இலங்கை அதிபர் இரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் பிரதமர் மோடியையும் அவருடைய நண்பரான தொழிலதிபர் அதானியையும் சந்தித்து பேசியுள்ளார். இரணிலின் இந்தியப் பயணம் பல ஒப்பந்தங்களை உறுதி செய்துள்ளது. இந்தியா அளித்த பல்லாயிரம் கோடி கடன்களுக்காக அதானியுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தி அனுப்பியிருக்கிறார் மோடி. இரு நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்துவதாக இலங்கையை, தமிழீழப் பகுதிகளை ஏலம் விட்டுச் சென்றிருக்கிறார் இரணில்.

ranil and adaniஇலங்கை அதிபராக பதவியேற்ற பிறகான, முதல் முறைப் பயணமாக ஜூலை 20, 21 ஆகிய நாட்களில் இந்தியா வந்து மோடியை சந்தித்தார் இரணில். இந்த சந்திப்பின் பொழுது இரு நாடுகளும் மின்சாரம், எரிசக்தி, சுற்றுலா, வர்த்தகம் போன்ற துறைகளில் பொருளாதார நல்லிணக்க பங்கீட்டாளர்களாக செயல்படும், நாடுகளுக்கிடையில் பெட்ரோலிய குழாய்கள் அமைத்தல், தரைப்பாலம் நிறுவுதல், மின் இணைப்புகள் ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் குறித்து விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவோம் எனவும் அறிவித்தனர். இதற்கிடையில் இந்தியாவின் முக்கிய வடநாட்டுத் தொழில் அதிபர்களை சந்தித்தும் பேசினார் இரணில்.

இலங்கைக்கு இதுவரை 40 ஆயிரம் கோடியை வழங்கியிருக்கிறது இந்தியா. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக என வெளியில் சொல்லப்பட்டாலும் இதற்கான பிரதிபலனை அதானிக்கே அள்ளி வழங்கியது இலங்கை. மோடியின் வற்புறுத்தல்களால் மன்னார் மற்றும் பூநகரியில் கற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி பெற்றார். கிட்டத்தட்ட 4100 கோடிக்கான திட்டம் இது. மோடியின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே இந்த திட்டம் அதானிக்கு வழங்கப்பட்டது என்னும் ரகசிய செய்தியை அந்நாட்டின் மின்துறை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த செய்தி அம்பலமானதால் மோடி அரசு அவசரமாக ரணிலைத் தொடர்பு கொண்டது. இரணில் உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்தார். ரகசிய செய்தியை கசிய விட்டதால் அந்நாட்டின் மின்துறை அமைச்சர் பதவி விலகும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.

அதானியின் இந்த காற்றாலைத் திட்டத்திற்கு தமிழர்களின் நிலங்களை மிகவும் சொற்ப அளவு பணம் கொடுத்து பறித்துக் கொடுத்தது இலங்கை அரசு. இந்த திட்டத்திற்குரிய நில அளவு, முதலீடு, நிதி முதலான எந்த வெளிப்படையான தகவல்களும் மன்னார் தமிழ் மக்களுக்கும், அரசியல் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படவில்லை என அங்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த காற்றாலைத் திட்டக் கட்டுமானத்திற்காக மண் அகழப்படும் போது கடல் அரிப்பு ஏற்பட்டு மன்னார் மாவட்டம் கடல் மட்டத்திற்கு கீழே சென்று விடும் நிலை ஏற்படும், பெருமளவிலான தென்னை மரங்கள் அழிக்கப்படும், மீன் வளம் பாதிக்கப்படும், வாழ்வாதார சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமை நிலைக்கு ஆளாவார்கள் என மன்னார் மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் கருத்து கேட்புக் கூட்டத்தில் கருத்துகள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்களாலும், தொடரும் கனிம வள அகழ்வுக்காகவும் 4000 துளைகளுக்கும் மேல் போடப்பட்டதால் பல போராட்டங்களை நடத்தினாலும் எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.என். ஆலம் கூறியிருந்தார். ஆனால் இவர்களின் கருத்துகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டது. தமிழர்களின் கோரிக்கைகளை என்றுமே மதிக்காத இலங்கை அரசு அதானியின் காற்றாலைத் திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியது. அதானி நிறுவனத்தின் பணி தொடங்கப்பட்டு மன்னார் காற்றாலைத் திட்டம் டிசம்பர் 2024-ல் கட்டி முடிக்கப்படும் என அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

