K.P. Aravananஉலகில் தமிழர்களின் தாய்மண் இந்தியாவும், இலங்கையும் ஆகும். தாம் பிறந்த தாய் மண்ணைவிட்டு இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் தமிழர்கள் பலநூறு ஆண்டுகளாக வேறு வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். கடல் கடந்தும் சென்றுள்ளனர். இப்புலப் பெயர்ச்சிக்கான சான்றுகள் பழைய இலக்கியங்களிலும் வரலாற்றுக் குறிப்புகளிலும் உள்ளன.

தமிழ் முன்னோர் தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்தாகப் பிரித்தனர். அவையாவன: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன.

குறிஞ்சி: மலை, மலைசார்ந்த இடத்தையும், முல்லை: காடு, காடு சார்ந்த இடத்தையும், மருதம்: வயல், வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல்: கடல், கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் தொடர்ந்து மழை அற்ற காலங்களில் நிலம் வறண்டு காய்ந்து கிடக்கும் இடங்களைக் குறிக்கும். எனவே பாலை என்பது தமிழகத்தில் தனியாக இருந்த நிலையான நிலம் அன்று. கால மாற்றத்தால் தோன்றும்; அவ்வப்போது தோன்றும். மழை வருகையால் மறுபடியும் அந்நிலம் முல்லையும், குறிஞ்சியும் ஆகிவிடும். இந் நிலங்களில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே மேலோங்கியிருந்த குடும்ப வாழ்வியலை ஐந்து நில அடிப்படையில் ஐந்திணை ஒழுக்கங்களாகப் பிரித்திருந்தனர். அவையாவன: குறிஞ்சித் திணை - புணர்தலும், புணர்தல் நிமித்தமும், முல்லைத் திணை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதத்திணை - ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் திணை - இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலைத் திணை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும். இவை உரிப்பொருள் என்று அழைக்கப்பெற்றன.

இவ்வுரிப் பொருள்களுள் பாலை நிலத்திற்குரிய உரிப் பொருள் கவனிக்கத்தக்கது. அதன் விளக்கம் தலைவன் தலைவியைத் தற்காலிகமாகச் சிலகாலத்திற்குப் பிரிந்து செல்லுதல் என்பதாகும். இப்பிரிந்து செல்லுதல் பொருள் சேர்ப்பதற்காகவும், போர் செய்வதற்காகவும், கல்வி கற்பதற்காகவும், அறப்புறம் காவல் செய்வதற்காகவும் நிகழும். இவற்றுள் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிந்து செல்லுதலே மிகுதி ஆகும். தமிழ் இலக்கியப் பழம் பாடல்களான சங்க இலக்கியப் பாலைப் பாடல்களும், தொல்காப்பிய இலக்கணமும் பொருள்வயின் பிரிவே மிகுதி என்பதைக் காட்டுகின்றன. இவ்வாறு பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்லும் தமிழர், நாட்டுக்குள்ளேயே பஞ்சம் பிழைப்பதற்காக ஓர் இடம் விட்டு இன்னோர் இடத்திற்குப் பிரிந்து செல்வர். அவர்கள் தொடர்ந்து வாழ்ந்த இடங்களில் நெடுங்காலம் மழை பொழியாமல் போக, நிலம் வறட்சியுறும்; பஞ்சம் வந்து சேரும்.

அக்காலங்களில் வறட்சியான தம் இடங்களை விட்டுவிட்டு வளமான நாடுகளை நோக்கிப் பயணம் செய்வர். அயல் நாடுகளுக்குச் சென்று பொருளீட்டித் தாயகம் திரும்புவதற்காகத் தேர் ஒன்று வாங்கி அதில் தாம் ஈட்டிய பொருட்களை வைத்து ஒருவனைச் சாரதியாக அமர்த்தி இல்லம் திரும்புவர். இந்நிகழ்வைப் பாலைப் பாடல்கள் பலவும், முல்லைப் பாடல்கள் பலவும் சங்கத் தொகுப்பில் பதிவு செய்துள்ளன. இவ்வாறு பிரிந்து செல்லும் தமிழர் தம் மனைவி மக்களைப் பார்ப்பதற்காகவும், அவருடன் மகிழ்ந்து இருப்பதற்காகவும் திரும்பி விடுதலே வழக்கம்.

சங்ககாலத்தை அடுத்த சங்கமருவிய காலத்தில் தமிழர் கடல்தாண்டி வேறு நாடுகளுக்குச் சென்று பொருளீட்டுதல் பதிவாகியுள்ளது. சோழர்களின் தலைநகரமான பூம்புகாரில் தம் மனைவியரைப் பிரிந்து பொருள் ஈட்டக் கடல் கடந்து சென்றதற்கான சான்றுகள் உள்ளன. கணவன் கடல்தாண்டிப் பிரிந்து சென்ற சமயத்தில் தம்மைக் கொடிய கயவர் துன்புறுத்துவர் என்று அஞ்சிக் கணவன் வரும்வரை கல்லாகவே உருமாறிக் கடற்கரையில் காத்திருப்பர். இதனைச் சிலப்பதிகாரம் (வஞ்சினமாலை அடி: 16-17)

மணல்மலி பூங்கானல்
வருகலன்கள் நோக்கிக்
கணவன் வரக்
கல்லுருவம் நீத்தாள்

எனக் குறிக்கும்.

Pin It