தமிழகம் பெரும் போராட்டக்களமாக மாறியிருக்கின்றது. சாதி, மதம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தமிழர் நலன் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒரணியில் திரண்டு, காவிரியில் தமிழரின் உரிமையை மீட்டெடுக்க போராட்டக் களத்திற்கு வந்திருக்கின்றார்கள். கடையடைப்பு, ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தினம், தினம் தமிழகம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றது. இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல  அமைந்தது ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையை பல்வேறு பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் முடக்கியது. தன்னுடைய இனம் தன் கண்முன்னாலேயே அழிக்கப்படுவதைக் கண்டு குமுறி எழும்போது, அந்த உணர்வுகளின் வெளிப்பாடு எப்படி பிரவாகமாக இருக்குமோ, அப்படி இருந்தது சென்னையை முடக்கிய தோழர்களின் போராட்டம். தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு தமிழனும் தான் அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டிருப்பார்கள். அந்தளவிற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் வீச்சாக எதிரொலித்தார்கள் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள்.

gobackmodi

   குறிப்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் ஐபிஎல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழகமே காவிரிக்காக களத்தில் போராடிக் கொண்டு இருக்கும்போது, மாநிலத்தின் தலைநகரில் கொண்டாட்டமாக  ஐபிஎல் போட்டி நடத்தப்படுவது தமிழர்களை கொச்சைப்படுத்தும் இழிவான செயலாகும். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும், எனவே தமிழர்கள் தங்களது எதிர்ப்பை ஒருமித்த குரலில் வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, தமிழின துரோகி இந்தியா சிமெண்ட் ஸ்ரீனிவாசன் தமிழர்களின் உணர்வுகளை எல்லாம் புறம்தள்ளிவிட்டு இந்தப் போட்டியை நடத்தி இருக்கின்றான். தமிழ்நாட்டு வளங்களை சுரண்டி கோடி கோடியாய் கொள்ளையடித்து தன்னை வளப்படுத்திக்கொண்ட கும்பல் இன்று தமிழன் கண்ணீருடன் தவிக்கும் போது அதை எள்ளி நகையாடும் வகையில், தமிழக மக்கள் இருந்தால் என்ன, செத்தால் நமக்கென்ன, நமக்கு முக்கியம் பணம்தான் என்ற அடிப்படையில் போட்டியை நடத்தியுள்ளது.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்டப் புகாரால் தடை செய்யப்பட்ட மானங்கெட்ட அணியான சென்னை சூப்பர் கிங்ஸை தமிழக மண்ணில் விளையாட அனுமதிப்பதே ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். தமிழ் மண்ணுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத இந்த விளையாட்டு இன்று மக்களின் உணர்வுகளை தேசிய வெறியாக மாற்றி பெரும் முதலாளிகள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கவும் சூதாட்டம் நடத்தவுமே பயன்பட்டு வருகின்றது. மக்களின் நேரத்தையும் அவர்களின் உழைப்பையும் சுரண்டித் தின்னும் இந்த விளையாட்டை தமிழ்நாட்டில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டியது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை என்ற அடிப்படையில் சென்னையில் நடைபெற்ற போராட்டம் நியாயமான ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் காவிரி பிரச்சினைக்காக என்று இல்லாமல், எப்போதுமே ஐபிஎல் தமிழகத்தில் நடைபெறாமல் நாம் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    29/03/2018 தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மயிர் அளவுக்குக்கூட மதிக்காமல் கர்நாடகத் தேர்தலில் பொறுக்கித் தின்பதற்காகவும், தமிழினத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற  எண்ணத்திலும் மத்தியில் ஆளும் பாசிச மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. அதன் ஊதுகுழலாக எடப்பாடி அரசு இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக மக்கள் தங்கள் நியாயமான எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய விடாமல், மிருகத்தனமாக போராட்டங்களை அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருக்கின்றது அடிமை எடப்பாடி அரசு. போராடும் மக்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யத் துப்பில்லாமல் போராடும் மக்களிடம் இருந்து ஐபிஎல் போட்டிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நாலாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பிற்குப் போடுகின்றது. தமிழர்களின் போராட்டத்தை, உணர்வுகளை மதிக்காமல் ஐபிஎல் பார்க்கச் சென்றவர்கள் எல்லாம் உலுத்துப்போன கழிசடைகள் என்பதும், தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழர்களுக்கு எதிராக செயல்படும் புல்லுருவிகள் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் சூதாட்டப் புகாரில் சிக்கியவுடன் சென்னைவாசிகள் கொண்டாடும் தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான ஸ்ரீனிவாசனும், பார்ப்பனத் தரகன், தமிழினத் துரோகி சுப்பிரமணிய சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் சு.சாமி சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தான். அப்படிப்பட்ட அயோக்கியர்கள் தமிழர்களை மதிக்காமல் போட்டியை நடத்தியது ஒன்றும் வியப்பில்லை. தமிழ் மண்ணின் மீதும், தமிழினத்தின் மீதும் பேரன்பு கொண்ட ஒவ்வொரு தமிழனும் இனி தோனியையும், சீனிவாசனையும் பார்த்த இடத்தில் எல்லாம் காறி உமிழ்வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

