ந்தியா விவசாய நாடு என்பது எப்படி மறுக்கமுடியாத உண்மையோ அதேபோல, இந்தியா விவசாயிகளினுடைய நாடு அல்ல என்பதும் மறைக்கமுடியாத உண்மை. இந்தியாவின் விவசாய புரட்சி, விவசாயிகளினால் எரியவிடப்பட்ட புரட்சியல்ல; முதலாளிகளினால், விவசாயிகள் மற்றும் மக்களின்மீது தொடுக்கப்பட்ட ஓர் எதிர்புரட்சியே! இக்கூற்றை ஒவ்வொரு முறையும் விவசாயிகளின் போராட்டமானது நமக்கு மெய்பித்து இருக்கிறது. கடந்த சில நாள்களாக நாட்டின் தலைநகரில், விவசாயிகள், விவசாய கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி, பயிர் காப்பீட்டு தொகை, விளைபொருள்களுக்கு உரிய விலை, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தல் போன்ற இன்னும் சில கோரிக்கைகளோடு தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இத்தகைய கோரிக்கைகளில் பிரதான கோரிக்கையாக இருப்பது விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதும், வறட்சி நிவாரண தொகை பெறுவதுமேயாகும். இவை அரசால் நிறைவேற்றப்படும் பட்சத்தில்(?) விவசாயிகளுக்கு வெற்றியானது கிடைக்கும், அவ்வெற்றியானது தற்காலிக வெற்றியாகவே இருக்கும், மாறாக நிரந்தர வெற்றியை நோக்கி விவசாயிகளை ஓர் அங்குலம் கூட முன்னோக்கி நகர்த்தாது.

farmer with bulllsஇவற்றை விவசாயிகளும் உணர்ந்தே இருக்கின்றனர், அதனால்தான் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு உரிய விலையை, மற்ற பொருள்களைப்போலவே தாங்களே விலையை தீர்மானித்துக்கொண்டால், தங்களுக்கு எந்தவிதமான மானியமோ, பயிர் காப்பீட்டு தொகையோ, வறட்சி நிவாரண தொகை போன்ற எவையும் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இவைதான் ஓர் விவசாயிக்கு நிரந்தரமான வெற்றி என்பது ஒவ்வொரு விவசாயிக்கு தெரியாமலில்லை, இருப்பினும், இவை எதுவும் ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள் என்ற நிலை காரணமாகவே நிரந்தர வெற்றியை ஒத்திவைத்துவிட்டு, என்றாவது ஒரு நாள் நிரந்தர வெற்றியை பெறுவதற்கு விவசாயி உயிர்வாழ்தல் அவசியம் அதற்கு முதலில் தற்காலிக வெற்றியானது தேவை என்பதாலேயே நிரந்தர வெற்றியை பின்தள்ளி தற்காலிக வெற்றியை முன்வைத்து போராட்டகளத்தில் இறங்கியுள்ளனர். இதுதான் இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் மிக பெரிய சவாலாகும். இன்றைய நிலையில் இச்சவாலில் விவசாயிகள் வெல்வது என்பது சாத்தியமில்லாதது. விவசாயிகள் இன்று எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளான, கடன், வறட்சி, வெள்ளம், போன்ற அனைத்துப்பிரச்சனைக்கும் அடிப்படையாக இருப்பது விவசாயி விளைவித்த தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்திருந்தால், கடன், வறட்சி, வெள்ளம் இவையனைத்தையும் எதிர்கொள்ளகூடிய பொருளாதார பலத்தை பெற்றிருப்பார்கள்.

விவசாயிகள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் நாம் பொருளாதார பிரச்சனைகளை மட்டுமே முன்னிறுத்தி அதற்கான காரணத்தையும், தேவையையும் தீர்வுகளையும் அறிய முற்படுவோம். முந்தைய வருடம் பரவலாக நல்ல மழைவளம் இருந்தது, இதனால், ஓரளவு விவசாயமானது செழிப்பாக இருந்தது எனலாம், ஒருவேளை விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெற்றிருப்பார் எனில், அவர் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள், அதன் பலனானது கடந்த வருட வறட்சியை எதிர்க் கொள்வதற்கான பலத்தையும் கொடுத்திருக்கும். இதனால் இன்று தலைநகரில் அரசிடம் கையேந்தி போராடிக்கொண்டிருக்கமாட்டார்கள்.  ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நிகழவில்லை. ஒரு விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை ஏன் நிறைவேற்றிக்கொள்ளமுடியவில்லை என்பதே நம்முன்னிருக்கும் கேள்வி.

