மாடு, பால் மற்றும் அதில் உள்ள அரசியலுக்கு செல்லும் முன்பு விவசாயம் மற்றும் அது சார்ந்த போலி கற்பித்தல்களை பார்ப்போம். பொதுவாக நம்மிடையே ஒரு கருத்து திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.அதாவது நம் முன்னோர்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருந்ததாகவும் நம்முடைய தலைமுறை மனிதர்கள் ஆரோக்கியமற்று இருப்பதைப் போன்றும் நினைத்துக் கொள்கிறோம்.ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள் தான். ஆனால் தற்போது 36 ஆண்டுகள் அதிகரித்து 68 ஆண்டுகளாக உள்ளது.ஆக மனிதர்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளதாகத்தானே அர்த்தம். இப்போது இருப்பது போன்ற வகை வகையான நோய்கள் அப்போது இல்லையே என்பவர்களுக்கான பதில் இப்போது உள்ளது போன்ற மருத்துவ தொழிற்நுட்பங்களோ அவற்றை அறிந்துகொள்ளும் தகவல் தொழிற்நுட்பங்களோ அப்போது இல்லை என்பதேயாகும்.

 நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்தால் “சாமி காப்பாத்திடுச்சி” என்றும் மரணமடைந்துவிட்டால் “சாமி கூப்பிட்டுக் கொண்டது” என்றோ சொல்லி ஆறுதல் அடைந்து கொண்டனர். மத்தியான சாப்பாடு சாப்பிட்டு திண்ணையில் படுத்தவர் எந்திரிக்காமலே போனது ஏராளம் நம் கிராமங்களில்.இத்தனை வகை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கவோ அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்வதோ சாத்தியமில்லாதவை அகாலகட்டங்களில். அப்படி இருக்கையில் சித்தர்கள் 200 ஆண்டுகள் வாழ்ந்தார்கள், நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள் என்றும் இன்னும் கூட திருவண்ணாமலையிலும் இன்னபிற இடங்களிலும் சித்தர்கள் வாழ்வதாகவும் சொல்லப்படுபவை எல்லாம் மிதமிஞ்சிய கற்பனைகளாகத்தான் இருக்கும்.எதோ சிலர் வேண்டுமானால் சராசரி ஆயுளையும் தாண்டி வாழ்ந்திருக்கலாம் அனால் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமற்ற சூழலாலும், சுத்தமான குடிநீர் கிடைக்காமலும் தேவையான உணவு உண்ணாமையாலும் சரியான சுகாதார, மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் இளம் வயதிலேயே இறந்து போனவர்கள். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர வளர மனிதர்கள் உயிர் வாழத் தேவையான உணவு, சுகாதாரம், மருத்துவ வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.அப்படி அறிவியலும் தொழிலற்நுட்பமும் சுதந்திர இந்தியாவிற்கு தந்த கொடைகள் தான் பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும்.

 சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று பிரதமர்களான நேரு, சாஸ்திரி மற்றும் இந்திரா மூவருக்குமான பொதுப் பிரச்சனையாக இருந்தது இந்தியாவின் உணவுப் பற்றாக்குறைதான். அன்றும் இன்றும் என்றும் வறுமையும் இந்தியாவும் பிரிக்க முடியாதவை. எருமை இல்லாத ஊரில் கூட வறுமை இல்லாமல் இல்லை. நாட்டின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதும் மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பதுமே அரசின் தலையாய கடமையாக இருந்தது.தொற்று நோயிலும் கொள்ளை நோயிலும் சாவதை விட பசி, பட்டினி, பஞ்சத்தில் செத்தவர்கள் அதிகம் இங்கே. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியாவில் பஞ்சத்தில் மாண்டவர்கள் கோடானுகோடி பேர்கள்.கோதுமையையும் தானியத்தையும் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்தாலும் “ஆலை வாயிலிட்ட இலுப்பைப்பூவைப் போல” போதவில்லை நாட்டின் உணவுத் தேவைக்கு. உலக நாடுகள் எல்லாம் சுதந்திர இந்தியா அவ்வளவுதான், ஆப்பிரிக்க நாடுகளைப் போல பசியிலும் பஞ்சத்திலும் உழன்று எழ முடியாமல் போய்விடும் என்று கணித்தனர். எதையாவது செய்து மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு இருந்தது.

