Narmada Damபெரிய அணைகள் - இது உலகை கடந்த முப்பது வருடங்களாக அச்சுறுத்தி வரும் பிரச்சனை. வழக்கம் போல் அணை வேண்டும் என்பவர்கள் உலகை வளர்ச்சி நோக்கி கரம்பிடித்து அழைத்துச் செல்பவர்களாகவும், அணை கட்டுவது ஆபத்து என்பவர்கள், அதை எதிர்ப்பவர்கள் வளர்ச்சியின் தடைக்கல்லாக நிற்பவர்களாக பொதுவாக சித்தரிக்கப் படுகிறார்கள். பெரிய அணைகள் இதுவரையில் கோடிக்கணக்கானவர்களை சொந்த நாட்டில் அகதிகளாய் மாற்றியிருக்கிறது. சொந்த நாட்டில் பிச்சைக்காரர்களாய் பெரிய நகரங்களின் தெருக்களில் புழுதி படிந்த முகங்களுடன் அலையும் கோடிக்கணக்கானவர்களை பற்றி எப்பொழுதுமே இந்த தேசத்திற்கும் அதன் ஊடகங்களுக்கும் கவலை இல்லை. இப்படி பிச்சைக்காரர்களாய் அலையும் இவர்கள் யார்? சொந்த வீடு, ஏக்கர் கணக்கில் வயல் வெளிகள், கோவில், மாந்தோப்பு, புளியந்தோப்பு, (மலைகள் சூழ்ந்த கிராமத்தில்) திண்ணைகள் நிறைந்த தெருக்கள், மந்தை, சாவடி என கேலிப் பேச்சுக்களுடன் மிகுந்த குதூகலத்துடன் வாழ்ந்த மனிதர்கள் தான் இன்று நம் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளால் இப்படி மாற்றி அலைகிறார்கள். திருவிழாக்களை தொலைத்து விட்டு தெருக்களில் வீடற்று சினிமா போஸ்டர்களை வேடிக்கை பார்த்து - சிறுவர்கள் கண்களை உருட்டிக் கொண்டு மறைகிறார்கள்.

வெயில் காலங்களில் அணையின் நீர்மட்டம் குறையும் சமயங்களில் ஊர் ஞாபகம் மூளை நரம்புகளை அரிக்க, கிராமங்களுக்கு பயணப்படுகிறார்கள். நீர் மட்டம் குறையக் குறைய காரை வீடுகளும், கோவில் கலசங்களும் மெதுவாக எட்டிப் பார்க்கும் சமயங்களில் அங்கு சில வாரங்கள் தங்கி விடுகிறார்கள். ஞாபகங்கள் மனதில் உருவாக்கும் எண்ணற்ற சித்திரங்கள் வாழ்வின் கோரத்தை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

வன்கொடுமைகளை செய்து விட்டு அரசாங்கம் அணை கட்ட கடன் கொடுத்த உலக வங்கி தலைவருக்கு கச்சிதமான உடற்கட்டுடைய பெண்களை அமர்த்தி அழகி போட்டியும், வடிவமைப்பு ஆடை திருவிழாக்களையும் நடத்துகிறது. அழகிய பெண்கள் ஒய்யாரமாக நடந்து திரும்பும் பொழுது அவர்களின் நீளமான பாவாடைகள் உலக வங்கி கவர்னரின் கன்னங்களை உரசுகிறது. நூற்றுக்கணக்கான மீடியா புகைப்படக் கலைஞர்கள் தங்கள் புகைப்படக் கருவிகளை க்ளிக் செய்த வண்ணம் உள்ளனர். இந்த புகைப்படக் கருவிகள் அவலம் நிறைந்த நடைபாதை வாழ்க்கையை பார்த்ததேயில்லை.

