முன்னுரை

     கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” எனும் வரிகளுக்கு ஏற்ப இன்று தமிழினமும் தமிழ் மொழியும் உலகமெல்லாம் பரந்து, விரிந்து, ஆலமரமாக உயர்ந்து, உயர்தனிச் செம்மொழியாக நிற்கின்றது. உலகமெல்லாம் தமிழ்த் தாய்க்கு புகழாரம் சூட்டப்படுகின்றது. உலகத் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வதற்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணிகளை செய்வதற்கும் இன்று ஒரு சில தமிழாய்வு நிறுவனங்களும், தமிழ்ச் சங்கங்களும்,தமிழாய்வு மன்றங்களும், பல்கலைக்கழகங்களும் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies). இவ்வாய்வுக்கட்டுரையானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றம், நிறுவன உருவாக்கத்தில் தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு, நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள், நிறுவனத்தில் தனிநாயகம் அடிகளார் பெயரில் அமைந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்/ஆய்வுகள் மற்றும் நிறுவனப் பதிப்புப் பணிகள் ஆகியன குறித்து விரிவாக ஆய்கின்றது.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தோற்றம்

   Thaninayagam 350 தமிழ் மொழியியல், இலக்கியம்,தொன்மையியல், பண்பாட்டியல், சமூக மானுடவியல் எனப் பல துறைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வுக் கல்வியை வழங்கவும், பட்டங்கள் வழங்கவும் தகுதி மிக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைப்பதைப் பற்றிச் சென்னை –இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது (1968) விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்வரைவை பூனே தக்கானக் கல்லூரி –ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் எஸ்.எம்.கத்ரே அவர்களால், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அமைப்பியல் கூறுகள் என்னும் தலைப்பில் சென்னை –இரண்டாம் தமிழ் மாநாட்டின் போது எழுத்துரை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; அவ்வெழுத்துரையின் முக்கியத்துவம் கருதி இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் இடையே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தேவை யாவை என்பது குறித்து மாநாட்டு குழுவினரால் அலசப்பட்டுள்ளது. அக்குழுவில் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் சி.என் அண்ணாதுரை, அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், யுனெஸ்கோ இந்திய தேசிய ஆணையத்தின் அலுவலர்   கே.சுப்பிரமணியம் போன்றோர் குழுமியோரில் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிறுவனம் எவ்வாறு அமையவேண்டும் அதன் நோக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் அக்குழுவினரால் தமது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பட்டங்கள் வழங்கும் கல்வி நிலையமாக நிறுவனம் ஆகிவிடலாகாது. தமிழக அரசு, இந்த நல்ல திட்டத்திற்கு நிதிநல்கும்- நற்றுணைப்புரியும் என்று அண்ணாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழகத்தின் தலைநகர் சென்னை, தரமணியில் 1970 அக்டோபர் திங்கள் 21 ஆம் நாள் உதயமாகியுள்ளது - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இது ஒரு தன்னாட்சி நிறுவனமாக, இன்று தமிழக அரசின் நிதி நல்கையுடன் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் பங்களிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றத்திற்கு எவ்வாறெல்லாம் அடிகளார் தமது பங்களிப்பினைச் செலுத்தினார் என்பது உலகம் அறியும். ஒரு மரம் வேண்டுமென்றால் அதற்கு விதை இடவேண்டும் அதுபோல இந்நிறுவனத்திற்கு வித்திட்ட பெருமகனாரும் அடிகளாரே ஆவர் என்பது அறிஞர்களின் முடிபு.

தமிழ் இலக்கியத்தின் பெருமையினையும் தொன்மையினையும் தந்நிகரற்றத் தன்மையினையும் வெளிப்படுத்தியதோடு அதை உலகளாவிய நிலையில் பரப்ப முற்பட்டவர் தனிநாயகம் அடிகளார். தமிழிற்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது அவர் முயற்சியில் உருவானவையை உலகத் தமிழ் ஆய்வு மன்றமும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும்.(இரபிசிங்  1999: VI)

உலகத் தமிழ் அறிஞரையெல்லாம் ஒன்று திரட்டும்,ஒருங்கிணைக்கும் பாலமாக,உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தையும் (1964) உருவாக்கினார். இம்மன்றத்தின் திட்டப்படி, உலகத் தமிழ் மாநாடுகள் நடத்திடவும்,சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றவும் மூலக்காரணமாகத் திகழ்ந்தார் (விமலானந்தம் 2003: 2)

