1840களில் அமெரிக்க கிருத்துவச் சபை ஒன்று சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் (Samuel Fisk Green) எனும் மருத்துவரை / பாதிரியாரை இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்ய அனுப்பி வைத்தது. தன்னுடைய குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை போதவில்லை என்று உணர்ந்து, மேலும் சிலரை அமெரிக்காவில் இருந்து தருவித்தார். சிறிது நாள்களிலேயே அவ்வெண்ணிக்கையும் போதவில்லை என்று கண்டு கொண்ட அவர் மேலும் தொண்டர்களை வரவழைப்பதற்குப் பதிலாக, யாழ்ப்பாண மக்களிடையே மருத்துவர்களை உருவாக்கிவிட்டால், மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நினைத்து, மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதற்கு உதவும்படி அவர் சார்ந்து இருந்த திருச்சபையைக் கேட்டுக் கொண்டு, கல்லூரியையும் கட்டினார். மருத்துவக் கல்லூரியைக் கட்டும் பொழுதே அதற்கு இணையாக அவர் செய்த இன்னொரு வேலை என்னவென்றால் மருத்துவ நூல்களை எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டது தான்.

school students 379இலங்கை அப்பொழுது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் யாழ்ப்பாண மக்களுக்கு ஆங்கிலம் அறிமுகமாகியே இருந்தது. மருத்துவத் தொண்டுடன், தான் புதிதாகக் கற்ற தமிழ் மொழியில் மருத்துவப் பாடங்களை எல்லாம் மொழிபெயர்த்துச் சிரமப்பட்டுக் கொண்டு இருந்த அப்பாதிரியாரிடம், தாங்கள் ஆங்கிலத்திலேயே மருத்துவப் பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய பாடப் புத்தகங்களும் தயாராக இருப்பதால், அவர் மொழி பெயர்ப்பதிலும், புதிய புத்தகங்களை அச்சிடுவதிலும், சிரமம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், பணமும் செலவழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் தன்னுடைய பணியில் முழுமை தேவை என்றும், ஒருவர் தன் தாய்மொழியில் கற்கும் பொழுது தான், பாடத்தின் உட்பொருளை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மருத்துவப் பணியையும், மொழி பெயர்ப்புப் பணியையும் ஒரு சேரச் செய்ததால் அவருக்குப் பணிச் சுமை மிகுந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மிகவும் வருத்தம் அடைந்த யாழ்ப்பாண மக்கள் அவரிடம் தாங்கள் ஆங்கிலத்திலேயே பாடம் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அவர் தன் உடல் நலனைக் கவனிக்காமல் பாடுபடுவது தங்களுக்கு மனவருத்தம் அளிப்பதாகவும் கூறினர். ஆனால் அவரோ தன் ஒருவனுடைய சிரமத்தைக் குறைப்பதற்காக, எதிர்கலத்தில் அரைகுறை மருத்துவர்களை உருவாக்குவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி, தன் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார். அவர் நிறுவிய மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழிக் கல்வி முறையே அறிமுகப் படுத்தப்பட்டது.

தாய் மொழியில் கல்வி கற்றால் தான் அறிவு முழுமையாக வளரும் என்பது பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீனின் கருத்து மட்டும் அல்ல. உலகம் முழுவதிலும் உள்ள கல்வியாளர்கள் இதைத் தான் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தமிழன் எனும் இளிச்சவாயனின் மண்டையில் மட்டும் இது உறைப்பதாகவே தெரியவில்லை. பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் உயர் கல்வியையும் தாய்மொழியில் தான் கற்க வேண்டும் என்பதற்காக ஓய்வு ஒழிச்சல் இன்றிப் பாடு பட்டார். நம் தமிழர்களோ ஆரம்பக் கல்வியையும் தமிழ் வழியில் படிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

சரி! மக்கள் தான் எது சரி எது சரியில்லை என்று புரியாமல் செயல்படுகிறார்கள் என்றால், தமிழக அரசாவது தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகிறதா என்றால், அதுவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்கள் நலனில் அக்கறை இன்றிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களும் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை ஒதுக்கி வைப்பதால், தமிழ் வழிக் கல்வி என்பது பரிதாபத்திற்கு உரிய நிலையில் தத்தளிக்கிறது.

தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்களே! மற்ற மாநில மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் நம்மைப் போல் இளிச்சவாயர்களாக இல்லை. தங்கள் மாநிலங்களில் தாய் மொழியில் கல்வி கற்கிறார்கள் என்பது (தமிழர்களைப் பொறுத்த மட்டில் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தலும்) அவர்களைப் பொறுத்த மட்டில் சாதாரண விஷயமாக உள்ளது. ஆனால் புலம் பெயர் வாழ்க்கையிலும் தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வத்துடனும் உறுதியுடனும் இருப்பது பாராட்டத் தக்கதே.

சென்னை, செளகார் பேட்டைப் பகுதியில் மார்வாடிகளும், குஜராத்திகளும், பிற வட இந்தியர்களும் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இப்பள்ளிகளில் பாடங்கள் இந்தி வழியிலும் குஜராத்தி வழியிலும் தான் நடத்தப் படுகின்றன. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நடத்தப்படுகிறது. இந்தி வழியிலும் குஜராத்தி வழியிலும் பாடங்களை நடத்துவதில் இவர்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன.

