தமிழக வரலாற்றில் சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலம். அதன் பின் கி.பி. 250 முதல் கி.பி. 550 வரையான காலம் களப்பிரர் காலம். சங்ககாலத்தில் தமிழகத்தில் சாதி இல்லை என முன்பே குறிப்பிட்டோம். சங்கம் மருவிய காலத்திலும் சாதி இருக்கவில்லை.

thiruvalluvar 2050திருக்குறள்: சங்கம் மருவிய காலத்தில் கி.மு. 31 வாக்கில் வள்ளுவன் தோன்றினான். அவனுடைய திருக்குறள் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நூல். திருக்குறள் சங்கம் மருவிய காலத்தில் சாதி இருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அல்லது இதற்குப்பின் எழுதப்பட்டதுதான் மனுசுமிருதி. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் ஆன வேறுபாடு இருக்கிறது. வள்ளுவன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’(குறள்-972) என மனிதர்களுக்கு இடையேயான சமத்துவத்தை பிரகடனப்படுத்துகிறான். மனுவோ மனிதர்களுக்கிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் நால் வருண சாதியத்தைப் பேசுகிறான்.

‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’(குறள்-1032) என உழவுத்தொழிலின் சிறப்பை வள்ளுவன் கூறுகிறான். ஆனால் மனு உடல் உழைப்பையும், உழவுத் தொழிலையும் மிகக் கேவலமான தொழில் எனக் கூறுகிறான். பார்ப்பனனின் சிறந்த வாழ்வாக, இரந்து உயிர் வாழ்தலைக் கூறுகிறான் மனு. ஆனால் இரந்து உயிர்வாழ்தல் மிகமிகக் கேவலமானது எனச்சொல்ல வந்த வள்ளுவன், ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’(குறள்-1062) எனக் கூறுகிறான். இப்படி நிறையச் சொல்லலாம். ஆகவே தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் வைதீக பார்ப்பனியமோ, சாதியமோ இருக்கவில்லை என நாம் உறுதிபடக் கூறமுடியும். இந்தத் திருக்குறளிலும் பார்ப்பனியத் திருவிளையாடல்கள் நடந்துள்ளன. அதன் 134ஆம் குறளில் சிறந்த குடிப்பிறப்புக்கான குடிமை என்பதை ‘பார்ப்பான்’ என திருத்தியுள்ளனர்(1).

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்: சங்ககாலத்திற்கு பின்பு உருவாகிய நூல்கள் சங்கம் மருவிய நூல்கள் எனவும் அவை உருவான காலம் சங்கம் மருவிய காலம் எனவும் நமது முன்னோர்களால் கூறப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய நூல்கள் என்பன ‘சங்கத்தோடு தொடர்புடையது, சங்கக்கருத்தைத் தழுவியது’ எனக்கூறுகிறார் வித்துவான் எசு. நடராசன்(2). பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பன 18 நூல்கள். அவை, 1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. ஐந்திணை எழுபது, 9. திணைமொழி ஐம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடுகம், 13. ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக்காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை ஆகியன(3). இதில் திருக்குறள் மட்டுமே பெரும்பாலோர் அறிந்த நூலாக இருக்கிறது. பிற நூல்கள் அதிகம் அறியப்படாமல்தான் இருக்கிறது. இந்த நூல்களும் இவற்றின் பாடல்களும் சங்க நூல்களைப் போன்று மிகச்சிறந்த இலக்கியநயமிக்க பாடல் வரிகளையும் மிகச்சிறந்த அரிய, அழகிய சொற்களையும் கொண்டனவாக இருப்பதோடு, மிகச்சிறந்த கருத்துகளையும் கொண்டனவாக உள்ளன. அறிவியலும், காரணகாரியமும், ஏரணச் சிந்தனையும் கொண்டனவாக இவற்றின் பாடல்கள் உள்ளன. இவற்றில் வைதீக பார்ப்பனியமோ, சாதியமோ, ஏன் சமயம் சார்ந்த கருத்துகளோ, மூட நம்பிக்கைக்ளோ இல்லை என்றே கூறலாம். ஆகவே தான் இவை களப்பிரர் காலத்தில் உருவாகவில்லை எனவும் நமது இலக்கியக் கணிப்புப்படியான கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான 300 வருட காலச் சங்கம் மருவிய காலத்தில் உருவானவை எனவும் உறுதிபடக் கூறலாம்.

