கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வணக்கம்,

என் பெயர் Chinglen Kshetrimayum, நான் மணிபூரியைச் சேர்ந்தவன் மற்றும் நான் யாருக்கும் அச்சுறுத்தலாக இருப்பவன் அல்ல. நான் இம்பால் சைனிக் பள்ளியில் 5 வருடங்கள் படித்திருக்கின்றேன், அப்பொழுது நான் எங்கள் பள்ளியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதும் உண்டு. நான் அப்பொழுது பெருமையுடன் நமது தேசிய கீதத்தைப் பாடுவேன் (நம் தேசிய கீதத்தில்  மணிப்பூர் அல்லது வட கிழக்கு மாநிலங்களைப் பற்றி ஏதும் இல்லை என்றாலும்).

manipur 380

நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த பொழுது, பள்ளியில் காலை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. காலை கூட்டம் முடிந்ததும் நாங்கள் தீபாவளி விடுமுறைக்குச் செல்லலாம் என்று அறிவித்து இருந்தார்கள்.  அதனால் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம். இறுதியில் நாங்கள் தேசிய கீதத்தைப் பாடினோம், மிகவும் உற்சாகத்துடன் பாடினோம். பள்ளியின் நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்த என் தந்தை, மாணவர்கள் உற்சாகத்துடனும் அழகாகவும் தேசிய கீதத்தைப் பாடுவதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு எதாவது நற்செய்தி உள்ளதா என்று என்னிடம் கேட்டார். நாம் இப்பொழுதே வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறினேன். அவரும் பெருமை அடைந்தார்; நானும் பெருமை அடைந்தேன்.

நான் மணிபூரியில் இருந்த பொழுது, நான் ஒரு இந்தியன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மணிபூரியில் இருந்து வெளியே உள்ள மற்ற இந்தியப் பகுதிகளுக்கு சென்றபொழுது நான் அதைக் குறைவாகவே உணர்ந்தேன். திடீரென்று என் இருப்பு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது. மற்றவர்கள் என்னை துடைத்து எறியத் தயாராக இருந்தார்கள். ஆனால் விசயம் என்னவென்றால், நான் பிறந்த இடம் இந்திய வரை படத்தில் இருக்கக்கூடிய ஒரு இடமாக இருந்த ஒரு காரணத்தால் நான் என்னை ஒரு இந்தியன் என்று நினைத்துக் கொண்டேன்.

பன்முகத்தன்மையை பிடிக்காத மக்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை நான் மெதுவாக உணரத் தொடங்கினேன். அவர்களுக்கு அவர்கள் பழக்க வழக்கத்தில் இருந்து வேறுபடுபவர்களை, - அது அவர்களின் உணவுப் பழக்கவழக்கமாக இருக்கலாம், ஆடை விசயமாக இருக்கலாம் - பார்ப்பதற்கோ அல்லது தலை முடி பாணியிலோ வேறுபடுபவர்களைக் கண்டு அவர்கள் அச்சுறுத்தல் உணர்வு கொள்கிறார்கள். அவர்கள் சில விசயங்களை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

திரு ஜெனரல் பக்ஷி, மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் உங்கள் தேசிய கொடியைத் தவிர இன்னொரு அதி முக்கியமான ஒன்று உள்ளது. அசாம் ரைபிள்  இராணுவ முகாம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் உள்ளது. எனவே நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், நீங்கள் தான் வெற்றி பெறுகிறீர்கள். எனது ஊரின் இரு பகுதிகளிலும்  அசாம் ரைபிள்  இராணுவ முகாம் உள்ளது, ஆதலால் நான் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவன் தான்.

சரி, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் அனைவரும் மிருகங்கள். காட்டில் வாழும் மிருங்கங்கள். காட்டில் மட்டுமே “வலிமையே வெல்லும்” என்ற சட்டம் உள்ளது. வடகிழக்கு மாகாணங்களிலும், காஷ்மீரிலும் நீங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற சட்டங்களைப் போட ஒரே காரணம் நீங்கள் வலிமையானவர்கள். சொல்லுங்கள் திரு ஜெனரல் பக்ஷி அவர்களே, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்( AFSPA) நீக்க இப்பொழுது சரியான நிலைமை இல்லை என்று நீங்கள் சொன்னால், எப்பொழுது அந்த சரியான நிலைமை வரப் போகிறது? இன்று வரப்போகிறதா இல்லை, நாளை வரப்போகிறதா, அல்லது 100 வருடங்கள் கழித்து வரப்போகிறதா? உங்களிடம் இதற்கான விடை உள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே நீங்கள் சொல்லுங்கள், உங்களைப் பொருத்தவரை “சரியன நிலைமை” என்றால் என்ன? அது அனைத்து ஆண்களையும் கொலை செய்து நீங்கள் அனைத்து பெண்களையும் வல்லுறவுக்கு ஆளாக்கும் போதா?

