இன்றையத் தமிழகப் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களுல் தலையாயைச் சிக்கல், தங்கள் பிள்ளையை எந்த பள்ளியில் சேர்த்து விடுவது? என்பதாகத்தான் இருக்க முடியும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை அல்லது பயம் அல்லது இரண்டும் கலந்து பெற்றோர்களை வாட்டி வதைக்கும் சிக்கலாக இது ஒவ்வொரு ஆண்டும் தலைதூக்கி வருகிறது.

ஏழைகள், நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம், உயர்தட்டு வர்க்கம் என்று பிள்ளைகளையும் - பள்ளிகளையும் சமூகம் பிரித்தே வைத்திருக்கிறது. இந்தியாவின் சிறப்பு மிக்க(?) வர்ணாசிரமப் பிரிவினையோடு இந்த வர்க்கப் பிரிவினையும் சேர்ந்து கொண்டு சமூக முடக்கத்தை வளர்த்து வருகிறது.

பிள்ளைகளின் கல்வி குறித்த கவலையை விட, தங்கள் பிள்ளை எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கப் போகிறது என்பதில்தான் பெற்றோர்களின் பெருமை, கவுரவம் எல்லாம் அடங்கியிருக்கிறது. வருணாசிரமத்தில் பார்ப்பனரின் இடத்தைப் பிடிக்க எல்லா வர்ணத்தாரும் முயல்வதுபோல இங்கு உயர் வர்க்கப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளையும் சேர்த்துவிட ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். தங்களின் இயலாமையால் அவரவர் நிலைக்குத் தக்கவேனும் ஏதேனும் ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். அரசுப் பள்ளியில் படிப்பது தரக்குறைவானதாகக் கருதும் நிலை அதிகரித்து வருகிறது.

ஒன்றியப் பள்ளிக்கூடங்கள், அரசு பள்ளிக்கூடங்கள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங்கள், இன்டர்நேஷனல் பள்ளிகள் என பள்ளிக்கூடங்கள் மாணவர்களை பிரித்துப் போட்டு வருகின்றது. ஒவ்வொரு பள்ளிகளும் தனிச்சிறப்புகளைக் கூறி பிள்ளைகளை அறிவாளி ஆக்குவதாக விளம்பரப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 100 விழுக்காடு தேர்ச்சியை நோக்கி றெக்கை கட்டிப் பறக்கின்றன. ஆனால் கல்வியின் வடிவில் நவீன தீண்டாமை தலையெடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வியின் ஒட்டு மொத்த நோக்கமே வியாபரமும், நுகர்வுமாக மாறிவிட்டது. பள்ளிக் கல்வியில் உள்ள வேவ்வேறு பிரிவுகளில் உள்ள நோக்கங்களை மறைத்து விற்பதும் வாங்குவதும் மட்டுமே முதன்மையாக்கப்பட்டுவிட்டது.

மத்திய அரசு நிறுவன பணியாளர்களின் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக தொடங்கப்பட்ட சி.பி.எஸ்.சி. மத்திய பாடத்திட்ட பள்ளிகள் இன்று எல்லோரையும் சேர்த்துக்கொண்டு கல்வியில் பெரியண்ணன் போக்கைக் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது. மத்திய அரசை ஆளும் கட்சிகளின் கொள்கை விளக்கப் புத்தகங்களாக இப்பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மாறி வருகின்றது. பொது நோக்கம் மறைக்கப்பட்டடு, மத்தியப் பாடத்திட்டம் மிகச் சிறந்தப் பாடத்திட்டமாக விளம்பரப்படுத்படுகிறது. இப்பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் துரத்தப்படுகிறார்கள். மாநிலப் பட்டியலில் இருந்தக் கல்வித்துறை மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு இன்று கல்வியில் எல்லா துறைகளிலும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதை எதிர்கொள்ளும் நிைக்கு நம்மை கொண்டு வந்து விட்டது இந்த சி.பி.எஸ்.சி. பள்ளிகள்தான். தொடக்கத்தில் இருந்த நோக்கம் முற்றிலும் மாற்றப்பட்டு மாநில அரசின் உரிமைகளில் தலையிடக்கூடிய நிலைக்கு இப்பள்ளிகள் மாறி வருகின்றன என்றால் அது மிகையில்லை.