நாலடியார்: இந்த நூல் 400 பாடல்களையும், அதில் அறத்துப்பால் 13 அதிகாரங்களையும், பொருட்பால் 26 அதிகாரங்களையும், இன்பத்துப்பால் ஒரு அதிகாரத்தையும் கொண்டு, மூன்று தலைப்பில் திருக்குறள் போன்றே பல சிறந்த கருத்துக்களையும் உடையதாக அமைந்துள்ளது. அதனால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ எனவும் ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ எனவும் போன்ற முதுமொழிகள் தமிழ் மக்களிடத்தில் உருவாகியுள்ளன. அதன் 318ஆம் பாடல்,

‘புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார்

உயத்தக மெல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு’ எனக் கூறுகிறது.(4) (பக்:96)

நூல் உரைக்கும் பொருட்சிறப்பினைத் தெளியாதவராக நூல்களை மிகுதியாகத் தேடிக் தொகுத்துக் கொணர்ந்து வீடு முழுவதும் இடமில்லாமல் நிறைத்து வைத்தாலும், அந்நூல்களைத் தக்கவாறு பாதுகாத்து வைக்கும் புலமையாளர் வேறானவர், அதே சமயம் அந்நூல்களின் நுண்பொருள் உணர்ந்து பிறர்க்கு உரைக்கும் புலமையாளர் வேறானவர். அன்றே நிறைய நூல்கள் இருந்தன என்பதையும் அதனைப் பாதுகாத்து வைப்பவர்களும், அவற்றைப்படித்து அதன் நுண்பொருள் உணர்ந்தவர்களும் இருந்துள்ளனர் என்பதையும் இப்பாடல்மூலம் அறிய முடிகிறது.

அதன் 370 ஆம்பாடல்,

‘புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்

வீதுப்புற நாடின் வே றல்ல- புதுப்புனலும்

மாரி அறவே அறுமே அவரன்பும்

வாரி அரவே அறும்’ எனக் கூறுகிறது.(5) (பக்: 111)

மழை பொழிதலால் ஓடிவரும் புதுவெள்ளப்பெருக்கு, அழகிய காதணி அணிந்த பொதுமகளிர் நட்பு ஆகிய இரண்டையும் ஆராய்ந்தால் அவை வேறுபட்டன அல்ல. மழை நின்றதும் புதுவெள்ளப்பெருக்கும் நின்றுவிடும், அதுபோன்றே வருவாய் இல்லை எனில் அம்மகளிர் நட்பும் இல்லாது போகும் என்பதே இப்பாடலின் பொருள். இவ்விரண்டு பாடல்களும் பழமொழி என்ற நூலில் உள்ள இரு பாடல்கள். இவை இரண்டும் அந்நூலின் பொருள் சிறப்பை, பாடல் நயத்தை எடுத்துரைக்கின்றன.

நான்மணிக்கடிகை: இந்நூலின் ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துகளைக் கொண்டதாக உள்ளது. இதில் 104 பாடல்கள் உள்ளன. இந்நூலை எழுதியவர் விளம்பி நாகனார் என்பவர். இந்நூலின் 93ஆம் பாடல்,

‘எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக்

கல்லா வளர விடல்தீது – நல்லார்

நலம்தீது நாணற்று நிற்பின் – குலம்தீது

கொள்கை அழிந்தக்கடை’ எனக் கூறுகிறது.(6)(பக்: 149)

எந்நிலையிலும் கொலை தீதானது. மக்களைக் கல்லாதவராக வளரவிடல் தீமையானது. நல்லவர்கள் நாணமின்றி நின்றால் அவர்கள் பெற்ற நலமெல்லாம் தீமையானதுதான். கொண்ட கொள்கை தவறி நடந்தால் குடிப்பிறப்புக்குத் தீமை என்பது இப்பாடலின் பொருள். மக்கள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் எனவும் கொள்கை தவறி நடக்கக் கூடாது எனவும் கூறுவது அன்றைய சமூகச்சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.

கார் நாற்பது: இந்நூல் 40 அகப்பாடல்களைக்கொண்டது. இப்பாடல்கள் முல்லைத்திணையைச் சேர்ந்தவை. இதனை இயற்றியவர் மதுரைக்கண்ணங் கூத்தனார். வேந்தற்குத்துணையாகப் போர் புரியச்சென்ற தலைமகன் கார் காலத்து மீண்டும் வருவேன் எனக் காலம் கூறிப்பிரிகிறான். அக்காலம் வரும்வரை தலைவி பொறுமையாகக் காத்திருக்கிறாள். ஆனால் கார்காலம் வந்த பின்னரும் அவன் வராமல் காலம் தாழ்த்தியதால் தலைவி ஆற்றாமையால் வருந்துகிறாள். அந்த ஆற்றாமையும், ஆற்றுதலும், தலைவியின் அன்பின் பெருமையும், கற்பின் அருமையும் நனிவிளங்க இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இப்பாடல்கள் தலைவி, தோழி, தலைவன் ஆகியவர்களின் கூற்றுகளாக உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் கார்காலம் வந்தது கூறப்படுதலால் இந்நூல் கார் நாற்பது எனப்பட்டது. இதில் முல்லைத்திணைக்குரிய உரிப்பொருளும், கருப்பொருளும், முதற்பொருளும் கூறப்பட்டுள்ளன. சங்ககால அகப்பாடல்களைப் போன்றே இப்பாடல்களும் அமைந்துள்ளன. பெரிய வேறுபாடு இல்லை(7).

