பிரச்சாரம், ஆர்பாட்டம், வேலைத்திட்டம், நூல் விவாதம், வேலைப் பரிசீலனை-ன்னு போய்கிட்டிருந்த சில மாதங்கள்ல ஒரு சுபமுகூர்த்த சுப தினத்தில் நம் ‘பாண்ட்’ ஒரு நாள் நம்மிடம் தனியாக கூப்பிட்டு 'ஒரு பரம-ரகசியத்தை' போட்டுடைப்பார். "அது ரொம்ப ரொம்ப ரகசியமானது, நான் உங்கள நம்பி தான் அதச் சொல்லுறேன். தோழரே நீங்க அத வேற யாருகிட்டயும் வெளிப்படையாக சொல்லிராதீங்க" என்று சொல்லுவார். (சொன்னா என்னாகும்… பாம்பு செத்துரும்.)
தியாகிகளுக்கு வீரவணக்கம், பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தைத் தொடர்ந்து யப்பா…ன்னு நம்ம கண்ணு முழி வெளிய வந்துர்ற அளவுக்கு ஒரு மேட்டர் இருக்குன்னா அது நம்ம 'சிதம்பர ரகசியம்' கட்சி பற்றி முதன் முறையாக கேக்குற போது தான்ங்க.
உலக வாழ்க்கையைத் துறந்து புரட்சியாளரா மாறிய நமக்கு ஒரு நல்ல நாள்ல அறிமுகம் செய்யப்படுவது தான் கட்சி எனும் கடிவாளம்.
பொருத்தமான உவமையா இல்ல தானே...
ஆமா பொருத்தமா தான் இல்ல...
வேற எப்டி சொல்லலாம்? நாம குதிரையா இருந்தா கடிவாளம் காட்டலாம், மனுசங்களாச்சே அப்ப என்ன செய்றது?
நம்ம 'பாண்டு'களுக்கு இதிலெல்லாம் தயக்கமே இருந்ததில்லைங்க... கேளுங்க. அடிமைகள் சமுதாயத்தில் கழுத்துல ஒரு வளையம், ரெண்டு கை, ரெண்டு கால்ல வளையம் இதை எல்லாத்தையும் இணைச்சிருக்கும் ஒரு சங்கிலி. இதுமாதிரியே அடிமையா இருக்குற பலரையும் நம்மையும் சேர்த்துப் பிணைக்கும் ஒரு கருவி தான் இங்க 'புரட்சிகர கட்சி' - அடிமைகளை ஒன்றிணைக்கும் அடிமை விலங்கு. கொஞ்சம் மிகைப்படுத்தற மாதிரி தெரியுதா? நிச்சயம் இல்ல... அது தான் பொருத்தமான வார்த்தை.
அதாவது மக்களே இங்க வெளில இருக்குதே இதுவெல்லாம் புரட்சிகர அமைப்பு; எங்கவா பாஷைல சொன்னா மக்கள் திரள் அமைப்பு.
1) ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்)
2) பு.மா.இ.மு (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி)
3) பு.ஜ.தொ.மு. (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
4) வி.வி.மு. (விவசாயிகள் விடுதலை முன்னணி)
5) பெ.வி.மு. (பெண்கள் விடுதலை முன்னணி)
இப்படி இந்த அமைப்புகளெல்லாம் மக்கள் திரள் அமைப்பு. அதாவது வெளிப்படையான அமைப்புகள். இவற்றையெல்லாம் இயக்குவது தான் நம்முடைய கட்சி. அதோட பேர் - இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில ஒருங்கிணைப்பு குழு (SOC)
இது ஒரு ரகசிய கட்சின்னு சொன்னதும் நமக்கு வருமே ஒரு மலைப்பு…
ஒக்கா மக்கா என்னடா இது யார்ரா இவங்க …. யப்பா டேய் ….. எப்பேர்ப்பட்ட புரட்சியாளர்கள் கிட்ட வந்து சேர்ந்துருக்கோம் - ரசியாவுல ரகசியமா இருந்து புரட்சி செய்த லெனின் கதையெல்லாம் நம்ம மூளையில் வேகமா ஓடும்.
நம்ம கட்சியும் தலைமையும் தலைமறைவு வாழ்க்கை வாழுறாங்களா?
தங்களோட உயிரைப் பணயம் வச்சு தான் நம்ம பொறுப்பாளர் நம்மல வந்து சந்திக்குறாரா?
