பெருமதிப்பிற்குரிய விகடன் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

வாரந்தோறும் தவறாமல் விகடன் படித்து வருபவன் நான். சிறு வயதிலிருந்தே விகடனின் தீவிர விசிறியும் கூட. கடந்த 28.9.2016 இதழ் படித்தேன். அதில் இடம் பெற்றிருந்த ‘நீங்களும் போராளி ஆகலாமே பிரெண்ட்ஸ்’ கட்டுரையைப் படித்து மிகவும் திகைத்துப் போனேன். அண்மைக் காலமாக  ‘முகநூல் போராளிகள்’ என அவ்வப்பொழுது நக்கலும் நையாண்டியுமாக சில வரிகளை ஆங்காங்கே விகடனில் பார்த்திருந்தாலும், சமூக அக்கறையோடு பதிவிடுபவர்களை இழிவுபடுத்தி இப்படி ஒரு தனிக் கட்டுரையே விகடனில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம், விகடன் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அப்பேர்ப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வெறும் தீவிரவாதி என்று எண்ணியிருந்த எனக்கு இனப்படுகொலை காலக்கட்டத்தில் விகடன் வெளியிட்ட கட்டுரைகள்தாம் அவர் எப்பேர்ப்பட்ட தலைவர் என்பதை உணர்த்தின. அதே போல, ‘சோளகர் தொட்டி’ நூலாசிரியர் ச.பாலமுருகனின் நேர்காணலை வெளியிட்டு, வீரப்பன் போன்ற ஒருவருக்கு அந்த மண்ணில் எப்படிப்பட்ட இன்றியமையாத் தேவை இருந்தது என்று எனக்குப் புரிய வைத்ததும் விகடன்தான். காசுமீர்ப் பிரச்சினை என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், ‘எது எப்படிப் போனாலும் காசுமீர் என் இந்திய மண்ணுக்கு மட்டுமே உரியது’ என்று சராசரி இந்தியனுக்கே உரிய மனநிலையோடு இருந்த எனக்கு, காசுமீர் மக்களின் மனநிலையை உரைக்கச் சொன்னதும் பல்வேறு காலக்கட்டங்களில் அவ்வப்பொழுது வெளிவந்த விகடனின் கட்டுரைகள்தாம்.

அப்பேர்ப்பட்ட விகடனே இன்று, சமூக அக்கறையோடு இயங்குவதை இந்த அளவுக்கு இப்படி இழிவுபடுத்தி எழுதுகிறது எனில் இதன் பின்னுள்ள அறம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை.

‘முகநூல் போராளி... முகநூல் போராளி...’ என்று வரிக்கு வரி எழுதியிருக்கிறீர்களே! ஐயா! நாங்கள் போராளிகள் என்று எங்களை எப்பொழுது சொல்லிக் கொண்டோம்? எங்களுக்கே கொஞ்சம் நினைவுபடுத்த முடியுமா? ஈழப் பிரச்சினை முதல் இன்று பேருருவெடுத்து நிற்கும் காவிரிப் பிரச்சினை வரை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி இணையத்தில் எழுதுபவர்கள் அதன் மீதுள்ள அக்கறையாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பினாலும்தான் எழுதுகிறோமே தவிர இப்படி இந்தப் பிரச்சினை பற்றி நாலு வரி எழுதுவதாலேயே நாங்களும் போராளிகள்தாம் என ஒருபொழுதும் யாரும் இங்கு பீற்றிக் கொள்வது கிடையாது. நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்களா பொறுப்பு?

சரி, அப்படியே உங்கள் வார்த்தைப்படி நாங்கள் ‘முகநூல் போராளிகள்’ என்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம். அப்படியே இருந்தாலும் அதில் இந்த அளவுக்கு நீங்கள் இழிவுபடுத்தி எழுத என்ன இருக்கிறது? கேட்டால், சமூகப் பிரச்சினைகளுக்காக வீதிக்கு வந்து போராடாமல் குளிரூட்டப்பட்ட அறையின் சொகுசு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இணையத்தில் எழுதுவது கோழைத்தனம் என்பீர்கள். எங்கே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இந்தியாவில், இணையத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவிப்பது என்பது அவ்வளவு பாதுகாப்பானதா என்ன? அந்தளவுக்கா இங்கே கருத்துரிமை வாழ்வாங்கு வாழ்கிறது?