இக்கேள்விக்கு பதில் விவசாயி வெறும் பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்துமட்டும் இங்கே ஒடுக்கப்படவில்லை, மாறாக, பொருளாதார ரீதியில் ஒடுக்குவதற்கான நுணுக்கமான கருத்தியல் கோட்பாடுகளை கொண்டே விவசாயி ஒடுக்கப்பட்டிருக்கிறார். இங்கே ஒரு விவசாயி மிக எளிதாகவும், தர்க்க ரீதியாகவும், மற்ற தொழில்களில் விலையை அவர்களே நிர்ணயிப்பது போல தாங்களும், தாங்கள் விளைவித்த பொருளகளுக்கு விலையை தீர்மானிக்கவேண்டும் என்று அடிப்படையான ஓர் உரிமையை கேட்கிறார். இத்தகைய உரிமையை அரசும் சரி, பொருளாதார நிபுணர்களும் சரி, ஒரு விவசாயே விளைபொருள்களுக்கு விலையை தீர்மானிக்கும் பட்சத்தில், உயிர்வாழ்தலுக்கான அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையானது உயர்ந்து பொருளாதாரத்தில், விளிப்பு நிலையில் இருப்பவர்களும், நடுத்தர வர்க்கத்தாரும் கூட வாங்கமுடியாத படி மிக பெரிய பாதிப்பை உண்டாக்கும், இந்நிலையானது சமுகத்தை கடுமையான வறுமைக்கு இட்டுசெல்வதோடு, நாட்டில் ஓர் அசாதாரண சூழலை உருவக்கிவிடும் என்ற ஓர் கருத்தை முன்வைத்து மிக எளிதாக ஒருசாராரின் நலனுக்காக விவசாயை தெரிந்தே பலிகொடுத்துவிடுகிறார்கள். அதாவது விவசாயி முன்வைக்கும் கருத்தியலை பொருளாதார நிபுணர்கள் அல்லது அரசானது தனது கருத்தியலால் மிக எளிதாக வீழ்த்திவிடுகிறது.

இதற்கு சமுகத்தில் இருக்கும் ஆதரவு அபரிமிதமானது, ஒரு பக்கம் விவசாயை காக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் பால் விலை இரண்டு ரூபாய் உயர்ந்துவிட்டாலும், மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வார்கள், பால் விலையேற்றம் உண்மையில் பால்காரருக்கு பலனை தருவதில்லை, பால் நிறுவனங்களுக்கு தான் பலனை தருகிறது. அதாவது இங்கே விவசாயத்தை காக்கவும், விவசாயை ஆதரிக்கும் யாரும், வேளாண் சாராத பொருள்களின் விலையானது உயர்ந்தால் கூட அதனை மிக எளிதாக கடந்து சென்றுவிடுகின்ற அதேவேளையில், விவசாயம் சார்ந்த அத்தியாவசிய பொருள்களின் விலையானது உயரும்பட்சத்தில் கடுமையான எதிர்வினையாற்றுகின்றனர். அச்சமயம் விவசாயிக்கு குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைக்கிறது விவசாயி அதனால் பலனடைகிறான் என்ற எண்ணம் யாருக்கம் இருப்பத்தில்லை. முரண்பாடாக இவர்களேதான் விவசாயை காக்கவேண்டும் என்கிறார்கள், விவசாயை ஆதரிக்கும் யாரும், தான் எந்த பாதிப்புக்கும் உள்ளாகதாவாறு விவசாயை காக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விசயம், விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில், இதே விவசாயிக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதை தொடருவார்களா என்றால் கண்டிப்பாக தொடரமாட்டார்கள், மாறாக விவசாயிக்கு எதிராகவே இருப்பார்கள். ஒரு விவசாயால் அல்லது விவசாயம் சார்ந்த பொருளாதார நிபுணர்கள், தனக்கு ஆதரவு அளிக்கும் மக்களிடமே தோற்றுப்போகிறார், ஏனெனில், அவர்களை கவரும் வகையில் பொருத்தமான கருத்தியல் எதையும் விவசாயி இதுவரை உருவாக்கவில்லை. இதன் காரணமாகதான் விவசாயி தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருகிறார். இங்கு இதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயி அரசு அல்லது பொருளாதார அறிவுஜீவிகள் முன்வைக்கும் கருத்தியல் கோட்பாட்டை எதிர்த்து முறியடிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஓர் எதிர் கோட்பாட்டை முன்வைக்கிறாரா என்றால் ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். அதாவது தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிப்பதால் சந்தையில் பொருளின் விலையானது உயராமல் அல்லது அவ்விலை உயர்வானது பாமர மக்களை பாதிக்காதவாறு ஓர் பொருளாதார ரீதியாக கருத்தியல் அடிப்படையில் ஓர் கோட்பாட்டை முன்வைக்கமுடிகிறாதா என்றால் இல்லை, பின் எப்படி விவசாயி தனது போராட்டத்தில் வெற்றிபெறமுடியும்! 

