K.P. Aravananஒரு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்தேன். அலுவலகத்தில் பத்து மணிக்கு இருத்தல் வேண்டும். உரிய நேரத்திலோ, அதற்கு முன்போ அலுவலகத்தில் இருந்தே தீர வேண்டும் என்பது என் கொள்கை. மாநில - நடுவண் அரசு அலுவலகங்களில் முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நான் நேரத்திற்கு அலுவலகத்திற்குச் செல்வது என்பதைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தேன். வீட்டிலிருந்து ஒன்பது மணிக்குப் புறப்பட்டுப் பேருந்தைப் பிடித்தால் ஒன்பதே முக்கால் அளவில் அலுவலகம் சென்றுவிடலாம். வீட்டிலிருந்து புறப்பட்டுப் பத்து மணித்துளிகள் நடந்தால் பேருந்து நிறுத்தம் வந்து விடும். ஒவ்வொரு நாளும் நான் புறப்படும் போதும், எதிரே ஒருவர் குறுக்கிடுவார். அவர் தலையோ மொட்டையடித்த தலை. 

நாள்தோறும் நான் புறப்படும்போது இவர் எதிரே குறுக்கிடுகிறாரே என்று உள்ளத்துக்குள்ளே ஓர் புகைச்சல். அவர் அடித்திருந்த மொட்டைத்தலை வேறு! தலைமுறை தலைமுறையாக பெற்றோரும், மற்றோரும் மீண்டும் மீண்டும் சொல்லி மனத்தில் படிந்திருந்த அமங்கலத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது அவர் தலை. என்றாலும் அந்தந்த நாள் எதிர்பார்த்த பணிகளும், ஏற்றுக் கொண்ட பணிகளும் முழு வெற்றியுடன் நிறைவேறிக் கொண்டே இருந்தன. ஏதேனும் ஒரு சில நாள் அலுவலகத்தில் யாரேனும் செய்த இடையூற்றாலோ, குறுக்கீட்டாலோ பணி மந்தப்படும். தடைபட்டு நிறைவேறாமல் போதலும் உண்டு. அத்தகு சமயங்களில் வீட்டிலிருந்து புறப்படும்போது அன்றும் எதிர்ப்பட்ட மொட்டைத் தலையர் நினைவுக்கு வருவார். அவர்தான் காரணம், அவர் எதிர் வருகைதான் காரணம் என்று உள் மனம் அடித்துச் சொல்லும். சகுனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. என்றாலும் சந்தர்ப்பங்கள் சகுனத்தையும் நம்ப வைக்கின்றனவோ? இப்படி எண்ணத் தோன்றும்; எண்ணம் தோன்றும்.

ஒருநாள் வழக்கமாக வருகிற அந்த மெட்டைத் தலையர் என் புறப்பாட்டுக்கு எதிரே குறுக்கிட வில்லை. அப்பாடா! இன்று நாம் செய்ய இருக்கும் வேலைகள் எல்லாம் முழுமையாக நடந்தேறும் என்று நம்பிக்கையோடு சென்றேன். என்ன சொல்ல? நான் நினைத்ததற்கு மறுதலையாக அன்று எடுத்த வேலைகள் அனைத்தும் அடியோடு படுத்துக் கொண்டன. ஒன்றுகூட நடந்தேறவில்லை. யார் குற்றம்? அன்றோ அந்த மொட்டைத் தலையர் வரவே இல்லை. அவர் கண்ணில் நான் விழிக்கவே இல்லை. ஆனால், அன்றைய வேலைகள் நடக்காமல் முடங்கிப் போயின. ஒரு தெளிவுக்கு வந்தேன். வேலையின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவர் காரணம் அல்ல; அவர் காரணமே அல்ல. பின் யார் காரணம்? யாரோ காரணம்? யாதோ காரணம்? நானே கூடக் காரணமாக இருக்கலாம். என் அணுகுமுறைகூடக் காரணமாக இருக்கலாம். என் அலுவலகத்தில் உள்ளவர் காரணமாக இருக்கலாம். ஆனால், புறப்படும்போது எதிர்ப்பட்ட அவர் காரணம் அல்ல என்பதை அறிந்து கொண்டேன்.

இன்னொரு தெளிவும் கிடைத்தது. நான் புறப்படும்போது அவர் ஒவ்வொரு முறையும் எதிரே வருவதாகவும் குறுக்கிடுவதாகவும் நினைத்துக் கொண்டேனே? அது சரிதானா? அது சரி அல்ல என்பதையும் தெரிந்து கொண்டேன். உண்மையில் அவர் புறப்பட்டு வரும் அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் நான் அவர் வழியில் எதிர்ப்பட்டிருக்கிறேன் என்பதும் உண்மை; என்பது தான் உண்மை. 

ஒவ்வொரு நாளும் புறப்பட்டு வரும்போது என் கண்ணில் விழித்த அவர்க்கு அவருடைய வேலைகள் வெற்றியடைந்தனவா? தோல்வியடைந்தனவா? எனக்குத் தெரியவில்லை; எனக்குத் தெரியவே இல்லை. இதுபோல எனக்குத் தெரியாதன எத்தனை எத்தனையோ?

- முனைவர் க.ப. அறவாணன்

Pin It