கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

'அன்று செவ்வாய்க் கிழமை 11/07/06

Bomb blast'அண்ணி.. பாம்ப் ப்பிளாஸ்ட்னு உங்கள் மருமகளுக்கு SMS வந்திருக்கு'

'மம்மி.. ஆபிஸ் பஸ்ஸிலே கிளம்பிட்டேன். பயப்படாதே. எல்லாரோட செல்லும் ஜாமாயிடுச்சு'

'பிள்ளைங்க கவனம். நாங்க எல்லாரும் நெட்டில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்'

இந்த நேரத்தில் யார் யாரெல்லாம் ஆபிஸிலிருந்து கிளம்பி இருக்கக் கூடும்.

நண்பர் அன்புசிவம் கார்ரோட்டில் தானே இருக்கிறார். பேங்கிலிருந்து கிளம்பும் நேரமாச்சே. கை நடுக்கத்துடன் பேங்க் ஆ•ப் பரோடா எண்ணில் தொடர்புகொள்ள முயற்சி. ம்கூம் கிடைக்கவில்லை. ஒரு வழியாக 10 நிமிடங்களுக்குப் பின் கிடைத்தது.

'ஆபிஸில் தங்கிவிடுங்கள். டேக் கேர்' என்றேன். அன்பாதவனின் குரலில் நடுக்கம். விழுப்புரத்திலிருக்கும் அவர் துணைவியார் கவுரிக்கு முடிந்தால் போன் செய்து அவர் நலம் குறித்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

இரவு மணி எட்டரை இருக்கும்.

'சித்தி பிரபு இன்னும் வீட்டுக்கு வரலை எனக்கு பயமா இருக்கு' சுசிலாவின் குரல்..

'சரி பயப்படாதேம்மா.. எத்தனை மணிக்கு ஆபிஸிலிருந்து கிளம்பினான்..?'

'சித்தி.. நான் அவனுடன் செல்லில் பேசும்போது மணி 6.10 இருக்கும் கிராண்ட் ரோட் ஸ்டேஷனில் வண்டி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னான்.. இன்றைக்குத்தான் பர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் வாங்கினான்.. எனக்கு பயமா இருக்கு'

'பயப்படாதே.. டிரெயின் சர்வீஸ் இல்லை. பிள்ளை இடையில் மாட்டியிருப்பான். செல் எல்லாம் ஜாம் ஆகியிருக்கு'

அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் என் மனம் அவன் 6.10க்கு கிராண்ட் ரோடில் இருந்திருந்தால் மாதுங்கா, மகிம், பாந்திரா, க்கார்.. நான்கிடங்களில்.. அதுவும் பர்ஸ்ட் க்ளாஸ்.. '

இரவு முழுக்கவும் தூங்கவில்லை. டி.வியில் எங்காவது அவன் அனுப்பும் செய்தி வந்துவிடாதா? என்று ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி.. இதற்கிடையில் இரவு 11.30க்கு மேல் செல் இணைப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அவன் தொடர்பு கொள்ளவில்லை.

அதிகாலை 12/7 4.30க்கு போரிவலிக்கு போன் செய்தால்' இல்லை.. பிரபுவிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை'

பிரபுவின் தந்தை ராமச்சந்திரன் ஜீப்பை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி.. காயம் பட்டவர்களை, கதறும் மனித உறவுகளை, அடையாளம் தெரியாமல் சிதைந்து போன உடல்களை எல்லாம் தேடி தேடி தன் மகன் பிரபுவைத் தேடி...'

சோனியாகாந்தியும் உள்துறை அமைச்சரும் வருகை என்பதால் மருத்துவமனை அடையாளம் தெரியாத இறந்தவர்களைப் பார்க்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டி வந்ததால் அடுத்த மருத்துவமனைக்குப் போக.. இப்படியாக.. அலைந்து வீட்டுக்கு வந்து மகனின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு போகும் போது செய்தி வருகிறது..' பிரபுவின் பாந்திரா பாபா ஆஸ்பத்திரியில் இருக்கிறது என்று'

மகன் சுயநினைவில்லாமல் அடிபட்டிருக்கலாம் என்று பதட்டத்துடன் ஓடுகிறார். அவர் ஆபிஸில் வேலைப் பார்க்கும் ஊழியர் ராமச்சந்திரனைக் கட்டிப்பிடித்து கதறவும் ராமச்சந்திரனுக்கு விபரீதம் புரிகிறது.

பிரபு கையில் அணிந்திருந்த மோதிரம், அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவன் புகைப்படத்துடனிருந்த அடையாள அட்டை இந்த அடையாளங்கள் தான் இழப்பை உறுதி செய்தன.

