் நீங்கள் அந்த சாதியவாதிகளைவிட, மதவாதிகளைவிட, இனவாதிகளைவிட இந்தச் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்பதையும், நீங்களும் ஒரு பாதுகாப்பு வால்வாக ஆளும்வர்க்கத்திற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

மனித குலத்தை அழிக்கும் எல்லா நாசகார சக்திகளுக்கும் எதிரான போராட்டம் என்பது அந்த நாசகார சக்திகளை வளர்த்து அதைப் பாதுகாக்கும் இந்தச் சமூக அமைப்பை அடித்து வீழ்த்தும் போராட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமானிய மக்களைக் கொன்று குவிக்கும் துப்பாக்கிகளிடம் இருந்தும், குண்டுகளிடம் இருந்தும், பேரழிவு ஆயுதங்களிடம் இருந்தும் நம்மை நிரந்தமாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- செ.கார்கி