கொஞ்ச காலமாய் எனக்குச் சிறுகதைகள் மேல் அதிருப்தி மிகுந்திருந்தது. அண்மைய காலத்தில் இதழ்களில் நான் வாசிக்க நேர்ந்த சிறுகதைகள்:

1. சாரமற்று, சொற்களுக்கு முதன்மை கொடுத்து, கருவழிந்திருந்தன.

2. 'பா, பா, பா [Bha, Bha, Bha Bambai!] பம்பாய் மிட்டாய்!'க்காரன் பாணியில் துணையாசிரியர்கள் கத்தரித்து வெட்டி ஒட்டுப்போட்ட [பாவப்பட்ட] எழுத்தாளர்களின் ஒரு பக்கக் கதைகளாய் இருந்தன.

3. ''பாபா..பாபா!......க்கூம் பாபா!'' பாணியில் 'என்னைப் பார், என் எழுத்தைப் பாராதே!' வகைப்ப¡ட்டில் 'கித்தாப்பு'க் காட்டும் 'ஜவ்வு'களாய் இருந்தன.

தற்செயலாக, பழைய இதழ்களைச் சேர்த்து வைக்கும் நண்பர் ஒருவரிடம் ‘தீராநதி’ நவம்பர்’05 இதழைக் காண நேர்ந்து, அதில் 'ரத்தம்' என்ற சிவப்பு உணர்வெழுத்துகளைப் பார்த்து, இடது பக்கம் முழுவதுமான சித்திரம்(ஓவியர் வேல்ஸா? அது என்ன, புரியக்கூடாதென்ற கையெழுத்துகளை உங்கள் காசோலைகளில் போடுங்கள்! உங்கள் சொந்த ஓவியங்களுக்கேன் மர்மக் கையெழுத்து?) பார்த்து, இடது மேலோரம் 'சிறுகதை' என்ற வில்லையைப் பார்த்து, குறுக்கே - நேர்கீழே முன்பக்கம் வந்து பாவண்ணன் படம் பார்த்தபிறகு, நிமிர்ந்து உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்புகளையும் அந்நியத்தனமான நேர்காணல்களையும் காட்டிலும் தீராநதியில் இடம்பெறும் சிறுகதைகளின் மீது ஈடுபாடு அதிகம்.

சென்ற அறுபதில் 'தந்தை பிம்பம்' என்றொரு நாவல் வந்தது. படைத்தவர் கிருத்திகா என்று ஞாபகம். பல உள்ளாழங்களை அது வெளிச்சமிட முயலவில்லை. 'அம்மா கோண்டு'(தீரா.,ப.19:பத்தி 5)க்கு நேர்மாறான ''அப்பா வரிப்பு''கள் குறித்து, பல பக்கங்களில் அது மேலாகப் பற்பல விவரங்களைப் பகிர்ந்து கொண்டது. ஆனால் இந்த 'ரத்தம்' மிகவும் ஆழமாகத் 'தந்தை பிம்ப'த்தைக் கீறி, அறிவியல் பாதையில் அதன் உள்ளாழங்களை வருடு[scan]படங்களாக எடுத்துத் தள்ளியிருக்கிறது. காரணம், இதன் படைப்பாளரான பாவண்ணனுக்கு மேம்போக்கான விவரங்களைத் தருவதில் எப்பொழுதும் திருப்தி இருந்ததில்லை. ''கதை கதையாக இருக்கவேண்டுமே தவிர, விவரங்களின் தொகுதியாக இருக்கக் கூடாது'' என்ற திறனாய்வை தூரவைத்துவிடுங்கள். அதெல்லாம் 'வே¨லக்காகாது' என்ற ரகம்தான்.

