செத்த மீன்களைப் போல மீனவர்களின் உடல்கள்  கரை ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை  8 மீனர்வர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு சொல்கின்றது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் கரைதிரும்பவில்லை. அவர்களின் நிலை என்னவானது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஓட்டுமொத்த மீனவ சமூக மக்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். தங்களுடைய அண்ணன், தம்பி, அப்பா, மகன் என மீன் பிடிக்கச் சென்ற ஒவ்வொருவரும் உயிருடன் கரைதிரும்புவார்களா இல்லை பிணமாக கரை ஒதுங்குவார்களா என கடும் அச்சத்தில் பயமும் பீதியும் சூழ கண்ணீருடன் கரையில் காத்துக்கிடக்கின்றார்கள். ஒக்கி புயலின் தீவிரத்தை பற்றி சரியான தகவலை அரசு சொல்லாததாலேயே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கின்றார்கள். இதனால் பல நூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி கடும் பாதிப்புகளை அடைந்திருக்கின்றார்கள்.குமரி மாவட்டத்தில் மட்டும் இன்னும் பல நூறு மீனவர்கள் கரைதிரும்பவில்லை பல மீனவர்கள் புயலால் அலைக்கலைக்கப்பட்டு பல்வேறு தீவுகளிலும், மாநிலங்களிலும் கரை ஒதுங்கி இருக்கின்றார்கள். இவர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கமால் மெத்தனமாக செயல்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.

 கரைதிரும்பாத மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களை தேடும்பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டிருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தி தெரியாததாலேயே தமிழக மீனர்வர்களை சுட்டுக்கொல்ல முயன்ற இந்திய கடற்படை எந்த லட்சணத்தில் தமிழக மீனவர்களின் உயிரில் அக்கரை எடுத்துக் காப்பாற்றும் என்பது மிக பெரிய கேள்விதான்.தமிழக மீனவ மக்களின் நலனில் தமிழக அரசும், இந்திய அரசும் எப்படி மெத்தனப் போக்குடனும் பாரா முகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாகவே பார்த்துவருகின்றோம். அதிலும் குறிப்பாக இந்திய அரசு எப்போதுமே தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக கருதியதாக வரலாறே கிடையாது. அவர்களை இந்த நாட்டின் இரண்டம்தர குடிமக்களைப் போலத்தான் இந்த அரசு எப்போதுமே நடத்திவருகின்றன. ஒவ்வொரு மீனவர்களின் ரத்தத்தில் இருந்தும் அந்நிய செலவாணியை மட்டுமே அறுவடை செய்துகொள்ளும் இந்திய அரசும், தமிழக அரசும் அவர்களுக்காக செய்துகொடுத்துள்ள வசதி,வாய்ப்புகள் என்ன என்று பார்த்தால் அது காறித்துப்பும் அளவில்தான் இருக்கின்றது.

 இப்படி மீனவ குடும்பங்களின் வாழ்க்கையே சூனியமாகி அவர்கள் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது மானங்கெட்ட பிஜேபியின் பினாமி அரசு பாசிஸ்டான எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சீறும் சிறப்புமாக மக்கள் பணம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழகமே எந்தவித வளர்ச்சிப்பணிகளும் இன்றி ஆட்சி என்ற ஒன்று  தமிழ்நாட்டில் நடக்கின்றதா என தெரியாமல் பெரும் துயரத்திலும் கடும் அதிர்ப்தியிலும் இருக்கின்றது.  அமைச்சர்கள் யாரும் மக்களை நேரில் சந்திக்க முடியாத அளவிற்கு தமிழக மக்களிடம் இந்த ஆட்சிக்கு எதிரான மிக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகின்றது.  மன்னார் குடி கும்பலுக்கும்  ஓபிஎஸ் இபிஎஸ் கும்பலுக்கும் இடையேயான மோதல் மட்டும்தான் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றதே தவிர தமிழகம் மிக மோசமாக பின்தங்கிய நிலையை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது.

 லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பற்று விழி பிதுங்கி நிற்கின்றார்கள். ஏழைமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டுவந்த சக்கரையின் விலை 13.5 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தி அவர்களின் வாயில் மண்ணை அள்ளி போட்டிருக்கின்றது. ஏற்கெனவே உளுந்து நிறுத்தப்பட்டுவிட்டது, அரிசியின் அளவும் மண்ணெணையின் அளவும் குறைக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வை வெட்கமே இல்லாமல் ஏற்றுக்கொண்டு தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தின் விளைவாக தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் பெருமளவில் வடநாட்டு கும்பலின் கைகளுக்கு போய்விட்டது. இன்னும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பிற மாநிலத்தை தேர்ந்தவர்களும் போட்டியிடலாம் என்று விதிமுறையை மாற்றியமைத்திருப்பதின் மூலம் வேலைவாய்ப்பு  அற்ற தமிழக இளைஞர்கள் அனைவரையும் தற்கொலையை நோக்கி தள்ளிவிட முயன்றுகொண்டிருக்கின்றது.

 ஒரு ஆட்சி நடப்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லாமல் இவர்கள் அடிக்கும் கொட்டம்தான் செய்தியாக இருந்துகொண்டிருக்கின்றது. மக்கள்  இவ்வளவு துயரத்தில் இருக்கும் போது மக்களின் பொதுப்பணத்தில் இருந்து பல நூறு கோடிகளை எடுத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா  என்ற பெயரில் கொட்டம் அடித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள், நாளை தொகுதிபக்கம் போனால் காறிதுப்பமாட்டார்களா என்ற எந்த கவலையும் அற்று ஆட்டமாக ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதைப் பற்றியும் உண்மையில் கவலையில்லை.  யார் வீட்டில்  இழவு விழுந்தால் நமக்கென்ன நம்முடைய பணி ஆட்சி முடிவதற்குள் கிடைப்பதை அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதாகவே இருக்கின்றது.  இப்படிப்பட்ட கல்நெஞ்சம் கொண்ட கொள்ளைக்கார கும்பல்  கேட்பதற்கு ஆளற்ற மீனவ மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளுமா என்பதே பெரிய கேள்விதான்.

  கடலுக்குள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கடற்படையின் அத்துமீறல் ஒருபக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஒரு பக்கம் என மாறி மாறி அவர்களை காலந்தோறும் வஞ்சித்துவருகின்றது. ஆட்சியில் இருக்கும் எந்த  அரசும் அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சித்ததாக இதுவரையில் தெரியவில்லை. கட்சத்தீவை இலங்கைக்கு அப்பன் வீட்டு சொத்தை எடுத்துக்கொடுத்தது போல இனாமாக கொடுத்துவிட்டு இப்போது அதை மீட்பேன் என வெட்க மானமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். மீனவர்களால் வரும் அந்நிய செலவாணி மட்டுமே இவர்களுக்கு முக்கியமானது. மற்றபடி அவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றால் என்ன இந்திய கடற்படை சுட்டுகொன்றால் என்ன அவர்களது பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் எக்கேடு கெட்டு போனால் தான் என்ன என்ற மனநிலைதான் நமது ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.

 குளச்சலை மையமாக வைத்து ஆபத்து காலங்களில் உதவும் வகையில் மீட்புகுழுவோ இல்லை வேகக்கப்பலோ நிறுவவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்காக அரசு ஒன்றும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கு போர் கப்பல்களை பரிசளிக்க கூடிய இந்திய அரசால் நிச்சயம் இதை செய்யமுடியும். ஆனால் தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக அல்ல, குறைந்தபட்சம் ரத்தமும் சதையும் இருக்கும் மனிதர்களாக கூட கருதாத இந்திய அரசின் கேடுகெட்ட பார்ப்பன கொழுப்புதான் இப்படி தமிழக மீனர்வர்களை பலி எடுத்துக்கொண்டு இருக்கின்றது. இனிமேலாவது மீனவ மக்கள் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களை வெறும் ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கும் ஓட்டுப்பொறுக்கி கும்பலுக்கு இனி வரும் காலங்களில் சரியான புத்திபுகட்ட வேண்டும். கடலுக்கு உள்ளே மட்டுமில்லாமல் கடலுக்கு வெளியேயும் அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதே போர்குணத்தோடு போராட வேண்டும்.

- செ.கார்கி

Pin It