மோடியைப் பற்றி சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தவர் கைது செய்யப்பட்டதும் இந்த நாட்டில்தான். பால் தாக்கரே மறைவை ஒட்டிய கடையடைப்புக்கு எதிரான கருத்துக்கு வெறும் விருப்பம் தெரிவித்ததற்கே ஒரு பெண் கைது செய்யப்பட்டதும் இதே நாட்டில்தான். குறிப்பிட்ட அந்தச் சட்டப்பிரிவு இப்பொழுது அமலில் இல்லை என்றாலும், அந்தச் சட்டம் அமலில் இருந்த பொழுதிலிருந்தேதான் முகநூல் போராளிகள் என உங்களால் வர்ணிக்கப்படுவோர் நடுவண் – மாநில அரசுகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டு நடப்புகள், சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றியெல்லாம் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். விடுதலைப்புலிகள், சோனியா காந்தி எனும் வார்த்தைகளே முகநூலில் தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில்தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், சோனியா காந்தியைக் கடுமையாக எதிர்த்தும் பல பதிவுகள் அதில் பதியப்பட்டன என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்த விழைகிறேன்.

இன்னும் சொல்லப் போனால், இதழாளர்களாகிய உங்களை விடத் தனிமனிதர்களாகிய எங்களுக்குத்தான் இப்படியெல்லாம் எழுதுவதில் அபாயம் கூடுதல்.

மக்களாட்சியின் நான்காவது தூண் என அரசியலமைப்புச் சட்டத்தால் ஏற்புரிமை (அங்கீகாரம்) அளிக்கப்பட்டிருப்பவர்கள் நீங்கள். அந்தத் துணிச்சலில் முதலமைச்சர் முதல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வரை எல்லாரையும் விமரிசிக்கிறீர்கள். ஆனால், நட்பு பாராட்டுவதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்ட முகநூல் முதலான சமூக ஊடகங்களில் நாங்கள் ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம்.

இதழாளர் சங்கம், பதிப்பாளர் சங்கம் என உங்களுக்குப் பின்புலங்கள் நிறைய. நீங்கள் ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் எழுதி மாட்டிக் கொண்டால் உங்களுக்கு உறுதுணையாக அவர்கள் வருவார்கள். ஆனால், வங்கிக் கணக்குக் கூடத் தொடங்க வகையில்லாத எத்தனையோ பேர் முகநூல் கணக்குத் தொடங்கி சமூகத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினால் எங்களுக்காக அலையப் போவது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான்.

இவை மட்டுமல்ல, இவ்வளவு வலுவான பின்புலங்களைக் கொண்ட இதழ்களாகிய நீங்கள் கூட இதுவரை தனி ஈழம், இந்திய அரசின் தமிழர் துரோகம் போன்றவை பற்றித்தான் எழுதியிருக்கிறீர்களே தவிர ஒரு நாடு, தன் குடிமக்களில் குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் அவர்கள் தங்களுக்குண்டான தனித்த இறையாண்மையை அடையத் தனி நாடு கேட்டுப் போராடத் தொங்கி விடுவார்கள் என்கிற வரலாற்று உண்மையை எழுத ஒருநாளும் நீங்கள் துணிந்ததில்லை. ஆனால், உங்களைப் போல் எந்தப் பின்புலமும் இல்லாத தனிமனிதர்களான எங்களில் பலர் அதைத் துணிந்து எழுதியிருக்கிறார்கள்; அதன் பின்விளைவுகள் எப்பேர்ப்பட்டவை என்பதை உணர்ந்தும்.

இப்படி, எதற்கும் துணிந்து சமூக அக்கறைப் பதிவுகளை வெளியிடும் எங்களைப் போன்றவர்களை, சில மணி நேரப் புகழுக்காகவும் சில பல விருப்பக்குறிகளுக்காகவும்தாம் (likes) எழுதுபவர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதே போல, இதழ் வெளியிட்டு இலட்ச இலட்சமாக வருவாய் ஈட்டும் உங்களைப் போன்றவர்களை அப்படிப்பட்ட வருமானத்துக்காகத்தான் சமூக அக்கறை சார்ந்த கட்டுரைகளை வெளியிடுகிறீர்கள் என நாங்கள் விமரிசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நீங்கள் ஒரு நொடி சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