இதைப் போலவே, இந்தியாவின் வற்புறுத்தலின் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் (Container) முனையத்தை இந்தியாவிற்கு வழங்க மகிந்த ராசபக்சே அரசினால் 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிங்கள மக்களிடையே தோன்றிய கடுமையான எதிர்ப்பினை சமாளிக்க முடியாத சிங்கள அரசு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. அதன் பயனாக இலங்கை துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் அதானிக்கு வழங்கப்பட்டது. 5700 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தில் 51% அதானியின் பங்காகும். ஜப்பான் நிறுவனமும், இலங்கை பிரதேச சபையும் மீதமுள்ள பங்கினை பகிர்ந்து கொண்டன. இதை தன்னிச்சையாக எடுத்த முடிவு எனவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்போ, திறந்த விலை மனுக்கோரலோ விடப்படவில்லை என இலங்கை எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதானிக்கு கையளித்தது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலான பசுமை ஹைட்ரஜன் திட்டம் துவங்குவதற்கும் அதானி இரணில் இடையே சந்திப்பும் இலங்கையில் ஜூலை 21, 2023-ல் நடந்தது.

மோடி-இரணில் சந்திப்பின் பொழுது, இந்தியாவின் உதவியுடன் திரிகோணமலையில் எரிசக்தி நிலையங்களை மேம்படுத்தப் போவதாகவும், இலங்கைக் கடற்கரைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் சோதனை நடத்தப்படும் எனவும் அறிவித்தார் அவர். திரிகோணமலையை பெரிய தொழிற்சாலைகளின் மையமாக மாற்றப் போவதாகவும் கூறினார். விரைவில் அதானி, டாடா போன்ற பனியா மார்வாடி குஜராத்தி தொழில் அதிபர்கள் இந்த அனைத்து திட்டங்களிலும் நுழைந்து கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். தமிழீழத்தின் இயற்கை வளமும் இந்த நிறுவனங்களின் கொள்ளைக்கு பலியிடப்படும்.tamils against adaniதமிழர்களை முன்வைத்து இலங்கை – இந்திய அரசுகள் இணைந்து நடத்தும் கண்துடைப்பு நாடகமும், ஈழத் தமிழினத்திற்கு என்றுமே தீர்வைத் தராததுமான 13 வது சட்டத்திருத்தம் குறித்து இருவரும் பேசினர். ராசீவ் காந்தி – செயவர்த்தனே இடையே 1987-ல் ஏற்படுத்தப்பட்ட இந்த 13 வது சட்டத்திருத்த ஒப்பந்தம் ஈழத் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமலே கொண்டு வரப்பட்டது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தின்படி, பெரும்பான்மை உறுப்பினர்களே சட்டத்திருத்தத்தை தீர்மானிக்கும் நிலையில், சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அப்போதே இதனை ஏற்கவில்லை. அரைமனதுடன் உருவாக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாண அரசும் பொம்மை அரசாக அமைந்தது. இலங்கை நீதிமன்றத்தினால் இந்த இணைப்பும் கூட பின்னர் பிரிக்கப்பட்டது. இன்று வரை தமிழர் நிலங்களில் அளவுக்கு மீறிய சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. நிலம், கல்வி, காவல்துறை, நீதித்துறை என எல்லா முடிவெடுக்கும் அதிகாரமும் பெரும்பான்மையான சிங்கள அரசிடமே குவிக்கப்பட்ட நிலையில் எந்தப் பயனுமற்ற இந்த சட்டத்தை மீண்டும் கையிலெடுக்கிறார்கள்.

