தமிழ்நாட்டில் தற்போது 25 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று பத்தாண்டுகளில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் எங்கு வேண்டுமானாலும் தொடங்க கட்டுப்பாடின்றி அனுமதிகள் வழங்கப்பட்டதால் தனியார் பள்ளி வாகனங்களும் பெருகியுள்ளன. வாகனங்களை இயக்குவதற்கான தூரம் மற்றும் நிறுத்தங்கள் பற்றி எந்த கட்டுப்பாடுகளும் அரசால் இதுவரை விதிக்கப்படவில்லை. இதன் விளைவாக, பள்ளி வாகனப் போக்குவரத்து மட்டுமல்லாமல் பொதுப் போக்குவரத்தும் சாலைப் பாதுகாப்பும் மிகுந்த இடர்பாடுடையாதாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது.

bus accidentதனியார் பள்ளி நிர்வாகங்கள் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அழைத்து வருகிறார்கள். பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாக மிக அதிக தூரத்தில் இருந்து, அருகருகே உள்ள குடியிருப்புப் பகுதி நிறுத்தங்களில் கணக்கில்லாமல் நின்று, துரிதகதியாக குழந்தைகளை ஏற்றி, இறக்கி, வேகமாகவும் அவசரமாகவும் வாகனங்களை இயக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஓட்டுனர்கள் ஆளாகின்றனர். இதுவே பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி பள்ளி வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதற்கும் காயமடைவதற்கும் முக்கியக் காரணமாகிறது.

பல்வேறு முன்னேறிய நாடுகளில் பின்பற்றப்படுவது போல, அருகமைப்பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்கவேண்டும் என்ற நெறிமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாகவே தனியார் பள்ளிகள் மிக அதிகத் தொலைவில் வசிக்கும் குழந்தைகளை மழலையர் வகுப்பிலிருந்தே சேர்த்து வருகின்றனர். பள்ளி வாகனம் இயக்குவது தனியார் பள்ளிகளுக்கு இலாபகரமான துணைத்தொழிலாகவும் உள்ளது. இதன் காரணமாக, பெற்றோர்கள் கல்விக் கட்டணச் சுமையோடு பள்ளி வாகனக் கட்டணச் சுமைக்கும் ஆளாகின்றனர்.

தங்கள் இருப்பிடத்திலிருந்து மிகத்தொலைவில் உள்ள தனியார்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் நாள்தோறும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் குழந்தைகள் ஓய்வு நேரத்தைக்கூட பயணத்தில் இழக்கவேண்டியுள்ளது. பள்ளிக்கு வந்து செல்வதாலேயே குழந்தைகள் சோர்வடைந்துவிடுகின்றனர். இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் கல்வி கற்றலுக்கும் இடையூரானது.

தற்போது சாலை விபத்துகள் நடப்பதில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதை தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளி வாகனங்களும் இதில் முக்கிய பங்கு வகிப்பதை தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் நடந்துள்ள தனியார் பள்ளி வாகன விபத்துகள் நிரூபிக்கின்றன.

2016 -2017 ஆம் கல்வியாண்டு தொடங்கிய 15 நாட்களில் (சூன் ஒன்று முதல் சூன் 15 வரை) நடந்துள்ள தனியார் பள்ளி வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமைடைந்தவர்களின் விபரங்கள் பற்றி செய்தி ஊடகங்கள் மூலம் அறிந்தவற்றை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சூன் 1 ஆம் நாள் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 15 பெண் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

2. திருப்பூர் விஜயாபுரம் அருகே சூன் 8 ஆம் நாள் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 22 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இப்பள்ளி வாகனம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இயக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

3. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சூன் 8 ஆம் நாள் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய குழந்தைகளில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2 பேருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கிடாரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார்.

4. சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூரில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று சூன் 10 ஆம் நாள் காலை தீத்தாம்பாளையம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 15 மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

5. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு - குன்றத்தூர் இடையே உள்ள சிங்கராயபுரத்தைச் சேர்ந்த பார்த்தீபன் என்பவரின் 3 வயது மகள் கவிநிலா, சூன் 15 ஆம் நாள் மாலை பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றபோது அதே வாகனத்தின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளிக்குச் சென்று வந்த முதல் நாளே இத்துயரம் நிகழ்ந்துள்ளது.

6. திருப்பூர் அணைப்புதூர் நான்கு சாலை சந்திப்பு அருகில் சூன் 14 ஆம் நாள் தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பழனாத்தாள் என்ற 80 வயது மூதாட்டி படுகாயம் அடைந்து உயர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

இப்படிப்பட்ட துயர நிகழ்வுகள் இனிமேல் நடப்பதைத் தடுக்கவும் பெருகிவரும் தனியார் பள்ளி வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

1. குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான தமிழக அரசின் விதிகள் பகுதி 3 இல் அருகமைப்பள்ளிக்கான எல்லை பற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது. மழலையர் வகுப்புக் குழந்தைகளையும் முதல் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள பள்ளியிலும் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளை 3 கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ள பள்ளியிலும் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற விதியை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

2. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை 5 கிலோமீட்டார் எல்லைக்குள் இருந்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை 8 கிலோமீட்டர் எல்லைக்குள் இருந்தும் மட்டுமே தனியார் பள்ளிகள் வாகனங்கள் மூலம் அழைத்து வர வேண்டும் என்ற விதிமுறையை வகுக்க வேண்டும்.

3. தனியார் பள்ளிகள் வாகனங்கள் இயக்குவதை முழுவதுமாக தவிர்க்கும் வகையில் அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கென்று தனிப் பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் ஆறாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தாங்கள், தமிழகத்தில் வாழும் பள்ளிக் குழந்தைகளின் உயிர்ப் பாதுகாப்பு, கல்விப் பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உறுதியளிக்கும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

- சு.மூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, தமிழ்நாடு.

Pin It