ஆனால், நாங்கள் அப்படிச் சொல்ல மாட்டோம். மோடி பற்றியும், தாக்கரே பற்றியும் எழுதிச் சிறைக்குப் போன ‘முகநூல் போராளிகளை’ நீங்கள் மறந்து விட்டிருக்கலாம்; அப்படி வெளியில் வராமல் தனிப்பட்ட முறையில் அரசின், அதிகாரப் பீடத்தின் கரங்களால் குட்டி வைக்கப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்கலாம். ஆனால், கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் ஆசிரியர் சிறைக்குப் போன வரலாற்றை நாங்கள் மறந்து விடவில்லை. ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இன்றும் வழக்குக்காக நீங்கள் அலைந்து கொண்டிருப்பதை நாங்கள் அறியாமலும் இல்லை.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதற்கெனச் சில ஆதாயங்கள் கிடைக்கத்தான் செய்யும். ஆனால், குறிப்பிட்ட செயலில் ஈடுபடுபவர் அந்த ஆதாயங்களை எதிர்பார்த்து அந்தச் செயலைச் செய்கிறாரா அல்லது தன் உள்ளார்ந்த அக்கறையினால் செய்கிறாரா என்பது அவரவர் உள்ளத்துக்கு மட்டுமே தெரிந்தது. மக்கள் நலனுக்காகச் சிறைக்குப் போகவும் தயங்காத உங்களைப் போன்ற இதழாளர்கள் இருக்கும் இதே நாட்டில் வருமானத்துக்காக மட்டுமே இதழ் நடத்துபவர்களும் உண்டு என்பது எப்படி மறுக்க முடியாததோ, அதே போலத்தான், சில மணி நேரப் புகழுக்காகவும் சில பல விருப்பக் குறிகளுக்காகவும் பதிவிடுபவர்களுக்கிடையில் சமூக அக்கறைக்காக மட்டுமே இணையத்தில் எழுதுபவர்களும் உண்டு என்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.

நேரடிப் போராட்டங்களில் இறங்காமல் இப்படி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது உங்களைப் போன்றோர் எங்கள் மீது தெளிக்கும் நையாண்டிகளுக்குப் பின்னுள்ள அடுத்த குற்றச்சாட்டு, இல்லையா?

தெரியாமல்தான் கேட்கிறேன், எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் பற்றிக் காலங்காலமாக விகடனில் எழுதி வருகிறீர்களே, இதழ்களின் எழுத்துக்கள் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? காரணம், உங்கள் இதழைப் பல இலட்சக்கணக்கானோர் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு உங்கள் எழுத்து போய்ச் சேருகிறது. அது சமூகத்தின் பொது புத்தியில் பதிந்து மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறீர்கள், இல்லையா? அப்படிப்பட்ட நம்பிக்கை எங்களுக்கு மட்டும் ஏன் இருக்கக்கூடாது?...

சமூக ஊடகங்கள் இன்று முதன்மை ஊடகங்களுடனே போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. ஊடக உலகின் பேரரசனாகத் திகழும் திரைப்படத்துறையே சமூக ஊடக விமர்சனங்களால் பாதிக்கப்படுவதாக புலம்பல் எழும் அளவுக்கு அதன் வீச்சு இருக்கிறது. சமூக ஊடகத்தில் உள்ள ஒரு மனிதருக்குச் சில நூறு பேர் நண்பர்களாக இருக்கிறார்கள். அந்தச் சில நூறு பேரில் ஒவ்வொருவருக்கும் சில நூறு நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த ஒவ்வொருவரின் நட்பு வட்டத்திலும் இன்னும் சில நூறு பேர் உள்ளார்கள். இந்த எண்ணிக்கை இப்படியே பல நூறாயிரங்களில் தொடர்கிறது. அதனால்தான் இங்கு எழுதப்படுபவை மிகச் சில மணி நேரங்களில் பொதுவெளிக்கு வந்து சேர்கின்றன. ஆக, இதழ்கள் போன்ற முதன்மை ஊடகங்களுக்கு மட்டுமில்லை, சமூக ஊடகத்தில் எழுதுபவர்களுக்கும் மறைமுகமாகப் பல்லாயிரம் நேயர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அது மட்டுமில்லை, வணிக அடிப்படையில் இயங்கியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களைப் போன்ற முதன்மை ஊடகங்களின் எழுத்துக்களை விட, எந்த வணிக ஆதாயமும் இல்லாத எங்கள் எழுத்துக்களுக்கு மக்களிடையே நம்பகத்தன்மை பன்மடங்கு மிகுதி. எனவே, எங்கள் எழுத்துக்களும் நாளை நல்ல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தும்; அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்! அதற்கு முன் இதைப் பாருங்கள்!...

‘முகநூல் போராளிகள்’ என்று எங்களை முடிந்த அளவுக்கு இழிவுபடுத்தி நீங்கள் வெளியிட்டீர்கள். ஆனால், விகடனின் போராளித்தனத்தை இதே சமூகம் கேள்விக்குட்படுத்தி, இழிவுபடுத்தியபொழுது முகநூல் போராளிகள் செய்தது என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டாவா? இதோ இந்த இணைப்பைச் சொடுக்கி அங்கு வெளியிடப்பட்டுள்ள கட்டுரையைப் பாருங்கள்:https://www.facebook.com/gnaanapragaasan.e.bhu/posts/372031772885213

இது ஒரு சோற்றுப் பதம்தான். விகடனை யார் தவறாகப் பேசினாலும் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வலுச் சண்டைக்குப் போன கதைகள் இணையத்தில் ஏராளம் உண்டு. அப்படிப் போகிறவர்களெல்லாரும் நான் பார்த்த வரை, நீங்கள் வர்ணிக்கிற ‘முகநூல் போராளி’கள்தாம். நேரம் கிடைக்கும்பொழுது இணையத்தில் தேடிப் பாருங்கள். இப்படி நிறையக் காணலாம்.

