இந்தியாவில் அண்மைக் காலத்தில் பெண்கள் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக நேரடி போராட்டங்களையும், நீதிமன்ற வழக்குகளையும் நடத்தி வருகிறார்கள். புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுவரையுள்ள பெண்களை அனுமதிப்பதில்லை. “சட்டத்தின் முன் அனைவரும் சமம். சபரிமலை கோவிலுக்குள் ஆண்பெண் பேதம், வயது பார்க்காமல் பெண்கள் அனைவரையும் ஐயப்பனை வழிபட அனுமதிக்க வேண்டும்” என்று “இளம் வழக்கறிஞர்கள் சங்கம்” என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்து விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

                “காலங்காலமாக நடைமுறையில் இருந்துவரும் இந்த வழிபாட்டு உரிமை மதம் சம்பந்தப்பட்ட விவாகாரம்; இதில் அரசு தலையிட சட்டப்படி உரிமையில்லை” என்று கேரள மாநில அரசாங்கம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சாரி கோலத்தில் ( நயிஸ்திக்) தவம் இருப்பதாகவும், 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களை (மாத விலக்குக்கு உள்ளானவர்கள்) அனுமதித்தால் ஐயப்பனது பிரம்மச்சரிய விரதத்துக்கு பங்கம் ஏற்படும் என்றும், 1500 வருடங்களாக பெண்களை இங்கு அனுமதிக்கும் நடைமுறை இல்லை என்றும், ஐயப்பன் கோவில் நிர்வாகத்தை கவனித்துவரும் “திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு” தங்கள் பதில் மனுவில் தெரிவித்திருக்கிறார்கள்.

                “மாதவிலக்கு – என்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனிதகுல சந்ததி பெருக்கத்திற்கும் இயற்கை வழங்கியிருக்கும் கொடை. இதை அய்யப்பன் கோவில் நிர்வாகம் கேவலப்படுத்துவதையும், அவமானப்படுத்துவதையும் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது” என்று வலியுறுத்தி “மாதவிலக்கால் மகிழ்ச்சியடைகிறோம்” – என்ற பெண்கள் அமைப்பு இந்த வழக்கில் வாதாடி வருகிறது.

                “1500 வருடங்களுக்கு மேலாக 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பதில்லை என்பதற்கான ஆதாரம் என்ன?” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டம், ராமர் பாலம் வழக்குக்கு ஏற்பட்ட கதிதான் இந்த வழக்கிலும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

                மராட்டிய மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தில் சனி சிங்னாப்பூர் என்ற கிராமத்தில் சனீஸ்வரனுக்கு புகழ்பெற்ற கோவிலொன்று இருக்கிறது (திருநள்ளாறு சனிபகவான் கோவில் போல) இங்கு ஆண்கள் கருவறைக்குள் சென்று வழிபட அனுமதியுண்டு. பெண்களை அனுமதிப்பதில்லை. அவர்களை அனுமதித்தால் சனீஸ்வரனுக்கே சனி பிடிக்குமோ என்னவோ?

                2016 ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தன்று “ரன்ராகினி பூமாதா படை” என்ற பெண்கள் அமைப்பு ஆயிரக்கணக்கான பெண்களைத் திரட்டி இந்த சனீஸ்வரன் கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை பேரணியாகச் சென்று தொடங்கினார்கள். கோவில் அறங்காவலர்களும் சனி சிங்னாப்பூர் கிராம மக்களும் ஒன்று திரண்டு பேரணியில் வரும் பெண்களைத் தாக்குவதற்கு தயாரானார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை காரணங்காட்டி ஊர்வலம் வந்த பெண்கள் அனைவரையும் காவல்துறை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தியது. மாவட்ட ஆட்சித் தலைவர் தடையுத்தரவு பிறப்பித்தார்.

                சனீஸ்வரன் கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர்ப் பொது மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியுங்கள் என்று போராட்டத் தலைவி திருமதி. திருப்தி தேசாய் அஹமத் நகர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறார். ஆனால் போராட்டக் குழு தலைவி திருப்தி தேசாய் மற்றும் அவருடன் இரண்டு கார்களில் வந்த முன்ணனி ஊழியர்களை மாவட்ட எஸ்.பி. கைது செய்து, வெளியேற்றியிருக்கிறார். மாராட்டிய முதல்வர் பட்னாவிசுக்கும், அஹமத்நகர் மாவட்ட நிர்வாகத்துக்கும் இந்த விவகாரத்தில் இப்போது சனி பிடித்தாட்டுகிறது போலும்.