அணையிலிருந்து தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான மெகா வாட் மின்சாரம் நாட்டை, அதன் தொழிற்சாலைகளை வளர்ச்சி நோக்கி நகர்த்துகிறது. இதுநாள் வரையிலும் கிராமப்புரங்களில் மூன்று பேஸ் மின்சாரம் ஆறு மணி நேரம் மட்டுமே எட்டிப் பார்க்கிறது. பிறகு எங்கே தான் செல்கிறது இந்த மின்சாரம். உற்பத்தியாகும் இந்த மின்சாரத்தில் பெரும் பகுதி பெரிய நகரங்களின் விளம்பர பலகைகளுக்கே போதவில்லையாம். உலகமயத்திற்கு பிறகு இந்திய சந்தைக்குள் படையெடுத்துள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் விளம்பரங்களுக்கே அதிகப்படியான பணத்தை செலவிடுகிறது. இந்த வண்ணம் ஜொலிப்பில் தான் மயங்கி கிடக்கிறது இந்திய நடுத்தர வர்க்கம். இத்தனை லட்சம் குடும்பங்களின் வாழ்க்கையை அழித்தொழித்துவிட்டு இந்த ஜொலிப்பை பெறத்தான் வேண்டுமா? நகரங்களில் அதிகப்படியான மின்சாரம் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கொஞ்சம் சிந்தியுங்கள். இந்த மின்சாரம் பலரின் ரத்தத்திலிருந்து பெறப்பட்டது.

அணைக் கட்டுமானத்தை உக்கிரத்துடன் தடுத்து நிறுத்த முயன்றவர்களின் போராட்டங்கள், இன்று மறுசீரமைப்பு மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரங்களை உத்திரவாதப்படுத்தும் போராட்டங்களாக உருமாறியுள்ளது. இந்திய அரசும், மாநில அரசுகளும் மறுசீரமைப்பு நடந்து விட்டதாக கூறுகிறது. எல்லா மறு சீரமைப்பும் காகிதத்தில் மட்டுமே நடந்துள்ளது. கிழட்டுப் பய புலம்பலாய் இந்திய அரசு உச்சநீதிமன்றத்தின் ஆணைகளை, உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களாக எந்த மறுசீரமைப்பு நடைபெறாத சூழலில் மீண்டும் அணையின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. நர்மதா பச்சாவ் ஆன்தோலனின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேதா பட்கரின் தலைமையில் புதுதில்லி சாஸ்திரி பவன் அருகில் அணி திரண்டு முகாமிட்டுள்ளனர். மேதா பட்கர் அங்கு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதம் மத்திய அரசாங்கத்தையும் மட்டற்ற வளர்ச்சியை கோருபவர்களையும் உலுக்கிவருகிறது. இந்தியாவின் அறிவு ஜீவிகள் பலர் இந்த எளிய தாயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் அருகில் அமர்ந்து வருகிறார்கள். வி.பி.சிங், அருந்ததி ராய், வந்தனா சிவா என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியாவின் சரித்திரத்தில் எப்பொழுதும் நடந்திராதது போல் ஒரு பெண்ணைக் கைது செய்ய ஆயிரத்து இருநூறு காவல் துறையினர் நள்ளிரவில் சென்றார்கள். எல்லாம் வேடிக்கை, வேடிக்கையின் ஒரு பகுதி.

சயிப்-உத்-தின்-சோஸ் அவர்களுக்கு மேதா பட்கர் எழுதிய கடிதம் இங்கே.....