களவழி நாற்பது: இது புறப்பாடல். இதைப்பாடியவர் பொய்கையார். சோழ மன்னன் ஒருவன் சேர மன்னனை வென்ற வெற்றிச்சிறப்பை இந்நூல் பாடுகிறது. செய்யுள் தோறும் சோழனது வென்றி கூறப்படுகிறது. செங்கண்மால், செங்கட்சினமால் என அவனது பெயரும் கூறப்படுகிறது. ‘வஞ்சிக்கோ வட்ட களத்து’ என வருதலின் வெல்லப்பட்டோன் சேரன் என அறிய முடிகிறது. ‘காவிரி நாடன் கழுமலங்கொண்ட நாள்’ என்பதால் போர் நடந்த இடம் கழுமலம் என ஆகிறது(8). (191). இது பொதுவாக சேரன் கணைக்கால் இரும்பொறையை செங்கணான் என்ற சோழ மன்னன் வென்று சிறையிலிட்டான் எனவும் சேரனை விடுவிக்கப் பொய்கையார் பாடியது எனவும் கருதப்படுகிறது. ஆனால் இக்கருத்தில் பல குழப்பங்கள் உள்ளன. கணைக்கால் இரும்பொறை சங்ககாலச்சேர வேந்தன். ஆனால் செங்கணான் சங்கம் மருவிய காலச் சோழ வேந்தன் அல்லது அதற்கும் பிந்தையவன். ஆகவே இவை குறித்துத் தெளிவு பெற மேலும் ஆய்வுகள் வேண்டும். போரின் முடிவில் எஞ்சி நின்ற ஒரு சில யானை குதிரைகளை பரிசிலர் கொள்ளக் கொடுத்தல் களவழி எனவும் களத்தில் நடக்கும் நிகழ்வைப் பாடும் செய்யுளைக் களவழி எனவும் இச்செய்யுள்களைப் புலவர் தேரேறி வந்து பாடுவர் எனவும் கருதப்படுகிறது. இந்நூலில் யானைப்போர் குறித்து மிகுதியாகப் பாடப்பட்டுள்ளது. திருக்கார்த்திகைத்திருவிழா குறிக்கப் படுகிறது(9). சங்கம் மருவிய காலத்தில் நடந்த போர் நிகழ்வு தான் களவழி நாற்பது என்ற நூலில் பாடப்பட்டுள்ளது.

இன்னா நாற்பது: இந்நூல் நாற்பது பாடல்களைக்கொண்டது. கபிலரால் பாடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவர் சங்ககாலக்கபிலர் அல்ல. இன்னா என்பதற்கு துன்பமானது அல்லது இனிமையானதல்ல என்று பொருள். ஒவ்வொரு பாடலும் துன்பத்துக்குரிய அல்லது இனிமையற்ற நான்கு நான்கு கருத்துக்களைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. அதன் 25ஆம் பாடல், காவல் இல்லாத பழைய ஊரில் வாழ்வது துன்பமானது, தீய செய்கை உடையவரது பக்கத்தில் இருத்தல் துன்பமானது, காம நோய் முற்றினால் உயிருக்குத் துன்பம், நான், நான் எனத்தருக்கி இருப்பவரோடு நட்பு கொள்ளுதல் துன்பமானது. ஆகிய நான்கு துன்பத்துக்குரிய கருத்துகளைப் பட்டியலிடுகிறது(10). இது போன்ற நான்கு நான்கு துன்பங்களை வரிசைப்படுத்தும் 40 பாடல்களைக்கொண்டது இன்னா நாற்பது.

இனியவை நாற்பது: இந்நூல் பூதஞ்சேந்தனார் என்பவரால் எழுதப்பட்ட 40 பாடல்களைக்கொண்டது. அதன் 4ஆம் பாடல், யானைப்படையுடையவனாக வேந்தன் இருப்பது இனிது; இறைச்சியை உண்டு உடலை வளர்க்காமல் இருப்பது இனிது; வளமான காடுள்ள ஆற்றங்கரையில் அமைந்த குடியிருப்பு இனிது; பெருமை மிக்கவர்களால் பெருமை உடையவனாக மதிக்கப்படுதல் இனிது என நான்கு இனிமைகளை வரிசைப்படுத்துகிறது(11). இது போன்ற நான்கு நான்கு இனிமைகளை வரிசைப்படுத்தும் 40 பாடல்களைக்கொண்டது இனியவை நாற்பது.

ஐந்திணை எழுபது: இந்நூல் பொறையனார் என்பவரால் பாடப்பட்ட 70 பாடல்களைக்கொண்டது. இவை அகப்பாடல்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பாடல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. இதன் 40ஆம் பாடல், “கற்கள் பரவிய காட்டு வழியில், பரலிட்ட சிலம்பு ஒலிக்க, கொல்லும் களிறு போன்ற தன் காதலன் பின், என் மெல்லிய செல்வி நடந்து போயிருக்க முடியுமோ, தன் மெல்லிய விரல்கள் சிவக்க இதில் நடந்து போவது மிகக்கடினம் என ஏங்கி மிகக் கவலையடைந்து வாடியிருப்பாலோ நான் அறியேன்” தன் காதலுடன் தனக்குத் தெரியாமல் உடன்போக்கு மேற்கொண்ட தனது மகள் குறித்து வருத்தமும் கவலையும் அடைந்த நற்றாயின் கூற்று இது. அவள் இதனைத் தனது தலைமகனுக்கு எடுத்துரைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது(12). இது போன்ற 70 சிறந்த அகப்பாடல்களைக்கொண்ட நூல் ஐந்திணை எழுபது.