மாநிலப் பட்டியலில் இருந்து, எப்படி மத்திய அரசு கல்வித்துறையை விழுங்கி வருகிறதோ, அதே போல் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் மாறி மாறி வாழும் இந்தியக் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் கல்விக்கூடம் என்ற பள்ளிகளின் வியாபாரம் இப்போது இங்கு கடைவிரிக்கத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பன்னாட்டுப் பள்ளிகளின் படையெடுப்பு தங்குதடையின்றி நடந்து வருகிறது. இந்த இன்னர்நேஷனல் பள்ளிகளால் இன்று இந்தியப் பள்ளிகளும், இந்திய மாணவர்களும் பண்பாட்டு ரீதியாகவும் பாதிப்படைந்து வருகிறார்கள். பன்னாட்டுத் தரத்தில் கல்வியை வழங்குவதாகக் கூறிக்கொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் கவர்ந்து வருகிறது இப்பள்ளிகள்.

அதோடு கல்வித்துறை மூலம் கோடி கோடியாக பணம் பண்ணும் இந்திய முதலாளிகளுக்குப் போட்டியாக வெளிநாட்டு பெரும் வணிகக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைக்க இந்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

தொடக்கக் கல்வி என்பது அறம் - நெறி தொடர்பிலிருந்து விடுபட்டு வசதி, வாய்ப்பு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பள்ளிகள் சமூக மதிப்புகளைப் பேசுவதற்குப் பதிலாக சமூக வசதி வாய்ப்புகளைப் பற்றி பேசி வருகின்றது. எங்கள் பள்ளியில் GPRS கருவி உள்ளது என்றும், எங்கள் பள்ளியில் Smart Class Room உள்ளது என்றும், எங்கள் பள்ளியில் படித்தால் மாணவர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே இருப்பார்கள் என்றும், எங்கள் பள்ளியில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட CD களின் மூலம் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது என்றும் எங்கள் பள்ளியில் அரபி, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பல மொழிகள் கற்றுத்தரப்படுகிறது என்றும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றார்கள் தனியார் பள்ளி வியாபாரிகள் மன்னிக்கவும் கல்வித்தந்தைகள். நாமும் குழந்தைகளுக்கு திருவிழாக்களில் வாங்கித்தரும் பொம்மைகளைப் போல கல்வியையும் விலை கொடுத்து வாங்கிக் கொடுக்கப் பழகி வருகிறோம்.

அன்னிய மொழி, அன்னியப் பண்பாடு என்று எல்லாவற்றிலும் தனக்குத் தெரியாததை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகுந்தப் பிரயத்தனம் செய்து வருகிறோம்.

சான்றோர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படும் மதிப்பியல் கல்வி என்ற கோட்பாடுகூட இன்று வணிகமாக்கப்பட்டு, யோகா என்றும், தியானம் என்றும், இசை என்றும் வியாபாரம் செய்யும் நிலை அதிகரித்துவிட்டது.

வியாபார ஊடக வெளிச்சத்தாலும், விளம்பர வெளிச்சத்தாலும் வளர்ந்து வரக்கூடிய தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்துவிட பெற்றோர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அந்தப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பதைப் பெருமையாகக் கருதிக்கொள்கிறார்கள்.

ஒரு பழைய படம்: விசு, செந்தில் இரண்டு பேரும் ஊர் ஊராகச் சென்று ஏலத்திற்கு ஜவுளித் தொழில் செய்து வருவார்கள். விசு ஒவ்வொரு துணியாக எடுத்து ஏலம் போடுவார். செந்தில் அவருக்கு உதவியாக இருப்பார். ஒரு போர்வையை விசு எடுத்து "இந்தப் போர்வையில் படுத்தல் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும், திருமணம் நடந்தவர்களுக்கு உடனே குழந்தை பாக்யம் கிடைக்கும்" என்று கூறி "ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்" என்பார். விசுவோடு இருக்கும் செந்திலே அந்தப் போர்வையை அதிக விலைக்கு ஏலம் எடுத்துவிடுவார். அப்போது விசு "ஏன்டா இந்தப் போர்வையோட விலைதான் உனக்குத் தெரியுமே பிறகேன் அதிக விலைக்கு ஏலம் எடுத்த " என்பார், அதற்கு செந்தில் " இந்தப் போர்வையில படுத்தா உடனே திருமணம் நடக்கும்னு நீங்கதானே சொன்னீங்க அதனாலதான் நான் அதிக விலை கொடுத்து வாங்கிட்டேன்" என்பார். விளம்பரத்திற்காக கூறப்படும் வார்த்தை மோகத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகிறது. அதில் விடயம் தெரிந்த அரசுப் பள்ளி ஆசிரியச் சமூகமும் விட்டில்களாய் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுப்பதுதான் பரிதாபத்திற்குரியது.