மாறாக, இன்று விவசாயிகள் இரண்டு கோட்பாடுகளை கருத்தியல் ரீதியில் முன்வைக்கின்றனர். ஒன்று, விவசாயத்தில் ஈடுபடும் இடைத்தரகர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்தவேண்டும் என்றும், இரண்டு, விவசாயி தனது பொருள்களை விவசாய பொருள்களாகவே நேரடியாக சந்தைப்படுத்தாமல், தனது விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்கவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர். இதில் முதல் கோட்பாட்டான இடைத்தரகர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் விவசாயிகள் குறிப்பிடும் காரணம், இடைத்தரகர்கள் எந்தவித உழைப்பும் இல்லாமல், வியர்வை சிந்தி உழைத்த விவசாயினுடைய பொருளை பெற்று அதிகப்படியான கமிசனை பெறுகிறார் என்பதே அது. நிதர்சனத்தில் இது நடக்கவே செய்கிறது, ஆனால், இங்கு இடைத்தரகரின் இருப்பை ஒழித்துவிட்டு அவர்களின் பணியை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு விவசாயிகளிடம் எந்த பதிலும் இல்லை. பொத்தாம் பொதுவாக இடைத்தரகரின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றனர், அது உண்மையும்கூட, ஆனால், அவர்களை கட்டுப்படுத்தியபின்பு தங்களில் பொருளை விவசாயே நேரடியான நுகர்வோரிடம் தனது பொருளை விற்ககூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றனரா என்றால் கேள்விக்குறிதான். பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்கும் சில விவசாயிகளால் மட்டுமே தனது விளைபொருளை நேரடியாக சந்தைப்படுத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதியை பெற்றிருக்க முடிகிறது அதுவும் குறிப்பிட்ட எல்லை வரைதான்.

இங்கு இடைத்தரகரின் இருப்பை கேள்விகேட்கும் எவரும், தமிழ் நாட்டின் ஓர் மூலையில் ஓர் ஏக்கரில் விளைவிக்கப்பட்ட ஏதாவது ஒரு விளைபொருளை, காஷ்மீரில் இருக்கும் ஒரு நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புவதேயில்லை. அதனை முடியாது என்று ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் இடைத்தரகர்களின் இருப்பின் தேவையை அங்கிகரிக்கமுடியும். எனினும், இடைத்தர்கர்கள் அதிகப்படியான கமிசன் பெறுக்கிறார்கள் என்னும்பட்சத்தில் அது அவர்களின் சந்தை ஆதிக்கம் என்பதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இடைத்தரகர்களின் பலமானது விவசாயினுடைய பலவீனத்திலிருந்து உருவானதுதான், அதனால், விவசாயி நேரடியாக நுகர்வோரிடம் தனது விளைபொருளை, கொண்டு செல்லும் வகையில் தனது உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிகொள்ளாதவரையில் இடைத்தரகரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருப்பதை தவிர்க்கமுடியாது ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இடைத்தரகளின் ஆதிக்கத்தை ஒழிக்க விவசாயால் எந்தவித கருத்தியல் ரீதியிலான கோட்பாட்டையும் உருவாக்க முடியாது. மாறாக கட்டமைப்பு வசதிகளை மட்டுமே உருவாக்கமுடியும் அதுவும் பரந்தளவில் சாத்தியமில்லை.

இரண்டாவது, ஒரு விவசாயி தனது விளைபொருளை நேரடியாக சந்தையில் விற்காமல், மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெறமுடியும் என்ற ஓர் வெற்றிகரமான கோட்பாட்டை விவசாயிகளும், விவசாய பொருளாதார நிபுணர்களும் கட்டமைத்திருக்கின்றனர். இது உண்மையில் விவசாயிகள் ஓர் கோட்பாட்டு வெற்றி என்றால் மிகையல்ல. முரண்பாடாக, இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படையான உள்கட்டமைப்பு மற்றும் சந்தை கட்டமைப்பு வசதிகள் போதியளவு இல்லை. இவையும், பொருளாதார பலம் பெற்ற விவசாயிகளால் மட்டுமே சாத்தியப்படும். இந்த இரண்டு தீர்வுகளிலும், விவசாயி விவசாயாக மட்டும் இயங்காமல், ஓர் இடைத்தரகராகவும், மதிப்புக்கூட்டும் தொழில்முனைவோராகவும் இயங்கியாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இவை சாத்தியப்படும் விவசாயிகள் லாபகரமான விவசாயத்தை செய்கின்றனர். ஆனால் பரவலாக விவசாயிகளுக்கு இவை சாத்தியப்படுவதில்லை என்பதுதான் இக்கோட்பாட்டின் மிகபெரிய பாதகமான அம்சமாகும்.