சயிப்-உத்-தின்-சோஸ்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
புதுதில்லி

நீங்கள் அறிந்திருப்பீர்கள், சர்தார் சரோவர் அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. 110.64 மீட்டரிலிருந்து 121.92 மீட்டரை 12 மீட்டர் உயரம் அணையின் உயரம் அதிகரிக்கும். இந்த உயரம் அதிகரிப்பதால் ஏராளமான வயல்கள், வீடுகள் மூழ்கிப் போகும். ஏற்கனவே 35,000 குடும்பங்கள் அங்கு எந்த மறுசீரமைப்பு நிவாரணங்களும் வழங்கப்படாமல் நிற்கதியாய் சிதறி கிடக்கிறது. ஆனால் மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்து மாநில அரசுகள் ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக அப்பட்டமாக பொய் சொல்கிறது. நாங்கள் உங்களுக்கு அங்குள்ள சூழ்நிலையை விளக்குகிறோம். தயவு செய்து நீங்கள் தலையிட்டு கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும். அங்கு உள்ள மக்களின் வாழ்க்கை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - உத்திவாதபடுத்த வேண்டும்.

பள்ளத்தாக்கில் உள்ள சூழ்நிலை எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி கடும் வேதனை அடையச் செய்கிறது. சிலவற்றை இங்கு தருகிறோம்.

* அக்டோபர் 2004, பிரதமர் மன்மோகன் சிங் நீர்வளத்துறை அமைச்சரை நேரடியாக நர்மதா பள்ளத்தாக்கை பார்வையிட்டு அங்குள்ள புனரமைப்பு குறித்த நிலைமையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

Lady in Dam* ஜனவரி 5, 2006 அன்று நடந்த கூட்டத்தில் உங்கள் செயலர் ஹரிநாராயணன் ரொக்க இழப்பீடு வழங்குதல் மறு வாழ்வளிப்பாக கருதப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

* மார்ச் 6, 2006 தேதியிடப்பட்ட எல்.சி.ஜெயினுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் நீங்கள் அணையின் உயரம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விபரமான நடைமுறைகளை எடுத்துரைத்தீர்கள்.

* ஆனால் எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் உயரம் அதிகரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

• உத்தரவுக்காக காத்திருந்தது போல் அசுர வேகத்தில் கட்டுமானப்பணிகள் துவங்கியது.

நீங்கள் இதுவரையிலும் உங்கள் பயணத்தை மேற்கொள்ளவில்லை. நீங்கள் பரிந்துரைத்த எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இந்த நடைமுறைகள் பற்றி எந்த ஒரு கிராம சபையிலோ கிராம பஞ்சாயத்திலோ விவாதிக்கப்படவில்லை. தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை. இந்த ஒட்டுமொத்த நீருளாழ்ந்த பகுதியும் பட்.டியலிடப்பட்ட பகுதி. அதனால் நில அர்ஜீதம் செய்வதற்கு முன்னாலும், மறுசீரமைப்புகளை நிர்ணயிப்பதற்கும் கிராம சபையை கலந்தாலோசிப்பது சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மிகத் தெளிவாக இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதுநாள் வரையிலும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கும் மாற்று குடியிருப்பு இடங்களோ, மறு வாழ்வளிப்போ வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எந்த அடிப்படையில் உங்கள் செயலர் ஹரிநாராயணன் தலைமையில் கூடிய நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் அணையின் உயரம் அதிகரிப்பதற்கான உத்தரவை கொடுத்தது. உங்கள் சௌகரியத்திற்காக இங்கே மறுசீரமைப்பு தொடர்புடைய பல தீர்வு காணப்படாத விசயங்களை சுட்டிக் காட்டுகிறோம்.

நர்மதா நடுவர் மன்றத்தின் அடிப்படையான பரிந்துரைப்படி அணைநீரில் கிராமங்களை மூழ்கடிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான வசதிகளுடனான மறு சீரமைப்பு கிராமங்கள் அளிக்கப்பட வேண்டும். அதே போல் விவசாயம் செய்தவற்கு நல்ல நிலமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது ஒருபுறம் இருக்க 110.64 மீட்டரான தற்போதைய உயரத்துக்குள் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு எந்த மறுசீரமைப்பும் எட்டவில்லை.