இப்டியெல்லாம் தியாகம் பண்ற ஆட்கள் இங்க இருக்காங்களான்னு மலைப்பா இருக்கும். சின்ன புள்ளைல திருடன் போலீஸ் விளையாடியிருப்போம். இப்ப புரட்சியாளர் VS போலீஸ் அதே உற்சாகம், கண்ணுல திமிரு, அந்த ஆதாரம் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்.
சதுரங்க வேட்டைல காந்தி பாபு ரைஸ் புல்லிங் கதை சொல்லுறது போல, நக்சல்பாரி புரட்சியைப் பற்றி அதன் வரலாறு பற்றி வாயாலயே படம் ஓட்டிக் காட்டுவாங்க.
1967 மேற்கு வங்கத்துல நக்சல்பாரி புரட்சி, விவசாயிகள் எழுச்சி, அழித்தொழிப்பு, அதை மறுத்த மேற்கு பிராந்திய குழு மக்கள் திரள் பாதை, புதிய ஜனநாயகப் புரட்சின்னு பல அரசியல் கதைகளைக் கேக்க சில விசயம் கொஞ்சம் புரியுற மாதிரியும் கொஞ்சம் புரியாத மாதிரியும் இருந்தாலும் அதெல்லாம் பல வருஷங்களுக்கு முன்னாடி நடந்த கதை, இப்ப வந்த நமக்கு அது சரியா தப்பா, அதில் என்ன பிரச்சனை அப்படின்னு எதுவும் தெரியலனாக்கூட சரி, மக்களுக்கு ஏதோ நல்லது பண்றாங்கன்ற அளவுல தான் அப்ப நமக்கு புரிஞ்சுருக்கும். ஏன்னா அப்ப இருந்த நம்மோட அரசியல் அறிவு, தத்துவ அறிவு அவ்ளோ தான் இருக்கவும் முடியும். எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுவோம்.
இன்னொரு பக்கம் இந்த கதைகளால் ஏற்படும் மயக்கம், பெருமை, வீரம், புரட்சி, போராட்டம், தியாகம்னு என்னென்னல்லாமோ மூளையிலயும் உடம்பு முழுக்க புரட்சிகர உணர்வா ஒரு ஓட்டம் எடுக்கும் பாருங்க. அந்த நேரத்துல நம்ம பாண்டுகளா இருக்குற தோழர்கள் லெனினாவும், இந்த கட்சி ரஷ்ய போல்ஸ்விக் கட்சியாவும் தெரியும்.
ஏன் தோழர் இப்படி ஆபத்தான விசயத்தை வச்சுகிட்டு தனியாவே சுத்துறீங்களே... இடுப்புல கத்தியோ, துப்பாக்கியோ வச்சுக்கோங்க தோழர்னு அக்கறையா கேணத்தனமா 'பாண்டு'களைப் பாத்து பல அப்பாவித் தோழர்கள் சொல்லிருப்பாங்க.
அந்த புரட்சிகர வர்க்க உணர்வு தான்ங்க நாம பல வருசம் ஏமாற்றப்பட்டும், குடும்பத்தை இழந்தும், உறவுகளை இழந்தும், வாழ்க்கையை இழந்தும் இந்த மண்ணுளிப்பாம்பு 'பாண்டு'களையும், அதன் தலைமை மோசடியாளர்களையும் பாதுகாக்கும் 'மாபெரும் கவசம்'. தனிநபர் வழிபாட்டை மறுக்கும் கம்யூனிஸ்ட்கள், கட்சி எனும் நிறுவன வழிபாட்டுக்கு நிபந்தனையின்றி அணிகளைத் தயார் பண்ற இடமும் அது தான்.
அய்யப்பன் கோவில், முருகன் கோவில், ஓம்சக்தி கோவிலுக்கு வேண்டி மாலை போடுற கடவுள் மீது நம்பிக்கை உள்ள பக்தர்கள் கடவுளிடம் வேண்டியது நடக்கலனானா என்ன யோசிப்பாங்க. நமக்கு தான் சரியான அளவு நம்பிக்கையில்லை, நம்மீது தான் கடவுள் கருணை காட்டல. நாம் விரதத்தை இன்னும் சுத்தமாக மனப்பூர்வமாக நடத்தி இருந்தால் கடவுள் நம்முடைய கோரிக்கைக்கு இணங்குவார் எனும் மூடநம்பிக்கைக்கு இணையாக, நாம் தான் சரியாக அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் இருந்து விட்டோம், இன்னும் முழுமையாக அமைப்பையும் மக்களையும் நம்பி அர்ப்பணிப்போடு இறங்கனும்னு பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருந்த தோழர்களே அதிகம்.