நீங்கள் விவாதத்தில் அழுதீர்கள். அதனால் ஸ்மிரிதி இராணி வருத்தம் அடைந்து உங்களை அழைத்துப் பேசினார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) என்னும் சட்டத்தை, எந்த சிறப்புச் சட்டம் இராணுவத்துக்கு யாரை வேண்டுமானாலும் வெறும் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யலாம் என்று சொல்கிறதோ, எந்தச் சிறப்புச் சட்டம் மக்கள் அதற்கு நீதி வேண்டி நீதி மன்றத்துக்குச் செல்ல முடியாது  என்று சொல்கிறதோ, அந்தச் சட்டத்தை நீக்கக் கோரி 15 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி நீங்கள் என்ன கூறப் போகிறீர்கள்? மக்கள் இந்திய கொடியை எதிர்ப்பதற்குக் காரணம் நீங்கள் உங்களை தேசியக் கொடியுடன் அடையாளப்படுத்தி கொள்கிறீர்கள், அதனால் நீங்கள் இந்தியன் என்று பெருமை கொள்கிறீர்கள். ஆனால் நாங்கள் எங்களை இந்தியன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும்போது எங்களுக்கு இனவாத கருத்துக்களே கிடைக்கின்றன. அதனால் இயல்பாகவே நாங்கள் மோசமாக உணர, உங்களுக்கு நாங்கள் அவ்வாறு உணர்கின்றோம் என்று தெரிய, நீங்கள் எங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற சட்டங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.

ஐயா பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட “Armed Forces Special Power Ordinance” போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்காக நீங்கள் அவர்களை எதிர்க்கிறீர்கள் என்றால், பிறகு ஏன் நீங்கள் பிரிட்டிஷார் உங்கள் மீது போட்ட சட்டங்களை விட மோசமான சட்டங்களை எங்கள் மீது போடுகின்றீர்கள்? அதுமட்டும் அல்லாமல் நீங்கள் எங்களை அமைதியாக இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கின்றீர்கள். மானுடனாய் பிறந்த ஒவ்வொருவரும் அதை எதிர்ப்பார்கள். அப்படி நாங்கள் அதை எதிர்க்கும் போதெல்லாம் நீங்கள் எங்கள் மீது தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள். அதனால் தான் நான் உங்களை மிருகம் என்று கூறுகின்றேன்.

மக்களை கட்டுப்படுத்த தங்கள் சக்தியை பயன் படுத்தும் யாரும் மிருகங்களுக்கு மேலானவர்கள் அல்ல. நீங்கள் இந்திய இராணுவம் மற்றும் இந்திய கொடிக்கு எதிராக வரும் குரல் கொடுப்பவர்களை, நீங்கள் “இந்தியாவுக்கு ஏதிரானவர்கள்” என்று கூறினால், ஒட்டுமொத்த மணிப்பூரும் காஷ்மீரும் “இந்தியாவுக்கு எதிரானவர்கள்” தான். அவ்வாறு இருக்கும் பொழுது இந்திய இராணுவம் மணிபூரிகளின் நிலத்திலும், காஷ்மீரிகளின் நிலத்திலும் என்ன செய்து கொண்டிருக்கிறது? மணிப்பூரும் காஷ்மீரும் இந்திய வரைபடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது?

திரு அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் ஒரு விவாதம் நடத்தி அதில்  "ஆம்" அல்லது "இல்லை" கேள்வியை மக்களிடம் கேட்கிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தேவை “ஆம்” மட்டுமே. உங்களுக்கு “ஆம்” மட்டும் தான் தேவை என்றால் முதலில் நீங்கள் ஏன் இந்த விவாதத்தை நடத்துகிறீர்கள்?

எனக்கு நீண்ட சொற்பொழிவு கொடுப்பதிலோ அல்லது மக்களை  என்னை மட்டும் கேட்கச் செய்வதிலோ நம்பிக்கை இல்லை. எனவே நான் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன். உங்கள் பதில்களுக்குப் பிறகு நான் மீண்டும் எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு,

ஒரு மனிதன்.

தமிழில் - செ.நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.