கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்", "கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்பேன்" இதுபோன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அளித்தார்.

modi 285லஞ்சத்தாலும், ஊழலாலும், அரசியல்வாதிகளின் நடத்தையாலும் வெறுப்புற்று இருந்த மக்கள் மோடியின் கூற்றிற்கு செவிமடுத்தனர்; ஆதரித்தனர். விளைவு அசுர பலத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது இதுவே முதல்முறை. அதற்குக் காரணம் பிரதமர் மோடி, அவரின் பிரச்சாரம். சாத்தியமோ, இல்லையோ வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதனால் பயனும் பெற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது "24 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டுக் கொண்டுவந்தால் இந்தியா வல்லரசாக மாறிவிடும்" என்று பேசிய பாஜக வினர் ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணம் பற்றி கேள்வி எழுப்பினாலே எரிச்சல் அடைந்தனர்.

இது குறித்து பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் வினவ "கருப்புப் பணம் வெளிநாடுகளில் எவ்வளவு இருக்கிறது என்பது எனது அரசுக்குத் தெரியாது; முந்தைய அரசுக்கும் தெரியாது; ஏன் யாருக்கும் தெரியாது" என்று பதிலளித்தார். ஆனால் எதன் அடிப்படையில் வெளிநாடுகளில் 24 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக சொன்னார் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

நிதியமைச்சர் அருண்ஜெட்லி "கருப்புப் பணத்தை மீட்பது சுலபமல்ல; அதற்கு சில காலம் ஆகும்" என்று முன்பு காங்கிரஸ் அரசு சொன்னவற்றையே தொடர்ந்து கூறி வந்தார். கருப்புப் பணம் மீட்பதற்கு இடையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் கருப்புப் பணத்தை மீட்பதில் மோடியின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

நவம்பர் 08 இரவு 08 மணியளவில் இந்தியாவின் உயர்மதிப்புப் பணமான ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். "இந்த இரவு கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு தூக்கம் வராது. அடித்தட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள்" என்று அந்த அறிவிப்பினூடே தெரிவித்தார்.

ஆனால் அவர் அறிவிப்பிற்கு மாறாக தூக்கம் தொலைத்தவர்கள் சாதாரண அடித்தட்டு மக்கள்தான் என்பதை வங்கி முன்பும், பணம் எடுக்கும் இயந்திரத்தின் முன்பும் மறுநாள் முதல் காண முடிந்தது. சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு சென்றவர்கள், திருமணம் வைத்திருந்தவர்கள் என சகலரும் பாதிக்கப்பட்டனர்.

ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பில் வேகம் காட்டிய அரசு அதற்கு மாற்று ஏற்பாட்டில் சுணங்கி நின்றது. புதிய நோட்டுகளை தயார் நிலையில் வைக்கவில்லை. அதனால் பொதுமக்கள் பணம் மாற்றுவதற்குக்கூட கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். 25-11-2016 அன்று மட்டும் ஒரு பெண் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். இந்த 17 நாட்களில் 14 வங்கிப் பணியாளர்கள் பணிச்சுமையால் இறந்துள்ளனர். 90% ATM-கள் வேலை செய்யவில்லை. வங்கிக்கு உரிய முறையில் பணம் வரவில்லை.

வங்கியில் தரும் புதிய ரூ. 2000 நோட்டுகளுக்கு வெளியில் சில்லறை கிடைக்கவில்லை. வங்கியில் கிடைக்கும் குறைந்தபட்ச பணமும் போதவில்லை. முதலில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காமல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது என பல்வேறு நடைமுறை சார்ந்த விஷயங்களைக் காணும்போது இந்த அரசின் செயல்பாட்டு தோல்வி அப்பட்டமானது.

இந்த அரசின் முன்யோசனையில்லாத இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. "இந்த நடவடிக்கையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாராளமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விதி அவை 56 ன் கீழ் வாக்களிப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்" என பல கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

இதுவரை ரூ. 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார். இவைகளில் பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் உழைத்து சேமித்தவையாகும். ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த ரூ. 5 லட்சம் கோடியும் கருப்புப் பணம், அதை எப்படி மீட்டோம் பாருங்கள் என்பது போல பேசி வருவது கண்டிக்கத்தக்கதாகும். இதன்மூலம் அவர்களின் தோல்விகளை மறைக்க முயல்கிறார்கள்.