ஈழத்தின் வடக்கு கிழக்கு மாகாணக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இரணில் விக்கிரமசிங்கே மே 15, 2023 அன்று சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த சந்திப்பு, ‘இரணிலுக்கு தன்னை தமிழர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரான தலைவர் என்னும் எண்ணத்தை சர்வதேசத்திடம் விதைக்க மட்டுமே காரணமாக இருக்கிறது’ என தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினார்கள். இந்த சூழலில், 13 வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றினால் மீண்டும் இனக் கலவரம் மூளும் என இலங்கையின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரா கூறுகிறார். குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வைக் கூட இனவெறியுடன் அணுகும் சிங்களப் பேரினவாதிகளின் கூடாரம் தான் இலங்கை என்பதை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள்.

இலங்கையின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என தமிழர்களை முன்வைத்து தங்கள் ஆதாயங்களைப் பெறும் பேரினவாதிகளின் கட்சிகளின் பிடியில் இலங்கையின் ஆட்சி பீடங்கள் அமையப் பெறுகின்ற நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழர்களை ஏமாற்றும் கருவியாக இந்த 13-வது சட்டத்திருத்தத்தை கொண்டு இலங்கையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டிட வலியுறுத்துவோம் என வீராவேசமாகப் பேசுகிறார். 1987-ம் ஆண்டு தொடங்கி 36 வருடங்கள் கடந்தும் கிடப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எடுத்து தூசு தட்டி தமிழர்களின் கண்களில் தூவி விடுகிறார். இந்த 13 வது சட்டத்திருத்தத்தின் அடிப்படை விவரங்கள் எதுவும் தெரியாமலே ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கொடுக்க முனைவதாக நடிக்கிறார் அண்ணாமலை.

குசராத்தி பணியா மார்வாடி முதலாளிகளுக்காக, இலங்கையுடன் இந்தியா கறாராக பொருளாதார ஒப்பந்தங்களைப் போடும் அளவுக்கு, மேம்போக்காக கூட தமிழக மீனவர்கள் கைது செய்வதற்கு எதிராகப் பேசுவதில்லை. எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என மீனவர்களின் படகுகள், வலைகளை நாசப்படுத்துவதோடு அவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கிறது இலங்கை கடற்படை. கடந்த நான்கு ஆண்டுகளில மட்டும் 626 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இந்தாண்டு 2023, ஜனவரியில் இருந்து இதுவரை 80க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை அரசு. இந்நிலையில் இரணில் வருகையின் காரணமாக 22 பேர் விடுவிக்கப்பட்டனர். இரு நாடுகளின் சாதக பாதகங்களுக்கு இடையில் தமிழக மீனவர்களை அலைக்கழிக்க ‘எல்லைத் தாண்டுகிறார்கள்’ என்னும் பொய்களை வீசுவதை இலங்கை அரசு ஒரு தந்திரமாகவே வைத்திருக்கிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்பது தெரிந்தும் இலங்கைக்கு எந்த கண்டனங்களும் இந்தியா தெரிவிப்பதில்லை. இலங்கையின் தெற்கு முனையமான அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனா அளித்த கடனுக்காக 99 வருடங்களுக்கு அடகு வைத்தது இலங்கை. தனது ராணுவ தேவைக்காக எந்நேரமும் சீனா இந்து துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ளும் என்கிற நிலையிருந்தும் இந்தியாவால் இலங்கையை எதிர்க்க முடியவில்லை.