தவத்திரு தனிநாயகம் அடிகளார் உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தையும் உருவாக்கியவர்களில் ஒருவர். (இராமர் இளங்கோ 1997: IV)

உலகத் தமிழ் ஆய்வுத் துறையில் அடிகளார் தம் உலகப் பயணங்கள், தொடர்புகள், கட்டுரைகள்,விரிவுரைகள், நூல்கள், முத்திங்கள் இதழ், அரையாண்டு இதழ் என்று பலவகையிலும் தொடர்ந்து ஆற்றிவந்த பணிகளே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக வடிவம் பெற்றன என்பார் பேரா. வேலுப்பிள்ளை. (அமுதன் அடிகள்  1993 : 122)

அதேபோல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எவ்வாறு செயல்படவேண்டும். அதன் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் நித்தம் சிந்தித்தவர் அடிகளார். உலகத் தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதியும் சந்தித்தும் ஆதரவைத் திரட்டியவர். பாரீஸ்- தமிழ் மாநாட்டில் நிறுவனம் குறித்த தமது வேண்டுகோளை அறிவித்தவர்; விதையையும் ஊன்றி நீரையும் ஊற்றியவர் அடிகளார் அவர்களே என்பது இதன் மூலம் அறியமுடிகிறது.

‘பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றப் பொதுச் செயலர் என்ற முறையில் தனிநாயகம் அடிகள் அவர்கள் சென்னையில் அமையவிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு ஆதரவு நல்குமாறு மலேசியாவின் அன்றைய கல்வி அமைச்சருக்கும், சிங்கப்பூரின் அன்றைய கல்வி அமைச்சருக்கும்,  ஆணையருக்கும் மடல் வரைந்து, பின்னணியில் பாடுபட்டு வரும் சென்னை ஆ. சுப்பையாவுக்கு 11 அக்.1968 இல் அனுப்பி, உரிய அம்மூவர்க்கும் அஞ்சல் செய்ய ஆற்றுப்படுத்தினார்.

வேண்டுகோள்: பாரிஸ் மாநாட்டின் நிறைவு அமர்வுக்குத் தலைமை தாங்கிய     தனிநாயகர் நிகழ்ச்சி நிரலில் முதல் குறிப்பு: 1971 இல் கூட இருக்கும் யுனெஸ்கோ பொதுப் பேரவைக் கூட்டத்தில், சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா முன் மொழியும்போது, அதனை பிரான்சு ஆதரித்து வழிமொழிய வேண்டும் என பிரெஞ்சு தேசிய மேம்பாட்டு ஆணையத்திற்குப் பரிந்துரைக்கும் கருத்தை, அவையினர் ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும் எனும் வேண்டுகோள், அவையினரால் பேராரவாரத்திற்கிடையில் நிறைவேற்றப்பட்டது.

அறிக்கை  :  தீர்மானம் நிறைவேறியதும், யுனெஸ்கோ நிதியுதவியுடன்  ஆ. சுப்பையா, 14 நாடுகள் பயணித்து, அங்குள்ள பல்கலைக் கழகங்கள், பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, நிறுவனம் ஆற்றக் கூடிய நற்பணிகள் பற்றியும், அவற்றுக்கான வரவேற்பின் வளமை எத்தகையது என்பது பற்றியும் ஆராய்ந்து யுனெஸ்கோவுக்கு ஆய்வு அறிக்கை அளித்தார். அறிக்கையை ஏற்ற யுனெஸ்கோ, மூன்றாண்டுகளுக்கான திட்டங்களை வரைந்திடப் பன்னாட்டுப் பிரதிநிதிகள் குழுவினை அமைத்தது.

இரண்டுக்கும் இடையே: முன்னம் 1964 இல் தில்லியில் அமைத்த பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையேயான தொடர்பினை வரையறுக்க ஐவர் குழு அமைக்கப்பெற்றது. அனைத்து குழுக்களிலும் அடிகளார் இடம் பெற்றார்.