இவ்வளவுக்கும் பிறகும், சமூகப் பிரச்சினைகளுக்காக இணையத்தில் குரல் கொடுப்பது கீழத்தரமானது என்பதுதான் உங்கள் நிலைப்பாடு எனில், வேறு வழியின்றி இரண்டு கடுமையான கேள்விகளை நான் உங்கள் முன் வைத்தாக வேண்டியிருக்கிறது.

தொண்ணூறு ஆண்டுக் காலமாக வெற்றிகரமாக இதழ்களை நடத்தி வரும் நீங்கள் ஈழப் பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, அணு உலை ஆபத்து, சுற்றுச்சூழல் சீர்கேடு எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை எல்லாம் தொடர்ந்து அச்சு இதழ்களில் மட்டுமில்லாமல் இணையத்திலும் வெளியிட்டு வருகிறீர்கள். அதாவது, சமூகப் பிரச்சினைகளுக்காக நேரடியாகக் களத்தில் இறங்காமல் எழுத்தளவில் மட்டும் குரல் கொடுப்பது என்பதை விகடனும் தொடர்ந்து செய்தே வருகிறது. என்ன ஒரு வேறுபாடு எனில், நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்குகிறோம்; விகடன் இணையம், அச்சு என இரண்டு வகைகளில் இயங்குகிறது, அவ்வளவுதான். எனில், நேரடிப் போராட்டங்களில் ஈடுபடாமல் வெளியிலிருந்து மட்டும் அறச்சீற்றத்தைக் காட்டுவது இழிவானதானால் விகடனுக்கும் அது பொருந்தாதா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக, இப்படிப்பட்ட முகநூல் போராளிகளை உருவாக்கியதில் விகடனுக்கு எந்தப் பங்குமே இல்லையா என்பது.

ஆம், என்னைப் பொறுத்த வரை, நான் இன்று தமிழர் பிரச்சினைகளில் இவ்வளவு தீவிர உணர்வாளனாக இருக்கிறேன் என்றால், அதற்கு விகடனும் ஒரு மாபெரும் காரணம். ஏற்கெனவே சொன்னபடி, இனப்படுகொலை நேரத்தில் விகடனில் வெளிவந்த பல கட்டுரைகள்தாம் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் துரோகங்கள் பற்றியும், ஈழ விடுதலையின் பின்னுள்ள நியாயத்தைப் பற்றியும் பல புரிதல்களை எனக்கு ஏற்படுத்தின. தொலைக்காட்சிகள், நாளேடுகள் போன்ற மற்ற ஊடகங்களும் இந்தப் புரிதல்களை எனக்கு அளிக்கத் தவறவில்லை என்றாலும் விகடனின் பங்கு அதில் பெரிது. ஆம், இழித்தும் பழித்தும் முடிந்தபடியெல்லாம் உங்களால் கீழ்மைப்படுத்தப்பட்ட நாங்கள் எங்கிருந்தோ குதித்த வேற்றுக்கோள் மனிதர்கள் இல்லை. உங்களைப் போன்றோரின் எழுத்துக்களால் உருவானவர்கள்தாம்.

பொறுத்தருளுங்கள்! உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கவில்லை. குறிப்பிட்ட அந்தக் கட்டுரை எங்களைப் போன்றவர்களின் மனதை எந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்த எண்ணியே கேட்டேன்.

ஐயா! விரசத் தளங்களைப் பார்ப்பதற்கும், தலையா - தளபதியா எனச் சண்டை போடுவதற்கும், சீட்டாடுவதற்கும், பணம் ஈட்டுவதற்குமே பெரும்பாலோர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்நாட்டில் எங்களைப் போன்றோர், ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் சமூக அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் முறையில் தவறு தென்பட்டால் தங்களைப் போல் ஊடக உலகில் விழுது விட்டவர்கள் எங்களைப் பண்படுத்துங்கள்! மாறாக, இப்படியெல்லாம் புண்படுத்தாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

எதிர்க் கருத்துக் கொண்ட கடிதம் எனத் தெரிந்தும், தங்கள் விலைமதிப்பில்லா நேரத்தில் இவ்வளவு கணிசமான பங்கை எனக்காக ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி!

-       இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It