drought 620மழை பொய்த்துப் போனதால் தற்போது தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு விட்டன. இதனால் தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உள்ள வைகை, பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் தண்ணீர் முற்றிலுமாக வற்றியுள்ளது.

நடப்பாண்டில் பருவ மழைகள் குறைந்த அளவே பெய்த காரணத்தினாலும். தமிழகத்துக்கு அதிக மழையைப் பெற்றுத் தரும் வடகிழக்குப் பருவமழை 63 சதவீதம் அளவுக்கே பெய்ததினாலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

பருவ மழை கை கொடுக்காததால் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுதும் நிலத்தடி நீரும் படிப்படியாக குறைந்து வருகின்றன. இதன் தாக்கமும், பாதிப்பும் இன்னும் இரு வாரங்களில் எதிரொலிக்கும்.

வைகையில் 4 சதவீத தண்ணீர் இருப்பே தற்போது உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு 10 நாட்களுக்குத் தேவையான குடிநீரை மட்டுமே வினியோகம் செய்ய இயலும். இதனால் வைகை அணையில் மட்டும் நம்பியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

அடுத்தபடியாக வற்றாத ஜீவநதியாகக் கருதப்படும் தாமிரபரணியே, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் பாபநாசம் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 40 நாட்களுக்கே போதுமானதாக உள்ளது. அது போல மணிமுத்தாற்றில் உள்ள தண்ணீரும் 40 நாள் குடிநீர்த் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவில் உள்ளது. எனவே இன்னும் 40 நாட்களுக்குப் பிறகு தாமிரபரணியை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் குடி தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலை உருவாகும்.

இதே நிலையே கோவை நகருக்கும் ஏற்படும். ஏனெனில் கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் சிறுவாணி அணையில் இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளதாம். வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் குடிநீர்த் தேவையை தீர்த்து வரும் சாத்தனூர் அணையில் தற்போது 36 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரை வைத்து இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே அப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வினியோகம் செய்ய முடியும்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் குடிநீர்த் தேவையை மேட்டூர் அணை தான் நிறைவு செய்து வருகிறது. மேட்டூர் அணையை நம்பி 127 குடிநீர்த் திட்டங்கள் 10 மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. இந்த குடிநீர்த் திட்டங்கள் மூலம் தினமும் 1050 மில்லியன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

மேட்டூர் அணையில் தற்போது 11 சதவீதம் தண்ணீரே உள்ளது. இந்த குறைந்த அளவு தண்ணீரை வைத்து 80 நாட்களுக்கு 10 மாவட்டங்களிலும் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். கடுமையான வெயில் ஏற்படுமாயின் 80 நாட்கள் என்பது சற்று குறையும் அபாயமும் உள்ளது.

அதே போன்று முல்லைப் பெரியாறு அணை ஒரு மாத குடிநீர்த் தேவையையும் அமராவதி அணைத் தண்ணீர் இன்னும் 2 மாதத்துக்கும் குடிநீர் தேவையைச் சமாளிக்க உதவும். நிச்சயம் பிப்ரவரி மாதத்தில் இந்த அணைகளும் குடிநீர் தேவைக்குக் கைகொடுக்காது.

தமிழகத்தின் முக்கிய அணைகளில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த ஏரிகளில் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே உள்ளது என்பது, சென்னை மக்கள் இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய ஆபத்தைக் கொண்டு வருகிறது.

drought ladyஇவை மட்டுமன்றி தமிழ்நாட்டின் 46 ஆயிரத்து 438 உள்ளாட்சி அமைப்புகளில் 83 சதவீதமாகத் தண்ணீர் விநியோகம் குறையும் நிலை ஏற்படும். இதனால் மேலும் குறைத்து 60 சதவீதமாக தண்ணீர் விநியோகத்தை மாற்ற முடிவு மற்ற குடிநீர் வாரியம் முடியு செய்துள்ளதாகப் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி 528 நகரப் பஞ்சாயத்துக்களில் பிப்ரவரி இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாது என்ற நிலை இருந்தாலும் 350 நகரப் பஞ்சாயத்துக்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். இதனால் நிச்சயம் இன்னும் சில மாதங்களில் தமிழகம் முழுதும் தண்ணீர்ப் பஞ்சமானது தலைவிரித்தாட உள்ளது. இதை எதிர்கொள்ள அரசுகள் என்ன செய்யப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

தற்போது 15 முக்கிய அணைகள் வறண்டு விட்ட காரணத்தினாலும், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய காவிரி நீரை அரசு முறையாகப் பெற்றுத் தவறிய காரணத்தினாலும் நீர்ப்பாசனமானது முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் விவசாயம் முழுவதுமாக அழிந்து வருகிறது.