உச்சநீதி மன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் மறுசீரமைப்பு தொடர்புடைய பல வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

• பயிரிடத்தக்க நிலம் அணை கட்டுமானம் துவங்குவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே வழங்கப்பட வேண்டும். முழுமையான மறுசீரமைப்பு நிலம் நீரில் முழ்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அளிக்கப்படவேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் அதே வேகத்துடன் மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற வேண்டும். நர்மதா நீர் - நடுவர் மன்றத்தின் ஆணைகள் மிகுந்த உறுதியுடன் பின்பற்றப்பட வேண்டும். அதில் எந்த இணக்கத் தீர்வுக்கும் இடமில்லை. திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கை மறுவாழ்வளிப்புக்கு பின் சௌகரியத்துடன் இருக்க வேண்டும்.

மூன்று மாநில அரசுகளும் உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தின் எந்த வார்த்தையையும் மதிக்கவில்லை. இங்கே சில சம்பவங்கள்:

மத்திய பிரதேசம்:

* பயிரிடத்தக்க நிலம் இதுவரை ஒரு குடும்பத்திற்கு கூட வழங்கப்படவில்லை.

* பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கப் போவதாக அரசாங்கம் வாக்குறுதி அளிக்கும் நிலம், அரசாங்கம் நீதிமன்றத்தில் அளித்த வக்காலத்துப்படி ஆக்கிரமிப்புக்குள்ளானது.

பயிரிடத்தக்கதல்ல, வழக்குகளுடையது அல்லது அப்படி ஒரு நிலமே இல்லை, சிறப்பு சீரமைப்பு என அரசாங்கம் ரொக்க பணத்தை பிரித்தளிக்கிறது அது சட்டத்துக்கு புறம்பானது மற்றும் அந்த பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களால் நிலம் வாங்க இயலாது.

* மறுசீரமைப்பு பகுதிகள் இன்னும் உருவாகவில்லை. பல கிராமங்களுக்கு இன்னும் பகுதிகள் தேர்வு செய்யப்படவில்லை. பல பகுதிகள் எந்த வசதிகளும் இல்லாதவை. பல பகுதிகளில் எல்லா குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வீட்டு மனைகள் இல்லை. இதனால் தான் மத்திய பிரதேச அரசாங்கம் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் கொடுத்து தனது பொறுப்பிலிருந்து விடுபட முயல்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. கிராமங்கள் நீரில் மூழ்கும் பொழுது குடும்பங்கள் இருப்பிடங்களின்றி தெருவில் தவிக்கும்.

மகாராஷ்டிரா:

* 80 மீட்டர் உயரத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் எந்த மறுசீரமைப்பும் செய்யப்படவில்லை.

* நீதித் துறை ஆணையின் தலைமையில் 2002ல் நடவடிக்கை அறிக்கை உருவாக்கப்பட்டது. பல மக்கள் பிரதிநிதிகள் உட்பட எல்லோரும் முதலில் திட்டத்தால் வெளியேற்றப்படும் மக்களின் பட்டியல் வெளியிடும் வேலை இன்னும் முடிந்த பாடில்லை.

* திட்டத்தால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு நிலம் (வயல்) ஒதுக்கப்படவில்லை. பாதி பேர் தங்கள் சொந்த கிராமங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். மீதி மக்கள் மறு குடியமர்வு இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

* மேஜரான மகன்களுக்கு இரண்டு ஹெக்டேர் நிலம் வழங்கப்பட வேண்டும் என மிக அழுத்தமான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பொழுதும் அதனை ஏற்க இயலாது என்று மகாராஷ்டிர அரசாங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர அரசாங்கம் அந்த தீர்ப்பு மத்தியப் பிரதேசத்துக்கு மட்டும் தான் பொருந்தும் என விளக்கமளித்து வருகிறது. அந்த தீர்ப்பை நடுவர் மன்றமும் ஆமோதித்துள்ளதால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.