நன்றி : இத்தருணத்தில் நிறுவனம் உருவாகக் கரு, கனா, காட்சி, உழைப்பு, விடாமுயற்சிகட்கெல்லாம் மூல காரணியாக இருந்து, வேராக விளங்கி முழுப் பொறுப்பும் ஏற்று நனவாக்க அரும்பாடுபட்ட ஆ. சுப்பையா அவர்கட்கு நன்றி பாராட்டினார் நாயகர். அவருடைய ஊக்கம், பார்வை, விடாத் தொடர் முயற்சி போன்றனவே இந்நிறுவனம் நிறுவப்பெறக் காரணிகளாய் இருந்தன என்பது மறத்தற்கில்லை என்றார்.

யாழ் மாநாட்டில்: யாழ்ப்பாணத்தில் நான்காம் உலகத்தமிழ் மாநாடு நடக்கும் போது உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுச் செயல்படவும் தொடங்கிவிட்டது. அம்மாநாட்டில் அடிகளாரின் தொடக்கவுரை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைய, பன்னாட்டுத் தமிழ் ஆய்வு மன்றம், தமிழக அரசு, யுனஸ்கோவின் இந்திய ஆணையம் மூன்றும் உதவி புரிந்தன. சிறிய அளவில் நிறுவனம், தன் பணியினைத் தொடங்கியுள்ளது. எனினும் நாளடைவில் இது உலக நிறுவனமாக ஓங்கி வளரும்; உயர்ந்தோங்கி ஒளிரும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. வெளிநாட்டு அறிஞர்களுக்கு உரிய வாய்ப்புகளை, இந்நிறுவனம் மூலமே நாம் வழக்கிட வேண்டும். பலகலைக்கழகங்கள்ள், பட்டங்கள் வழங்குவதில் கவனம் செலுத்திக் கொண்டு, ஆராய்ச்சியை, பட்டமேற்கல்வி நிறுவனங்களிடம் விட்டுவிடும். எனவேதான், இந்நிறுவனம் உலகளாவிய ஒருபெரும் நிறுவனமாக நிலவ வேண்டும் என்ற பேராவல் பூண்டுள்ளோம்’ என்றார்’. (விமலானந்தம் 2003: 78,79 )

நிறுவனத்தின் நோக்கங்கள்

  • தமிழியல் உயராய்வினை வளப்படுத்துதல்,
  • அயல்நாடுகளில் தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்,
  • தமிழாய்வாளர்களுக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம்,வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு மருத்துவம்  எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல்,
  • உயர் தமிழாய்வினை ஊக்குவிக்கும் கல்விச் சூழலையும் நூலகத்தையும் உருவாக்குதல்,
  • உலகத் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழாய்வினை வளப்படுத்துதல்,
  • உலக அளவில் நடந்துவரும் தமிழாய்வுகளை ஒருங்கிணைத்தல்,
  • தமிழைத் தாய்மொழியாக்க கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழ் கற்பித்தல்,
  • உலகத் தமிழர்களின் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத் தளத்தை உருவாக்குதல்,
  • தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல்,

எனப் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

நிறுவனப் புலங்களும் பணிகளும்

     தமிழ் உயராய்வு என்ற நிலையில் திகழும் இந்நிறுவனத்தில் நான்கு புலங்கள் செயல்பட்டு வருகின்றன. 1. தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம், 2. சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலம் 3. தமிழ் இலக்கியம் (ம) சுவடியியல் புலம் 4. அயல்நாட்டுத் தமிழர் புலம். இந்நான்கு புலங்களின் வழி இலக்கணம், இலக்கியம், தமிழர் சமூகம், தமிழர் பண்பாடு, மொழியியல், நாட்டுப்புறவியல் மொழிபெயர்ப்பியல், இலக்கிய இலக்கணப் பதிப்புகள், சுவடிப்பதிப்புகள், தமிழர் மரபு குறித்த ஆய்வுகள், பயனாக்க மொழியியல் ஆய்வுகள் அயல்நாட்டுத் தமிழர் (ம) தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் ஆகியவற்றை அந்தந்த புலங்களின் பேராசிரியர்களால் குறுந்திட்ட ஆய்வுகளாகவும் பெருந்திட்ட ஆய்வுகளாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்துடன், உலகத் தமிழ் அறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையில் பன்னாட்டு/தேசிய கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், முதுகலை பட்ட வகுப்பு மற்றும் பட்டய வகுப்புகள் நடத்துதல், இளங்கலை அறிஞர் பட்ட மாணவர்களுக்கும், முனைவர் பட்ட மாணவர்களுக்கும் வழிகாட்டுதல் ஆகிய பணிகள் நிறுவனத்தில் செம்மையாக நடைபெற்று வருகின்றன. இத்துடன், தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கு தமிழ் கற்பித்தல் பணியும் சிறப்பாக நடந்துவருகின்றது. 