                இந்து மதத்திற்கு அடிப்படையான வேதங்களும், உபநிடதங்களும், மனு ஸ்மிருதி சாஸ்திரமும், பகவத் கீதையும், கிறித்துவர்களின் பைபிளும், முஸ்லிம்களின் திருக்குரானும் பெண்களுக்கு சமூகத்தில் சமமரியாதையும், வழிபாட்டு உரிமையும் கொடுத்து மதிப்பதில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்களுண்டு.

                “சூத்திரர்கள், சண்டாளர்கள், பெண்கள் மற்றும் நாய்கள் சம அந்தஸ்துடையவர்கள்” என்கிறது மனுநீதி சாஸ்திரம். பெண்களும், முரசும் அடிக்கப்பட வேண்டியவை என்றும் மனு கூறுகிறான். பெண்களை நாய்கள் என்றும் அடிக்கப்பட வேண்டிய முரசு என்றும் சொன்ன மனுவிற்கு ராஜஸ்தான் உயர்நீதி மன்ற வாளாகத்திற்குள் சிலை வைத்திருப்பது எவ்வளவு கேவலமான, பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

                “வைசியர்கள், சூத்திரர்கள, பெண்கள் மற்றும் பாபயோனியில் பிறந்த சண்டாளர்களேயாயினும், என்னைச் சரணடைந்தால் அவர்களுக்கு பாப விமோசனமுண்டு” என்கிறார் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் ( 9-வது அதிகாரம், 34 வது பாடல்)

                “ போரினால் பெண்கள் விதவையாவார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்று, வர்ணக்கலப்பு உண்டாகும். ஆதனால் குலநாசம் ஏற்படும்” என்று அர்ச்சுனன் சாதிமறுப்பு திருமணத்தைக் கண்டித்து பேசுவதாக கீதையில் பாடல்கள் உண்டு ( 1-வது அதிகாரம் 41- 44 வது பாடல்கள்)

                திருமணம் ( நிக்கா்) மரணம் (மவுத்) போன்ற முஸ்லீம் மதசடங்குகளைச் செய்வதற்கு “மதகுருமார்” தகுதிபெற மும்பையில் “தாருல் உலூம் நிஸ்வான்” என்ற மதகுருமார் பயிற்சிப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகனாரா மற்றும் அப்ரோஸ் பேகம் என்ற இரண்டு பெண்கள் இந்த மதகுருமார் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்கள். இந்தியாவிலேயே முதன்முதலாக “முஸ்லீம் மதச் சடங்குகளை செய்து வைக்கும் பெண் மதகுருமார்கள்” என்று செய்தி ஊடகங்கள் அவர்களைப் பாராட்டின.

                ஆனால், ராஜஸ்தான் மாநில தலைமை முஸ்லீம் மதகுருத்தலைவர் காலி உஸ்மானி “பெண்கள் மதகுருவாக செயல்படுவதற்கு திருக்குரான் தடை விதித்திருக்கிறது” என்று சொல்லி ஜெகனாராவையும், அப்ரோஸ் பேகத்தையும் முஸ்லீம்கள் யாரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கிறார். “பெண்கள் மதகுருமார்களாக செயலாற்ற எந்த தடையும் குரானில் இல்லை” – என்கிறார் இஸ்லாமிய சமூக சீர்திருத்த அமைப்பின் பொதுச் செயலாளர் பசுல்லா ரஹ்மான்.

                “ஆண்களுக்கு சமமாய் கோவில்களிலும், சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் எங்களுக்கும் வழிபாட்டு உரிமை வேண்டும்” என்று கேட்டு வீதியிலும் நீதிமன்றத்திலும் போராடத் தொடங்கியிருக்கும் பெண்களுக்கு அவர்கள் போராட்டம் வெல்லட்டும் என்று வாழ்த்துச் சொல்வோம்.

                ஆண்டவனை வழிபடும் உரிமைக்கே 21ம் நூற்றாண்டில் பெண்கள் இந்தளவுக்கு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலையில் இருக்கும்போது, ஆணாதிக்க சமூகத்தில் நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் 33% இடஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுக்க நடத்தவேண்டிய போராட்டம் சாதாரணமான விஷயம் அல்ல.

                சென்ற மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தென்மாநில இலக்கியத் திருவிழா நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற பெண் உரிமைப்போராளி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். “உலகில் அனைத்து மதங்களும் ஆணுக்கு பெண்ணை சரிநிகர் சமானமாக நடத்துவதில்லை; வழிபாட்டு உரிமைகூட மறுக்கப்படுகிறது” என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியது முற்றிலும் சரி .

- கே.சுப்ரமணியன்

Pin It