இவர்கள் வேற்று மாநிலங்களில் வாழ்க்கை நடத்துவதால், ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, புத்தகங்களை அச்சிட்டுக் கொடுக்கும் அளவிற்குப் போதுமானதாக இல்லை. ஒரு பாடப் புத்தகத்தை அச்சிட வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 5,000 படிகளாவது விற்பனையாக வேண்டும். ஆனால் அவ்வளவு எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் இல்லை என்று மோதிலால் ஃபோம்ரா சனாதன தர்ம மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.எஸ்.ஆதியப்பன் என்பவர் 6.6.2011 அன்று தெரிவித்தார்.

அப்படி என்றால் அவர்களுடைய சொந்த மாநிலங்களில் இருந்து புத்தகங்களைத் தருவிப்பது தானே என்று கேட்டதற்கு, ஒரு மாணவன் எங்கு வாழ்கிறானோ அந்த இடத்துச் சூழ்நிலையைப் பொறுத்துக் கல்வி கற்றால் தான் மற்றவர்களுடன் போட்டியிட்டு வெல்லும் திறமை ஏற்படும் என்றும், சொந்த மாநிலங்களில் இருந்து புத்தகங்களைத் தருவித்து, அந்தப் பாடத் திட்டத்தின்படி படித்தால் இரண்டு மாநிலங்களிலும் சிறந்து விளங்க முடியாமல் போய்விடும் என்றும் அவர் கூறினார்.

சரி! அப்படி என்றால் அவர்கள் என்ன தான் செய்கிறார்கள்? தமிழ் நாட்டு அரசின் பாடப் புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும் குஜராத்தியிலும் மொழி பெயர்த்து, கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். அதிலிருந்து ஒரு படியை அச்செடுத்து, தேவையான எண்ணிக்கையில் நகல் (Xerox) எடுக்கிறார்கள். பின் அதைப் புத்தகமாகத் தைத்து அதை வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்.

தாய் மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள் நம் கண் முன்னால் நமக்கு அருகிலேயே இருக்கிறார்கள். ஆனால் நம் இளிச்சவாய்த் தமிழர்களோ தாய் மொழிக் கல்வியைத் தவிப்பதற்காக, வலியப் போயத் தேவை இல்லாத சிரம்ங்களை ஏற்றுக் கொள்கின்றனர். அது மட்டும் அல்ல; தமிழ் வழிக் கல்வி என்பதைப் பற்றி விவாதிப்பதையே மரியாதைக் குறைவாக நினைக்கின்றனர்.

மிகுந்த சிரமப்பட்டு, சிலரிடம் வலுக்கட்டாயமாக விவாதம் செய்த பொழுது, ஆங்கில வழிக் கல்வியிலும் எல்லாம் புரியத் தான் செய்கிறது என்றும், தமிழில் தான் புரியும் என்று கூறுவது வெறித்தனமான (Fanatic) வாதம் என்றும் கூறினர். ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கொட்டை வெந்தால் சரிதான் என்பது, நல்ல சட்டிகள் கையிருப்பில் இல்லாத பொழுது செய்யும் வாதமாகத் தான் இருக்க முடியும். நல்ல சட்டியில் கொழுக்கொட்டை சுடும் பொழுது எரிபொருள் செலவும் குறைவாக இருக்கும்; கை சுடாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்; கொழுக்கொட்டை விரைவாகவும் வேகும்; சுவையும் முழுமையாக இருக்கும். ஓட்டைச் சட்டியில் இவை அனைத்திலும் குறைபாடுகள் இருக்கும்.

அதே போல் பிற மொழிவழியில் கல்வி கற்போரின் அறிவுத் திறன் வேலை செய்வதற்கும், வாழ்க்கை நடத்துவதற்கும் போதிய அளவு இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவனே தாய் மொழியில் கற்றிருந்தால் இதைவிட அறிவுத் திறன் மிகுந்து விளங்கி இருக்க முடியும். அதனால் தான் சென்னையில் வாழும் வட இந்தியர்கள், தாய் மொழிகளில் பாடப் பத்தகங்கள் கிடைக்கவில்லை என்றாலும், நகல் எடுத்தாவது தாய் மொழிகளிலேயே படிக்க முற்படுகின்றனர்.

அரைகுறை அறிவோடு மக்களுக்குச் சேவை செய்யக் கூடாது என்ற கராணத்தினால் தான், பாதிரியார் / மருத்துவர் சாமுவேல் ஃபிஸ்க் கிரீன் ஓய்வு ஒழிச்சல் இன்றி ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வழியில் மருத்துவக் கல்வியை அளித்தார்.

இவ்வளவு விவரங்களையும் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாலும், தமிழ் வழிக் கல்வி வேண்டாம்; ஆங்கில வழிக் கல்வி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் இளிச்சவாயர்களை என்ன செய்வது?

- இராமியா

Pin It