இ.ஜி.கரன்(E.G. Garan) என்ற ஆய்வாளரின் ஆய்வு முதல்நூலான 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்பதன் அடிவரிச்சட்டங்களையே தன் ஒப்பற்ற நாவல்களுக்கான மேல்வரிச் சட்டங்களாகக்கிக்கொண்ட எழுத்தாளர் ஜான் இர்விங்'கின் 'கார்ப் நோக்கில் உலகம்' 'ஓவென்மீனிக்கான பிரார்த்தனை' (The World According To Garp, The Prayer For Owen Meanie) முதலான நாவல்கள், அந்தத் திறனாய்வைப் பந்தாட எழுந்தவைதாம். பாவண்ணனின் இந்த ரத்தம் கதைக்கான முதல்நாள் கருப்பிடிப்பு இதோ: ''எல்லா மகள்களுடைய உடல்கள்லயும் அப்பாவுடைய ரத்தம் இருக்கும் ராஜா. மகள்ங்கறவ அப்பாவுடைய ரத்தம்னு.[தீரா, நவ.'05, ப.19: பத்தி 5: வரி 2-3](?) என் ரத்தத்த பாக்கறது எனக்கு நெருக்கமா அப்பாவே வந்து உக்காந்திருக்கற மாதிரி இருக்குது. நீ எதுக்கு என்ன இந்த ரத்தத்த தொடச்சி தொடச்சி கட்டு போட்டு சுத்தப்படுத்தி விடற? உண்மையைச் சொல்லு. உனக்கு அப்பாவ புடிக்குமா, புடிக்காதா? எதுக்கு வாயத் தெறக்காம ஊமக்கோட்டான் மாதிரி என்னையே உத்து உத்து பாக்கற? நீ ஒண்ணும் சொல்ல வேணாம் உன் மனசு எனக்குத் தெரியும். நீ அந்தக் காலத்துலயே அம்மா கோண்டு, வருஷக்கணக்கா அப்பாவ பிரிஞ்சிருந்து பிரிஞ்சிருந்து அப்பாவே வேணாமின்னுயிடுச்சி ஒனக்குன்னு ஒரே சத்தம்.[ரத்தம்?..] மாத்திரையால மட்டும்தான் அவள தூங்க வைக்க முடியும்னு யிடுச்சி.''

ஆறு பக்கங்கள் தெமி 1/4 அளவுள்ள கதையில் முழுப்பக்கச் சித்திரம் போக 5 பக்கங்கள். ஒளிப்படம், கவிதை, கதைக்குள்ளிருந்து பிடிப்புப்பகுதிகள் என்று கழித்தபின் 4 1/4 பக்கம். இதற்க¡ன கரு அல்ல, இது. நிதானமாக, 'ஜங்க்'உணவு போலல்லாமல் சமைத்தால், ஒரு நாவல் அளவு கொள்ளும் 'சீரியஸ்'ஸான சமாச்சாரம். விளைவு, உரையாடல் பாணியிலானதொரு 'கொசுக்கடி,' வாசிப்பில். டாக்டர் (psychiatrist) திட்டப்படி, ராஜசேகரான அண்ணன் 30 வயது அப்பா பிம்பத்துக்க¡ன மாற்று கிறான் தேவகிக்கு. சிகாகோ திரும்புவதிலேயே குறியாக இருக்கும் ராஜசேகருக்கு இரண்டு தெரிவுகள்(options) தருகிறார் அவர். நோய்த் தீர்வுக்கான நோயியல் கூறுவிலக்குப் படர்க்கை மருத்துவம் (objective treatment thru symptoms-deciphering) மையமானது. இடம் இங்கா, சிக¡கோவா என்பதில்தான் தெரிவுக்கான வாய்ப்பு. ராஜசேகர், அறிவுபூர்வமாக இருக்குமிடத்தையே தெரிவு செய்கிறான். தந்தை பிம்பத்தைத் தான் ஏற்று, ''தன்னுடைய அப்பா தனக்கு பக்கத்துலதான் இருக்காருன்னு ஒரு தைரிய'த்தைத் தங்கை 'மனசுல ஆழமா படி'யவைக்கும் 'முயற்சி'யை[மேற்படி ப.21 கடைசிப்பத்தி] மேற்கொள்ளுகிறான்.

கதைக்கருவின் பருமானத்தைப்பொறுத்த அளவில் சின்னஞ் சிறுகதையான இதில், இன்னொரு துணைக்கதை[உபகதை]யும் வருகிறது. அந்த மருத்துவமனையின் அறையொன்றில் படுத்திருக்கும் கைகாலெல்லாம் கட்டுப்போட்ட பெண், லலிதா குறித்து. கடைசி வருஷ எம்.காம். மாணவி. அப்பா, அளவுக்கு விஞ்சிய 'ரோல் மாடல்' - லலிதாவுக்கு. அவரைப் போலவே பெரிய வங்கி அதிகாரியாக வரவேண்டும் என்று படிப்பைத் தேர்ந்தவள். அப்பா மாதிரியே தன்னை ஒவ்வொரு அங்குலமும் வடிவமைத்துக்கொள்ளப் பாடுகள் பட்டவள். என்ன ஆகிறது? எதிர்பார்ப்புகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மங்களூர்ப் பெண்ணான வங்கி ஊழியைமேல் சைவைத்து சொந்த வீட்டுக்கும் தன்னை முன்மாதிரியாக நம்பும் மகளுக்கும் தீவிரமான துரோகம் புரிந்துவிடுகிறார்.