நிறுவன நூலகம் 

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மிக இன்றியமையாத அமைப்பாக நூலகம் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், ஓலைச்சுவடிக்களும், அரிய நூல்களும் உள்ளன. இது தவிர தினசரி, வார, மாத, காலாண்டு, அரையாண்டு, ஆண்டிதழ்களும் உள்ளன. மேலும், முனைவர் பட்ட ஆய்வேடுகளும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகளும் இடம்பெற்றுள்ளன. இது தவிர கருத்தரங்குகள், மாநாடுகள், இலக்கிய நுட்பங்கள் தொடர்பான ஒளி, ஒலி, நாடாக்கள் சேகரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

அறக்கட்டளைகள் 

    அறக்கட்டளைகள் நிறுவி அறஞ்செய்தல் தமிழரின் பண்பாட்டு மரபு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன் அவர்களால் தமிழரின் இந்த பண்பாட்டு மரபைப் பின்பற்றும் வகையில் அன்பர்களையும் ஆர்வலர்களையும் நாடி அவர்களிடம் நிதிப்பெற்று 1983 இல் தொடங்கி நிறுவனத்தில் அறக்கட்டளைகளைகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுவனத்தில் அறக்கட்டளைப் பணிகளும் தொடங்கப் பெற்றன. ச.வே. சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில 14 அறக்கட்டளைகள்  நிறுவப்பெற்றுள்ளன. அவர்களைத் தொடர்ந்து, பின்னர் பொறுப்பேற்ற இயக்குநர்களாலும் இப்பணி தொடரப்பெற்றுள்ளது. இதன் பயனாக இன்று 35 அறக்கட்டளைகள் நிறுவனத்தில் அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றில்  தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் பெயரில் அமைந்த அறக்கட்டளையும் ஒன்று என்பது சிறப்பாகும்.

தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

தவத்திரு தனிநாயகம் அடிகளாரைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் 1992 இல் நிறுவனத்தில் ‘தவத்திரு தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை நிறுவப்பட்டது. பல நல்ல உள்ளங்கள் வழங்கிய நிதியுதவியைக் கொண்டும், கும்பகோணம் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியஸ் ஆண்டகையும் தவபெருந்திரு குன்றக்குடி அடிகளாரும் வழங்கிய பொருளுதவியைக் கொண்டும், அமுதன் அடிகளார் அவர்களின் முயற்சியால், கிறித்துவத் தமிழ் இலக்கிய கழகத்தால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தனிநாயகம் அடிகளார் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் தனிநாயக அடிகள்/கிறித்துவத் தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றப்பட வழிவகை செய்யப்பட்டது. அடிகளரின் பெயரில் அமைந்த இந்த அறக்கட்டளையின் சார்பில் இதுவரை ஆறு சொற்பொழிவுகள் நடைபெற்று அப்பொழிவுகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

சொற்பொழிவு 1 : அடிகளார் அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவினை  1992 ஆண்டு ‘தனிநாயகம்  அடிகளாரின் வாழ்வும் பணியும் எனும் தலைப்பில் அமுதன் அடிகள் அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பொழிவு தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கையையும், ஆற்றிய தமிழ்த் தொண்டினையும், இதழியல் பணிகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகி இப்பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளது.

சொற்பொழிவு 2 : தனிநாயக அடிகளாரின் ஆய்வுகள்  எனும் தலைப்பில் ம.செ. இரபிசிங் அவர்களால் 1995 ஆம் ஆண்டில் பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய ஆய்வை விரிவுபடுத்துவதிலும், வளப்படுத்துவதிலும் எந்தெந்த முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் தமிழ் இலக்கியத்தின் தொன்மையினை, பெருமையினை வெளிக் கொணர்வதில் எத்தகைய விடா முயற்சியும், ஆர்வமும் கொண்டிருந்தார் என்பதை மெய்பிக்கும் வகையில் இச்சொற்பொழிவு அமைந்துள்ளது.