சனாதனம் - மாறவே மாறாதுன்னு கொள்கை வச்சிருக்க RSS, BJP காரன் கூட தான் ஆட்சிக்கு வரவும், இந்து ராஷ்டிரம் அமைக்கவும் தினம் தோறும் தன் அணுகுமுறையையும் செயல் தந்திரத்தையும் மாத்திக்கிட்டே இருக்கான். ஆனா மாற்றம் ஒன்றே மாறாததுன்னு இயங்கியல் கொள்கையை வச்சுகிட்டு நம்ம ஆளுக 50 வருசமா அணுகுமுறை நடைமுறை செயல்தந்திரம்னு மாறாம இருக்காங்க. மாறவே கூடாது தன்னை மாத்திக்கவே கூடாதுன்னு சனாதனம் போலவே ஒரே மாடலில், அனைத்து விசயத்தையும் அரை நூற்றாண்டா மாறாம கடைப்பிடுச்சுகிட்டும் இருக்காங்க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - சனாதனம்)... இது நல்லாருக்கே தயவு செய்து இப்டி பேர் மாத்திருங்க சனாதனவாதிகளே.
சரி இப்படி ஒரு கட்சியில நீங்க எடுத்த உடனேவெல்லாம் உறுப்பினர் ஆகிற முடியுமான்னா முடியாது. அதுக்கும் பல கட்டம் இருக்கு.
ஆதரவாளர்,
அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளர்,
தேர்வு நிலை உறுப்பினர்,
உறுப்பினர்,
பகுதி நேரப் புரட்சியாளர்
முழுநேரப் புரட்சியாளர்னு
பரமபத படி போல படிப்படியா பல படிகள் இருக்கு. பல படிகள் ஏறும் போதே நம்ம 'ஜேம்ஸ்பாண்ட்' எனும் பாம்புகளிடம் கடிபட்டு வெளியேறும் வாய்ப்பும் இருக்கு. அதெல்லாம் மீறி இந்த விளையாட்ட மக்கள் நலன் மானுட விடுதலைன்ற பேர்ல விளையாண்ட விளையாடுற வீரர்கள் தான் நம்ம அப்பாவித் தோழர்கள்.
கட்சிக்குள்ள போன சில நாட்கள்லயே இலக்கை நோக்கி ஓடற ஓட்டப்பந்தயம் தொடங்க ஆரம்பிக்கும். இலக்குனா புரட்சியை நோக்கி ஓடுறது இல்லைங்க. இந்த “கட்சியின் தகுதிகள்”னு ஒரு லிஸ்ட் இருக்கே அத நோக்கி ஓடுற ஓட்டம். அதுக்கு நீங்க படிக்கனும், களத்துல பிரச்சாரம் செய்யனும், உறுப்பினர் சேர்க்கனும்ற கஷ்டமான வேலையெல்லாம் செய்யனும். அது விட முக்கியம் நம்ம பொறுப்பாளர் 'ஜேம்ஸ்பாண்ட்கள்' மனம் நோகாம அவருக்குக் கட்டுப்பட்டு அவங்க பண்ற டார்ச்சரையும் அவமானத்தையும் பொறுத்துகிட்டிருக்கனும்.
நீங்கெல்லாம் சதுரங்க வேட்டைன்னு ஒரு திரைப்படம் பார்த்திருப்பீங்க, படத்துலயும் சரி, நிஜத்திலயும் சரி எல்லா மோசடிகளும் எங்க ஆரம்பிக்கும் தெரியுமா? “வெளியில யார்கிட்டயும் சொல்லிடாதீங்க... இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்” அப்படின்னு தான் ஆரம்பிக்கும். இப்படி பொதுவா சொன்னா நம்ம தோழர்களுக்குப் பிடிக்காது... அதனால குறிப்பாவே சொல்றேன்.