இடைத்தரகர் ஒழிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற இரண்டு கருத்தியலும் விவசாயி எப்படி சாதகமாக இருக்கிறது என்றால், தனது விளைபொருளை இடைத்தரகரிடம் விற்காமல் நேரடியாக சந்தையில் நுகர்வோரிடமே விற்பதால், இடைத்தரகர்கள் பெற்றுவந்த அதிகப்படியான லாபத்தை இப்போது விவசாயே பெறுகிறார், அதேபோலதான், மதிப்புக்கூட்டலிலும், தொழில்முனைவோர் பெற்றுவந்த லாபத்தை இப்போது விவசாயே பெறுகிறார் இதன்மூலம் மட்டும்தான் விவசாயி கூடுதலாக லாபமானது கிடைக்கபெருகிறது. இதனை விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானித்து விற்பதாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனெனில், இத்தகைய கோட்பாட்டுக்கு ஓர் தவிர்க்க முடியாத எல்லை இருக்கிறது. அதாவது, விவசாயி பத்து ரூபாய்க்கு தான் விளைவித்த தக்காளியை, நேரடியாக நாற்பது ரூபாய்கு நுகர்வோரிடம் விற்கிறார் எனில், இடைத்தரகருக்கு கமிசனாக செல்லக்கூடிய சுமார் முப்பது ரூபாய்யையும் இங்கே விவசாயி எடுத்துக்கொள்கிறாரே தவிர இங்கும் அவர் சந்தையின் போக்குக்கு ஏற்பதான் விலையை தீர்மானிக்க முடியும். நேரடியாக தானே நுகர்வோரிடம் கொண்டு சேர்பதால் மட்டுமே அதிக விலையை நிர்ணயித்தால் நுகர்வோர் யாரும் வாங்க மாட்டார்கள். இதன்மூலம் ஏதோ உதிரியாக சில விவசாயிகள் நேரடியாகவும், மதிப்புக்கூட்டியும் விற்பது சாத்தியப்படுமே தவிர, விவசாயிகளுக்கிடையே பரவலான ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்காத வரை மேற்கண்ட வழிமுறைகளால் எந்த பயனும் இருக்கபோவதில்லை.

விவசாயிகள் புதியதாக முன்வைக்கும் கோட்பாடானது, சமுகத்தின் எந்த தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்காமல், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொள்ளுமளவிற்கு பொருளாதார ரீதியாகவும், சாதாரண விவசாயும் மிக எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில், இதனால் பாதிப்படைய கூடிய சாத்தியமிக்கவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கூட பெற்றுவிடுமளவிற்கு சிறப்பானதாக ஓர் கோட்பாட்டை உருவாக்கி கருத்தியல் ரீதியில் முதலில் விவசாயி தனது மீது ஆதிக்கம் செலுத்துபவர்களை எதிர்கொள்ளாத வரையில் விவசாயி ஓர் நிரந்தரமான எந்த தீர்வையும் நோக்கி ஓர் அடிகூட பயணப்பட முடியாது. தொழிலாளர்களை முதலாளிகளானவர்கள் சுரண்டி, முதலாளி மேலும் முதலாளியாகவும், தொழிலாளி தொழிலாளியாகவே இருக்கிறார் என்பது முதலாளி மற்றும் தொழிலாள  உட்பட அனைவரும் அறிந்ததே, ஆனால், இதனை அடிப்படையாக கொண்டு தொழிலாளியால் புரட்சி எதையும் செய்ய இயலாது. மாறாக, காரல் மார்க்ஸ் என்பவர் தொழிலாளி எப்படி சுரண்டப்படுகிறார், முதலாளி எப்படி சுரண்டுகிறார் என்பதை உபரி மதிப்பு என்ற கோட்பாட்டின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்ததின் மூலமே தொழிலாளர்கள் மத்தியில் பரவலான ஓர் கருத்தியல் புரட்சி உருவாகி அது புரட்சியாக வெடித்து முதலாளித்துவத்தை வீழ்த்தியது.