எப்படியாவது அரசு வேலை வேண்டும் என்று ஆளாய்ப் பறக்கும் இந்த காலத்தில் அரசுப் பள்ளிகளை தரமிழக்கச் செய்யும் வேலையில் அரசு இயந்திரம் முழு மூச்சோடு இயங்கி வருகிறது. அது தெரியாமல் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ந்துவிட்டுவிட்டு தாங்கள் பணிபுரியும் அரசுப் பள்ளிகளை கவனியாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் அரசு, கல்வி வழங்குவதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு முற்றிலும் தனியார் துறையிடம் கல்வியை ஒப்படைக்கும் நிலை உருவாகும். இதனால் எதிர்காலத்தில் கல்வித்துறையில் அரசு வேலைவாய்ப்பே இல்லாமல் போகும் அபாயம் அரங்கேறும். இப்போதே பல ஊர்களில் பல அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு வருவது நாம் அறிந்து வரும் உண்மை.

மக்களின் அறியாமையை அரசு பயன்படுத்திக் கொள்வதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. மக்களிடம் உள்ள ஆங்கிலக் கல்வியின் மோகத்தால், அரசு பள்ளிகளிலும் ஆங்கிலக் கல்வியைக் கொடுக்கிறோம் என்று கூறி ஓட்டு வாங்கும் கட்சிகள் நம்மிடம் பேர்வாங்க நிற்கின்றன. தாய் மொழிக் கல்விதான் சிறந்தது என்று கூறிய அப்துல் கலாமுக்கு விழா எடுப்பதும் அரசுதான், ஆங்கில வழிக் கல்வியை வலிந்து கொடுப்பதும் அரசுதான். அதற்கு அவர்கள் கூறும் காரணம் மக்களின் விருப்பம் என்பதுதான். இப்போதெல்லாம் அப்துல் கலாம் படம் இல்லாத தனியார் பள்ளிகளைப் பார்க்க முடிவதில்லை. அவர் படத்தை மாட்டிக்கொண்டு அவரின் கொள்கையைப் பாடமாக்க மறுக்கிறது. ஒருபக்கம் கருணாமூர்த்தி காந்தியைப் பற்றியும் பேசுவார்கள், மறுபக்கம் கல்வியில் கட்டணக் கொள்ளையும் அடிப்பார்கள். வேசித்தனம் செய்யும் ஒருவர் கற்புநிலை பற்றி பேசுவதுபோல் உள்ளது இன்றைய கல்வியின் நிலை.

நடத்தைக்குக் வராத எந்த நெறியும், அறமும் எழுதப்படுவதால் எந்த பயனுமில்லை என்பது சான்றோர் கூற்று. ஆனால் இங்கு எழுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு படிக்கப்படும் அறம் எல்லாம் மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமே! அறம் பிறழா வாழ்வு குறித்து எந்த கவலையும் இல்லை. அதற்கும் மேலே போய் அறம் பிறழ் வாழ்வே எதார்த்த்த வாழ்வாக கற்பிக்கப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

மதிப்பிழந்து, மாண்பிழந்து, தரமிழந்து, தகுதியிழந்து பணம், பணம், பணம் என்று ஆளாய் பறக்கும் நிலையை மாற்றுவோம், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம், அனைவரும் அரசுப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்போம். எளிமையைக் கற்பதும், ஏழ்மையைக் கற்பதும்தான் கல்வி. பகட்டையும், பசப்பையும் கற்பதல்ல கல்வி. அறம் தழைக்க அரசுப் பள்ளிகளை தாங்குவோம்.

- நா.​வெங்க​டேசன், ​பேராவூரணி

Pin It