இந்திய அரசை திருப்திபடுத்தவும், இந்திய பெருமுதலாளிகளை திருப்திபடுத்தவும் அன்று ஈழம் அழிக்கப்பட்டு அதன் கனவுகள் முள்ளிவாய்க்காலில் மே 18 அன்று முடித்து வைக்கப்பட்டது. அதன் நினைவு தினம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மே 18 அன்று கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசும், அதை வழிநடத்தும் இந்திய பெருமுதலாளிகளும் ஈழத்தோடு திருப்தி அடைபவர்கள் கிடையாது. அவர்களுக்கு ஈழம் என்பது ஒரு சோதனைச்சாலை. மூலதன பரவலுக்கும் அதன் கட்டற்ற பெருக்கத்துக்கும் தடையாக இருக்கும் அனைத்தையும் அழித்தொழித்து, கல்லறையில் புதைத்துவிட்டு புதைத்த இடத்தில் மூலதனத்தின் விதைகளை விதைப்பதுதான், மனித ரத்தம் குடித்தே வளரும் முதலாளி என்ற கொடிய மிருகத்தின் வரலாற்றுப் பணி. இந்தப் பணியை சிறப்பாக செய்து தருவதற்குதான் அது ராஜபக்சாக்களை வைத்திருக்கின்றது. ராஜபக்சாக்கள் எல்லா நடுகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் மூலதனத்தின் எஜமானர்களுக்கு அவ்வளவு பெரிய விடயமில்லை. எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வரும் என்பது நாய்களைவிட எலும்புத்துண்டுகளின் எஜமானர்களுக்கு நன்றாகவே தெரியும்.

tuticorin protest police firing

'கொல், மூலதனத்தின் அகோரப் பசிக்கு தடையாக உள்ள அனைவரையும் கொல்' என்பதுதான் முதலாளித்துவத்தின் டி.என்.ஏவில் எழுதப்பட்டிருக்கும் விதி. அதை ஒருநாளும், ஒரு பொழுதும் முதலாளிகளால் மாற்றியமைக்க முடியாது. அதை மாற்றி அமைக்கத்தான் வரலாறு பட்டாளி வர்க்கத்தை களத்தில் இறக்கிவிடுகின்றது. அதால் மட்டுமே முதலாளித்துவத்தின் உடலைக் கிழித்து அதற்குள் வரலாறு முழுவதும் ரத்தமாகவும், சதையாகவும் திருடி ஒளித்து வைக்கப்பட்ட சாமானிய மனிதனின் உபரி உழைப்பை விடுவிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிமையாக ஒரு பூவைப் பறிப்பது போல நடந்துவிடுவதில்லை. நம் முன்னால் இருக்கும் மிருகம் எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் பலமுறை பல தியாகங்களை செய்தே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. நம்முடைய எதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் மட்டுமல்ல, அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளை இந்த உலகில் ஆண்டாண்டுகாலம் நிலைத்திருக்கப் பாடுபடும் அதன் அடிவருடி அமைப்பான அரசும்தான்.

அந்த அரசுதான் தாங்கள் யாரைக் கொல்ல வேண்டுமோ, யாரை அழிக்க அவதாரம் எடுத்திருக்கின்றோமோ அவர்கள் மூலமாகவே தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கின்றது. அவர்களின் பிரதிநிதியாகவே ராஜபக்சாக்களும், மன்மோகன் சிங்குகளும், மோடியும், எடப்பாடி பழனிசாமிகளும் இருக்கின்றார்கள். இவர்களின் பணி முதலாளிகள் காட்டும் ஆட்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறுவதுதான்.

வேதாந்தாவின் அனில் அகர்வாலிடம் இருந்து எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்ட நாய்கள் யார் என்பது இப்போது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. அன்று ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய பெருமுதலாளிக்கு மகிந்த ராஜபக்ச பயன்பட்டார். இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொன்றுகுவிக்க அதே பெருமுதலாளிகள் தமிழக ராஜபக்சாவான பழனிச்சாமியைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டை அழித்து பெருமுதலாளிகளின் லாபவேட்கைக்காக இந்திய அரசால் கொண்டுவரப்படும் அனைத்து நாசகாரத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் ஒரு மகிந்த ராஜபக்ச தேவைப்படுகின்றார். எடப்பாடி பழனிசாமி போன்ற பாசிஸ்ட்கள் இன்று இந்தப் புனிதப் பணியை மிகச் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். 13 பேரை அப்பட்டமாக இனப்படுகொலை செய்து தமிழ்நாட்டில் ஒரு முள்ளிவாய்க்காலை தொடங்கி வைத்திருக்கின்றார் எடப்பாடி சுவாமிகள்.