இங்கும் விளைவு - இன்னும் மோசமான 'ரத்தப் போக்கடிப்பு.' தன் 'ரத்தம்'தான் தன் துரோகத் தந்தை என்ற தீவிரம். இரத்த ஆய்வுச் சிறு பாட்டிலில் தன் இரத்தத்தைத் தானே பிடித்துவைத்துக் ¦காண்டு ''இந்த மோசக்காரன் இன்னும் போகாம இங்கயே இருக்கான் பாரும்மா, அடிச்சி வெளியே அனுப்பும்மா!'' என்று தானும் பாவப்பட்டுப்போன தாயாரிடம் அறைகூவல்.....

சில்வியா பிளாத்(Sylvia Plath)தின் 'தந்தை'(Daddy) கவிதையை வாசித்தவர்களுக்கு இந்த ரணம் புரியும். இதனால்தான் ப்ளாத், மனநலம் பாதிக்கப்பெற்ற மகளைத்(monomaniacal daughter victim) தன்னிலிருந்தே தன் படைப்பில் இடம்பெறும் பாத்திரத்துக்கு 'நெய்து கொள்கிறார்.'

இந்தக் கதையின் தொடக்கத்தில் இரட்டை மேற்கோள் குறி இருக்கிறது; முடியும் பொழுதும் இருக்கிறது. ஓரங்க நாடகம் என்றுங்கூடச் சொல்லலாம் என்று எண்ண வைக்கும்படியான வடிவம். பேசுபவர்களின்/ பாத்திரங்களின் பெயர்கள் மட்டும் உரையாடல்களுக்கு முன் குறிப்பிடப் பெற்றிருக்குமேயானால், இது அந்த 'வில்லை'க்கும் ஆயத்தம் ஆகிவிடும். பாவண்ணனுக்கு சிறுகதையின் வடிவத்தைவிடவும் அதில் தெரிவிக்கப் பெறும் செய்திகளைக் குறித்த கவனம் அதிகமாக உள்ளது. இது, செய்தி ஊடக உலகம் என்பதால், சிறுகதைப் பிரதியும் இவ்வாறு மாற்றுவடிவம் பெறும் வாய்ப்பு இருக்கிறதுதான்!

இதுபோன்ற வடிவசோதனைகளும், கதைசொல்லும் உத்தி தொடர்பான விரிவான தேடல்களும் படைப்பாளருக்கு ரோக்கியமானவையே. மொழியின் புலப்பாடுகளிலும் புதுமையை வி¨ழவதும் அவர்களுக்கு இயல்பே.

என்ன, சில சமயங்களில் அதிதீவிரப் புதுமை, 'அரதப்' பழமையை அழைத்து வந்துவிடவும் கூடும். அதுபோலத்தான் இந்த ஓரங்க நாடகப் பாணி இன்னும் படைப்பாளர்களால் ஓரங்கட்டப் படாமலேயே உள்ளது. ஆனால் படைப்பாளரிடத்தில் இது குறித்தெல்லாம் அறிவுரை யோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கக் கூடாதுதான். ஆனால், இன்னொரு 'நாகரிக'த்தையும் பார்த்து வருகிறேன். படைப்பாளரிடம் ''இதைப் படித்துவிட்டு இதை எழுதியிருக்கலாமே!'' ''அதைப் படித்துவிட்டு அதை எழுதுங்கள்'' என்று அவருக்கு முற்றிலும் அன்னியமான சில மேலை - ஐ§ராப்பியப் புத்தகங்களைப் பரிந்துரைப்பதன் மூலம் மட்டம் தட்டுவது...

படைப்பாளர் எதற்காக அவற்றைப் படித்தாக வேண்டும்? 'படைத்தல்' என்பதைத் தவிர படைப்பாளர் மேல் எந்த விதியையும் சுமத்தலாகாது. நான் ய்வாளனாக இருக்கலாம். பேராசிரியனாக இருக்கலாம். ஆய்வு வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால், படைப்பாளரை என்மூலம் ஆய்வுப்பட்டம் வாங்க வந்த மாணவராக/மாணவியராக நடத்த முயலக் கூடாது.

- தேவமைந்தன்

Pin It