ஓர் அரசு மனது வைத்தால் ஒரு போராட்டமானது எத்தனை பெரிய விஸ்வரூபம் எடுக்கும், அதே அரசு மனது வைத்தால் அதே போராட்டமானது எப்படி சட்டென பிய்த்து எறியப்படும் என்பதற்கான வரலாற்றுச் சான்றை நாம் நேரடியாகத் தெரிந்து கொண்டாகிவிட்டது.
என்னதான் உணர்வால் ஒன்றுகூடி, தன்னெழுச்சியோடு மக்கள் கூட்டம், கூட்டமாக பொங்கியெழுந்தாலும், அவர்களை அரை நொடியில் சிற்றெறும்புகளாக உருமாற்றி, நசுக்கும் வல்லமையுடன்தான் தான் எப்போதும் இருப்பதாக அரசு எனும் ராட்சச நிறுவனமும் திரும்பவும் ஊர்ஜிதம் செய்து விட்டது.
சாமானியனுக்கும், அமைப்பிற்கும் இடையிலான இந்தப் போரானது பல்வேறு சிக்கல்களில் காலம், காலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். இதில் எப்பொழுதும் தோற்பவன் சாமானியன், வெல்வது அரசமைப்பு என்பதே இந்தப் போர்களில் காலம்காலமாக கடைபிடிக்கப்படும் அடிப்படை விதி. தோற்பவர்களான சாமானியர்களுக்கு எப்பொழுதும் தெரியும், அவர்களின் நிரந்தர எதிரி அரசமைப்பு என்று. ஆனால், ஒவ்வொரு போராட்டங்களும் நிறைவு பெறும்போது மட்டுமே அவர்களால் துரோகிகளை அறிந்து கொள்ள முடிகிறது.
நடந்து முடிந்த இம்மாபெரும் போராட்டத்தில், தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விளையாடி வந்த ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரிய விளையாட்டை தமிழர் உணர்வுடன் சிண்டு முடித்தவன் யாரோ? (அ) எந்த அமைப்போ? அவர்களே இந்த துரோகத்தின் முதல் கண்ணியை அமைத்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பிறகு தங்களுடைய சுய விளம்பரத் தேவைகளுக்காக முன்னெடுத்தவர்கள் இரண்டாம் கண்ணியையும், எழுச்சியை மடைமாற்றி விலை போனவர்கள் மூன்றாம் கண்ணியையும், முறையே கடைசியாக அரசமைப்பிடம் அடகுக்குப் போனவர்கள் ஐந்தாம் கண்ணியுமாக ஆளாளுக்கு ஒரு மிகப்பெரிய பொறியைச் சமைத்து, பெரும்பான்மை சாமானியர்களை அதில் பொறித்துண்டாக உள் நுழைத்த கூட்டுத் துரோகிகளாக இருந்தார்கள். இந்த மொத்தக் கண்ணியையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு, இரை அகப்பட்டவுடன் புட்டத்தை துடைத்துப்போட்டு, எழுந்து இரையைக் கைப்பற்றி வெளியேறியவர்கள்தான், இந்த மற்ற சிறு துரோகிகளை விட பெரிய துரோகியாக ஆகின்றார்கள்.
அந்த வகையில், நிலம் வைத்து, அதில் காளை வளர்ப்பவனும், அவனுக்குத் துணையாக அறிவியல் பேசியவனும் மட்டுமே இந்த மொத்தப் போராட்டத்தின் மிகப்பெரிய துரோகி. லாபமடைந்த ஒரே பெரிய துரோகி.
நிலமில்லாதவனும், காளை வளர்க்காதவனும், உணர்வுடன் சென்று நின்றவனும், வழமைபோல பொறித்துண்டு.!
- கர்ணாசக்தி