 அந்த இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு கை கொடுத்தவர்கள் இரண்டு தமிழர்கள். ஒருவர், சிஎஸ் எனும் சி.சுப்பிரமணியம் மற்றொருவர் எம்எஸ்எஸ் எனும் எம் எஸ் சுவாமிநாதன். எம் எஸ் சுவாமிநாதன் ஆய்ந்து கண்டுபிடித்தவைகளை சிஎஸ் அமலாக்க உதவினார். அதிக உற்பத்தி என்பதை இலக்காகக் கொண்டு, புதிய புதிய பயிர் ரகங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தனர். அப்படி கண்டுபிடித்தவைகளை விவசாயிகளுக்கு வழங்கி பயிரிட்டு சோதித்து பார்த்தனர். அந்த பயிர்களுக்கு தேவையான உரங்களை இடுவது அசாத்தியமாக இருந்தது. வண்டி வண்டியான கால்நடைச் சாணங்களும் தாவர உரங்களும் தேவைப்பட்டன. கண்டுபிடித்த பயிர்களை விளைச்சல் எடுப்பது சிக்கலானது.அடுத்து குறைந்த அளவில் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் கொண்ட செயற்கை உரங்களுக்கு செல்ல வேண்டி வந்தது. புதிய பயிர் ரகங்களும் செயற்கை உரங்களும் நவீன விவசாய முறைகளும் சேர்ந்து இந்தியாவின் உணவு உற்பத்தியை பன்மடங்கு உயர்த்தின.பஞ்சத்தில் இருந்த இந்தியா பசுமைப் புரட்சியின் விளைவாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

 பசுமைப்புரட்சிக்கு பிந்தைய இந்தியாவில் இதுவரை உணவுப் பஞ்சம் வந்ததில்லை. 1980 க்கு பின்னால் பிறந்த தலைமுறைகளைச் சார்ந்த நாம், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை மட்டுமே பார்க்கின்ற நாம் இப்போது என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், தின்பதற்கு புண்ணாக்கு கூட கிடைக்காத “புண்ணாக்கு கரிப்பு” எனும் பஞ்ச காலங்களைக் கண்ட நம் தாத்தா பாட்டிகளைக் கேட்டால் சொல்வார்கள் அவர்கள் சந்தித்த பஞ்சங்களை. சரி, இன்று நிலங்கள் எல்லாம் பாழ்ப்பட்டு விட்டதே, மழை பொழியாமல் போய்விட்டதே என்பவர்களுக்கு பதில் இதற்கெல்லாம் காரணம் நம் அறியாமையே என்று சொல்லலாம். அறிவியலும் தொழிற்நுட்பமும் அளவோடு இடச்சொன்னதை மனிதனின் ஆசையும் அறியாமையும் அளவு கடந்து இடச்சொன்னதால் வந்த வினை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, இரசாயனம் மட்டும் நஞ்சாகாமல் போய்விடுமா?பசுமைப் புரட்சியின் தந்தை எம்எஸ்வியே சொன்னது இதுதான், “ஆரம்பகட்ட பலன்களைப் பார்த்த விவசாயிகள் அடுத்தடுத்து அளவை மீறி உரங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர், பின்னாளில் அதுவே அவர்களுக்கு சுமையானது”. ஆக மாற வேண்டியது மனிதர்கள் தாம், தொழிற்நுட்பமோ அறிவியலோ அல்ல.

 இன்னொன்று காலம் எப்போதும் முன்னோக்கியே நகரும், நமக்கு எதுவாக இல்லை என்பதற்காக அதை பின்னோக்கி நகர்த்த முடியாது. ஆரம்பத்தில் காடுகளில் கிடைக்கும் காய், கனிகள் மற்றும் செத்த விலங்குகளை உண்ட மனிதன் அடுத்து இறைச்சிக்கென்று வேட்டை பழகினான்.பின்னால் வேளாண்மை பழக ஆரம்பித்தான். ஆக, இயற்கை நியதிப்படி பார்க்க போனால் வேளாண்மையே செயற்கையான ஒன்றுதான் இதில் இயற்கை வேளாண்மை என்ன செயற்கை வேளாண்மை என்ன? வேளாண்மையின் அடுத்தடுத்த படிநிலைகளே எரு, கால்நடைகள் பயன்பாடு செயற்கை உரம் மற்றும் இயந்திரப் பயன்பாடு. இப்போது நாம் செயற்கை உரங்களை விடுத்து இயற்கை உரங்களுக்கு போக வேண்டும் என்றால் டன் டன்னாக கால்நடைக் கழிவுகளும் பயிர்க்கழிவுகளும் வேண்டும். அதற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான கால்நடைகளும் தாவரங்களும் வேண்டும். அப்படியே முயற்சித்தாலும் ஆர்கானிக் வேளாண் முறையில் கிடைக்கும் உணவு உற்பத்தி 30 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும், அதாவது நான்கில் ஒருவருக்கு மட்டுமே உணவு கிடைக்கும் மற்றவருக்கெல்லாம் சொர்க்கமே கிட்டும். ஆக இனி திரும்ப பழைய விவசாய முறைக்கு செல்வது என்பது நடக்கவே முடியாத ஒன்று. அதற்காக அளவின்றி இரசாயன உரங்களைக் கொட்டி பயிர் வளர்க்க வேண்டும் என்பதில்லை, போதுமான அளவைக் கொண்டு பயிர் செய்து வாழலாம். பாரம்பரிய விவசாயத்தின் அடுத்த நிலைதான் நவீன விவசாயம். நவீன விவசாயத்தில் உள்ள குறைகளை நீக்கி இனிமேல் அவற்றை அறிவுப் பூர்வமாக செய்வதுதான் சரியாக இருக்கும்.