சொற்பொழிவு 3‘தனிநாயகம் அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி’ எனும் தலைப்பில் முனைவர் ப.இறையரசன் அவர்களால் 1995 ஆம் ஆண்டு இவ்வறக்கட்டளையின் மூன்றாவது சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பொழிவு  தவத்திரு தனிநாயக அடிகளார் தாமே முன்னின்று நடத்திய ஆங்கிலம் மற்றும் தமிழ் இதழ்களைப் பற்றியும் அவருடன் தொடர்புடைய பிற இதழ்களைப் பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளது.

சொற்பொழிவு 4 : இவ்வறக்கட்டளையின் நான்காவது பொழிவு 2003 ஆம் ஆண்டு ‘உலக அரங்கில் தமிழ் எனும் தலைப்பில் மது.ச. விமலானந்தம் அவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் எல்லாம் தமிழ் ஒலிக்கும்படி செய்த அடிகளாரின் பணிகள் குறித்து விவதிக்கப்பட்டு நூலக வெளியிடப்பட்டுள்ளது.

சொற்பொழிவு 5 : ‘விவிலியத் தமிழ் எனும் தலைப்பில் முனைவர் ஆ .ஆலீஸ் அவர்களால் ஐந்தாவது பொழிவினை 2004 ஆம் ஆண்டு  நிகழ்த்தப்பட்டுள்ளது.. விவிலியத் தமிழின் நிறை குறைகளை ஆராயும் இவ்வாய்வு  சமய உள்ளடக்கம், தெரிவிக்கப்படும் நெறிமுறைகள் ஆகியவற்றை இனங்காண  உதவுவதுடன் அச்சமயக் கருத்துத் தெரிவிப்பில் ’கருத்து ’கேட்போர்’ ’கூற்று நிகழ்த்துவோர் ஆகியோர்க்குரிய பங்கினையும் தெளிவாக புலப்படுத்தும் விதத்தில் இப்பொழிவு அமைந்துள்ளது.

சொற்பொழிவு 6 : தலித் அறம்  எனும் தலைப்பில் அரங்க மல்லிகா அவர்களால் இவ்வறக்கட்டளையின் ஆறாவது பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித் அறம், விளைம்பு நிலை மக்கள் குறித்து இப்பொழிவு அமைந்துள்ளது. இப்பொழிவு அறக்கட்டளையின் பொருண்மையிலிருந்து முற்றாக விலகி அமைந்துள்ளது.

தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு சிறப்புச் சொற்பொழிவு

     தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டு நிறுவனத்தில் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. பொழிவு 14.06.2013 அன்று நிகழ்த்தப்பட்டது. பொழிவினை ஆக்ஸ்போர்டு, ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வரும் ஊடகவியலாளரும் கல்வியியல் ஆய்வாளருமான திருமதி றீற்றா பற்றிமாகரன் அவர்களால் மானிடம் போற்றும் தனிநாயகம் அடிகள் எனும் தலைப்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பொழிவு மானிடம் போற்றும் தனிநாயக அடிகளின் பண்புகள் வெளிபட்ட விதங்கள் மற்றும் மானிடம் தனிநாயக அடிகளைப் போற்றுகின்ற விதங்கள் குறித்து மிக விரிவாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது.

நிறுவனப் பதிப்புப் பணிகள்

    தமிழாய்வையும் வெளியீட்டையும் தலையாய பணியாகக் கொண்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1975 இல் தனது நூல் வெளியீட்டைத் தொடக்கியது. ச.வே. சுப்பிரமணியன் எழுதிய ’தமிழில் விடுகதைகள்’ எனும் நூல் நிறுவனத்தின் முதல் வெளியீடாகும். அதன் தொடர்ச்சியாக இதுவரை 751 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஓலைச் சுவடிகள் பதிப்பிலும் அரிய நூல்களின் மறு பதிப்பிலும் நிறுவனம் தனிக் கவனம் செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தனிநாயகம் அடிகளாரின் நூல்கள்  மறுபதிப்பு 

    இந்நிறுவனத்தைத் தோற்றுவிக்க காரணமாக இருந்த அப்பெருமகநாரின் நூல்கள் இன்று கிடைப்பதற்கரியதாக உள்ளன. எனவே இந்நிறுவனம் அவருடைய நூல்களை மறுபதிப்பு செய்வதைகயும் கடமையாகக் கொண்டு கீழ்வரும் ஐந்து நூல்களை இதுவரை மறுபதிப்புச் செய்துள்ளது.  ஒரு வகையில் அடிகளாருக்கு நிறுவனம் செய்யும் நன்றிக் கடனாகக் கூட இதைக் கருதலாம் என்பார் நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் இராமர் இளங்கோ. நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள அடிகளாரின் நூல்கள் :

