தமிழகத் தேர்தல் கட்சிக்காரர்கள் வேடமிட்டுக் கொண்டு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

thirumavalavan vaiko vijayakanth g ramakrishnan“இருசகன்ற வண்டியினிற் கண்ணவிந்த

ஏறுகளைப் பூட்டி, மக்கள்

நெரிசலுறுங் குறுந் தெருவில் பெருங்குடியன்

வெருட்டுதல் போல்...........................”

- ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையை அழகுற விளக்கிச் சொல்வார் பாவலரேறு.

இந்திய ஆட்சிக்கு அடிமைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டாளிகளாகவும் தமிழகத்தைச் சூறையாடும் வெறியர்களாவுமே தமிழக ஆட்சியாளர்கள் இதுவரை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்குள் எவரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். தேர்தல் ஆரவாரங்களிலும் சரி, பணக் கொழுப்பில் திணவெடுத்துத் திரிவதிலும் சரி அவர்கள் அனைவரும் ஒரே நிலையினரே.

ஒவ்வொரு தேர்தலும் புறவடிவங்களில் மாற்றம் பெற்று பரபரப்பாகக் காட்சியளித்தாலும், பேசப்பட்டாலும், உள்ளடக்கத்தில் எல்லாம் ஒரே தன்மையினதே.

“இந்தத் தேர்தல் அப்படியில்லை. இது வேறுபாடானது” என்று புதுப்புதுப் புனைவிலான வேடந்தாங்கிகளைப் பார்த்துச் சிலர் பேசிக்கொள்ளலாம்.

ஆனால், அந்த புனைவர்கள் அனைவரின் உள்ளடக்கமும் ஒன்றுதான் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சூழலும், வாய்ப்பும் கிடைத்தால் - அவர்கள் அனைவரும் இந்தியப் பார்ப்பனியத்திடம் இணங்கிப் போகிறவர்கள் என்பதை அவர்கள் ஒவ்வொருவரின் கடந்த, நிகழ்காலத் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரியும்.

நிலை இவ்வாறு இருக்க,

இந்தத் தேர்தலில் பங்கேற்கக் களத்தில் நிற்கிற கட்சிகளில் எதைத் தேர்வு செய்வது என்று பலரும் குழம்பிப் போகலாம்.

தேர்தலில் வாக்குப் போடுவதுதான் தங்களுக்குக் கிடைத்திருக்கிற ஒரே கடமை என்பதாகச் சிலர் நம்பிக்கை பேசலாம்.

தேர்தல் என்பது மிகப் பெரிய குடிநாயகத் திருவிழா என்று சிலர் மகிழ்ச்சி கொள்ளலாம்.

ஆம், விரும்புகிற கல்வியைப் படிக்கமுடியாமல், விரும்புகிற வேலைகளில் சேர முடியாமல், விரும்புகிற தொழிலை நடத்த முடியாமல் - கிடைத்ததற்கு ஏற்ப தங்களை அடிமைகளாகவே மாற்றிப் பழக்கிக் கொண்டவர்களுக்குத் தேர்தலில் ஒப்போலை போடுவது என்பதுதான் மிகப்பெரும் குடிநாயக வாய்ப்பாகத் தெரியும்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் வெற்றிபெற எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று! - அவர் எவ்வளவு செலவழித்ததாகக் கணக்குக் காட்டப்போவதைக் கேட்கவில்லை. கருப்புப் பணமாகவோ, கணக்கு வழிப்பணமாகவோ ஒருவர் மொத்தமாக ஒரு தொகுதியில் வெற்றிபெற பல கோடிகளைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

குமுகத்தில் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படுகிற ஒருவர் கோடிக்கணக்கான உருவாக்களை எப்படிச் செலவழிக்க முடியும்.

நேர்மையாக உழைத்து வாழும் ஒருவர் இந்த அளவில் பல கோடிகள் செலவழிக்க முடியுமா? ஏது பணம்?

ஆக - தேர்தலில் நிற்கவோ, பரப்பல் செய்யவோ, இறுதியாய் வெல்லவோ வேண்டுமானால், நேர்மையாய் அல்லாது, திரை மறைவில் பண வருவாய் கொண்டவராய்த்தான் இருத்தல்வேண்டும்; அல்லது அப்படியான கட்சியின் சார்பில் நிற்கக்கூடியவராகவாவது இருத்தல் வேண்டும்.