2016 ம் ஆண்டின் தகவலின்படி இந்தியாவில் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ. 17 லட்சம் கோடி . இதில் ரூ. 500 - 45%, ரூ. 1000 - 39% பங்கு வகிக்கிறது. சுமார் 80% மேற்பட்ட நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த அரசு அதற்கு ஈடாக புதிய நோட்டுகளை அச்சடித்து இருக்க வேண்டும். மாறாக தற்போதுதான் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அவசர அவசரமாக அச்சடிக்கப்படுவதால் 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட் அச்சாகியுள்ளதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. "பிரதமர் மோடியின் அறிவிப்பால் கள்ள நோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதிகளின் பணப்பரிமாற்றம் தடைபடும், கருப்புப் பணம் கட்டுக்குள் வரும், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்" என்று பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

கள்ள நோட்டு எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதை பலரும் பலவிதமாக சொல்லி மக்களை குழப்புகிறார்கள். "ரூ. 17 லட்சம் கோடியில் ரூ. 400 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது" என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவிக்கின்றது. நோட்டுகளின் எண்ணிக்கையையும், அதன் மதிப்பையும் சிலர் ஒன்றாக நினைத்து குழப்பிக் கொள்கின்றனர்.

ஒரு லட்சம் கள்ள நோட்டு, மூன்று லட்சம் கள்ள நோட்டு என்று சொல்வதால் பல லட்சம் கோடிக்கு கள்ளப்பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். அது தவறு. உதாரணத்திற்கு: "2015 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6,32,000 கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளது. அதன் மதிப்பு ரூ. 30.43 கோடி". அவ்வளவுதான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் சதவீதம் 0.028 தான். "கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு நல்ல பணத்தை ஒழித்து விட்டார்கள்" என்று ப.சிதம்பரம் கூறுவதும் இதன் அடிப்படையில்தான்.

புதிய ரூ. 2000 பல பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. யார் நினைத்தாலும் இதில் கள்ள நோட்டு அடிக்க முடியாது என்று பலரும் பேசிவந்த நேரத்தில் கள்ள நோட்டு பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றனன. புதிய ரூ. 2000 புழக்கத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே பெங்களூரில் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவில் பிரிண்டரில் அச்சடிக்கப்பட்ட போலி ரூ. 2000 நோட்டுகளைக் கொடுத்து ரூ. 1700 க்கு பொருட்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. பஞ்சாபில் போலி ரூ. 2000 அச்சடித்த கடை உரிமையாளர்கள் சந்திப் குமார், ஹர்ஜித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையில் போலி ரூ. 2000 கொடுத்து ரூ. 300 க்கு சரக்கு வாங்கி மீதி சில்லறை வாங்க்ச் சென்றுள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் 13 வயதான சிறுமி போலி ரூ. 2000 கொடுத்து கடையில் ரூ. 500 பொருட்கள் வாங்கியுள்ளார்.

இதுபோன்ற செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. புதிய 2000 ரூபாய் புழக்கத்தில் வந்த சில நாட்களிலேயே போலி நோட்டுகளும் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. பிரதமர் மோடி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு ஆற்றில் கலக்கும் கழிவு நீரின் வழியை அடைக்காமல் ஆற்றுத் தண்ணீரை மட்டுமே மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. புதிய தண்ணீரை நிரப்பினாலும் அதில் கலக்கும் கழிவுநீரால் புதிய நீரும் அசுத்தம் ஆகவே செய்யும் என்பதை அவர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.

"இந்த முடிவால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் ஆக வீழ்ச்சியடையும்" என்று ஆம்பிட் கேபிடேல் என்ற நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. பணம் கையிருப்பில் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் நன்மையை விட அதிக பாதிப்பை தரக்கூடியது. பெரும்பாலான பொது மக்களும் இந்த அரசின் முன்யோசனை இல்லாத இச்செயலை வெறுப்புடனேயே கண்டு வருகிறார்கள்.

அதை உணர்ந்துகொண்ட பிரதமர் மோடி ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது "இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்வேன்" என்று உறுதி கூறியிருக்கிறார்.

இந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாமல், மக்களின் சிரமங்களைப் போக்காமல் காலம் தாழ்த்தினால் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதுபோல நாட்டில் "கலவரச்சூழல்" உருவாகும் நிலை ஏற்படும்.

மயிலாப்பூரில் ATM-ல் பணம் வரவில்லை என்பதற்காக அந்த இயந்திரத்தை இளைஞர் ஒருவர் அடித்து உடைத்துள்ளார். பல இடங்களிலும் வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதங்கள் அதிகரித்திருக்கின்றன போன்ற செய்திகளை பார்க்கும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் தீவிரம் தெரிகிறது..

மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் "மத்திய அரசின் நடவடிக்கை திட்டமிட்ட, சட்டப்பூர்வமான ஒரு கொள்ளை, திருட்டுதான். இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்திற்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

அது அவரின் நம்பிக்கை மட்டுமல்ல. தனது பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நம்பிக்கை. பிரதமர் மோடி அதைக் காப்பாற்றுவாரா அல்லது மாறுசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்