1 .   Landscape and poetry:  A Study of  Nature and Classical Tamil Poetry (1997)

2.  Tamil Culture and Civilization (1997)

3. தமிழ்த் தூது ( 1998)

4.  Collected Papers of Thani Nayagam AdiGal(1995)

5. தனிநாயகம் அடிகளாரின் சொற்பொழிவுகள் (2002)

நிறுவன தமிழியியல் ஆய்வு இதழ் 

      இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது கூடிய அறிஞர் பெருமக்களால், புதியதோர் தமிழாய்வு இதழினைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஏடாக – அரையாண்டு இதழாக’ தமிழ் ஆராய்ச்சி இதழ் (Journal of Tamil Studies) 1969 இல் வெளிவந்துள்ளது. மூலக்காரணம் அடிகளாரே. முதலாமாண்டு இரு இதழ்களிலும், தமிழ் ஆராய்ச்சி மன்றம், இரண்டாமாண்டு இரு இதழில்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நெறிமுறைகள், வரைவுகள், குழுக்கள் முதலியன விரிவாகத் தரப்பட்டுள்ளன. அடிகளார் பொறுப்பில் ஈராண்டு நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. மூன்றாம் ஆண்டு முதல் (1972.செப்.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இதழாக வெளிவரத் தொடங்கி தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை 82 ஆய்வு இதழ்கள் வெளிவந்துள்ளன. இவ்வாய்வு இதழின் கட்டுரைகள் நிறுவன வலைத்தளத்திலும்(http://www.ulakaththamizh.org) வலையேற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்கிய நாள் முதல் தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் முயற்ச்சியால் இதுவரை பதிநான்கு நாடுகளில் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஒரு சில பல்கலைக்கழகங்களில் திருக்குறள் துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், உலகம் முழுவதிலும் இருந்து அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் நிறுவனத்திற்கு வருகை தந்து தமிழாய்வுகளையும், அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், சிறப்புச் சொற்பொழிவுகளையும் வழங்கி வருகின்றனர். நிறுவனத்திற்கு கமில் வி. ஸ்வல்பில், அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி, ஆ.வேலுபிள்ளை ஓனோ தோரோ, க.சிவத்தம்பி, ஜோன்னா குசியோ, முரசு நெடுமாறன், அய்யாதுரை தாமோதரன் ஆகிய அயல்நாட்டு ஆய்வறிஞர்கள் நிறுவனத்திற்கு வருகை அறிஞர்களாக(visiting research fellow) வந்து ஓரிரு ஆண்டுகள் தங்கி பணியாற்றிச் சென்றுள்ளனர். நிறுவனப் பேராசிரியர்களும் அயல்நாடுகளுக்கு வருகை ஆய்வறிஞர்களாக சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் இதுவரை மொழியியல் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகள், ஒப்பீட்டாய்வுகள், மானிடவியல் ஆய்வுகள்  என பல்துறை சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பணிகளைப் பறை சாற்றும் வகையில் நிறுவனம் வெள்ளி விழா ஆண்டைக் கடந்து பொன் விழா ஆண்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. மேலும், நிறுவனம் சந்திக்க வேண்டியதுமாகவும் சிந்திக்க வேண்டியதுமாகவும் எண்ணற்ற பணிகள் இருக்கின்றன என்பதும் தெளிவு.

உதவிய நுல்கள்

  • அமுதன் அடிகள் (1993) தனிநாயகம் அடிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -113
  • இரபிசிங் ம.பி.(1999) தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை -113.
  • இராமர் இளங்கோ. ச.சு. (1993) அணிந்துரை, தனிநாயகம் அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப் பணி –பா.இறையரசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை-113.
  • விமலானந்தம்,மது.ச.(2003) உலக அரங்கில் தமிழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை -113

குறிப்பு ; இக்கட்டுரை 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில்  இலண்டனில் நடைபெற்ற உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்டது.

- முனைவர் கு.சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி,சென்னை 

Pin It