இலங்கை தீவுக்கு பிரித்தானியர் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொடுக்கும் போது, தாங்கள் மற்றைய காலனித்துவ ஆட்சியாளரான போர்த்துக்கேசியர், ஓல்லாந்தர் போன்று ஆட்சி செய்யாது, தமது நிர்வாகத்தை இலகுவாக நடத்துவதற்காக தமிழர்களுக்கென தனியாக இருந்த அரசை, சிங்கள அரசுகளுடன் இணைத்தோம் என்பதை பிரித்தானியர் மனதில் கொள்ளாது, எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்களவரிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தனர் என்பது சரித்திரம். அப்போதிருந்த தமிழ்த் தலைவர்கள், சிங்கள ஆட்சியாளார்கள் தமிழர்களைச் சம உரிமையுடன் இலங்கை தீவில் நடத்துவர் என்று எண்ணினார்கள்.

ஆனால் சுதந்திரம் கிடைத்த குறுகிய காலத்திலேயே இது பிழையான சிந்தனையென நிரூபிக்கப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர் இனரீதியான பாகுபாட்டு அடிப்படையில், தமிழ் மக்களுக்கு எதிராகக் குடியுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை, நிலவுரிமை போன்ற சட்டங்களை அமுல் செய்தனர். மேலும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றியும், தமிழ் மக்களுக்கெதிரான இனக் கலவரங்களைத் தூண்டிவிட்டு தமிழ் இன அழிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். இவையே இலங்கை தீவின் இன்றைய நிலைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன.

1983 ஆம் ஆண்டு வரை, முப்பத்தைந்து வருடங்களாக தமிழ் மக்களினாலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு இறப்பையும் பொருட் சேதத்தையும் தவிர வேறு எந்தவோரு பயனையும் கொடுக்கவில்லை. முப்பத்தைந்து வருடகால சாத்வீகப் போராட்டத்தால் சலிப்புற்ற தமிழ் மக்கள் தம்மை ஆயுதப் போராட்டத்திற்குத் தயார் செய்து கொண்டனர். கடந்த 58 வருடகாலங்களில் பல பேச்சுவார்த்தைகள், தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரதமர், அரசத் தலைவர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றுள்ளது.

1957 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாள் ஒரு தீர்வு உடன்படிக்கையும், 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் நாள் வேறு ஓர் உடன்படிக்கையும் தமிழ் மக்கள் சார்பில் செல்வநாயகத்திற்கும் பிரதமர்களான பண்டராநாயக்க, டட்லி சேனநாயக்க ஆகியோருக்கு இடையில் கைசாத்தாகியிருந்தது. ஆனால் இவ்விரு உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகி சில நாட்களிலேயே, சிங்கள மக்களின் குறிப்பாக பௌத்த பிக்குகள், எதிர்கட்சியினரின் பாரிய எதிர்ப்பு காரணமாக சிங்களப் பிரதமர்களினால் உடன்படிக்கை ஒருதலைபட்சமாக கிழித்து எறியப்பட்டது. அதே காலகட்டத்தில் 505 அப்பாவித் தமிழ் மக்கள் அரசியல் காரணங்களுக்காக இனக் கலவரங்களினால் படுகொலை செய்யப்பட்டனார்.

தமிழ் மக்களின் சமூக பொருளாதார வளங்கள், சிங்கள அரசினால் திட்டமிடப்பட்ட வன்முறைகளினால் சூறையாடப்பட்டன. இலங்கை தீவில், தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதினால் பெரும் தொகையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமல் போயும், தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட போதும் கூட பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒவ்வொரு பேச்சுவார்ததைகளின் முடிவில், பெரும் தொகையான தமிழ் இன அழிப்பையே சிங்கள அரசுகள் மேற்கொண்டுள்ளன. சிங்கள அரசுகளின் தமிழின அழிப்பின் சுருக்கமான பட்டியலை கீழே தருகிறோம்:

2002 ஆம் ஆண்டு, நார்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை, சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறிய காரணத்தினால், 2003 ஆம் ஆண்டு மே மாதம் பேச்சுவார்ததைகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மிகவும் மோசமான யுத்த நிறுத்த மீறல்களும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறின. சிங்கள இராணுவப் புலனாய்வினாலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துணைக் குழுக்களினாலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 47 படுகொலைகளும், 45 ஆட்கடத்தல்களும், 20 பேர் காணாமல் போயும், 9,500 பேர் உள்நாட்டில் அகதிகளாகவும் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

இதில் மாணவர்கள், பத்திரிகையாளார்கள், கல்விமான்கள், நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவர். மேலும் சிங்கள காவல்துறையினாலும், இராணுவத்தினாலும் தமிழ் மக்களின் இருப்பிடங்கள் யாவும் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொள்ளப்படுவதனால், தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டும், தடுப்பு காவலில் வைக்கப்பட்டும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் உள்ளனர். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களிலும், அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலும் பெரும் தொகையான படுகொலைகள் நடைபெறுகின்றன.

ஆனால் சிங்கள அரசும் அதன் காவல்துறையும் இன்று வரை எந்தவொரு ஆட்கடத்தலையோ படுகொலையையோ பாலியல் வன்முறையையோ ஒழுங்காக விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை. இங்கு சில சம்பவங்களை உதராணமாகத் தருகிறோம்.

