அம்பேத்கரைப் பேசாமல் பெண்ணுரிமையைப் பேசுவது போலியானது என்னும் கருத்தில் பிடிமானத்துடன் இருப்பவர் அரங்க. மல்லிகா. அரசியலுடன் இயங்கும் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் வெகு சிலரே. அவருள் குறிப்பிடத்தக்கவர் அரங்க. மல்லிகா. இவர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பதிமூன்று ஆண்டுகளாக தமிழ்த் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளுக்கிடையில்தான் இது சாத்தியமாகி இருக்கிறது. மாநகரச் சூழல் கூட, ஒரு தலித் சுயமரியாதையோடு வாழ இயலாததாய் இருக்கிறது. இருப்பினும் அதை எதிர்த்து இன்றைக்கு தலித் இலக்கிய உலகிலும், கருத்தியல் தளத்திலும் தனக்கென தனியானதொரு இடத்தைப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் அரங்க. மல்லிகா.

Aranga mallikaதிருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகில் உள்ள கொண்டையாம்பட்டி கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியின் மீது கொண்ட ஆவலால் உந்தப்பட்டு, முனைவர் பட்டம் பெற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலையில் படிக்கும் காலத்தில், கல்லூரி ஒன்றில் ஓராண்டு பணியாற்ற வேண்டி எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பணியாற்றிய போது, தலித் என்பதாலேயே வெளியேற்றப்பட்டவர் இவர்.

"தமிழ் நாவல்களில் பெண்களின் இரண்டாந்தரக் குடிநிலையும் மீட்சியும்' என்னும் ஆய்வுக் கட்டுரைதான் இவருடைய முதல் நூல். "தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்' என்னும் பெயரில் அது வெளிவந்தது. தமிழ்ப் பெண்ணிய எழுத்து வகைமையில் "மீட்சி' என்னும் சொல்லாட்சியை முதன் முதலில் பயன்படுத்தியவர் இவர்தான். இந்த நூல் பிற்காலங்களில் ஆய்வு மாணவிகளுக்கு வழிகாட்டும் நூலாக அமைந்தது. பல கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இந்த நூல் இணைக்கப்பட்டது. தமிழ் மண்ணோடு பொருந்திய பெண்ணியப் பார்வையை இந்த நூல் தருவதாக பல பேராசிரியர்களால் பாராட்டப்பட்டது. இதனால் பரவலாக அறியப்பட்ட அரங்க. மல்லிகா, பெண் விடுதலைச் சிந்தனையாளர் என்னும் புதிய அடையாளத்தோடு, அரங்குகளில் உரையாடத் தொடங்கினார்.

மாபெரும் சிந்தனையாளர்களான அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைத் தாக்கம் அவரை பெண் விடுதலைச் சிந்தனையாளராக, சமூக அக்கறை கொண்டவராக, சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டு செயல்படுபவராக மாற்றியது. இவர்களின் சிந்தனையினூடே எழும் பெண்ணியமே நியாயமானதாக இருக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். உடலரசியல் என்பதையும் கடந்து, இந்தியப் பெண்களின் சமூக விடுதலையையும் இரட்டை பாகுபாட்டைச் சந்திக்கும் தலித் பெண்களின் சமூக விடுதலையையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார். அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகளை இடையறாது விவாதித்தும் வருகிறார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்டவரைவு, முழுக்க முழுக்க பெண்களின் விடுதலைக்கானது. ஆனால் அதை இந்து பார்ப்பனிய ஆணாதிக்க சனாதனவாதிகள் ஏற்றுக் கொள்ளாத போது, தன்னுடைய பதவியைத் துறந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இது, எத்தனைப் பெண்ணியவாதிகளுக்குத் தெரியும் என்று அவர் கேட்கும் கேள்விக்கு பதிலேதும் இல்லை!

பெண் தன் உடலை ஆண்களிடமிருந்து மட்டும் விடுவித்துக் கொண்டால் போதாது; தங்களை அடிமைப்படுத்தியுள்ள இந்துப் பண்பாட்டிலிருந்தும் உடலையும் சிந்தனையையும் விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அலங்கார மயக்கத்திலிருந்து பெண்கள் வெளிவருவார்கள். ஒரு பெண்ணுக்கு அழகு அவருடைய தோற்றமா, அறிவா என்றால் அறிவுதான் என்பதால், பெண் அறிவு பெற தடையாக இருக்கும் சாதிய இந்து சமூக அமைப்பிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டாமா என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

"பெண்ணியக் குரலதிர்வும் தலித் பெண்ணிய உடல்மொழியும்' என்பது அவருடைய இரண்டாவது நூல். மேலை நாட்டுப் பெண்ணியம் எத்தகைய தாக்கத்தை இந்திய, தமிழக பெண்ணியவாதிகளிடையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதை விளக்கும் ஒரு நூலாக அது அமைந்திருக்கிறது. அதில் அம்பேத்கரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் பெரிதும் பேசப்பட்டுள்ளன. பெண் விடுதலை பெறாமல் தீண்டத்தகாத மக்களின் விடுதலை சாத்தியமில்லை என்னும் புரட்சியாளர் கருத்தும், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது, பெண் முழு விடுதலை பெறாமல் சாத்தியமில்லை என்னும் லெனினின் கருத்தும், பெண் விடுதலைக்கான முன்வைப்புகள் என்பதை, அந்த நூலின் முதல் கட்டுரையிலேயே தெளிவாக்கி இருக்கிறார் அரங்க. மல்லிகா.

அகமண முறையினை எதிர்க்கும் அம்பேத்கரின் கருத்தாடல் பெண் விடுதலைக்கானது என்பதையும், காந்தியின் பெண் விடுதலைக் கருத்தியல் இந்துப் பண்பாட்டிற்கு உட்பட்டது என்பதையும் பதிவாக்குகிறது இந்நூல்.

