modi bill gates

பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி இரவு மக்களின் பணத்தைப் பறிமுதல் செய்வது குறித்து மிகவும் உருக்கமாக, தேசபக்தியோடு ஆணையிட்டார். நாடு பெரும் அபாயத்தில் இருப்பதாக அவரது ஆணையில் பிரகடனப் படுத்தப்பட்டது. கருப்புப் பணம், பாக்கிஸ்தானின் கள்ள நோட்டு, தீவிரவாதிகளிடம் குவிந்துள்ள பணம் ஆகிய அனைத்தும் தேசத்திற்கு அச்சுறுத்தல் என்பதாக அவரது ஆணை எச்சரித்தது.

மோடியின் உத்தரவு வெளியாகி சரியாக 8 நாட்கள் கழித்து நவம்பர் 16-ஆம் தேதி அமெரிக்க கோமகன் பில் கேட்ஸ் இந்தியா வந்தார். டெல்லி பிரதம மந்திரி அலுவலகத்தில் நடந்த நிதி ஆயோக்கின் கூட்டத்தில் பணப் பறிமுதலை ஆதரித்து “தொழில்நுட்பம் மற்றும் மாற்றம்” என்ற தலைப்பில் பேசினார்.

“இந்தியா அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதற்கு மூல காரணம் அது உலக தரமான டிஜிட்டல் அடிப்படையினை கட்டமைத்ததுதான். இதில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறது. டிஜிட்டல் வங்கிக் கணக்கும், மொபைல் போன் பயன்பாடும் அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 10 கோடி மக்கள் ஆதார் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆதார் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகும். இது எந்தவொரு நாடும், எந்தவொரு அரசாங்கமும் இதுவரை செய்யாதது. இதன்மீது வளர்ந்த நாடுகளுக்குகூட சந்தேகங்கள் நிறைய இருந்தன. அந்த சந்தேகங்கள் என்பது கையிருப்பு நிதிக்கான உத்தரவாதம், தொழிற்நுட்ப பயன்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கான மக்களின் மனப்பான்மை ஆகியவை குறித்ததாகும். ஆனால் இந்தியா அதை சாதித்துவிட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, சமூக அமைப்பின் எல்லா மட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வங்கியில் வரி செலுத்துவது, சுகாதாரத்தைப் பேணுவது முதல் அசையா சொத்துகளைப் பராமரிப்பது வரையென அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த முன்தாயாரிப்புகளின் மூலம்தான் இப்போது வீரம்செறிந்த நடவடிக்கையை உங்களது அரசின் தலைமை எடுத்துள்ளது” என சான்றிதழ் வழங்கினார்.

இந்தியாவில் நடக்கும் பணப் பறிமுதலுக்கும் அமெரிக்க பில்கேட்ஸ்-க்கும் என்ன சம்பந்தம்?

இந்தியா உட்பட 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் அடங்கிய G-20 என்ற அமைப்பிற்கு ஆலோசனை கூற ஒரு கூட்டமைப்பு உள்ளது. அந்த கூட்டமைப்பில் Better than Cash Alliance (“பெட்டர் தென் கேஷ் அலையன்ஸ்” எனும் பணத்தை விட சிறந்த அமைப்பு), உலக வங்கியின் வளர்ச்சி ஆய்வு குழுமம் ஆகியவற்றோடு ஃபில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனும் உள்ளது.

இந்தக் கூட்டமைப்பு 2014 ஆகஸ்ட் 28-இல் “சம்பளம் மற்றும் பணப் பரிவர்த்தனை முதலான விரிந்த அளவிலான பொருளாதார நடவடிக்கைகள், பணப் பரிமாற்றம், பரந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதில் டிஜிட்டல் முறைகளின் பங்களிப்புகள்” என்ற தலைப்பில் G-20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கை G-20-இன் 2010 மாநாட்டு தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

G-20 மாநாட்டு தீர்மானமானது, “G-20 நாடுகள் தங்களது நோக்கங்களை அடைவதற்கு தத்தமது நாட்டில் நிதி தொடர்பான நடவடிக்கைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகப்படுத்தவும், அதில் வேகம், பாதுகாப்பு, வெளிப்படத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு வரவும், விரைவான வளர்ச்சி மற்றும் செலவுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் திறனை மேம்படுத்தவுமான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அணுகுமுறைகளுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.”

இதன் அடிப்படையிலேயே Better than Cash Alliance, உலக வங்கியின் வளர்ச்சி ஆய்வுக் குழுமம் மற்றும் ஃபில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனும் இணைந்த கூட்டமைப்பு 2014 ஆகஸ்ட் 28-இல் “சம்பளம் மற்றும் பணப் பரிவர்த்தனை முதலான விரிந்த அளவிலான பொருளாதார நடவடிக்கைகள், பணப் பரிமாற்றம், பரந்த அளவிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதில் டிஜிட்டல் முறைகளின் பங்களிப்புகள்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.

