சென்னை உயர்நீதி மன்றம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களில் இனி வந்தே மாதரம் பாடலை கண்டிப்பாக பாடவேண்டும் என உத்திரவிட்டுள்ளது. அரசுத் துறைகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுறுவி உள்ளதையே இது காட்டுகின்றது. அதிகப்படியான வரைமுறையற்ற அதிகாரம் எங்கெல்லாம் குவிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அது பாசிசமாகவே வளர்கின்றது. காவல்துறை, நீதிமன்றம், இராணுவம் என அரசின் அனைத்து ஒடுக்குமுறைக் கருவிகளும் இன்று தனக்கு உள்ள வரம்பற்ற அதிகாரத்தை பார்ப்பன பாசிசத்தை வளர்த்தெடுக்கவே பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன. அரசின் இந்த ஒடுக்குமுறை அமைப்புக்குள் பணியாற்றும் பெரும்பாலான நபர்களுக்குத் தன்னுடைய துறை சார்ந்த அறிவு மட்டுமே பெரும்பாலும் இருக்கின்றது. அதைத் தாண்டிய சமூகம் சார்ந்த அக்கறையோ, அறிவோ அவர்களுக்கு இருப்பதில்லை. அப்படி இல்லாத காரணத்தால்தான் அவர்களால் மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி பொதுமக்கள் மீது தங்களது வஞ்சத்தை அரங்கேற்றிக்கொள்ள முடிகின்றது. தங்களுக்குக் கூலி கொடுக்கும் எஜமானனுக்கு நன்றி விசுவாசத்தைக் காட்டினால் போதும் என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அதைத்தாண்டி ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் நீதி யார் பக்கம் உள்ளது என்பதை எல்லாம் கூலிகள் பார்ப்பதில்லை.

high court chennai 1மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வரும் அரசு ஊழியர்கள் தங்களை மக்களுக்கு அப்பாற்பட்டவர்களாக நினைத்துக் கொள்கின்றார்கள். அதனால் இயல்பாகவே அவர்களிடம் அதிகார வர்க்க பாசிசம் வந்துவிடுகின்றது. மக்களுக்கான அடிப்படை சேவைகளை வழங்க நியமிக்கப்படுகின்றவர்கள் மதம், சாதி, மொழி, இனம் போன்ற குறுகிய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கின்றார்களா என்று பார்த்தெல்லாம் இப்போது இருக்கும் அரசு தேர்ந்தெடுப்பதில்லை. வெறும் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் தகுதி, திறமை போன்றவை நிர்ணயிக்கப்படுவதால் மதவெறியர்களும், சாதிவெறியர்களும், மொழி வெறியர்களும், இனவெறியர்களும் இயல்பாகவே அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கு நடந்துவிடுகின்றது. அதனால் தான் இன்று காவல்துறை, நீதிமன்றம், இராணுவம் என அனைத்து அரசின் ஒடுக்குமுறை நிறுவனங்களிலும் காவி பயங்கரவாதிகள் எளிமையாக ஊடுறுவி தங்களுக்கான காரியங்களை மிக எளிதாக சாதித்துக் கொள்கின்றார்கள். அப்படித்தான் இன்று இந்த வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாடவேண்டும் என்ற உத்திரவும் பெறப்பட்டு இருக்கின்றது.

வழக்கு தொடுத்த யாரும் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக அனைவரும் பாடவேண்டும் என்று உத்திரவிட சொல்லி வழக்கு தொடுக்கவில்லை. இந்த வழக்கைத் தொடர்ந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கே.வீரமணி என்பவர் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் முதன்முதலாக எழுதப்பட்டது என்ற கேள்விக்கு தான் வங்காள மொழி என்று பதிலளித்தாகவும், ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடையில் அது சமஸ்கிருதம் என்று இருந்ததாகவும், இதனால் தேர்வில் 90 மதிப்பெண்களுக்குப் பதில் 89 மதிபெண்கள் பெற்று தேர்ச்சியடையாமல் போய்விட்டதாகவும், எனவே தனக்கு ஒரு மதிப்பெண் வழங்குவதோடு அல்லாமல் தனக்கு ஆசிரியர் பணியையும் வழங்க வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்துள்ளார்.

ஒரு நேர்மையான நீதிபதியாக இருந்திருந்தால் என்ன நோக்கத்திற்காக வழக்கு தொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே வழக்கை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எப்படியாவது தனக்கு இருக்கும் பார்ப்பன விசுவாசத்தைக் காட்ட வாய்ப்புக் கிடைக்காதா என அலையும் ஒருவர் என்ன செய்வாரோ அதைத்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் செய்துள்ளார். இந்த வழக்குக்குத் துளியும் சம்பந்தம் இல்லாமல் அனைவரும் வந்தே மாதரம் பாடலை பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பாடவேண்டும் என உத்திரவிட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் தமிழக அரசு இந்தப் பாடலை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அரசு இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பைப் பார்க்கும் போது ராஜஸ்தான் ‘மயில்’ நீதிபதிதான் நினைவுக்கு வருகின்றார்.