இத்தகைய கால நிலை மாற்றத்தை முறையாகக் கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என இதுவரை அரசுகள் சார்பில் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. அரசுகளின் கையாலாகாதத்தனத்தினால் தமிழக விவசாயிகள் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளனர். தங்கள் வயல்களில் கருகும் பயிர்களைக் கண்டு இதுவரை 117க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

வறட்சியால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயிகளின் நிலையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்தான், தற்கொலை செய்து செய்து கொண்ட விவசாயிகளின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிவருகின்றன.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வக்கற்ற அரசையும், ஆட்சியாளர்களையும் கண்டித்து தமிழகம் முழுதும் பல்வேறு அமைப்புகளின், ஆர்ப்பாட்டங்கள் ஒரு புறம் நடந்து வருகின்றன.

மனித உரிமை ஆணையம், நீதிமன்றம் ஏன் அனைத்துத் தரப்பில் இருந்தும் அழுத்தம் வந்தபின் தற்போது ஒரு நாடக அறிக்கையைத் தமிழக அரசு வெளியிட்டு பிறகு ஆய்வில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்கினாலும் விவசாயிகள் வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கப் போவது இல்லை என்பதே உண்மை.

வறட்சியால் விவசாயிகளின் நிலை மட்டுமன்றி நாளை தமிழகம் முழுதும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டால், மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது ஏற்பட உள்ள இத்தகைய பாதிப்புகள் அனைத்திற்கும் அரசும், ஆட்சியாளர்களும் பருவநிலை மாற்றமே காரணம் என திசைதிருப்பலாம். ஆனால் ஏகாதிபத்திய லாப நலன் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசு இயந்திரம், விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளான சபோவெட்னிக் திட்டம் (Zapovednik) போன்றவற்றை நடைமுறைப் படுத்தாதே காரணம் என்றால் மாற்றுக் கருத்து இல்லை.

ஆகையால் இயற்கை பற்றிய முழுமையான புரிதலின்மை அல்லது அதைப் பற்றி அரசானது சிந்திக்கத் தவறியதே இதுபோன்ற சூழியல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. உதாரணமாக, மெசபட்டோமியா, கிரீஸ், ஆசிய மைனர் இன்னும் இதர இடங்களில், சாகுபடி நிலங்களை உருவாக்குவதற்காக காடுகளை அழித்தனர். கூடவே நீர்சேரும் இடங்களை ஒழித்தனர். இதனால் அவர்கள் திக்கற்ற நிலைக்கு மாறும் நிலை உருவாகும் என எண்ணவில்லை.

ஆல்ப்ஸ் மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வடபுறச்சரிவுகளில் உள்ள பைன் மரக்காடுகளை வெட்டி முழுவதுமாக அழித்தனர், இதனால் தண்ணீர்ப் பஞ்சத்தையும், கூடுதலான வெள்ளப்பெருக்கத்தினாலும் பல சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும்..?

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐநாவின் சுற்றுச்சூல் முகவர் செய்த ஆய்வொன்று இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வறுமைக்கு, அங்கு நிலவுகிற சூழல் சிக்கல்களே காரணம் என முன்வைக்கிறது. அதாவது "வறுமைக்கு விதி காரணமல்ல, முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களே மூன்றாம் உலக நாடுகளின் வறுமைக்குக் காரணம்" என்று அழுத்தமாகக் கூறுகிறது இந்த ஆய்வு.

மனிதன் வாழத்தேவையான உணவு, குடிநீர் போன்றவை பற்றாக்குறையோடு அன்றாடம் உயிர்பிழைப்பிற்கே போராடி வரும் இம்மக்களே, பெரும் சூழலியல் சிக்கல்களுக்கு முதலில் இரையாகிறார்கள். இதனால் தங்கள் வாழ்விடங்களில் வாழ ஏதுவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, சுமார் 50 கோடி மக்கள் ஏகாதிபத்திய நலனுக்காகத் திட்டமிட்டு "சூழல் அகதியாக" மாற்றப்படுகின்றனர்.

மக்கள் நலனைப் பற்றி மயிரளவும் சிந்திக்க மறுக்கும் அரசு இயந்திரத்தை, மக்கள் ஒன்றுசேர்ந்து "சமுகச் சூழலியல் புரட்சி" போராட்டத்தைக் கொண்டு உடைத்து எறியாத வரை மக்களின் பிரச்சனை தீரப்போவதும் இல்லை.

- உமா கார்க்கி

Pin It