சீனா தனது அரசியல் மற்றும் புவிசார் நலனுக்கான முதலீடாக இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக சுமார் 60 ஆயிரம் கோடியை கடனாக அளித்திருக்கிறது. சீனாவின் செய்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 என்கிற போர்க்கப்பல் 2022, ஆகஸ்டில் இலங்கைக்கு வந்த போது இந்தியா கவலை மட்டும் தெரிவித்தது. வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அவைகளால் ஈட்டும் வருவாயை நாங்கள் என்றும் வரவேற்போம் என்பதே இலங்கையின் பதிலாக இருந்தது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூன், 2023-ல் சீனாவிற்கு சென்றிருந்த போது, சீனாவின் நீண்ட நாள் திட்டமான பட்டுச் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியாவை சீனா எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

இலங்கையில் மகிந்த ராசபக்சே ஆட்சி ஏற்படுத்திய பேரழிவுப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக கடந்த வருடம் 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. உணவுப் பொருள், எரிபொருள், உரத் தட்டுப்பாடுகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட சிங்கள மக்கள் தெருவுக்கு வந்தனர். இலங்கை போராட்டக் களமானது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் அனைத்தையும் தகர்த்தனர். இலங்கையின் பொருளாதார நசிவிற்கு காரணமாக அந்நாட்டின் பணவீக்கம், அதிகப்படியான வெளிநாட்டுக் கடன், விவசாயக் கொள்கை போன்ற பலவும் முன் வைக்கப்பட்டாலும் தமிழர் பகுதிகளில் மிதமிஞ்சிய அளவில் நிறுத்தப்பட்ட சுமார் 3 லட்சம் சிங்கள ராணுவத்திற்கு செலவழித்த தொகைகளே முக்கியமானது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது. மக்களின் கிளர்ச்சியை அடுத்து இலங்கை முடங்கியது. வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார் ராசபக்சே. இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்றவரே இரணில் விக்கிரமசிங்கே.

இலங்கையின் அதிபரானதும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக தங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இலங்கை துறைமுகத்தையும், தமிழீழப் பகுதிகளின் நிலங்களையும் அடகு வைத்து பொருளீட்டும் பணிகளை செய்கிறார் இரணில் விக்கிரமசிங்கே. இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் ரணிலின் இப்போதைய இந்தியப் பயணமும் இருக்கிறது.

ஈழத் தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையும், இந்தியாவும் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் இறுதியில் அதானியின் வர்த்தக நோக்கமே வெற்றி பெறுகிறது. நல்லிணக்கமும், நட்பும் குசராத்தி பனியா நிறுவனங்களுக்காக மட்டுமே, தமிழக மீனவர்களின் நலனுக்காக அல்ல என்னும் இந்தியாவின் நோக்கமும் தெளிவாகத் தெரிகிறது.

‘இயற்கை எனது நண்பன்’ என்றவர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன். விடுதலைப் புலிகளின் தன்னாட்சி பிரதேசத்தில் இயற்கையான சூழலில், தற்சார்பு தொழில்களைப் பெருக்கி, மன நிம்மதியுடன் வாழ்ந்தார்கள் ஈழத் தமிழர்கள். ஆனால் இனி அந்த வாழ்வியலை நெருங்கவே முடியாது என்பதற்கேற்ப இந்திய இலங்கை அரசுகளின் வர்த்தக நோக்கங்களும், சீனா அமெரிக்க சண்டையின் ராணுவ ரீதியான கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்து வாழ வேண்டிய நிலையை ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கி விட்டார்கள்.

இந்தியா-இலங்கை நட்பு வடநாட்டு முதலாளிகளின் கொள்ளைகளுக்கு தீர்வாகுமேத் தவிர தமிழர்களுக்கு என்றும் தீர்வைத் தராது. இலங்கைப் பேரினவாத அரசின் ஆளுகையின் கீழ் தமிழர்கள் தமிழீழத்தின் இயற்கை வளங்களைக் காக்க முடியாது. அமைதியான வாழ்வியல் சூழல் அமைவதும் சாத்தியமாகாது. ஈழத் தமிழினத்தின் நலன் தனித் தமிழீழம் அமைவதில் தான் அடங்கியிருக்கிறது.

- மே பதினேழு இயக்கம்