  ஒருபக்கம் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மானமுள்ள தமிழர்கள் போராடிக்கொண்டு இருக்கும் போது, ரஜினி கமல் போன்ற சினிமா கழிசடைகள் நேரடியாக எந்தவிதப் போராட்டத்திலும் பங்கெடுக்காமல், வெட்கம் கெட்ட முறையில்  அவ்வப்போது கருத்து மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். “சீருடை அணிந்த காவலர்களைத் தாக்குவது வன்முறையின் உச்சகட்டம் என்றும், சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்” என்றும் ரஜினி சொல்கின்றார். அரசு என்ற அமைப்பைப் பற்றி எந்தவித பிரக்ஞையும் இல்லாத ஒருவர், வரலாற்றில் அரசின் பாத்திரம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத ஒருவர் கருத்து தெரிவித்தால் அது இப்படித்தான் இருக்கும். அதே போலத்தான் கமலும்,  டுவிட்டர் மூலம் மோடிக்கு வேண்டுகோள் விட்டிருக்கின்றார். ரஜினியின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரின் காவி அரசியல் என்றால், கமலின் சிந்தனையைத் தீர்மானிப்பது என்.ஜி.ஓ அரசியல் ஆகும். இருவருமே ஆளும் வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் ஆதரவு கருத்துகளையே வெவ்வேறு தொனியில் ஒலிக்கின்றார்கள்.

gobackmodi hashtag

  எடப்பாடி  அரசு என்னதான் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தாலும், பச்சைக்கொடி காட்டி பிச்சை எடுக்கலாம் என்று நினைத்தாலும், நிச்சயம் அது நடக்கப் போவதில்லை. தன்மானமும், சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை களத்திற்கு வந்து போராடிக்கொண்டே தான் இருப்பான். தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு போராட்டமும் காவிரி உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, அது பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டம். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பலுக்கு எதிரான போராட்டம். தமிழ் மண்ணை எப்படியும் அபகரித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சதி வேலைசெய்யும் காவி வானரங்களுக்கு எதிரான போராட்டம். தமிழர்கள் தன்னுடைய மண் சார்ந்து, பண்பாடு சார்ந்து சிந்திக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வரும் தலைமுறை முற்றாக சாதியையும், மதத்தையும் புறம்தள்ளி  மார்க்சின்,பெரியாரின் சமதர்மக் கொள்கையை மனதில் நிறுத்தி அதை வென்றெடுப்பதற்காக போராடும் என்ற நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கி இருக்கின்றது.

  மோடி இந்திய நாட்டுக்கு வேண்டுமானால் பிரதமராக இருக்கலாம்; ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை அவரை ஒரு சுண்டக்காய் அளவுக்குக் கூட யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் எப்போதுமே தங்களை தமிழர்களாகவே உணர்கின்றார்கள். ஒரு போதும் அவர்களை இந்தியர்களாக உணர வைக்க இந்திய பார்ப்பன பனியா சக்திகளால் முடியாது. அந்த உணர்வுதான் தமிழகம் வந்த மோடியை GoBackModi என்ற ஹேஷ்டேக் மூலம் தெறிக்க விட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உணர்வுமிக்க போராட்டத்தைக் கண்டு அஞ்சிய மோடி தன்னுடைய பயணத்தைக் கூட சாலை வழியாக  அமைத்துக் கொள்ள முடியாத நெருக்கடியை தமிழர்கள் அவருக்கு உருவாக்கியிருக்கின்றார்கள்.

மோடியைப் பார்த்து குஜராத் பயப்படலாம், வட மாநில மக்கள் அவரது பேரத்துக்குப் பணிந்து போகலாம். ஆனால் பெரியாரின் மண்ணில் மோடியின் பருப்பு ஒரு போதும் வேகாது. 56 இஞ்சு மார்பு அளவுடைய ஒரு வீரனை கோழையைப் போல பயந்து பயந்து, ஒளிந்து ஒளிந்து போக நிர்பந்தித்ததே தமிழக மக்கள் மோடிக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டார்கள் என்பதுதான் பொருள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் பிஜேபியின் நிலை என்னவாகும் என்று இங்கிருக்கும் தமிழன துரோகிகளான காவிக்கும்பல் இப்போதாவது உணர்ந்து கொண்டிருக்கும் என்று நினைக்கின்றோம். ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக நடந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் தமிழர்கள் மன்னித்து தமிழ்நாட்டில் நடமாடவாவது அனுமதிப்பார்கள். இல்லை என்றால் அதற்கான விலையை நிச்சயம் துரோகிகள், தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்தே ஆகவேண்டும்.

- செ.கார்கி

Pin It