இங்கு அவதானிக்க வேண்டிய விசயம், புரட்சிக்கு வித்திட்டது உபரி மதிப்பு என்ற ஓர் கோட்பாடேயாகும். அதைபோலதான் இன்று விவசாயி சுரண்டப்படுவது எல்லாருக்கும் தெரியும், ஆனால், விவசாயத்தை ஆதிக்கம் செலுத்துபவர்கள் முன்வைக்கும் கோட்பாட்டை, விவசாயல் எதிர்கொள்ளமுடியவில்லை, அதிகபட்சமாக விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டும் என்பது சார்ந்த இன்றைய நிலையில் இருக்கும் ஓர் கோட்பாடு என்னவெனில் அது, திரு. எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறைத்த விளைபொருளின் உற்பத்தி செலவின் மதிப்புடன் அதில் பாதியை லாபமாக நிர்ணயித்து குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்கவேண்டும் என்பதேயாகும். விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு, தாங்களே விலையை தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து தனது கருத்தியல் போதாமையால் தேய்ந்து இன்று திரு. எம். எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறைத்த குறைந்த பட்ச ஆதார விலையாவது கொடுக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முரண்பாடு என்னவெனில், எம். எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துறையானது விவசாயிக்கு எந்தவித பலனையும் தருவது கேள்விக்குறியே.

இத்தகைய எந்தவித கோட்பாட்டு ரீதியிலான பலமும் இல்லாமல் வெற்றாக போராடுவதால், இம்முறை சில கோரிக்கைகளில் வெற்றிப்பெற்றாலும், மறுபடியும் அடுத்தமுறை இதேபோன்று நிவாரணம் கேட்டோ அல்லது கடன் தள்ளுபடி செய்ய சொல்லியோ போராடிக்கொண்டிருப்பதை நோக்கிதான் விவசாயிகளை அழைத்து செல்லுமே தவிர என்றென்றைக்குமான ஓர் நிரந்தரமான ஓர் தீர்வை கொடுக்கவே செய்யாது. அதாவது விவசாயிகளின் உச்சக்கட்ட போராட்டமானது தங்களின் விளைபொருளுக்கு விலையை தீர்மானிக்கும் உரிமைக்கு போராடுவதோடு தங்களின் நியாயம், உரிமை மற்றும் பங்கு முடிந்துவிடுவதாகவும், அதுவே தங்களின் வாழ்வின் இலட்சியமாகவும் விவசாயிகளின் மனதில் ஆழமாக திணிக்கப்பட்டு காலங்காலமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய எண்ணத்தை உடைத்து அதைத்தாண்டி விவசாயி தனக்கான வாய்ப்பை தேடவேண்டும். நாம் முன்மொழிவது விவசாயிகள் வெறும் கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி போராடமல், இன்றைய கார்ப்பரேட்முறையையும், அரசு - முதலாளி கள்ளக்கூட்டையும், அதிகாரவர்க்கத்தையும் அதிர செய்யும் அறிவியல் பூர்வ நிறுபணம் உடைய ஓர் கோட்பாட்டை உருவாக்கி அதனை முன்னிறுத்தி தங்களின் போராட்டத்தை வடிவமைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களை நிரந்தரமான ஓர் தீர்வை நோக்கி அழைத்து செல்லும். அதுவரை விவசாயிகளின் போராட்டமானது தங்களின், தற்கால வெற்றிக்காகவும் நிரந்தர தோல்விக்காகவுமான ஓர்  போராட்டமாகவே இருக்கும்.