  • இணையவழி பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனைதான் G-20-யின் நோக்கங்களை அடைவதற்கான ஒரே வழிமுறையாகும்.
  • ஜி 20-யானது தனது மைய நோக்கமான வலிமையான, நீடித்த மற்றும் சீரான வளர்ச்சியினை அடைவதற்கு நிதி தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியான பங்களிப்பையும், கவனத்தையும் செலுத்தவேண்டும்.
  • நிதி அமைப்பில் பங்கேற்பதின் மூலமாக, வருமான ஏற்றத்தாழ்வினை குறைக்க முடியும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்பு காட்ட முடியும்.
  • நுகர்வினைத் தூண்டுதல், மனித வளத்தின் மீதான முதலீடுகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஆபத்தை எதிர்கொள்ளவும், நிதி நெருக்கடிகளை சமாளிக்கவும் ஏழைகளுக்கு நேரடியாக உதவி புரிய முடியும்.

கூடவே,

  • செலவு மற்றும் தடைகளில் இருந்து மீள்வதற்கு டிஜிட்டல் முறை உதவுகிறது.
  • கைபேசி, பணப் பரிவர்த்தனை மையங்கள் மற்றும் பரந்த அளவிலான சேவை மையங்களைப் பயன்படுத்தி நிதிச் சேவைகளை விரைவாக அடைவதற்கு டிஜிட்டல் தடம் வாய்ப்புகளை வழங்குகிறது.
  • வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கு ஊக்குவித்தல் மற்றும் சேமிப்பை அதிகரித்தல் ஆகியவற்றோடு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையானது பெண்களின் பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிக்கின்றது. அது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பினை அதிகப்படுத்துகிறது.

என அறிக்கை முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது.

மட்டுமல்லாமல்

அரசுகளுக்கான பரிந்துரைகளாக

1.சமூகப் பரிவர்த்தனைகள் உட்பட பணப் பரிவர்த்தனை மற்றும் ரசீதுகள் அனைத்தையும் மின்னணு மயமாக்குதல்

2. இதை நடைமுறைபடுத்துவதில் தீவிர ஒழுங்கைக் கடைபிடிப்பது.

3.இதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பொது மற்றும் தனியார் துறைகளிடம் போட்டியை உருவாக்குவதும், செயல்படுத்துவதற்கான கட்டணங்கள் தீர்மானிப்பதும்

4.தனியார் துறை கண்டுபிடிப்புகளை ஊட்டி வளர்க்கும் ஒரு சூழலை உருவாக்குவது

5.டிஜிட்டல் நிதி சேவை வழங்குநர்களுக்கு வழிகாட்டித் திறனை மேம்படுத்துதல். அவர்கள்மீது நுகர்வோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது. விருப்பங்களை உருவாக்கி அதிகரிக்கச் செய்வது.

6.பணம் அனுப்புநர்கள் மற்றும் பெறுநர்களுக்கு இடையே சேவை செய்கிறவர்கள் முறையான நிதி சேவைகளை வழங்குவதற்கு ஒரு டிஜிட்டல் நுழைவுப் புள்ளியினை வைத்துக்கொள்வதை அங்கீகரித்தல்

atm queue 420

7.வங்கிகள் மற்றும் பல பிரிவுகளில் வளர்ந்து வருகின்ற இந்தத் துறையில் ஓரளவு நிபுணத்துவம் வாய்ந்த முகவர்களை உருவாக்குவது

ஆகியவற்றை அறிக்கை வலியுறுத்துகிறது.

இப்போது புரிகிறதா பில்கேட்ஸ்-க்கும் இந்தியாவில் நடக்கும் பணப் பறிமுதல் நடவடிக்கைகளுக்குமான உறவு?

மக்களின் பணத்தை பறிமுதல் செய்தது மோடி மட்டுமா?

இல்லை. இது மோடி உணர்ச்சி பொங்க உரையாற்றிய தேசபக்த நடவடிக்கையல்ல. மாறாக, G-20 நாடுகளின் கூட்டமைப்பின் நலனுக்கானது. G-20 நாடுகளின் நலன் என்பது உலகமயமாக்கல் நடவடிக்கையோடு இணைந்தது என்பது இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இந்த கட்டுரைக்கான நமது விபரப்படி நம் நாட்டில் பணம் இல்லாத பரிவர்த்தனைக்கான அரசின் நடவடிக்கைகள் 2010 G-20-யின் மாநாட்டு தீர்மானத்திலிருந்தே முடுக்கி விடப்பட்டிருக்கிறது. அப்படியானால் கிட்டதட்ட 6 ஆண்டுகள் இதற்கான பணிகள் நடந்து வந்திருக்கின்றன. இன்னும் துல்லியமான விபரங்களைத் தேடினால் இது உலகமயமாக்கல் நடவடிக்கை தொடங்கிய காலத்திலிருந்து தொடர்வதைப் புரிந்து கொள்ளலாம்.