சதுரங்க வேட்டை படத்தில் மண்ணுளிப் பாம்பு மோசடி கதை வரும். மண்ணுளிப் பாம்பை 5 லட்சம் கொடுத்து வாங்கினால் 10 கோடி ரூபாய்க்கு விக்கலாம்னு ஒரு பொய்யைச் சொல்லி தகுந்த ஆட்களையும் செட் பண்ணி வாங்க வச்சுருவான் நம்ம நாயகன் காந்தி பாபு. அதாங்க நம்ம 'ஜேம்ஸ் பாண்ட்'.
அந்தப் பாம்புக்கு ஒரு பேரும் வச்சிருப்பாங்க. அந்த பாம்புக்குப் பேரு “விஜய்” - ’Yes நம்ம “மடக்கு ஊதி” வெற்றி சின்னத்தின் தலைவர், தளபதியின் பெயரத்தான் அந்த மண்ணுளிப் பாம்புக்கும் வச்சிருப்பாங்க.
படத்துல போன்ல பேசும்போது கூட அத பாம்புன்னு சொல்லக்கூடாது. அப்படி சொன்னாலோ பேசினாலோ பாம்பின் உடல் எடை குறைந்து 4 கிலோக்கு கீழ் வந்துட்டா அத கைமாத்த முடியாது, யாரும் வாங்கமாட்டாங்கனு சொல்லிருவான் காந்தி பாபு. வீட்ல இருந்து பொண்டாட்டி புள்ளை எல்லாம் வெளியூருக்கு அனுப்பிட்டு பாம்பை பக்குவமா சத்தம் கேட்காமல் பாதுகாப்பா செட்டியார் வச்சுறுப்பார், பராமரிப்பார். நம்ம 'ஜேம்ஸ்பாண்ட்'களையும் அவர்கள் விட்ட புரட்சிகர கதைகளையும் பல தோழர்கள் இப்படி தான் பாதுகாத்திட்டு இருக்காங்க..
அப்படி இருந்தும் பாம்பின் எடை குறைந்ததால் அதுக்கும் மருந்துவம்ன்ற பேர்ல சில லட்சங்களை மோசடிக் கும்பல் ஏமாற்றி வாங்கிவிடும். காதே கேட்காத பாம்புக்கு, சத்தம் கேட்டுறுமோன்னு எப்படியும் (புரட்சி நடந்துரும்ன்ற ஆசைல) 15 கோடி கிடைச்சுறும்ன்ற ஆசைல பரவசத்துல செட்டியார் சிலநாள் படாத பாடுபடுவார். அப்படித் தான் நம்ம தோழர்கள் பொறுப்பாளர்களையும் கட்சியையும் இரகசியமா பராமரிப்பாங்க. படக்கூடாத பாடுபடுவாங்க.
திடீர்ன்னு வெளியூருக்குப் போயிட்டு வந்த செட்டியாரின் மகனும் மனைவியும் வீட்டில் பாம்பு இருப்பதைக் கண்டதும் அதை தடியால் அடித்து கொன்று விடுவார்கள். செட்டியாருக்குத் தான் அந்த பாம்பு “விஜய்”. அவர் மனைவிக்கும் மகனுக்கும் அது பாம்பு. (அதே போல தோழர்களுக்குத் தான் இந்த 'பாண்டுகள்' புரட்சியாளர்கள், தோழர்களின் குடும்ப நபர்களுக்கு இவங்க வெறுக்கத்தக்க குடும்பத்தை சீரழித்த ஏமாற்றுக்கும்பல்)
தகவல் தெரிந்த செட்டியார் மனைவியையும் மகனையும் போட்டு அடி அடின்னு அடிச்சதோட வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார். பிறகு அவர் மகன் மூலம் உண்மை தெரிந்ததும் தான், தான் ஏமாற்றப்பட்டதையே உணர்வார். இதை அறிந்த மோசடிக்கும்பல் அடுத்த மோசடிக்கு தயாராகிப் போயிடும். அதே போல தான் இங்க ஏமாந்த அப்பாவித் தோழர்களும், பணம் குடும்பம் வாழ்க்கை என அத்தனையும் புரட்சியின் பெயரால் ஏமாந்து பல வருசம் கழிச்சு தான் ஏமாற்றப்பட்டதையே உணருவாங்க, உணர்ந்தாங்க. இன்னும் இந்த 'மண்ணுளிப் பாம்புகளை' பல பழைய புதிய ஏமாளித் தோழர்கள் பராமரிப்பு செய்து பாதுகாத்துக்கிட்டுத் தான் இருக்காங்க.
