இறைச்சிக்காக பசுக்கள் மற்றும் காளை மாடுகளை வெட்டக் கூடாது என்று 1994 இல் ஒரு பார்ப்பனச் சட்டத்தைக் கொண்டு வந்தார் குஜராத் மோடி. 1998-ல் குஜராத் உயர்நீதிமன்றம், இந்த இந்துத்துவ சட்டத்தை ரத்து செய்தது. இப்போது உச்சநீதிமன்றம் குஜராத் முதல்வர் மோடியின் சட்டத்துக்கு ஏற்பு வழங்கிவிட்டது. தலைமை நீதிபதி லகோத்தி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் - இத் தீர்ப்பை அளித்துள்ளது.

ஒரே ஒரு நீதிபதி மட்டும் மாற்றுத் தீர்ப்பைப் பதிவு செய்துள்ளார். சங்கராச்சாரிகளுக்கு பிணை வழங்கி, அவர்கள் மீதான வழக்கு விசாரணையை புதுவைக்கு மாற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “பசுக்களை”க் காப்பாற்ற வேண்டும் என்ற ‘புனித’த்தைக் காப்பாற்ற, உழைக்கும் மக்களின் உணவு உரிமையை பறித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் (நீதிபதி மன்மோகன் சிங், மதுகோயல்) கடந்த 2005 அக்டோபர் 5 ஆம் தேதி வழங்கிய ஒரு தீர்ப்பில், 15 வயதுள்ள பெண்ணுக்குத் திருமணம் நடத்தியது செல்லும் என்று தீர்ப்பளித்ததன் மூலம். ‘பால்ய விவாகத்துக்கு’ மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. பெண்களின் திருமண வயது 18 என்று அமுலில் உள்ள சட்டத்தையே, உயர்நீதிமன்றம், குப்பைக் கூடையில் தூக்கி வீசிவிட்டது.

இந்தத் தீர்ப்பு வந்த அடுத்த நான்கு நாட்களில், டெல்லியில், ஜஹான்கீர்புரி குடியிருப்பில் 13 வயது சிறுமிக்கு நடக்க இருந்த “பால்ய விவாகத்தை”த் தடுத்து நிறுத்த முயன்றது. ஒரு பெண்கள் அமைப்பு, அவசரமாக உள்ளூர் காவல்நிலையத்துக்கு, புகார் கொடுக்க அவர்கள் ஓடியபோது, காவல்துறை அதிகாரிகள் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை எடுத்து, போராடிய பெண்களின் முகத்தில் வீசியிருக்கிறார்கள். பிறகு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் முன்னிலையிலேயே, காவல் நிலைய அதிகாரிகள் “ஆசீர்வாதத்தோடு” 13 வயது சிறுமிக்கும், 26 வயது மணமகனுக்கும், மாலை மாற்றித் “திருமணம்” நடந்து முடிந்திருக்கிறது.

மீண்டும் வேதகாலத்துக்கு உயிரூட்டுவதற்குத்தான் நீதிமன்றங்களா?

நாடு எங்கே போகிறது? நாம் என்ன செய்யப் போகிறோம்?