ஐந்திணை ஐம்பது: இந்நூல் மூவாதியார் என்பவரால் பாடப்பட்ட 50 அகப்பாடல்களைக்கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பாடல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. இதன் 30ஆம் பாடல்,

‘குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்

வளியெறியின் மெய்யிற்கு இனிதாம் – ஒளியிழாய்

ஊடியிருப்பினும் மூரன் அறுமேனி

கூடல் இனிதாம் எனக்கு’ எனப் பாடுகிறது.

குளிருகிற காலத்திலும் தென்றல் காற்று வீசுதல் உடம்பிற்கு இனிதாக இருக்கிறது. அதுபோல ஊரனோடு ஊடியிருப்பினும், அவ்வூரனின் அழகிய மணமுடைய மேனியைத் தழுவுதல் எனக்கு இனிமையைத்தரும், எனத் தலைவி தனது தோழியிடம் கூறுகிறாள்(13). இது போன்ற புகழ்மிக்க 50 அகப்பாடல்களைக்கொண்ட நூல் ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது: இந்நூல் கணிமேதையார் என்பவரால் பாடப்பட்ட 150 பாடல்களைக்கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பாடல்கள் இவற்றிலும் இடம்பெற்றுள்ளன. மேலே கண்ட பாடலைப்போன்ற பாடல்களே இதிலும் உள்ளன. இதன் 7ஆம் பாடலில், ‘மிளகு படர்கின்ற பூஞ்சாரலின் கண், படம் எடுக்கும் பெரு நாகங்களும், பெரும் புலிகளும் திரிகிற இரவில் மலை நாடனே நீ வருவாயானால், இந்த மலை நாடனின் மகள் உயிரோடு வாழமாட்டாள்’ எனத் தலைவியின் தோழி தலைவனிடம் கூறுகிறாள்(14). இதன் மூலம் மறைமுகமாக இனி களவு வாழ்க்கை வேண்டாம். திருமணம் செய்ய முயற்சி செய் என தலைவனிடம் தோழி கூறுகிறாள். இவை போன்ற 150 அகப்பாடல்களைக்கொண்ட நூல் திணைமாலை நூற்றைம்பது.

திணைமொழி ஐம்பது: இந்நூல் கண்ணஞ்சேந்தனார் என்பவரால் பாடப்பட்ட 50 அகப்பாடல்களைக்கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பாடல்கள் இவற்றிலும் இடம்பெற்றுள்ளன. இதன் 20ஆம் பாடல், ‘நாணேற்றிய வில்லினை உடைய கொடுமைமிக்க வேடர் வாழும் கடும் கானகத்தினுள், அசைகின்ற நிழலைக்கூடக்கண்டு அஞ்சும் என் மகள், சிறந்த வில்லை உடைய காளையோடு மெல்லிதாக நடந்து சென்று விட்டாள்’ எனத் தன் மகள் தனக்குத்தெரியாமல் உடன்போக்கு மேற்கொண்டது குறித்து நற்றாய் மிகவும் கவலையடைந்து வருந்திப் பாடிய பாடல் இது(15).

திரிகடுகம்: கடுகம் என்பது காரமான மருந்து எனப் பொருள் கொண்டது. திரி என்பது மூன்று எனப்பொருள்படும். திரிகடுகம் என்பது மூன்று அறங்கள், நான்மணிக்கடுகை என்பது நான்கு அறங்கள், சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து அறங்கள், ஏலாதி என்பது ஆறு அறங்கள். இவற்றில் முன் நிற்பது திரிகடுகம். இந்நூலினை இயற்றியவர் நல்லாதனார். இந்நூல் 100 பாக்களை உடையது. சுக்கு திப்பிலி, மிளகு ஆகிய மூன்றும் உடலின் பிணியைப்போக்கும் மருந்துப்பொருட்கள். அது போன்று திரிகடுகம் என்பது உயிர்ப்பிணியாகிய அறியாமையைப்போக்கி மனதுக்கு இன்பம் தரும் கருத்துக்களைக் கொண்டன எனப்படுகிறது. இதன் 10ஆம் பாடல், நூல் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரும், முரண்பாட்டினை நீக்கும் மூத்தோர் இல்லாத அவையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் குடியிருத்தலும் நன்மை தராது எனக் கூறுகிறது. அடுத்து 42ஆம் பாடல், சூதாட்டத்தால் வந்த பொருளை விரும்பாமலிருத்தலும், பழகியவராக இருந்தாலும் பார்ப்பாரைத் தீயைப்போல் கருதி நடந்து கொள்ளுதலும் உழுதொழிலின் மீது விருப்பம் வைத்து வாழ்தலும் வேளாண் குடிக்கு நல்லது எனக் கூறுகிறது(16). தீயைப்போல் ஆபத்தானவன் பார்ப்பான் என்பதால் அவனிடம் உழவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது இப்பாடல். இதுபோன்ற 100 பாக்களைக்கொண்ட நூல் திரிகடுகம்.