அங்க மோசடி பண்ணவன் மாட்டுறதுக்கு முன்ன கிடைச்சத சுருட்டிட்டு ஓடுவான். ஆனா இங்க, இது தான் நம்ம ‘புரட்சிகர கம்பெனியாச்சே; என்னங்க பாம்பு 'விஜய்' மெலிஞ்சிகிட்டே போகுதுன்னு கேக்குற செட்டியார் போல, என்னங்க புரட்சி நடக்க லேட்டாகுது, அதுக்குத் தடையா அமைப்போட அரசியலும் அமைப்பு முறையும் நடைமுறையிலயும் ஏதோ சிக்கலா தெரியுதேன்னு லேசா முழிச்சுக்கிட்ட தோழர்கள் ஏமாற்றப் பட்டு ஏமாந்ததை உணர ஆரம்பிக்கும் போதே வெளியேற்றப்படுவாங்க அல்லது அவங்களே வெளியேறிடுவாங்க.
இது ஒரு புரட்சிகர கட்சி, புரட்சிகர அமைப்பு, புரட்சிகர தலைமைன்னு நம்பி பல வருசம் தங்கள் வாழ்வை இழந்த தோழர்கள் கூட இந்த “புரட்சிகர சிஸ்டத்துல ஏதோ கட்டமைப்பு நெருக்கடி” இருக்குன்னு உணர்ந்து தனக்குத் தெரிஞ்ச தத்துவ வழியில் மாற்றுக்கருத்தை முன் வைத்து பல வருசம் உட்கட்சிப் போராட்டம் - விவாதம் எனும் மோசடியால் ஏமாற்றப்பட்டு கடைசில நொந்து நூடில்ஸ் ஆகி வெளியேறியிருக்காங்க அல்லது வெளியேற்றப்பட்டுருக்காங்க. (அந்த கதையெல்லாம் பிறகு தனித்தனியாக எழுதலாம்.)
எப்படி சதுரங்க வேட்டைல பாம்பை பாம்புன்னு சொன்னா உடல் மெலிஞ்சு செத்துருமோ அதே மாதிரி தான் இங்க கட்சி பேர வெளில சொன்னாலே புரட்சி செத்துரும்னு நம்ப வச்சிருக்காங்க
சீனக்கட்சி கீழ் இருந்து மேல் வரை இப்படி மோசடியும் ஏமாற்றுக் கும்பல் - அதிகார வர்க்க கும்பல் - வலது திசை விலகல் கும்பல்னு பாட்டாளி வர்க்க எதிரிகளை விரட்ட தலைமையைத் தகர்த்து எறியுங்கள்னு, தலைமைகளை அம்பலப்படுத்தியது போல சில தோழர்களைத் தவிர ஏமாற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெளியேறிய, வெளியேற்றப்பட்ட அத்தனை தோழர்களும் இவர்களை அம்பலப்படுத்தியிருந்தால் எத்தனையோ குடும்பங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி செய்யாததின் விளைவாக இங்க புரட்சியின் பெயரால் இன்னும் பல குடும்பத்தை காவு கொடுத்துட்டு இருக்காங்க.
கட்சியைப் பற்றி வெளியில பேசினாலோ விவாதிச்சினாலோ புரட்சியே நம்மால் நின்னுரும். நாம வளர்த்த கட்சியை நாமே காட்டிக் கொடுத்த மாதிரி ஆகிரும்னு பலரும் நம்புறாங்க, நம்ப வைக்கப்படுறாங்க. அது தான் இந்த புரட்சிகர மோசடியின் பலம். அந்த செட்டியாருக்கு வந்த கோவம் இங்க பல தோழர்களுக்கு வராம இருக்க காரணமும் அது தான்.
