Aandal 350இப்படி ஒருவர் கிளம்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

***

"ஆண்டாள் கவிதைகளைப் படித்து, ஆண்டாளின் மீது எனக்கு மிகப் பெரும் காதலே வந்து விட்டது. ஆண்டாளை மணவாட்டியாக்கும் இலட்சிய முடிவுக்கு வந்துள்ளேன். அவளைத் தழுவாமல் இக்கட்டை இனி வேகாது. வரும் காதலர் நாள் முதல் இந்த தவ வாழ்க்கையை வாழ்ந்து ஆண்டாளை அடைய உத்தேசித்துள்ளேன்.

ஆண்டாள் மீதான முதல் காதல் கவிதையை ஜீயர் மூலமாகவே கொடுத்து அனுப்பவிருக்கிறேன்... அவரையன்றி வேறு யார் அறிவார் ஆண்டாளை?

இதர வைணவ பக்தர்களும் இந்த தெய்வீகக் காதலுக்கு துணை நிற்க வேண்டும்.

இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் எழலாம். நானே அவற்றிற்கு பதில் கூறுகிறேன்.

1. ஆண்டாளுக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே?

ஆண்டாள், கண்ணனை மணக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது, கண்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. மனம்தான் முக்கியமே தவிர, மணம் முக்கியமில்ல.

2. ஆண்டாள் உங்களைத் திரும்பிப் பார்க்கணுமே...!!

ஆண்டாளைக் கண்ணன் திரும்பிப் பார்க்க எத்தனை ஆண்டுகள் ஆனது? அத்தனை ஆண்டுகள் தவவாழ்க்கையை நானும் வாழ்ந்து, கவிதைகள் எழுதி, சூடிக் கொடுத்து, என் காதலை மெய்ப்பித்து, ஆண்டாளை என்பக்கம் திருப்புவேன்.

3. கண்ணனைவிட நீங்கள் என்ன விதத்தில் உசத்தி?

வேலைவெட்டி இல்லாமல் வெண்ணெய் திருடுபவனைவிட, IT நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் பெட்டர் இல்லையா? என்னோடு வாழ்ந்தால், புஹாரி பிரியாணியும், தந்தூரி சிக்கனும் தாராளமாகச் சாப்பிடலாம். கண்ணனுடன் இருந்தால், ஜீயர் தின்றதுபோக மிச்சமிருக்கும் புளியோதரைதான் கிடைக்கும். என்னுடன் இருந்தால், வெளிநாடுகளுக்குப் போகலாம், நவநாகரீக உடைகள் அணியலாம். கண்ணனுடன் இருந்தால் திருவரங்கத்தைத் தாண்ட முடியாது."

***

ஆண்டாளை வழிபடும் பக்தர்கள், தங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் 'ஆண்டாள் போல் கடவுளைக் கல்யாணம் செய்து வாழப் போகிறேன்' என்று முடிவெடுத்தால், அதை ஆதரிப்பார்களா? அல்லது 'ஆண்டாளைக் காதலிக்கிறேன்' என்று ஆண் ஒருவர் கூறினால், அதை ஏற்றுக் கொள்வார்களா?

திருமணமான ஆண் எத்தனை பெண்களை வேண்டும் என்றாலும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். பெண்ணுக்கு மறுமணம் புரியும் உரிமைகூட கிடையாது. இந்துக்களிடம் நிலவும் இந்த ஆணாதிக்க மனநிலையைத்தான் இந்துக் கடவுள்களுக்கும் பொருத்தியுள்ளார்கள்.

இராமனைத் தவிர, பலதார மணம் புரியாத ஆண் கடவுள்களே இல்லை. மறந்தும், ஒரு பெண் கடவுளுக்குக் கூட இரண்டு கணவர்கள் இல்லை. 'சிவனுக்கும், பார்வதிக்கும் சண்டை; அந்தக் காலத்தில் பார்வதி வேறு ஆணைத் திருமணம் செய்தாள்' என்றுகூட ஒரு கதை இல்லை.

ஆண்டாள், கண்ணனைக் காதலித்தாள் என்று ஒரு கதை இருக்கிறது. 63 நாயன்மார்களிலும், 12 ஆழ்வார்களிலும் ஒருவர் கூட பார்வதியையோ, இலட்சுமியையோ காதலிக்கவில்லை, ஏன்? அப்படி ஒருவர் காதலித்திருந்தால், ஆண்டாளைப் போல அவரையும் இந்து சமூகம் கடவுளாக ஏற்றிருக்குமா? இதன் பின்னே இருக்கிறது, பெண்களை ஓர் உடைமையாகப் பார்க்கும் இந்து மதத்தின் ஆணாதிக்க அரசியல்.

சாதி அடுக்குகளின் மீதும், பெண்ணடிமைத்தனத்தின் மீதும்தான் இந்து மதம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. பெண்கள்தான் இரண்டு வகையிலும் ஒடுக்கப்படுகிறார்கள். இந்து மதத்தை அடித்து நொறுக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது.கெடுவாய்ப்பாக, அவர்கள்தான் அதைக் கட்டிக் காக்கவும் முற்படுகிறார்கள்.

- கீற்று நந்தன்