ஆசாரக்கோவை: இதனை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார். இந்நூல் 100 செய்யுள்களை உடையது. இதனை இயற்றியவர் பெருவாயின் முள்ளியார். இந்நூல் 100 செய்யுள்களை உடையது. ஒழுக்க நெறி என்பதை முந்தையோர் கண்ட நெறி, யாவரும் கண்ட நெறி, மிக்கவர் கண்ட நெறி, திறங்கண்டார் கண்ட நெறி என இந்நூல் கூறுகிறது. இதன் 92ஆம் பாடல் அறிவுடையோர் நற்கருமங்களைச் செய்யும் பொழுது எப்போதும் புலையரிடத்து நாள்கேட்டுச்செய்யார். கேடில்லாத அந்தணரிடத்து நாட் கேட்டே நற்கருமஞ்செய்க. அவர் வாய்ச்சொல் என்றும் பிழைபடுபவன அல்ல எனக் கூறுகிறது. அன்று புலையர் நல்ல நாள் பார்த்துச் சொல்வது வழக்கத்தில் இருந்தது என்பதையும் புலையர் மதிப்புக்கு உரியவராக இருந்தார் என்பதையும் இச்செய்தி உறுதி செய்கிறது.

பழமொழி நானூறு: பழமொழியின் பழம் பெயர் முதுமொழி. இதனைத்தொகுத்து வழங்கியவர் மூன்றுறையரையனார். இந்த முதுமொழிக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியர்,

‘நுண்மையும், சுருக்கமும், ஒளியுடை மையும்

ஒண்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப’ எனக் கூறியுள்ளார்(17).

பழமொழி நூலின் 11ஆம் பாடல், ‘அணியெல்லாம் ஆடையின் பின்’ என்ற பழமொழியைக் கொண்டு பாடப்பட்டுள்ளது. அதாவது ஆடைக்குப்பின் அணிகலன்களை அணிவது சிறப்பு தரும் என்பதுபோல அறிவுச்செல்வமே முதல் செல்வம் அதனைப்பெற்றபின் தான் பிற செல்வங்கள் பயனுடையதாக இருக்கும் என அப்பாடல் கூறுகிறது(18). ஆகவே அறிவே முதன்மையானது என்பதே சங்கம் மருவிய காலச் சிந்தனை.

இன்னொரு பாடல் எண்-112, தம்முடைய கண் போன்று மிக நெருங்கியவராயினும் தகுதியில்லாத செயல்களைச்செய்தால் தனக்கு வேண்டியவன் என விட்டு விடாது அத்தகையவர்களையும் அரசநெறிப்படி தண்டிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காதவன் அரசாட்சியை செவ்வையாக ஒரு போதும் நடத்தவும் மாட்டான், அவன் நெடுங்காலம் ஆளவும் மாட்டான். ‘ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு’ என்பது இதற்கான பழமொழி. தமக்கு வேண்டியவர்களானாலும் தகாத செயலைச் செய்தவரை முறையாகத் தண்டிப்பதே சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகு எனக் கூறுகிறது இப்பாடல்(19). இதுபோன்ற பல மிகச்சிறந்த அரிய கருத்துகளைக் கொண்டதாக பழமொழி நானூறு இருக்கிறது.

சிறுபஞ்சமூலம்: இதனை எழுதியவர் மதுரைத்தமிழாசிரியர் மாக்காயனார் மாணவராகிய காரியாசான். இதில் 101 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் உள்ளன. அதன் 56ஆம் பாடல், கற்று வல்லவனாக இருந்தால் பொன் பெறுவர், நற்கவி செய்வதில் வல்லவனாக இருந்தால் அரசனால் எல்லாப்பொருளும் பெறுவர், வாதம் செய்து வெல்பவன் புகழைப்பெறுவான். இளமைக்காலத்தில் கல்லாதவரும், கற்று வல்லாரினத்து அல்லாதவரும் நல்லாரினத்தின் நடுவே இகழ்ச்சி அடைவர் எனக் கற்பதன் பெருமையைப் பாடுகிறது(20). இதுபோன்ற மிகச்சிறந்த கருத்துக்களைக்கொண்ட 101 பாடல்களைக்கொண்டது சிறுபஞ்சமூலம்.