வெளியேறிய தோழர்கள் பகுதிப் பொறுப்பாளர்களையும், கட்சியின் தலைமை எவ்வளவு கேடுகெட்டத் தனத்தோடு நடந்துகிட்டதுன்னும் சொல்லாம விட்டு… விட்டு தான் சமூக மாற்றம் வேண்டி மார்க்சிய அரசியலுக்குள் வந்து இளமையையும், பொருளாதாரத்தையும், குடும்பத்தையும், வாழ்க்கையும் இழந்த எத்தனையோ ஆயிரக்கணக்கான தோழர்களையும், அவர்கள் செய்த தியாகத்தையும் எந்த பரிசீலனையும் இல்லாம கேவலமாக குப்பையில் வீசி எறிஞ்சிருக்காங்க இந்த SOC எனும் மோசடிக் கும்பல். (அப்படினா இந்தக் கட்சி, அரசியல் வேலையே செய்யலையான்னு தான கேக்குறீங்க... அதையும் பிறகு நிச்சயம் பரிசீலிப்போம்.)
யாருக்கும் தெரியாத அளவுக்கு அவ்ளோ ரகசியமா கட்சி இருக்குதுன்னு நினைச்சுகிட்டு தான் போன்லயோ அல்லது சமூக ஊடகங்கள்ளயோ SOC ன்னு சொன்னா போதும் பல வீராதி வீரத் தோழர்கள் கூட பின்னங்கால் பிடரியில் அடிக்க விவாதத்துக்கு வராம ஒரே ஓட்டமா ஓடிருவாங்க. உனக்கு எப்டி தெரியும், நீ யாருன்னு தான கேக்குறீங்க... அப்டி கடந்த காலத்துல ஓடுனதுல நானும் ஒருத்தன் தான்.
இது தான் நாம சதுரங்க வேட்டைன்னு தலைப்பு வைக்க காரணம். ஒரு பொதுவான ஆரம்பக் கதையை தான் நான் சொல்லிருக்கேன். இன்னும் நிறைய ஈமுகோழிக் கதை, லில்லிபுட் கதை, அதிசய குடிநீர், ரைஸ்புல்லிங், MLM மார்க்கெட்டிங் ன்னு எங்ககிட்ட பல புரட்சிகர ஏமாந்த கதையிருக்கு. மீண்டும் மீண்டும் ஏமாறக்கூடாதுன்னா இதெல்லாம் வெளிய சொல்லித்தான் ஆகனும்..
பேராசான்கள் காரல் மார்க்ஸ்-ம், பிரடரிக் எங்கெல்சும் புரட்சிகரத் தத்துவங்களை நடைமுறையின் தேவைகளிலிருந்து இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் விஞ்ஞான கம்யூனிசத் தத்துவத்தை உருவாக்குனாங்க. அதனாலேயே ஆளும் வர்க்கத்தால் ஒரு நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு விரட்டப்பட்டாங்க.
ரஷ்யப் புரட்சிக்கு முன்பு பேராசான் தோழர் லெனின் நாடு கடத்தப்பட்டார். எண்ணற்ற பல தோழர்களும் கம்யூனிச லட்சியத்திற்காக புரட்சிகரக் கோட்பாட்டிற்காக நாடு கடத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கின்றனர்.
வரலாற்றில் மன்னர்கள் ஆட்சியிலும் பாசிச சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சியிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இருமுறை கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது.
பாசிச சூழலில் புரட்சிகர கட்சி வேட்டையாடப்படுவதும், புரட்சியாளர்கள் கைது செய்யப்படுவதும் கொல்லப்படுவதும் வரலாற்று வழியில் உண்மைதான். அதற்காக ஒரு ரகசிய கட்சி தேவையா என்றால் தேவைதான். (இது அப்படி ஒரு கட்சியல்ல... அது குறித்து பிறகு பார்க்கலாம்)
ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தின் படி கட்சி, அதன் தலைமை வேறு நாட்டில் இருந்தாலும், ரகசியமாக இயங்கினாலும் அதன் நோக்கம் என்னவாக இருந்தது என்றால் தலைமையைப் பாதுகாப்பது, சித்தாந்த போராட்டங்கள் அணிகள் முழுவதும் நடத்துவது, தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது, புரட்சிக்குத் தலைமை தாங்குவது, புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்ற அடிப்படையில் அத்தலைமை வெற்றியும் பெற்று இருக்கிறது. ஆனால், இவர்களின் நோக்கம் தலைமையைப் பாதுகாத்து, அணிகளை ஏய்ப்பது, துரோகம் செய்வது, தங்கள் வறட்டுத்தனத்தை கேள்வி எழுப்புவர்களை ஓரம்கட்டி வெளியேற்றுவது.
மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்... கட்சியிலிருந்து, அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களே... இந்தக் கட்சி அதன் ரகசியத் தன்மையானது ஊழியர்களை வளர்த்தெடுப்பதற்கும், தத்துவ விவாதங்கள் நடத்துவதற்கும், கோட்பாட்டு அடிப்படையில் மார்க்சியத்தை நிறுவுவதற்கும், புரட்சியை நடத்துவதே தன் உயிர் மூச்சாகக் கொண்டுமா இருந்தது, இருக்கிறது? அல்லது தங்கள் தலைமையின் கேடுகெட்ட அதிகாரப் போக்கையும், பண மோசடிகளையும் அணிகளிடமிருந்து தங்கள் அற்பமான வாழ்வையும் மறைப்பதற்காக இருந்ததா, இருக்கிறதா என்று உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கோங்க.
என்னடா இவங்க இப்படி கட்சியைப் பற்றி வெளிப்படையாக எழுதுறாங்களே... இதெல்லாம் கட்சிக்கு செய்ற துரோகம் இல்லையான்னு இந்நாள் முன்னாள் தோழர்கள் நினைக்கலாம். அப்படியாப்பட்ட சிதம்பர ரகசியம் என இதை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது இன்னும் உங்கள் அறியாமை என்றே அர்த்தம். இந்தக் கட்சி அதன் அணிகளுக்கும் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தான் ரகசியமே தவிற அரசுக்கு ரகசியமில்லை. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கலாம்)
இந்த துரோகத் தலைமைகள் தாங்கள் செய்த அயோக்கியத்தனமான, அற்பத்தனமான, மோசடிகளையும், திமிர்த்தனங்களையும், தான்தோன்றித்தனத்தையும் மூடத்தனத்தையும், அத்தனை கேடுகெட்ட பிற்போக்கு தனிநபர் (ஈகோ) கர்வத்தையும் இந்த ரகசிய கட்சி அமைப்பு எனும் முதன்மையான கேடயத்தை வைத்து தான் தங்களைப் பாதுகாக்கின்றனர்.
இந்த 50 வருசத்துல எத்தனையோ போராட்டம், பிரச்சாரம், எதிர்ப்பு இயக்கம் எடுத்திருக்கிறார்களே... அது பற்றியெல்லாம் என்ன மதிப்பீடுன்னு தான கேக்குறீங்க. ஒவ்வொரு முறையும் ஆளும் முதலாளித்துவ கட்சிகள் கொண்டு வரும் சட்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் எடுக்குறது மட்டும் தான் புரட்சிகர கட்சியா? அதுக்கு தான் பல கட்சிகளும், NGO-களும் கூட இருக்கே. அப்புறம் எதுக்கு இத்தனை வருசமா மார்க்சிய லெனினிய கட்சி, புரட்சிகர இயக்கம், புரட்சிகர கட்சினெல்லாம் இத்தனை ரைட்டப், பில்டப். தன்னைத் தவிர அத்தனை பேரும் போலி கம்யூனிஸ்ட்கள்னு பிலிக்கி கிட்டு சுத்துனாங்க.
“ஒரு பாட்டாளி வர்க்க கட்சியானது தனது தவறுகளைத் தானே வெளிப்படுத்துவதும் சுயவிமர்சனம் மேற்கொள்வதும் அபாயகரமானதாகி விடும். ஏனெனில், இவற்றைப் பாட்டாளி வர்க்க கட்சிக்கு எதிராக, எதிரிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இத்தகைய ஆட்சேபங்கள் அற்பமானவை என்றும் முழுக்கவும் பிழையானவை” என்றும் லெனின் கருதினார்.
- தோழர் ஸ்டாலின் (நூல் - லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்)
மார்க்சியத்தின் பெயரால் எங்கிருந்து இந்த மோசடி கும்பல் தங்கள் சதுரங்க வேட்டை ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என்ற அதன் நதி மூலத்தை ஆராயாமல் இது பற்றி நாம் பேசவே முடியாது என்பது தான் உண்மை. இதன் அரசியல் மற்றும் அமைப்பு முறையை ஆராயாமல் அது சாத்தியமில்லை. இக்கட்சியின் பிறப்பும் அதன் கொள்கையும் தத்துவமும் நடைமுறையுமே மோசடியானது, மார்க்சிய விரோதமானது. இனி நாம் அவற்றைப் பற்றி பரிசீலிப்போம்.
(தொடரும்)
- டோனி ஸ்டார்க்