Indian MPs

“நமது நாடாளு மன்றத்தில் கேள்வி நேரம் என்பதற்கு எப்பேர்ப்பட்ட அந்தஸ்து இருந்தது! ஆளும் கட்சித் தலைவர்கள் அதனைப் பவித்திரமாகக் கருதி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆயத்தம் செய்துகொள்வார்கள்.

எதிர்க்கட்சியினரோ திணறடிக்கும் கேள்விகளையும் துணைக் கேள்விகளையும் கணைகளாகத் தொடுப்பார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் கேள்வி நேரத்தை உபயோகித்துப் பல அற்புதக் கருத்துகளும் திட்டங்களும் வெளிப்பட வழிவகுத்தனர்.

சத்திய மூர்த்தியின் துணைக் கேள்விகளைப் பிரதமர் நேரு, வெகுவாக இரசித்துவரவேற்றார் என்பதெல்லாம் வரலாற்றுச் சிறப்பு. அத்தனை சிறப்புகளுக்கும் இன்று களங்கம் ஏற்பட்டிருக்கிறது. சிந்தனையாளர்களும் தேசபக்தர்களும் அமர்ந்த இடத்தில் சுயநலவாதிகளும் மக்கள் விரோதிகளும் அமர்ந்திருக்கிறார்கள்...’’

- ’கல்கி’ தலையங்கம் (25.12.2005)

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் பெற்று, பதினொரு உறுப்பினர்கள் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுவிட்ட நிகழ்ச்சி குறித்து வெட்கத்தாலும் வேதனையாலும் வெந்து புகைந்து எழுதியிருக்கிறது கல்கி. இருப்பது இந்தியா; நடப்பது முதலாளித்துவ நாடாளுமன்றம் என்கிற கவனக்குறைவினால், அல்லது அளவற்ற நம்பிக்கையின் மோசமான முறிவினால் ஏற்படும் பொருளற்ற புலம்பல் இது.

தனிச் சொத்துரிமையின் மீது பக்தியும், அதற்குப் பாதுகாப்பும் பணிவிடையும் செய்யும் ஒரு முதலாளித்துவ நாட்டின் நாடாளுமன்றம் இப்படித்தான் இருக்குமேயல்லாது வேறு எப்படியும் இருக்காது. அதிலும் இந்திய முதலாளிகள் சுயத்தன்மைகூட இல்லாத தரகர்கள். தரகர்கள் மலிந்த ஒரு சமூகத்தில் நாடாளுமன்றமும் நவீன வர்த்தகமையமாகவே இருக்க முடியும்.

தனிமனித ஒழுக்கம் பேணும் அபூர்வ மனிதர்கள் எப்போதும் சிலர் இருக்கக் கூடும். அது சமூக அடையாளம் அல்ல. விதி விலக்கு. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே பணப்பட்டுவாடாவைத் தவிர வேறு எந்த உறவுக்கும், உணர்வுக்கும் மதிப்பற்ற சூழலில், மருத்துவரும், விஞ்ஞானியும், நீதிபதியும், மற்றுமுள பொறுப்புள்ள பதவிகள் அனைத்துமே கூலிக்காரர்களே, விற்பனைச் சரக்குகளே என்றாகும்போது, தனிமனித ஒழுக்கம் என்பது கவிதைப் பொருளாகி, சிரிப்பில் சீரழிகிறபோது, நாடாளுமன்றம். எப்படி இருக்கும்? அதன் உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள்?

முதலாளித்துவ அமைப்பை அழகுபடுத்திப் பார்க்க விரும்பும் கல்கி, தனது ஆசையையும் மீறி அமைப்பின் விகாரம் வெளிப்படும்போது கலங்கிப் போய்விடுகிறது. இந்தக் கலக்கத்தில் ‘இதோ இந்தச் சத்திய மூர்த்தியைப் பாருங்கள். அவர் இருந்த இடத்தில் நீங்களா?’ என்று கேட்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

தந்தை பெரியார் தமது ‘குடிஅரசு’ (18.12.1943) இதழில் சத்தியமூர்த்தி குறித்து ‘பாரத தேவி’ இதழில் (8.12.1943) வெளியாகியிருந்த செய்தியை மறுபிரசுரம் செய்திருக்கிறார். சத்தியமூர்த்தி பற்றிச் சிலர் எழுப்பிய புகார் மீது சத்தியமூர்த்தியே தந்த சுயவிமர்சனம் இது:

Sathyamoorthiசத்தியமூர்த்தி இலஞ்சம் வாங்குகிறாராமே என்று போகிற போக்கில் சிலர் சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

‘நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்துத் தேர்தலென்றால் கூட அதற்கு மேளம் வாசிப்பதற்குச் சத்தியமூர்த்தி வரவேண்டும்.

நான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல் வாதிகளுக்காக கார்னீஜிநிதியா வைத்திருக்கிறார்கள்? தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயுபட்சணம் செய்ய முடியுமா?

இலஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டேனா?

யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது இலஞ்சமா? என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார்’.

இதோ உத்தமபுத்திரர் என்று கல்கி அடையாளம் காட்டிய சத்தியமூர்த்தியே, சத்தியமூர்த்தியாக இல்லையே!

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)

Pin It