கைந்நிலை: இதனைப்பாடியவர் புல்லங்காடனார். மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் இவர். ஒவ்வொரு திணைக்கும் 12 பாடல்கள் என ஐந்து திணைக்கும் சேர்த்து 60 வெண்பாக்களை உடையது இந்நூல். இவை அகப்பாடல்கள். இதன் 59ஆம் பாடல், தாழையின் பூ குருகுக் குஞ்செனத் தோற்றம் தரும். அது பொய்த்தோற்றம். அது போன்ற பொய்த்தோற்றம் வேண்டாம். அன்னை புறக்கடை வாயிலையும் அடைத்துவிட்டாள். இனிக்காணுவது என்பது இயலாது. ஆகவே இனி நாம் மணம் செய்து கொள்வதே முறை எனக் கூறுவதாக அமைந்துள்ளது(21).

முதுமொழிக்காஞ்சி: இதனை இயற்றியவர் மதுரை கூடலூர்க்கிழார் என்பவர். இவர் சங்ககாலக் கூடலூர்க்கிழார் அல்லர். பத்து பத்துக் கருத்துகளைக் கொண்ட பத்துப்பாடல்களை உடையது முதுமொழிக்காஞ்சி. இப்பாடல்களில் முதல் கருத்து இரு வரிகளையும் மீதியுள்ள கருத்துகள் ஒரு வரியையும் கொண்டவையாக உள்ளன. முதல் பாடலின் முதல் கருத்து கற்றலைவிட ஒழுக்கம் சிறந்தது எனக் கூறுகிறது. அதன் பத்தாம்பாடலின் ஆறாம் கருத்து, ‘மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான்’ எனக் கூறுகிறது. அதாவது அளவு மிக்க பொருளை வேண்டும் என்பவனுடைய முயற்சி வருத்தம் தரக்கூடியது எனினும் அதனை அவன் கைவிடான் என்கிறது(22). இது போன்ற நூறு கருத்துக்களைக்கொண்ட நூல் முதுமொழிக்காஞ்சி.

ஏலாதி: இதனை எழுதியவர் கணிமேதையார். ஏலாதி என்பது ஆறு பொருளைக்கொண்டது என்பதால் ஒவ்வொரு பாடலும் ஆறு பொருளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது 80 பாடல்களைக்கொண்டது. இதன் 52 ஆம் பாடல், கடன்பட்டவர்களுக்கும், தம்மைக்காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர்களுக்கும், தன் கால் முடம் பட்டவர்களுக்கும், முதிந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியோர் இல்லாதவர்களுக்கும் மனம் இரங்கித் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின் மீது நால்வகைப் படைகளுடைய மன்னரைப் போன்று மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வழ்வர் எனக் கூறுகிறது(23).

சாதியமும் சங்கம் மருவிய காலமும்: மொத்தம் உள்ள 18 நூல்களில் ஆறு நூல்கள் அகப்பாடல்களைக்கொண்டவை. ஒரு நூல் புறப்பாடல்களைக் கொண்டது. மீதியுள்ள 11 நூல்களும் நீதி நூல்கள். சங்ககாலம் என்பது நகர அரசுகளின் காலம். சங்கம் மருவிய காலம் என்பது பேரரசுக்காலம். இவை பேரரசுக்காலத்தில் இயற்றப்பட்ட போதிலும் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டவனாகவும் ஏரணக் கண்ணோட்டமும், அறிவியலும், காரண காரியமும் கொண்ட பாடல்களாகவே அமைந்துள்ளன. சங்ககாலத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பதை இப்பாடல்கள் உறுதி செய்கின்றன. அகம் புறம் சார்ந்த பாடல்களில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் நீதி நூல்கள் ‘கள்’ உண்ணாமை, ஊண் உண்ணாமை, பொது மகளிர் சேராமை போன்றனவற்றை வலியுறுத்துகின்றன. சங்ககாலத்தில் இவை வலியுறுத்தப்படவில்லை. இந்தக் காலகட்டத்திலும் உடன்போக்கு திருமண முறை இருந்து வந்துள்ளது. ஆகவே இக்காலகட்டத்திலும் வகுப்பு மட்டுமே இருந்துள்ளது. சாதி இருக்கவில்லை. அது போன்றே சமயம் சார்ந்த கருத்துகள் இந்நூல்களில் மிகமிகக்குறைவு.

களப்பிரர் காலத்திற்குப்பின்னர்தான் தமிழகத்தில் சாதி பற்றிய கருத்தியல் பரப்பப்படுகிறது. ஆகவே சங்கம் மருவிய காலமான கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான காலத்தில் தமிழகத்தில் சாதி இல்லை. வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதனை மேலே சொல்லிய 18 நூல்களில் உள்ள பாக்களும் உறுதி செய்கின்றன. வகுப்பு, தொழில் சார்ந்த வேறுபாடுகளைத்தவிர பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடுகள் அன்று இருக்கவில்லை என்பதை இந்நூல்களின் பாடல் கருத்துகள் உறுதி செய்கின்றன. சமயம் சார்ந்த சடங்குகள் இருந்தன. முன்னோர் வழிபாடுகளும் பிற சமயம் சார்ந்த வழிபாடுகளும் இருந்தன. ஆனால் பிறப்பின் அடிப்படையிலான, அகமணமுறை அடிப்படையிலான, படிநிலை அடிப்படையிலான சாதியம் அன்று இருக்கவில்லை.