திரைமறைவில் பணம் பெறுகிறவர்கள், யாரிடமிருந்து பணம் பெற முடியும்?

ஒன்று தாமே ஊழல் செய்து பண வருவாயைப் பெருக்கியிருக்க வேண்டும்; அல்லது பெருமளவில் ஊழல்செய்து கொள்ளையடித் திருக்கும் இந்தியக் கட்சியிடமிருந்து பெறமுடியும். அப்படியாகவும் அல்லாது போனால் மூலப்பணம் போட்டுத் தொழில் நடத்துகிற பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாக இருந்து அவர்களிடமிருந்து பெறமுடியும்.

ஒருவர் ஒரு தொகுதியில் வெற்றியடையக்கூடிய வாய்ப்பு நிலையில் இருக்கிறார் என்றால், அவர் கேட்டுக்கொள்ளாமலேயே அந்தத் தொகுதியில் உள்ள பணமுதலைகளும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் அவருக்குத் திரைமறைவில் பல வகையில் நல்கைகள் செய்து கொடுப்பார்கள்.

அவ்வாறு கொடுத்து அவர் வெற்றி பெற்றுவிட்டபின், அந்தப் பணமுதலைகளின், பன்னாட்டு நிறுவனங்களின் எல்லா அரம்பத்தனக் கொள்ளையடிப்புகளுக்கும், அவர்களின் நல்கையில் வெற்றி பெற்றவர் இணக்கமாக அல்லவா போயாக வேண்டும். வெற்றி பெற்றவர் அவர்களைப் பகைத்துக்கொள்ள முடியுமா?

ஆக, ஒரு தொகுதியில் வெல்பவருக்கே இந்த நிலை என்றால், தமிழக அளவில் வெற்றியைத் தீர்மானிக்க இருக்கிற கட்சிக்கு, இந்தியக் கட்சிகளும், பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களும் எந்த அளவு வாரி இறைக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆக, தேர்தல் என்பது மிகப் பெரும் சூதாட்டம்.

எளியதான சீட்டுக்கட்டுபோலவோ, பந்தயக் குதிரை ஆட்டம் போன்றதாகவோவான சூதாட்டம் அல்ல, அதையெல்லாம்விட பல்லாயிரம் மடங்கு மதிப்பீட்டளவிலான சூதாட்டம்.

எனவே அவற்றின் ஊதியம் கோடிகளில் அளவீடு கொண்டவை.

சரி இவையெல்லாம் இப்படி இருக்க,

நேர்மையான ஒருவர் தேர்தலில் நிற்க அல்ல, நிற்பதற்காகச் சிந்திக்கவே முடியாதா? -என்றுதானே நினைக்கிறீர்கள்.

கோடிகளின், இலக்கங்களின் செலவழிப்பில் கூடுதல், குறைவுகள் இருக்கலாமேயல்லாமல், அவ்வகையில் செலவே செய்யாமல் ஒருவர் ஒரு தொகுதியில்கூட நிற்கவோ, வெல்லவோ முடியவே முடியாது.

அப்படிச் செலவு செய்யவேண்டிய கட்டாயத்தில் எந்த நல்லவரும் பணத்திற்கு என்ன செய்வார்கள்? யாராவது கொள்ளையர் ஒருவரைச் சார்ந்துதானே ஆகவேண்டும்.

ஆக, இந்த விளங்குதல்களிலிருந்து நடைபெற இருக்கும் தமிழகத் தேர்தலுக்குள் நுழைவோம்!

இந்தத் தேர்தலில் நிற்பவர்கள் எல்லாம், தனிநிலையில் நல்லவர்களாக, வல்லவர்களாக இருக்கலாம். அதற்காக நேர்மை யானவர்களாக இருக்கும்படியான சூழலைத் தேர்தல்களம் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்கிற விளங்குதலிலிருந்து மதிப்பீட்டைத் தொடங்குவோம்.

அவர்கள் வைத்திருக்கிற பேசுகிற கொள்கைகள், அவர்களால் செயற்படுத்திட முடியுமான கொள்கைகளா? கொஞ்சம் எண்ணுவோம்.

இந்தக் கட்சிகள் பேசும் கருத்துகள் எல்லாவற்றையும் மூன்று பகுப்புகளுக்குள் நிரல்படுத்த முடியும்.