யாரை ஒருவரையும் கைநீட்டி குற்றம்சாட்டுவது மிக எளிது, ஆனால், பிரச்சனைக்கான தீர்வை முன்வைப்பதில்தான் சவாலே இருக்கிறது. நாம் இதுவரை விவசாயால் வெற்றிப்பெறமுடியாததற்கான அடிப்படையான காரணத்தை பார்த்தோம். இதனை தவிர்க்க என்னென்ன தீர்வுகள் இருக்கிறது என்று பார்ப்போம். சென்ற வருடம் அளவுக்கு அதிகமாக மழை, கடந்த வருடம் கடுமையான வறட்சி இவ்விரண்டு சூழ் நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்றால் அது விவசாயி தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. ஏன் விவசாயி மட்டும் வெள்ளதாலோ, வறட்சியாலோ பாதிக்கிப்படுகிறார் என்ற கேள்வியானது வியப்பாக இருக்கலாம். ஏனெனில், இத்தகைய சூழ்நிலையில் விவசாயம் பொய்த்துவிடுகிறது, அதனால் விவசாயி தனது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்படைகிறான் இதில் என்ன முரண்பாடு இருந்துவிடமுடியும்?. இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் உற்று நோக்கவேண்டும், இத்தனை கடுமையான வறட்சியால் விவசாயம் பொய்த்து விவசாயி பாதிக்கப்பட்ட அளவிற்கு, விவசாயத்தை சார்ந்த சந்தையும் அதில் ஈடுபடும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கண்டிபாக இல்லை என்லாம். இத்தனை வறட்சியிலும் ஏன் இவர்கள் மட்டும் பாதிப்படையவில்லை. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வறட்சியானது சந்தையில் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி, அதன் பலனானது பெரும்பாலும் வியாபாரிகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோதான் செல்கிறது, அதாவது, இங்கு இயற்கை பேரிடர்கள், சந்தை பொருளாதாரத்தில், தேவை மற்றும் அளிப்புக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளப்பட்டு அதிக்கப்படியான லாபம் பெறப்படுகிறது. சராசரியான உற்பத்தி இருக்கும்போது கொள்முதல் செய்யப்பட்டு பதுக்கப்படும் பொருள்கள் யாவும் வறட்சியின்போது சந்தைப்படுத்தப்படுகிறது, இதன்மூலமும் வியாபாரிகளும், நிறுவனங்களும் லாபம் ஈட்டுக்கின்றன. மலிவான விலைக்கு விளைப்பொருள்களை பெற்று அதனை மதிப்புக்கூட்டி விற்கும்போது, மிக அதிகமான லாபமானதும் இவர்களால் பெறப்படுகிறது. அதாவது விவசாயியை தவிர, விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும், வறட்சி போன்ற பேரிடர்களிலும் பாதிப்படையாமல் மிக அதிகமான லாபத்தை பெறுகின்றனர். இதன் பிரதிபலிப்புதான், டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக போராட்டம் நடத்திகொண்டிருப்பது. இத்தனைன் கடுமையான வறட்சியிலும், டெல்லியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் விவசாயிகள் மட்டும்தான், எந்த வியாபாரியோ, தொழில் நிறுவனமோ அல்ல, அதேபோல, இத்தனை வறட்சியிலும், தற்கொலை செய்துக்கொள்வது விவசாயி மட்டும்தான், எந்த வியாபாரியோ தொழில் நிறுவனமோ அல்ல. இதுதான் முரண்பாடே, விவசாயியை முமுமையாக சார்ந்து இருக்கும் வியாபாரிகளோ, நிறுவனங்களோ, இங்கே விவசாயம் பொய்த்து விவசாயியே பாதிப்புக்குள்ளாகும்போது ஏன்? எப்படி இவர்கள் மட்டும் பாதிப்புக்குள்ளாகுவதில்லை. இந்த இடத்தில்தான் விவசாயி தோற்றுபோகிறான். அதாவது சந்தையை விவசாயி கட்டுப்படுத்தமுடியாமல் தோற்றுபோன காரணத்தால்தான் இது நிகழ்கிறது.

விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையையும் விவசாயியால் கட்டுப்படுத்த முடியும் பட்சத்தில் விவசாயியை எந்தவித வறட்சியும் பாதிப்படைய செய்யாது. ஆனால் இங்கே பிரச்சனையே அதுதான், தனது விளைப்பொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு விவசாயியால் எப்படி ஒட்டுமொத்த சந்தை பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தமுடியும்? கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழும். ஆனால், நடைமுறையில் சாத்தியமே! இதுவரையிலும் விவசாயிகளுடைய அடிப்படையான கோரிக்கையானது, தங்களுக்கு மானியமோ, நிவாரண நிதியோ, கடன் தள்ளுபடியே போன்ற எதுவும் தேவையில்லை, மாறாக, தங்களின் விளைபொருள்களுக்கு தாங்களே விலையை தீர்மானிக்கவேண்டும் என்ற அடிப்படையான உரிமை மட்டுமே போதும் என்பதேயாகும். ஆனால், இதற்கு முரணாக, ஒரு விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்யாமல், ஆனால் தானே விலையை நிர்ணயம் செய்தால், தனக்கு என்ன லாபம் கிடைக்குமோ அதை, பெறமுடியும். எப்படியெனில், இதுவரை ஒவ்வொரு விவசாயியும் தனது விளைபொருளுக்கு விலையை தீர்மானிக்க வேண்டும் என்று கேட்கிறார்களே தவிர, தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி, அதாவது, தனது நெல்லை, அரிசியாகவோ, தவிடாகவோ, எண்ணையாகவோ, மதுபானங்களாகவோ, இட்லியாகவோ, பிரியாணியாவோ, அதேபோல, தனது பருத்தியை, சட்டையாகவோ, ஜீன்ஸ் பேண்ட்டாகவோ, தனது பாலை, டீயாகவோ, காபியாகவோ, தயிராகவோ, மோராகவோ, ஐஸ்கிரீமாகவோ, தனது பழத்தை ஜீஸ்சாகவோ, மதுபானமாகவோ மதிப்புக்கூட்டி கொள்ளை லாபம் பெறும் நிறுவனங்களிடம், தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து, அதில் தனது விளைபொருளை மதிப்புக்கூட்டி விற்றால், தனக்கு குறிப்பிட்ட பங்கு ராயல்டியாக கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையானது விவசாயிகளிடம் இல்லை. தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டுவதற்கு ராயல்டி பெறும் பட்சத்தில் விவசாயி தனது விளைபொருளுக்கு தானே விலையை தீர்மானிக்க வேண்டாம், ஆனால், அப்படி விலையை நிர்ணயித்தால் எவ்வளவு விலை கிடைக்குமோ அதை, தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டி விற்பவர்களிடம் ராயல்டியாக பெறமுடியும். இப்படி ஒட்டுமொத்த விவசாய விளைபொருள்களையும், விவசாயிக்கு ராயல்டியாக கிடைக்கவேண்டிய தொகை மட்டும் வருடத்திற்கு ஏறத்தாழ குறைந்தபட்சம் 20 முதல் 25 இலட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இதில், பரவலாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டும் ராயல்டி பெற்றாலே குறைந்தபட்சம் சுமார் 10 முதல் 15 இலட்சம் கோட்டி ரூபாய்யை பெறமுடியும். விவசாயி இதுபற்றிய அடிப்படையான புரிதல் இல்லாததால் ஒவ்வொரு வருடமும் தான் உற்பத்தி செய்த விளைபொருள்களை, தானே விலையையும் நிர்ணயிக்க முடியாமல் சந்தையில் கொடுத்துவிட்டு, 20 முதல் 25 இலட்சம் கோடி ரூபாய்யை இழந்துக்கொண்டு, அரசிடம் தனது கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், வறட்சி நிவாரண நிதி வழங்க கோரியும் கையேந்திக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு விவசாயி தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டி விற்கும், அதாவது ஒரு லிட்டர் பாலை தன்னிடம் 20 ரூபாய்க்கு பெற்று அதனை டீயாகவோ, காபியாகவோ மதிப்புக்கூட்டி 400-500 ரூபாய் லாபம் பெறுவதில், ஒரு பால்காரர் தனது பாலை மதிப்புக்கூட்டியதற்காக குறைந்தபட்சம் 100 ரூபாய்யை ராயல்டியாக பெற்றாலே போதும், ஒரு பால்காராரருக்கு ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் 120 ரூபாய் கிடைக்கும். அதேப்போல, 3,860 ரூபாய் மதிப்புடைய ஒரு குவிண்டால் பருத்தியை, விவசாயிடமிருந்து பெற்று அதில் ஒரு குவிண்டால் பருத்தியில், விதை நீக்கி சுமார் 68 கிலோ பருத்தி பெற்று, அதிலிருந்து ஏறத்தாழ 300 சட்டை தயாரிக்கமுடியும், ஒரு சட்டையின் சராசரி விலை 500 ரூபாய் எனக்கொண்டாலும், சுமார் 1.5 இலட்சம், இவற்றில் சட்டையின் உற்பத்தி செலவு, அதிகப்பட்சம் 100 ரூபாய் எனக்கொண்டாலும், ஒரு சட்டையில் சுமார் 400 ரூபாய் லாபமாக பெறப்பட்டு, ஆலை முதலாளி, மொத்த வியாபாரி, சில்லைரை வியாபாரி என பகிர்ந்துக்கொள்கின்றனர். ஆனால், விவசாயி தனது பருத்திக்கான உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் ஏமாற்றப்படுகிறார். இப்படிதான் விவசாயி சந்தை பொருளாதாரத்தில் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுகிறார். இதேப்போலதான், நெல்லை மதிப்புக்கூட்டி, அரிசியாக, இட்லியாக, தோசையாக, பிரியாணியாக விற்பதும், பழங்களை மதிப்புக்கூட்டி பழஞ்சாராகவும், மதுபானமாக விற்பத்திலும் விவசாயி சுரண்டப்படுகிறான். இதன் காரணமாகதான் வறட்சி ஏற்படும்போது, இத்தகைய வியாபாரிகளோ, நிறுவனங்களோ பாதிப்படையாமல் விவசாயி மட்டும் பாதிப்படைகிறார்.