சங்கம் மருவிய காலத்தின் இறுதியில், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்திலும் சாதியம் இருக்கவில்லை. ஆனால் அதில் திருக்குறளைவிட மிக அதிக அளவில் இடைச்செருகல்கள் இருப்பதால் அதில் பார்ப்பனியமும், சாதியமும் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை அக்காப்பியம் தருகிறது. அன்று சமண, பௌத்தத் துறவிகளும், மறையோர்களும் செல்வாக்குடன் இருந்தனர். சமயச் சடங்குகளும் வழிபாடுகளும் இருந்தன. ஆனால் அன்றும் வகுப்புகள் மட்டுமே இருந்தன, சாதியம் இருக்கவில்லை.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை சங்கம் மருவிய காலத்தில் உருவானவை. திருக்குறளும் அதில் ஒரு நூல். இவை அனைத்தும் சாதியம் குறித்தோ, பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடுகள் குறித்தோ எதுவும் கூறவில்லை. அவை அறம், புறம் சார்ந்த நூல்களாகவும், நீதிநெறிகளைக் கூறும் நூல்களாகவும் உள்ளன. அவை அனைத்தும் அறிவியலையும், காரண காரியத்தையும், தர்க்கவியலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவற்றில் ஓரிரு பார்ப்பணியம், சாதியம் சார்ந்த கருத்துக்கள் எங்காவது இருந்தால் அவை இடைச்செருகலே எனலாம். இந்நூல்கள் அனைத்தும் அன்று இருந்த தொழில் சார்ந்த வகுப்புகள் குறித்துத்தான் பேசுகின்றன. ஆனால் பிறப்பின் அடிப்படையிலான சாதிய வேறுபாடுகள் குறித்துப் பேசவில்லை.

இந்நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையின் 92ஆம் பாடல் புலையன் என்பவனை, உயர்வாக மதிக்கப்பட்ட அந்தணர்க்குச் சமமான ஒருவனாகவே பேசுகிறது. அந்தணர் இரண்டாம் வகுப்பிலும் பார்ப்பனன் 4ஆம் வகுப்பிலும் இருந்தனர் என்பதையும் அவர்கள் வேறு வேறு பிரிவினர் என்பதையும் முன்பே குறிப்பிட்டுள்ளோம். ஆகவே புலையன் என்பவன் பார்ப்பானைவிட மேலானவன் எனக் கூறுகிறது ஆசாரக் கோவை. ஆகவே அன்று சாதியம் இருக்கவில்லை எனலாம். திரிகடுகத்தின் 42ஆம் பாடல் பார்ப்பான் என்பவன் தீயைப்போல் ஆபத்தானவன். ஆகவே உழவர்கள் அவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே பார்ப்பான் தமிழர்களால் ஆபத்தானவனாகவே கருதப்பட்டுள்ளான்.

வைதீக பார்ப்பனியமும், சாதியமும் வட இந்தியாவில் பார்ப்பனப் பூசாரி வகுப்பால் தோற்றுவிக்கப்பட்ட தனித்துவமான சமூகப் பிரிவுகள். இவை உலகில் வேறு எங்கும் இல்லை. ஆகவே இவை வட இந்தியாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாகத் தொடங்கி கி.பி. 2ஆம், 3ஆம் நூற்றாண்டில்தான் ஒரு கருத்தியலாகவும் நடைமுறை வடிவமாகவும் ஆகின்றன. கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆண்ட குப்த அரசால்தான் முதல் முறையாக சட்ட, சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றன. அதன் பின்னரே அவை இந்தியா முழுவதும் வேகமாகப் பரவுகின்றன. ஆனால் கி.பி. முதல் நூற்றாண்டு முதலே இக்கருத்தியலை பார்ப்பனியம் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால் தமிழகத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் என்பது தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக அதற்கு முன்பே 1000 வருடங்களாக இருந்து வந்தது.

பொருள்முதல்வாதம் என்பது இயற்கைப் பரிணாமவிதியை அடிப்படையாகக் கொண்ட, மனித சமத்துவத்தைப் பேசுகிற, கருத்து முதல்வாதத்துக்கு எதிரான தத்துவம். கருத்துமுதல்வாதம் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளையும், மனித சமத்துவமின்மையையும் பேசுகிற தத்துவம். பழந்தமிழர்களின் சமூகம் பொருள்முதல்வாதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததால் அதனிடம் பார்ப்பனியத்தையோ, சாதியத்தையோ அங்கீகரிக்கும் தன்மை இருக்கவில்லை. அன்று பேரரசுகள் தான் தமிழகத்தில் இருந்து வந்தன. அதனால் அவை ஓரளவு கருத்துமுதல்வாதக் கொள்கைக்குச் சார்பாகச் செயல்பட்டன. ஆளும் வர்க்கமும் உயர் வகுப்பினரும் சமணம், பௌத்தம், வைதீகம் ஆகிய மதச்சார்பான சிந்தனைகளை ஆதரித்தனர். ஆனாலும் பெரும்பாலான தமிழ்ச் சமூகம் பொருள்முதல்வாதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருந்து வந்தது. சிறிது சிறிதாகத் தான் கருத்துமுதல்வாதக் கருத்துகளும் பரவத்தொடங்கின. கருத்துமுதல் வாதத்தை ஏற்றவர்களும் சாதியக் கருத்துகளை ஏற்கவில்லை.