* சமூகமாக வாழத் தகுதி இல்லாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 2500 பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பட்டியலிட்டு அறிவிக்கவில்லை திட்டக் குழுவினர். இவர்களுக்கு மறு வாழ்வளிப்பு அளிக்கப்பட வேண்டும்.

Medha Patkar* மகாராஷ்டிர அரசாங்கம் இடங்கள் வழங்குவதில்லை என்று கொள்கையை எழுத்துப்பூர்வமாக வைத்துள்ளது. வழங்கிய இடங்களும் பயிரிடத் தக்கதல்ல. வெளியேற்றப்பட்டவர்களுக்கு லாயக்கானதல்ல. வெளியேற்றப்பட்டவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

* மகாராஷ்டிர அரசாங்கத்தின் அறிக்கைப்படி இன்னும் மறுவாழ்வளிப்பு வழங்கப்படாத பல குடும்பங்கள் இருக்கின்றனர். அப்படியிருக்க அடுத்த கட்ட உயரம் அதிகரிப்பு ஆணை எப்படி வழங்கப்பட்டது. 121.92 மீட்டர் உயரத்திற்கு கீழ் 113 குடும்பங்கள் நிற்கதியாய் தவிக்கிறது.

குஜராத்

அரசாங்கம் முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து விட்டதாக பறைசாற்றுகிறது. ஆனால் அங்கே மக்கள் கடும் அவதிகளுக்கு ஆளாகி, துயரம் மிகந்த வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அறிவிக்கப்பட்ட அளவு நிலம் வழங்கப்படவில்லை. அந்த நிலமும் பயிரிடத்தக்கதல்ல. மழைகாலங்களில் நிலங்கள் நீரில் தோய்ந்து வருவது வழக்கமாகிவிட்டது. மழைக்காலம் வந்து விட்டால் குடியிருப்புகளுக்குள் நீர்பகுந்து விடுகிறது. சிறிய வயல்களின் அறுவடை கூட கைக்கு எட்டுவதில்லை.

அதனால், உங்கள் அறிக்கைகள் படியே நர்மதா பள்ளத்தாக்கில் எந்தவித மீட்பு நடவடிக்கையும் முழுமையாகவோ திருப்திகரமாகவோ நடைபெறவில்லை. நீங்கள் உயர அதிகரிப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை செய்யும் தார்மீக பொறுப்பும் பலமும் உங்களிடம் உள்ளது. உங்கள் பதவியால் இதில் தலையிடுங்கள் லட்சக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை பாதுகாக் வாருங்கள். கட்டுமானம் முடிந்துவிட்டால் இவர்கள் வாழ்வில் செப்பனிட முடியாத சேதம் நிகழ்ந்துவிடும். மனிதத்துவமான சிக்கலை அரசாங்கம் கையாள நேரும். மனிதன் உருவாக்கிய சுனாமி, மனிதன் உருவாக்கிய பூகம்பம்.

உடனடியாக தலையிட்டு கட்டுமானத்தை நிறுத்துங்கள். மறுவாழ்வளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். நாங்கள் உங்களை நேரடியாக பள்ளத்தாக்குக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறோம். நீங்கள் நேரடியாகவே சூழ்நிலையின் உக்கிரத்தை அறிந்து கொள்ளுங்கள். பிரதமரின் அலுவலகமும் உங்களுக்கு இது போன்ற உத்தரவை நவம்பர் 2004ல் அளித்தது. 121.92 மீட்டர் அளவுக்கு கீழ் பாதிக்கப்பட்ட கடை கோடி மனிதன் வரை மறுசீரமைப்பு வந்து சேரட்டும் அதை உத்திரவாதப்படுத்தி நடவடிக்கையாக மாற்றுங்கள். அவை முழுமையடைந்தபின் தான் அணை கட்டுமானம் துவங்க வேண்டும்.

மேதா பட்கர் மற்றும் பிறர்
நர்மதா பச்சாவ் ஆள் தோலன். 

-
அ. முத்துக்கிருஷ்ணன்

Pin It