வந்தே மாதரம் பாடல் முதலில் எழுதப்பெற்றது வங்க மொழியிலா, இல்லை சமஸ்கிருதத்திலா என்பதை அறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத்துரை போன்றோர் நேராக மேற்கு வங்கத்திற்கே சென்று ஆதாரங்களை திரட்டினார்களாம். அதற்காக இவர்களை வெகுவாக பாராட்டுகின்றாராம். இதைவிட ஒரு ஏமாற்றுத்தனமும், அயோக்கியத்தனமும் வேறு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. சாதாரணமாக இணையதளத்தில் தேடினாலே கிடைக்கும் ஒரு தகவலுக்காக இங்கிருந்து மேற்கு வங்காளம் சென்று அரும்பாடுபட்டுத் தகவல்களைச் சேகரித்தார்களாம்!. நீதிபதியால் தன்னுடைய பார்ப்பனக் கூத்தை அரங்கேற்றவே திட்டமிட்டு இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு பார்ப்பன இந்துமத வெறியன் என்பதும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் எழுதப்பட்ட ஆனந்தமடம் என்ற நூலில் தான் இந்தப் பாடல் உள்ளது என்பதும் யாரும் அறியாதது அல்ல. மேலும் துர்க்கையை வணங்கும் பாடலான அதை உருவ வழிபாட்டை மறுக்கும் மற்ற மதத்துக்காரர்களும் பாடவேண்டும் என நிர்பந்திப்பது பார்ப்பன பயங்கரவாதமே அன்றி வேறில்லை. தந்தை பெரியார் அவர்கள் வந்தே மாதரம் பாடலை தமிழர்கள் கேட்பதும் அது பாடும் போது எழுந்து நிற்பதும் ஒரு பெரிய மானக்கேடான காரியமாகும் என்கின்றார். எனவே தன்மானமும் சுயமரியாதை உணர்வும் உள்ள எந்தத் தமிழனும் இந்தப் பாடலுக்கு எழுந்து நிற்கமாட்டார்கள்.

ஏற்கெனவே தேசிய கீதமாக ‘ஜன கன மன’ பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்தாக ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும் தமிழ்நாட்டில் பாடப்பட்டு வருகின்றது. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் வந்தே மாதரத்தையும் பாடவேண்டும் என வலியத் திணிப்பதும் அதற்குத் தேசபக்தி சாயம் பூசுவதும் நீதிபதி ஒரு பக்கா ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. நல்ல வேளை, கேள்வி வந்தே மாதரம் பாடலைப் பற்றியதாக இருந்தது. ஒரு வேளை தேவதாசி முறையைப் பற்றியோ, உடன்கட்டை ஏறுவதைப் பற்றியோ இருந்திருந்தால் இந்த நீதிபதி என்ன செய்திருப்பார் என்று நினைத்தாலே பயமாக இருக்கின்றது. 'தேவதாசி முறையும் உடன்கட்டை ஏறும் வழக்கமும் நமது இந்திய பண்பாடு. அதை இன்றுள்ள இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள இனி அனைத்துக் கோவில்களிலும் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ய உத்திரவிடுகின்றேன்' என்றோ, 'இல்லை இனி கணவன் இறந்தால் மனைவியை கூடவே சேர்த்துவைத்து எரித்து, அதை வீடியோ எடுத்து தமிழக அரசு தன்னுடைய இணையதளத்தில் எல்லோரும் பார்க்கும்படி வெளியிட வேண்டும்' என்றோ உத்திரவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

நீதித்துறை மீது சாமானிய மக்கள் வைத்திருக்கும் குறைந்த பட்ச நம்பிக்கையைக் கூட நாசம் செய்யும் உத்திரவுகள் இவை. எனவே நீதித்துறை முதலில் மக்களுக்கு நேர்மையான நீதியை உத்திரவாதப் படுத்துவதற்குமுன் தன் துறையில் உள்ள நீதிபதிகளுக்கு நேர்மையும், யோக்கியத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது போன்று எந்தவித சமூகப் புரிதலும் இல்லாமல் தன்னுடைய மதவெறியைத் தீர்த்துக்கொள்ள தன்முன் வரும் வழக்குகளைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் நீதிபதிகளுக்கு ஒன்று மனநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இல்லை என்றால் உண்மை அறியும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மோடி அரசு பதவியேற்ற பின் அரசுத் துறைகளில் குறிப்பாக காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றில் ஒளிந்துகொண்டிருந்த காவிப் பெருச்சாளிகள் எல்லாம் தைரியமாக வெளியே வந்து தலைகாட்ட ஆரம்பித்து இருக்கின்றன. எனவே பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே இதற்கான நீதியைப் பெற முயற்சிக்காமல் நீதிமன்றங்களுக்கு வெளியேயும் போராட வேண்டும். இது போன்ற நீதிபதிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ் காரன் எந்த வடிவத்தில் வந்து நம் மக்களை ஏமாற்றவும், ஏய்க்கவும் பார்த்தாலும் உடனே அடையாளம் கண்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It