ஒருவேளை, விவசாயி தனது பருத்தியை சட்டையாக மதிப்புக்கூட்டுவதற்கு ஒரு சட்டைக்கு 100 ரூபாய் ராயல்டியாக பெருகிறார் எனவைத்துக்கொள்வோம், இப்போது, அவர், தனது பருத்தியை மதிப்புக்கூட்டியதற்காக ஏறத்தாழ சுமார் முப்பதாயிரம் ரூபாய்யை பெறமுடியும், இதன்மூலம், தனது பருத்தியின் விலையானது ஒரு குவிண்டால், 3,860 ரூபாயிலிருந்து இப்போது 33,860 ரூபாய்யை பெறமுடியும். இப்படி நிகழும் பட்சத்தில் எத்தகைய கடுமையான வறட்சியும் விவசாயியை பாதிப்படையவே செய்யாது. இதன்மூலம் விவசாயம் சார்ந்த சந்தையை விவசாயி தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும். ஒரு விவசாயி தனது விளைபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கேட்காமல், தனது விளைப்பொருளை மதிப்புக்கூட்டுவதற்கு ராயல்டி பெறும்பட்சத்தில் விவசாயி அதிகப்படியான பலனை பெறமுடியும். இதில், விலையேற்றமானது அதிகரிக்காதா? ஒரு விவசாயியுடைய பருத்திதான் மதிப்புக்கூட்டப்படுகிறதா? மதிப்புக்கூட்டப்பட்ட சட்டையானது எந்தவிவசாயி விளைவித்த பருத்தி? அவருக்கு எத்தனை வருடம் ராயல்டி கொடுக்கவேண்டும்? ராயல்டி பெற ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? நடைமுறை சாத்தியம் மிக்கதா? போன்ற பல்வேறு கேள்விகள் எழும். இவையனைத்திற்கும் அறிவியல் மற்றும் தர்க்க ரீதியிலான விளக்கத்திலிருந்துதான் இத்தகைய கோட்பாட்டின் வெற்றியானது இருக்கிறது. ஒரு விவசாயிடமிருந்து விளைபொருளை பெற்று மதிப்புக்கூட்டி விற்கும் நிறுவனம் எப்படி விவசாயிடம் சுரண்டுவதாக எடுத்துக்கொள்ளமுடியும்? மேலும், விளைபொருளை மதிப்புக்கூட்டுவதற்காக விவசாயி ராயல்டி கொடுக்க என்ன தார்மீக மற்றும் அறிவியல் அடிப்படை இருக்கிறது என்ன கேள்வி எழும். ஆனால், இதற்கான தெளிவான, அறிவியல் பூர்வ மற்றும் தர்க்க ரீதியிலான காரணங்களை கொண்ட கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை நடைமுறைபடுத்தும் பட்சத்தில்,

ü  நாட்டில், விவசாயிக்கும் குறைந்தப்பட்சம் பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் கொடுக்க முடியும்.

ü  விவசாயியையும், விவசாயத்தையும் காக்க முடியும்.

ü  நாட்டின் விலையேற்றத்தை மிக எளிதாக தடுக்கமுடியும், அதுவும் கடுமையான அளவு விலையேற்றத்தை குறைக்கமுடியும்.

ü  விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையும் விவசாயினுடைய கட்டுப்பாட்டிற்கு இருக்கும்

ü  நாட்டின் மிக பெரிய பிரச்சனையான உணவு பொருள்கள் பதுக்கலை முற்றிலும் ஒழிக்கமுடியும்.

ü  உணவுப்பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் தடுக்கமுடியும்.

ü  வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது என்பதை முற்றிலுமாக ஒழிக்கமுடியும்.

ü  நாட்டின் எந்தவொரு முதலாளியாளும் தன்னிச்சையாக அவரின் லாபத்தை நிர்ணயிக்கவே முடியாது.

ü  முதலாளித்துவத்திற்கு மாற்றாகவும், 21 ம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவமாகவும் இருக்கும்.

ü  சந்தையில் பொருளாதார நீதியானது உருவாகும்

விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல விவசாயம் சார்ந்த ஒட்டுமொத்த சந்தையையும் விவசாயி கட்டுப்படுத்தக்கூடிய அத்தகைய அறிவியல் பூர்வமான கருத்தியல் கோட்பாடுகளை விரைவில் வெளியிட இருக்கிறேன். வெளியிடுவதற்கு விவசாயிகள், விவசாய சங்கங்கள், சமுக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் அனைவரும் உதவும்படியும், ஆதரவு தரும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

- அ.தங்கஅரசன்

Pin It