ஆகவே அன்று பார்ப்பனியம் தனது பரப்புரைகளை தமிழகத்தில் மேற்கொண்டிருந்த போதிலும் அவற்றைத் தமிழகம் ஏற்கவில்லை. அதனைத்தான் திருக்குறள், பலவேறு நீதி நூல்கள், அகம், புறம் சார்ந்த நூல்கள் ஆகியனவற்றைக் கொண்ட பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும், சிலப்பதிகாரமும் காட்டுகிறது. இந்திய அளவில் அன்று மிகவும் முன்னேறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்தது. இதனை கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பெரும்பாலான வட இந்திய அறிஞர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே கி.மு. முதல் நூற்றாண்டு வாக்கில் வந்த வைதீகப் பார்ப்பனியர்களும் அதனை அறிந்தே இருந்தனர் என்பதோடு, தமிழ்ச் சமூகத்தின் கருத்தியல் என்பது தங்களுக்கு எதிரானது என்பதையும் உணர்ந்தவர்களாகவே அவர்கள் இருந்தனர். ஆகவே தமிழகத்தைத் தங்கள் கருத்தியலுக்குக் கொண்டுவர அவர்கள் கடுமையான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் இந்தியாவில் அவர்களின் கருத்தியலுக்கு மிகவும் எதிராக இருந்த தமிழ்ச் சமூகம், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு மிகப்பெரும் அழிவுக்குள்ளாகிறது. அதன்பின் களப்பிரர்களால் ஆளப்பட்ட தமிழ்ச்சமூகம் பிற்போக்குச் சிந்தனையும், மூடத்தனங்களும் கொண்ட ஒரு பின்தங்கிய கிராமச் சமூகமாக மாற்றப்படுகிறது. அதன்பின் பார்ப்பனர்கள் சமண, பௌத்த சிந்தனை உடையவர்களாக இருந்த களப்பிரர்களை தங்கள் கருத்தியலுக்கு மாற்ற முயற்சித்து அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஆகவே இதுவரையான தரவுகள் சங்க காலம் முதல் சங்கம் மருவிய காலம் வரை அதாவது கி.பி. 250 வரை சாதியமோ, வைதீக பார்ப்பனியமோ தமிழகத்தில் இருக்கவில்லை என்பதையும் தொழில் அடிப்படையிலான வகுப்புகள் மட்டுமே இருந்தன என்பதையும், சங்ககாலத்திலோ அல்லது சங்கம் மருவிய காலத்திலோ பார்ப்பனர்களுக்கு நிலதானங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் சங்கம் மருவிய காலம் வரை பார்ப்பனர்கள் நாலாம் வகுப்பைச் சேர்ந்தவர்களாகக் கீழ் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும், புலையர்கள் கூட சில சமயம் பார்ப்பனர்களைவிட மேலான நிலையில் இருந்தனர் என்பதையும் பார்ப்பனர்களும் அந்தணர்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றன.

பார்வை:

1. திருவள்ளுவம் – 2050 ஆய்வுகள்… அடைவுகள்…, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு, தி.பி. 2050, 2019, பக்: 699, 700.
2. பதினெண்கீழ்க்கணக்கு - 1, பழைய உரையாசிரியர்கள், மாணவர் பதிப்பகம், பதிப்பாளர் – இ. தமிழமுது, 2014, பக்: xxxiii.
3. “ “ “ பக்: xxxv.
4. “ “ “ பக்: 96
5. “ “ “ பக்: 111
6. “ “ “ பக்: 149
7. “ “ “ பக்: 155 -157
8, 9. “ “ “ பக்: 190 - 194
10. “ “ “ பக்: 245
11. . “ “ “ பக்: 260
12. “ “ “ பக்: 305, 306.
13. “ “ “ பக்: 282
14. “ “ “ பக்: 319
15. “ “ “ பக்: 374, 375.
16. “ “ “ பக்: 313, 314, 336.
17. பதினெண்கீழ்க்கணக்கு - 2, பழைய உரையாசிரியர்கள், மாணவர் பதிப்பகம், பதிப்பாளர் – இ. தமிழமுது, 2014, பக்: x.
18. “ “ “ பக்: 9.
19. “ “ “ பக்: 61, 62.
20. “ “ “ பக்: 249.
21. பதினெண்கீழ்க்கணக்கு - 3, பழைய உரையாசிரியர்கள், மாணவர் பதிப்பகம், பதிப்பாளர் – இ. தமிழமுது, 2014, பக்: xx.
22. “ “ “ பக்: 287, 298.
23. “ “ “ பக்: 317, 318.

- கணியன் பாலன்