 உலகம் முழுதும் ஆர்கானிக் உணவு என்று சொல்லிக் கொண்டு விற்கப்படுபவை மீது பெருத்த சந்தேகம் உள்ளது. அனைத்து விதிமுறைகளும் சரியாக பின்பற்றப்படும் வளர்ந்த நாடுகளிலேயே ஆர்கானிக் உணவுகள் சந்தேகத்திற்கு உள்ளாகும் போது, இந்தியா போன்ற மீறுவதற்கென்றே விதிமுறைகள் உள்ள நாட்டில் ஆர்கானிக் என்று சொல்லி விற்கப்படுபவை அனைத்தும் முழுதாக ஆர்கானிக் சூழலில் விளைவித்தவை அல்ல. ஆர்கானிக் விவசாயத்திற்கென்று பல விதிமுறைகள் உள்ளன.இத்தனை ஆண்டுகளுக்கு அந்த நிலத்தில் எந்த இராசாயானமும் தெளிக்கப்பட்டிருக்கக் கூடாது, விளைவித்தவற்றை சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து விற்க வேண்டும்., இந்த வண்டியில் ஏற்றி இந்த மார்க்கெட்டில் விற்றோம் என்ற விவரம் சொல்ல வேண்டும். இவ்வளவுதான் உற்பத்தி என்று சொல்ல வேண்டும். என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் கடைபிடிக்க சாதாரண விவசாயிகளால் முடியாது. நிறுவனங்கள் தான் இந்தக் கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ளவாது முடியும், பொதுவாக நிறுவனங்கள் இந்த மாதிரியான சிக்கலான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மாட்டார்கள். பெயருக்கு ஆர்கானிக் உணவுப்பொருள் என்று சொல்லிவிட்டு விற்பதெல்லாம் நவீன விவசாயத்தில் விளைவித்ததுதான்.

 பொதுவாக ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடைந்த மனிதர்களுக்குத்தான் தாம் சாப்பிடும் உணவின் தரத்தில், உற்பத்தி முறையில் அக்கறை பிறக்கிறது. ஒன்றுமில்லாதவனுக்கு கிடைத்த உணவு அமிர்தம். ஆர்கானிக் என்று சொல்பவர்களின் குறி இந்த நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கமே ஆகும். இயற்கை பொருட்கள் என்று சொல்லி விற்பதெல்லாம் சாதாரண பொருட்கள்தான். அதற்கு சமீபத்திய உதாரணம் “ பதஞ்சலி” பொருட்கள். மற்ற எல்லா இரசாயன பொருட்களில் உள்ள இரசாயன மூலப்பொருட்களும் பதஞ்சலியிலும் உள்ளன. சின்ன சின்ன எழுத்துகளில் இரசாயன மூலப்பொருட்களை குறிப்பிட்டுவிட்டு கொட்டை கொட்டை எழுத்துகளில் ஆர்கானிக், இயற்கை என்று குறிப்பிட்டு விற்கப்படுகிறது. சிவப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல காவி கட்டியவனும் பொய் சொல்ல மாட்டன் என்று நம்பி நம் மக்களும் வாங்கி குவிக்கிறார்கள். மூலிகையில் ஆரம்பித்து இன்று முகப்பவுடரையும் தாண்டி கோதுமை, அரிசி, பிஸ்கட், நூடுல்ஸ் என்று போய்க்கொண்டே இருக்கிறது பதஞ்சலி. ஆர்கானிக் சிமென்ட், ஆர்கானிக் டேபிள், ஆர்கானிக் டாய்லெட் என்று விற்றாலும் ஆச்சரியமில்லை.

 அடுத்து வெண்மைப் புரட்சி, நாட்டு மாடுகள் மற்றும் வந்தேறி மாடுகளைப் பற்றி பார்ப்போம்.      

-    கோ

Pin It