இதன் பணிகள் முதன்மையாக வங்கித் துறையோடு சம்பந்தமுடையதாகும். (G-20 அமைப்பில் நாடுகளின் அமைப்பில் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் முக்கியமானவர்கள் என்பதையும், அதன்படி நமது நாட்டின் மைய வங்கியான ரிசர்வ் வங்கியின் கவர்னரும் முக்கியமானவர் என்பதையும் கவனத்தில் கொள்க). வங்கிகளில் இதுபோன்ற முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முறையான சுற்றறிக்கைகள் அனுப்பப்படும். அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஆக மக்களின் பணத்தை மோடி தனியாளாக பறிமுதல் செய்யவில்லை. வங்கித்துறை என்ற ஒரு கட்டமைப்பும், அதன் முதன்மை ஊழியர்கள் அனைவரும் சேர்ந்தே பிடுங்கினர்.

இதற்குதான் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு எனும் பிரதமர் மக்கள் நிதி திட்டம் எனும் ஜன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) பிரதமர் நரேந்திர மோடியால் 2014 ஆகஸ்டு 28 அன்று தொடங்கப்பட்டது. வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை வலியுறுத்தப்பட்டது.

இதற்காகத்தான் வங்கித்துறையில் இருந்த திட்டக்குழு கலைக்கப்பட்டது. உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் போன்றவற்றில் பணிபுரிந்து, சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களைக்கொண்ட ‘நிதி ஆயோக்’ குழு தொடங்கப்பட்டது.

இவையனைத்தும் முறையான அறிவிப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம் வங்கித்துறையின் முதன்மை ஊழியர்களைக் கொண்டே செய்யப்பட்டது. வங்கி ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் தெரிந்தே நடந்தன.

வங்கி ஊழியர் சங்கங்களே!

  •  பணமில்லா பரிவர்த்தனை என்பது மக்களின் உழைப்பின் மதிப்பை மக்களுக்கு நேரடியாக வழங்காமல் வங்கி மூலம் பறிமுதல் செய்து பதுக்கிக் கொள்ளும் நடவடிக்கையென தெரியாதா?
  •  மக்களின் உழைப்பிலான அந்தப் பணத்தை மக்களின் சம்மதமில்லாமல் பெரும் முதலாளிகள் தங்களுக்கான முதலீடாக அபகரிக்கும் சூழ்ச்சியென தெரியாதா?
  •  அப்படி மக்களின் பணத்தை கேள்வியின்றி மூலதனமாக்கிக் கொண்டு கொள்ளை இலாபமீட்டும் முதலாளிகள் அதில் ஒரு துளியைக்கூட மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பது தெரியாதா?
  •  மட்டுமின்றி மக்கள் தங்கள் உழைப்பின் மதிப்பை அன்றாட தேவைகளுக்காக டிஜிட்டல் முறையில் பயன்படுத்துவதற்கே சேவை வரி கட்டி மேலும் இழப்பையே சந்திக்கின்றனர் என்பது தெரியாதா?
  •  இணையதளங்கள் மூலமாக அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுகிற மக்கள் ஆடம்பரத்திற்கான விளம்பரங்களுக்குள் சிக்குவதும், அதனால் செலவுகள் அதிகரித்து கடனாளி சமூகமாக மாறி சீரழிவதும் நடைபெறும் என்பது தெரியாதா?
  •  இணையதள மூலமான பொருட்கள் வாங்கும் நடவடிக்கை என்பதில் காய்கறி முதல் அனைத்து வணிகத்திலும் பெருநிறுவனங்கள் எளிதாகக் காலூன்றும் என்பது தெரியாதா?
  •  இதில் நமது அண்ணாச்சிகள் வாழ்வை இழந்து அம்பானிகளும், வால்மார்ட்டுகளும் கொள்ளையடிக்கத் தொடங்குவார்கள் என்பது தெரியாதா?
  •  இந்தியா வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களையும், பழங்குடியினங்களையும் கொண்ட நாடு, அந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியாதா?

எல்லாம் உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு இப்போதுதான் ஒன்று தெரிந்தது. அது நீங்களும், நாங்களும் ஒரே வர்க்கமல்ல. உங்களுக்கும், எங்களுக்கும் ஒரே நலனுமில்லை. ஆதலால் உங்கள் சங்கத்தை நம்பியதில் நியாயமில்லை!

- திருப்பூர் குணா

Pin It