இனி தமிழ்நாட்டில் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நாசகாரத் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு இதன் மூலம் தமிழக ராஜபக்ச சுவாமிகள் எச்சரிக்கை விட்டிருக்கின்றார். "பஞ்சை பராரி கூட்டமே ஒழுங்காக போராட்டத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு ஓடிப்போ, இல்லை என்றால் உன்னையும் இதே போல சுட்டுக் கொன்றுவிடுவேன்” என பகிரங்கமாக மிரட்டுகின்றார். இனி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மட்டும் அல்ல, பெருமுதலாளிகள் சம்மந்தப்பட்ட எந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்தும் சாலைக்கு வந்து போராட துணிவு வரக்கூடாது என்ற அளவிற்கு இதன் மூலம் உளவியல் ரீதியாக மக்களை பாதிப்படைய செய்ய வேண்டும் என்பதுதான் இந்திய அரசின், பெருமுதலாளிகளின், தமிழக ராஜபக்ச சுவாமிகளின் எண்ணம். அதற்காகத்தன் 13 பேரை படுகொலை செய்திருக்கின்றது தமிழக ராஜபக்ச சுவாமிகள் தலைமையிலான தமிழக காவல் துறை.

ஆனால் துப்பாக்கிகளை வைத்து ஒருநாளும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்பது இந்தக் குற்றக்கும்பலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நந்திகிராமில் நடந்தது என்ன? ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் என்னானது? பசுமை வேட்டை என்ற பெயரில் லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளில் இறக்கி ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற பிறகும் இந்திய அரசு அங்கே எதைச் சாதித்தது?.

anti sterlite protest police action

மிகப்பெரும் மக்கள் போராட்டங்களை ஒருநாளும் அரசால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் வரலாறு. மக்களின் போராட்டங்களுக்கு முன் அரச பயங்கரவாதம் மண்டியிட்டே ஆக வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் உயிருக்கும் எடப்பாடி அரசும், அதன் கூலிப்படையான காவல்துறையும் பதில் சொல்லியாக வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. சாமானிய மக்களின் உயிரைவிட ஆட்சியாளர்களின் உயிர் எந்த வகையிலும் மேன்மையானது இல்லை என்பதை காலம் அவர்களுக்குப் புரிய வைக்கும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அந்த மக்களை காக்கை குருவிகள் போன்று சுட்டுத் தள்ளிய, அதற்கு உத்திரவிட்ட எல்லா நன்றிகெட்ட நாய்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் பதிலடி கொடுப்பார்கள். தொலைக்காட்சிகளில் காவல்துறையின் சைக்கோ கொலையாளிகள் போராட்டக்காரர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வதைப் பார்த்த கோடிக்கணக்கான தமிழக மக்கள் கொதித்துப்போய் இருக்கின்றார்கள். தங்கள் இனம் தங்கள் கண்முன்னாலேயே அழிக்கப்படுவதைப் பார்த்து அன்று ஈழத்தில் தோன்றியது போல இங்கேயும் ஆயுதம் தாங்கிய புரட்சிகரக் குழுக்கள் உருவாகத்தான் போகின்றது. தமிழ்மக்கள் தங்களின் மண்ணையும், காற்றையும், நீரையும், காடுகளையும், மலைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசே தள்ளிவிடும் போலிருக்கிறது.

இந்தப் போராட்டத்தை தமிழகம் தழுவிய வெகுஜனப் போராட்டமாக இன்னும் வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கின்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் சார்ந்த போராட்டம் , மிக எளிதாக அதை ஒடுக்கிவிடலாம் என கனவு கண்ட வேதாந்தாவின் கைக்கூலிகளுக்கு, அது ஒன்றும் பகுதிப் போராட்டம் கிடையாது, ஒட்டுமொத்த தமிழகம் தழுவிய போராட்டம் என நாம் நிரூபிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளங்களை சூறையாடலாம், காற்று, நீர், மண் என அனைத்தையும் நஞ்சாக்கலாம் என்ற திட்டத்துடன் இங்கு வரும் அனைத்து முதலாளிகளுக்கும், அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் அடிமைகளுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு பாடமாக அமைய வேண்டும். அதற்கு தேர்தல் அரசியலுக்கு வெளியே நிற்கும் அனைத்து மார்க்சிய – பெரியாரிய அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மக்களுக்கு தலைமை கொடுத்து போராட்டத்தை வழிநடத்த வேண்டும்.

இந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கான அரசு என்பதும் காவல்துறை, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் அதன் கூலிப்படை என்பதும் உறுதியான பின்பு, மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு எதிராக போராடி அதை வீழ்த்துவது ஒன்றுதான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி. போராட்டம் ஒன்றே நம்மையும், நம் சந்ததிகளையும் இந்தக் கொலைவெறி பிடித்த முதலாளிகளின் ஏவல்நாய்களிடம் இருந்து காப்பாற்றும். தமிழக மக்களே வீதிக்கு வந்து போராடுங்கள். கொல்லப்பட்ட தோழர்களுக்கு அதுவே நாம் செய்யும் சரியான மரியாதை.

- செ.கார்கி

Pin It