காரில் போரிவலியை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது போரிவலி நெருங்க நெருங்க ஒவ்வொரு குடியிருப்புகளிலும் வெள்ளை உடையுடன் வந்திறங்கும் மக்கள்..

அன்று முழுவதும் கதறல் கதறல் கதறல்.. அழுகை..என்னைக் கட்டிப்பிடித்து சுசிலா அழும் போது அந்தத் தாயின் கதறலை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுடன் சேர்ந்து நானும் அழுவது மட்டுமே ஆறுதலாக..

ஊரிலிருந்து சுசிலாவின் சகோதரர்கள் ஐவர்.. ராமச்சந்திரனின் அண்ணன், தங்கை.. வீடு நிறைந்து கூட்டம்.. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியவில்லை.

இரண்டாவது நாளிரவு நானும் என் துணைவரும் மற்றும் சிலரும் போரிவலியிலிருந்து அந்தேரிக்கு டிரெயின் பிடித்து அங்கிருந்து அவரவர் இல்லத்திற்கு போகலாம் என்று முடிவு செய்தோம். போரிவலி லோக்கல் காத்திருந்தது. உள்ளே அதற்குள் கூட்டம் நிரம்ப ஆரம்பித்துவிட்டது.

வலது கைப்பக்கம் சன்னலோரம் ஒருவர் மட்டுமிருந்தார். சீட் காலியாக இருந்தது. முதலில் ஏறிய நான் சீட் காலியாக இருப்பதைக் கண்டு இருக்கை வரை சென்றுவிட்டு சன்னலோரமிருப்பவரைக் கண்டு சட்டென திரும்பி இடது பக்கமாக வந்து இரண்டு பேர் ஏற்கனவே இருக்கும் இருக்கையில் இடித்துக் கொண்டு மூன்றாவதாக நான் உட்கார்ந்தேன். என்னைப் பின்பற்றி மற்றவர்களும்.

உட்கார்ந்து சில நிமிடங்களில்.. மவுனம்.. மவுனம்.. மவுனம்.. என் மவுனம் என்னை வெடிகுண்டுகளால் துளைத்து எடுத்து என்னைச் சுக்கு நூறாக சிதறடித்தது. என் கண் முன்னாலேயே நானே சிதறிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்த என் குரல்வலையை என் கைகள் நெறித்துக் கொண்டிருந்தது.! குஜராத் வன்முறைக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதிய என் எழுத்துகள் சுக்கு நூறாகச் சிதைந்துப் போனது.! சன்னலோரம் இருந்த அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்..

அந்த சகோதரனை அடையாளம் கண்டு, இருக்கை காலியிருந்தும், அருகில் அமர்வதற்கு சென்றும் திரும்பி வந்த என்னைப் பார்த்த அந்த சகோதரனின் கண்கள்.. என்னை.. என் பிம்பத்தை.. உடைத்துக் கொண்டிருக்கிறது.

ஊமைக் காயங்களுடன் ஒரு குற்றாவாளியைப் போல ..நான்..மவுனத்தில் .. என்னை மறு விசாரணைச் செய்து கொண்டிருக்கிறேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என் மகள் சொன்னாள்.." அம்மா..அலிசேக் மீரான் மாமா போன் செய்திருந்தார்கள். உடனடியாக போனில் பேசு' என்றாள்

என்ன சொல்லுவேன் என் அண்ணன்களிடம். அலிசேக்மீரான், சமீராமீரான், ஜின்னா என்று என்னைத் தன் உடன் பிறந்த சகோதரியாக ஒரே குடும்பமாக வாழும் என் அன்பு சகோதரர்களிடம் இனி எந்த முகத்துடன் நான் ..??

எப்படி நடந்தது இந்தச் செயல்?

ஏன் விலகியது என் பாதங்கள்?

எங்கே மறைந்து போனது அந்த ஒரு சில வினாடிகள் என் நினைவு செல்களின் உயிரோட்டம்?

இதை எழுதுவது எதற்காக? பாவமன்னிப்பு கேட்டா? இல்லை.

பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்.. இந்த நம்பிக்கைகள் எனக்கில்லை.

ஆனால் அந்தச் சில வினாடிகளில் சிதைந்து போன என் பிம்பத்திற்கு நாம் மட்டுமா பொறுப்பு?

அந்தப் பலகீனமான சில வினாடிகள்-

மண்ணில் ஆழமாக வேரூன்றி இருக்கும் என் ஆலமரத்தை அசைத்து விட முடியும் என்றால்.. எண்ணிப்பார்க்கிறேன் -

தொட்டிச்செடிகளையும் படர்ந்திருக்கும் கொடிகளையும் முளைவிடும் இலைகளையும்..

.......மும்பையில் சிதைந்து போன என் பிம்பங்களுடனும்
ஆறாதக் காயங்களுடனும்...

- புதிய மாதவி, மும்பை