கடந்த மார்கழி மாதம் 16 ஆம் திகதி, புங்குடுதீவு என்னும் கிராமத்தில் இருபது வயதுடைய இளையதம்பி தர்சினி என்னும் இளம் பெண் சிங்களக் கடற்படையினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்கழி 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சோசப் பரராசாசிங்கம், மட்டக்களப்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் இரவு நத்தார் பிரார்த்தனையில் கலந்து கொண்ட போது சிங்கள இராணுவ புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்படும் தமிழ் துணைக் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், அவரது அரசாங்க மெய்ப் பாதுகாவலர் எனச் சொல்லப்படுவோர் முன்னிலையில் நடைபெற்ற போதிலும், மெய்ப்பாதுகாவலர் எவரும் சோசப் பரராசசிங்கத்தைக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்ற முன்வரவில்லை.

இக்கொலையும் மற்றைய கொலைகள் போல் இன்றுவரை எந்த ஒழுங்கான விசாரணையும் நடைபெறாத போதிலும், சிங்கள அரசத் தலைவர் மகிந்த ராசாபக்ச, சோசப் பரராசாசிங்கத்தின் மரணச் சடங்குகளை அரச மரியாதையுடன் செய்வதற்கு, பரராசசிங்கத்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வேண்டியிருந்தது பெரும் வியப்புக்குரியது.

பரராசசிங்கத்தின் கொலையாளிகள் மூவரின் பெயர்களை, மகிந்த ராசாபக்சவிடம் நேரில் கொடுத்தும், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலைக்குரிய விடயம். இம் மூவரில் ஒருவர் "கழுதாவளை ரவி" என்னும் பட்டப் பெயரைக் கொண்டவர். இக் கொலையாளிகள் மூவரும் இன்றும் மட்டக்களப்பு நகரில் சுதந்திரமாக சிங்கள பாதுகாப்பு படைகளின் உதவியுடன், தமது நீண்ட கொலைப்பட்டியலில் உள்ள மற்றவர்களை தேடியவண்ணம் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, 20 வயதுக்குட்பட்ட ஐந்து மாணவர்கள், திருகோணமலையில் சிங்களப் பாதுகாப்புப் படைகளினால் சுட்டு கொல்லப்பட்டனர். சனவரி மாதம் 14 ஆம் திகதி, மானிப்பாயில் வசித்து வந்த, ஒரு தாயும் இரு மகள்மாரும், சிங்கள இராணுவ புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் குழுக்களினால் இரவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டோரின் வசிப்பிடங்கள், மானிப்பாயில் இரு இராணுவ காவலரண்களுக்கிடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு பயணம் செய்த, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பத்து மனிதாபிமான பணிப்பாளர்கள், சனவரி மாதம் 30 ஆம் 31 ஆம் நாட்களில் வெலிகந்தை எனும் இடத்தில் இரு இராணுவ காவலரண்களுக்கிடையில் கடத்தி செல்லப்பட்டனர். இன்று வரை மூவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றையோர் பற்றி, எவ்வித செய்தியும் கிடைக்கப் பெறவில்லை.

சிங்கள அரசத் தலைவர் மகிந்த ராசாபக்சவும், காவல்துறையினரும் தமக்கு இந்த ஆட்கடத்தல் பற்றியோ அல்லது மற்றைய இடங்களில் காணமல் போனோர் பற்றியோ ஒன்றும் தெரியாது என கைவிரித்துள்ளனர். எப்போதும் ஒரு பகுதியினரை மட்டும் குற்றம் சாட்டி, அவர்களை மாசுபடுத்த எண்ணும் சர்வதேச சமுதாயமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், இலங்கையின் யதார்த்த நிலைகளையோ உண்மைகளையோ உள்வாங்கிக் கொள்வதில்லை. இவர்களுக்கு சிங்கள இராணுவப் புலனாய்வினதும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் குழுக்களினதும் செயற்பாடுகள் பற்றி ஒன்றும் தெரியாது என கூற முடியாது.

சர்வதேச சமுதாயமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இன்று தமிழர்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு ஏதோவொரு முறையில் காரணமாக உள்ளனர். 1983 ஆம் ஆண்டு பகுதியில், தமிழ் மக்களுடைய மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்த போது, சர்வதேசச் சமுதாயம் இதற்கான மூல காரணங்களை ஆராய்ந்து அதற்குப் பரிகாரங்களைக் காண முன்வரவில்லை.

அன்று சர்வதேசச் சமுதாயம் ஒருபக்கச் சார்பாக, சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகளைத் தாராளமாக அள்ளி வழங்காமல் விட்டிருந்தால், இன்று இலங்கைத் தீவின் சரித்திரம் வேறாக அமைந்திருக்கும். தமிழர் இன்றைய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு, சர்வதேசச் சமுதாயத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பது மறைக்க முடியாத ஓர் உண்மை.

தமிழ்த் துணை இராணுவக் குழுக்களை சிங்கள அரசுகள், தமிழர்களின் இன அழிப்புக்காகவே பாவிக்கிறார்கள் என்பதை சர்வதேசச் சமுதாயம் இன்னும் உணரவில்லை. ஆகையால் எதிர்காலங்களில், தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் எந்த ஆதரவுமற்ற குழுக்களை, சர்வதேச சமுதாயம், தமது சுயநலத்திற்காக பாவிப்பதைவிட்டு, இலங்கை தீவின் யதார்த்த நிலைக்கு ஏற்ற முறையில், தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தீவில், தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும், அரச ஆதரவுடனான துணைக் குழுக்களின் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டது போல், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுதாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் வெலிகந்தை பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏழு மனிதபிமான பணிப்பாளார்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதுவே இலங்கை தீவில் ஓர் சுமூகமான நிலையை உருவாக்க உதவும்.

-ச.வி.கிருபாகரன்

(தென்செய்தி இதழில் வெளியான கட்டுரை

Pin It