            1.         தமிழ் மொழிக்கான உரிமை அளவில் பேசுவதை மட்டும் அளவீடாகக் கொண்ட கட்சிகள்.

            2.         தமிழ் இனத்தினர் என்கிற வகையில் தமிழர்கள்தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் பேசுகிறவர்கள்; போராடுகிறவர்கள்.

            3.         தமிழ்த் தேசம் - என்று தமிழ்நாட்டை அடையாளப்படுத்தி அதன் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் பேசுபவர்கள்; போராடுபவர்கள்.

- இந்த மூன்று வகைப்பாட்டிலேயே தமிழகத்தில் இன்றைக்குப் போட்டி போடுகிற தேர்தல் கட்சிகளை வகைப்படுத்தலாம்.

இந்த மூன்று வகைப்பாட்டின் உரிமை நிகழ்வுகளில் உள்ள அரசியலை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி உரிமை என்பது என்ன?

தமிழ்மொழி உரிமை என்பதைக் கல்வியில் - அரசு மற்றும் தனியார் அலுவல்களில் - ஆட்சித் துறையில் - நயனக(நீதித்துறையில் - வழிபாடு உள்ளிட்ட பண்பாட்டுத் துறையில்) என வகைப்படுத்தலாம்.

இன்றைய சூழலில் கல்வித்துறை என்பதிலும், அலுவல்துறை என்பதிலும், ஆட்சித்துறை என்பதிலும், நயனகத்துறை என்பதிலும் - வழிபாடு உள்ளிட்ட பண்பாட்டுத் துறை என்பதிலும் உள்ள இந்தியப் பார்ப்பனியத் தலையீடு எந்த அளவு வலிமை பொருந்தியதாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

கல்விஉரிமை முழுக்க முழுக்கத் தமிழக அரசிற்கு உரிமையுடையதாய் இல்லை. தமிழ்நாட்டு அரசின் கல்விக்கூடங்கள் மட்டுமன்றி, இந்தியக் கல்விக்கூடங்கள், பன்னாட்டு அரசுகளின் கல்விக்கூடங்கள் எனப் பல ஆட்சி அதிகாரங்களுக்குட்பட்ட நிலையில் கல்வித்துறை உள்ளது.

இந்திய ஆட்சிக்குட்பட்ட, பன்னாட்டு அதிகாரத்திற்குட்பட்ட கல்விக்கூடப் பாடத்திட்டங்களையோ, நடைமுறைகளையோ மறுத்துத் தமிழ்நாட்டரசு விரல்நுனியைக்கூட நீட்டமுடியாது.

இப்படியான சூழலில் கல்வித்துறையில் தமிழ் எந்தஅளவு அதிகார நிலையில் நிலைப்பட முடியும்.

இதேபோல்தான் தமிழ் அலுவல் மொழி - ஆட்சி மொழி - நயனக மொழி என்பனவெல்லாம்.

இந்திய அரசு அலுவலகங்களின், பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களின் வாயிற்படிகளில்கூடத் தமிழ் நிற்க முடியாது.

சென்னை உயர்நெறிமன்றத்தில் தமிழில் வழக்காட வேண்டி அமைதியாய் முறையீடு செய்து வழக்குமன்றத்தில் வாய்பொத்தி அமர்ந்திருந்த வழக்கறிஞர்களைச் சிறையிலடைத்ததோடு, அவர்களின் வழக்கறிஞர் உரிமையைப் பறித்திருப்பதையும் நாம் அறியவேண்டும்.

ஆக, தமிழ் உரிமை - என்ற அளவிலே வைத்துக்கொண்டாலும், நிறைவேற்றப்பட வேண்டிய மலைபோன்றதான கோரிக்கை களுக்காகத் தமிழுரிமையை மட்டுமே பேச எண்ணுகிற எந்தக் கட்சியாளும் போராடவோ, நடைமுறைப்படுத்தவோ இயலாது.

தமிழின் உரிமைகளுக்கு மட்டுமே குரல் கொடுப்பதற்கு இசையக்கூடிய பேராய (காங்கிரசு)க் கட்சியோ, பாரதீய சனதா கட்சியோ, இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளோ, மேற்படி நிலையில் விளக்கமாகத் தமிழ் உரிமைகளுக்காகக் குரலாவது கொடுக்குமா?

இந்திய அரசின் பள்ளிக்கூடங்களையும், பன்னாட்டு நிறுவனங்களின் பள்ளிக்கூடங்களையும் தமிழகத்தை விட்டு விரட்டுவோம் எனப் பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட கட்சிகள் கூறிடுமா?