அரங்க. மல்லிகா பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள், கவிதை கள் எழுதி வருகிறார். கூட்டங்களில் உரையாற்றுவது அவருடைய பணிகளில் முதன்மையானது. சமூகத்தை மாற்றக்கூடிய ஆயுதம் இலக்கியம். அடிமை வரலாறு எழுதப்பட்டபோது தான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. ரஷ்யப் புரட்சியும், பிரஞ்சுப் புரட்சியும் இப்படித்தான் நிகழ்ந்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் மத, சாதிய ரீதியான அடக்குமுறைகளை எழுத்தாக்குகின்ற போது தான் அவருடைய விடுதலை கூர் தீட்டப்படுகிறது. தலித் இலக்கியம் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதன் எழுச்சிக்குப் பிறகுதான் நிறுவனங்களில் எதிர்த்துப் பேசக்கூடிய வன்மை – தலித் தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் துணிவு – அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுதல் ஆகியவை நிகழ்கின்றன என்கிறார் அவர்.

இளங்கலைப் படிப்பு முதலே கவிதைகள் எழுதி வரும் அரங்க. மல்லிகாவின் முதல் கவிதைத் தொகுப்பு (2007) "நீர் கிழிக்கும் மீன்'. "தாமரை', "கலை' போன்ற இலக்கிய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. அரங்க. மல்லிகாவின் கவிதைகள் அவருடைய இருப்பு சார்ந்தவை. அவருடைய கிராமியப் பின்புலமும், நகரத்துக்குப் புலம் பெயர்ந்த வாழ்வியல் சூழலும், அவருடைய தொடர் இயக்கமும் கவிதைகளாகி இருக்கின்றன. எதைப் பற்றி பேச வந்தாலும் அதை அழகியலோடும் சூழலின் இருப்போடும் கூறுவது அவருடைய கவிதை உத்தி. படிமங்கள் அவருக்கு லாவகமாக கை கொடுக்கின்றன.

தன்னை மறந்து உழைக்கின்ற உழைப்பாளிப் பெண்ணின் வாழ்வை... “ஒருபோதும் / என் ஆலிலை வயிறு / நினைவுக்கு வந்ததில்லை / இருந்தும் உன் அரசியல் லாபத்திற்காய் / எரிக்கப்பட்ட / எங்கள் குடிசைகளில் தீய்ந்து போகவில்லை எதிர்காலம் / காய்ந்து கருகும் தருணத்தில் / செடிகளுக்கு / மழை நீர்த்துளி தரும் / நம்பிக்கையில்தான் / நகர்கிறது வாழ்க்கை'' என்று எழுதும் போது, நீருண்ட வேர் ஒரு பச்சைத்தளிரை பரிசளிப்பதைப் போல உணர்கிறோம்.

"நீர் கிழிக்கும் மீன்' நூலில் அமைந்துள்ள கவிதைகள் எளிய சொற்களாலானவை. அவை பேசும் செய்திகள், அனுபவங்கள் கிராமம், நகரம் ஆகிய இருவேறு இடங்களில் ஊசலாடும் ஒரு தலித்தின் வாழ்வைப் பற்றியது. ஈழம் சார்ந்து அவர் அண்மையில் "கவிதா சரண்', "புதிய கோடாங்கி' ஆகிய இதழ்களில் எழுதியுள்ள கவிதைகள் மிகவும் வெளிப்படையாக அமைந்துள்ளவை.

மாணவ, மாணவிகளுக்கான இவருடைய "வழிகாட்டலும் ஆலோசனை கூறலும்' என்னும் நூல், மாணவ உலகத்திற்கான சமூக விழிப்புணர்வை ஊட்டுகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆற்றிய உரைகள் மற்றும் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பே "பெண்ணின் வெளியும் இருப்பும்' என்னும் நூல். "எழுச்சி' போன்ற இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் "தலித் பெண்ணிய அழகியல்' என்ற தலைப்பில் நூலõக வெளிவந்திருக்கிறது. ஐ ச்ட் ணணிt ச் தீணிட்ச்ண என்னும் ஆங்கில நூலையும், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளையும் இணைத்து ஒரு வெளியீடாகக் கொண்டு வரும் முயற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளார். கல்வியாளராக, சொற்பொழிஞராக, கலை, அரசியல் விமர்சகராக, கட்டுரையாளராக, கருத்தாளராக, கவிஞராகத் திகழ்கிறார் முனைவர் அரங்க. மல்லிகா.

அண்மையில் "கவிதா சரண்' இதழில் வெளிவந்த அரங்க. மல்லிகாவின் கவிதை :

“என் தோட்டத்து வேம்பில் /கட்டப்பட்டிருக்கும் கூட்டில் /குயில்குஞ்சுகளுக்கு உணவூட்டும் காகத்தை / விரட்டியடிக்கிறாய் / உன் சாதிக்கவண்களின் கேள்விக்கான பதில் / என் கற்களிலும் உண்டு /எனக்கும் உனக்கும் / நிழல்தரும் வேம்பு / என்னையும் உன்னையும் /நிறுத்திவிடும் இசைக்குயில் / என் உணவு உன் உணவு / நம் உணவாகும் காகத்திற்கு / நமக்கானதாய் இருந்ததைப் / பிறகு / உனக்கானதென்கிறாய்/என் பிள்ளைகளைப் போருக்கனுப்பி/பால்கட்டிய முலையைப்/பீய்ச்சியடிப்பேன் / எனக்கான எல்லையை / நீ /தொட்டால் / உடைபடும் மவுன நீட்சியில் / பிறக்கும் / எனக்கான தமிழீழ வரைபடம்''

Pin It