ஆக அவர்களுக்குத் தமிழ் வேண்டுமா? இந்தியா வேண்டுமா - என்றால் முதலில் இந்தியா - பிறகுதான் தமிழ் என்பர்.

இந்தியாவில் எப்படித் தமிழ்உரிமை கிடைக்க முடியும்? இந்தியாவில் உள்ள மொழிகளையெல்லாம் ஆட்சிமொழியாக்கிட வேண்டும் என்று முழங்கினாலும் எப்படி எல்லா மொழிகளையும் ஆட்சி மொழியாக்கிட முடியும்?

பணம் காசுகளிலேயே அனைத்து மொழிகளையும் பதிக்க இயலாதவர்கள், படைத்துறையில் எப்படி அனைத்து மொழிகளையும் பயன்படுத்துவார்கள். விளக்க வேண்டாமா?

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வல்லூரைப் பிடிப்பதாகக் சொல்லும் கதையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

சரி!.....

இது இவ்வாறு இருக்க, அடுத்தப் பகுப்பில் உள்ள கட்சிகள் குறித்துப் பார்ப்போம்.

தமிழின உரிமைகள் குறித்துப் பேசுவதாக, போராடுவதாக முழங்குகிற கட்சிகளே தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., - உள்ளிட்ட கட்சிகள்.

இக் கட்சிகள் தமிழ்மொழி உரிமைகளுக்காகவும், தமிழ்இன உரிமைகளுக்காகவும் போராடுபவையாக வேடமிட்டிருப்பவை என்றாலும் அவற்றின் அளவீடுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.

அந்த ஏற்ற இறக்க அளவீடுகள் என்பது அவற்றில் எந்தக் கட்சி எந்த அளவீட்டில் இந்தியத்தோடும் - இந்தியக் கட்சிகளோடும் இணங்கி அடிபணிந்திருக்கிறதோ அந்த அளவீட்டைப் பொருத்தது.

தொடக்கத்தில், ‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்றவர்கள்தாம் பின்னாள்களில் ‘மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன்’ என்றெல்லாம் பசப்பினார்கள்.

இப்போது அவர்கள் இந்தியப் பாதுகாப்புக்காக ஈழத் தமிழர்களை மட்டுமன்று; தமிழகத் தமிழரையும், தமிழக நிலத்தையும் வளத்தையும்கூட காவுகொடுத்திட்டவர்கள்.

அந்த அளவு இந்தியத்தோடு ஒன்றஒன்ற தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் மறந்தார்கள் - என்பதோடு இந்தியத்தோடு புதைத்தார்கள்.

ஆக, இவர்களுக்கு இந்தியக் கனவு என்பது, இனிமையான கனவு. இந்தியக் கட்சித் தலைவர்களுக்கு அடிமைப்பணி செய்து கொண்டே தமிழ் பேசுவார்கள், தமிழர்கள் என்பார்கள்.

ஒப்போலைக்குத் தமிழும், தமிழரும் தேவைபோல், ஒட்டி உறவாடுவதற்கு இந்தியமும் - இந்திய அரசும் தேவை.

ஒருமுறை பேராயக் கட்சியைப் பகைப்பதும், மறுமுறை குலாவுவதும் இவர்களின் வேலை.

பா.ச.க.வுடன் உடன்பாடு கொள்ளும்போது ஒருவகை வீரப்பேச்சு, விலகி வந்தபின், வேறொரு வகை வீரமுழக்கம்.

ஆக, இத்தகைய வாய்ப்பியர்கள் (சந்தர்ப்பவாதிகள்) தமிழுக்கும், தமிழருக்கும் ஏதும் செய்வார்களா? போராடுவார்களா? - என்று அடிமைத் தமிழக மக்களும் இலவுகாத்து காய்ந்து போனதுதான் எச்சம்.

அடுத்து, மூன்றாம் பகுப்பினர்கள் குறித்தும் சிலவற்றைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.

இவர்கள் தமிழ்த்தேசம் பேசுபவர்கள். தமிழ்த்தேச உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், போராடுவதாகக் கூறிக்கொள்பவர்கள்.

ஆயினும் இந்திய உறவறுக்காதவர்கள். இந்தியக் கட்சிகளோடு பிணைந்து கொள்பவர்கள்.

இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டாலும், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடாதவர்கள்போலவே, இந்தியத் திணிப்பையும் எதிர்த்தும் போராடாதவர்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி - உள்ளிட்ட கட்சிகள் இந்த மூன்றாம் பகுப்பிற்குரியவர்களாக இருந்தாலும் இவர்களுக்குள்ளும் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.

நாடாளுமன்ற நிழலில் நனைந்தவர்களும், சட்டமன்றக் குளிரில் குழைந்தவர்களும் ஒருபுறம்! நான்தான் தமிழன்! என்னை முதலமைச்சராக்குங்கள் எனும் கனவோடு காத்திருப்பவருமாக அவர்களில் ஏற்ற இறக்க நிலைகள் உண்டு.

ஆயினும் - இவர்களுக்கு எதற்காகப் பதவி, சட்டமன்ற, நாடாளுமன்ற நுழைவுகள்.....

தமிழ்த்தேசத்தைக் காப்பதற்காகவா? மீட்பதற்காகவா?

இந்தியாவை எதிர்க்காமல், இந்தியாவை வீழ்த்தாமல் இந்தியத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தமிழ்த்தேசத்தை இவர்கள் எங்கே காப்பது, படைப்பது?

இந்தியா வேண்டாம் என்றால் இந்தியாவின் எதுவும் எமக்கு வேண்டாம் என்பதல்லவா அரசியலாக முடியும். குறைந்தது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறுவதையாவது மறுக்க வேண்டாமா?

இந்தியப் பள்ளிக்கூடங்களைத் தமிழகத்திலிருந்து விரட்டுவோம் எனப் பறைசாற்ற வேண்டாமா?

இந்தியத் தொழில் நிறுவனங்களை, இந்தியத் தொடர்வண்டித் துறையைத் தமிழகத்திற்கே ஆக்குவோம் எனக் கொள்கை பரப்ப வேண்டாமா?

தமிழர்கள் தமிழ்த்தேசிய இனத்தினரே அன்றி, இந்தியத் தேசிய இனத்தினர் இல்லை என்று கை உயர்த்தி முழங்கிடவேண்டாமா?

நாம் தமிழர் என்று கை உயர்த்துவதான நிலை சரியெனில், நாம் இந்தியரில்லை என்று கையுயர்த்துவதுதானே சரியானதாக முடியும்.

ஒருபுறம் இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதாய் உறுதிமொழியில் கையெழுத்திடுவதும், மறுபுறம் ‘நாம் தமிழர்’ - என்பதும் யாரை இன்னும் நம்ப வைக்க?.....

திண்ணையில் படுத்துத் திராவிடம் கேட்டவர்களை அரை நூற்றாண்டுக் காலம் நம்பித் தமிழகம் பாழ்பட்டது போதாதா?

இந்திய நிழலில் ஒதுங்கித் தமிழ்த்தேசம் பேசுபவர்களையும் நம்பிப் பாழ்பட வேண்டுமா?

தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை, ஏய்ப்பவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏய்க்கத்தானே செய்வார்கள்.

தமிழ் என்றும் - தமிழன் என்றும் பேசுபவர்களிடம் மட்டுமல்ல, தமிழ்த்தேசம் என்று பசப்புவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தமிழ் உரிமைக்காகவும், தமிழர் உரிமைக்காகவும், தமிழ் நாட்டு உரிமைகளுக்காகவுமான வழி - இந்திய நிழல் இல்லை -இந்தியத் தேசம் இல்லை.....

இந்தியாவை ஏற்பவர்கள் தமிழர்களாக இருக்கமுடியாது.

இந்தியாவின் இடுப்பொடிக்கிற இடிமுழக்கமிடும் மக்களை உருவாக்குவோம்......!

நீங்கள்..... இந்தியாவை எதிர்த்து நிற்பதின் அளவீட்டிலிருந்தே.....

நீங்கள் தமிழரா? இல்லையா?

என்பதை அளவிட முடியும் - என்று பறை சாற்றுவோம்!

            அந்த வகையில் இந்தியாவை பன்னாட்டு நிறுவனச் சூறையாடல்களை எதிர்த்து வீழ்த்திடுவோம் எனும் முழக்கத்தோடு இயங்குபவர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும்!

நாமும் வரவேற்போம்!

            ஆதரவளிப்போம்!

- பொழிலன்

Pin It