அது என்னய்யா.. எதுக்கெடுத்தாலும் "வந்தாரை வாழ வைக்கும் நாடு.. வந்தாரை வாழ வைக்கும் நாடு" என டயலாக் பேசுகிறார்கள்.. எது உன் நாடு? யார் வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? ஏன் அவர்களால் வர முடிந்தது? யார் யாரை வாழ வைத்தார்? என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே போனால், கிடைக்கிற விடைகளில் ஒரு விடிவும் பிறக்கவில்லை.
சரி, எவனோ எழுதி வைத்துவிட்டுப் போன பழங்காலத்து வரலாற்றை விடுவோம். என்னைப் பொருத்தவரை, என் சமகாலத்தில், எனக்கு முந்தைய அண்மைத்திய வரலாற்றில், வந்தாரை வாழ வைத்த நாடுகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தான். ஜேர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க், சுவிஸ், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகிற புலம் பெயர் ஈழத் தமிழர்களிடம் கேட்டால், நன்றியோடு சொல்வார்கள் 'யார் அவர்களை வாழ வைத்தார்கள்' என்று ! (சொல்ல வேண்டும்! இல்லையேல் நன்றி கொன்றவர்களாவார்கள்!)
மேற்கூறிய நாடுகளில் இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், பாதுகாப்புகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. நம் நாட்டில் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகிற அகதிகளுக்கும், ஐரோப்பாவில் தஞ்சம் கோரிய அகதிகளின் நிலைக்கும் ஏணி வைத்தாலும், ஏன்.. ராக்கெட் விட்டாலும் எட்டாது. தஞ்சம் கோரி வந்தவர்களை தாயின் பரிவுடன் தாங்கி அணைத்துக் கொண்டன. வந்திறங்கிய மறுகணமே அத்தியாவசியத் தேவைகளான வீடு, உணவு, கைச்செலவிற்குப் பணம், குழந்தைகளுக்கு படிப்பு வசதி, வேலை கிடைக்கும் வரை நலத்திட்ட உதவி, பின்னர் வேலை என அனைத்தும் கொடுத்தது. தற்போது அவர்கள் அந்தந்த நாட்டு மக்களுக்கு நிகரான உரிமைகளுடன், சமூக அந்தஸ்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அதே ஈழப் பிரச்சனையை காரணம் காட்டி, தமிழகத்தில் வடுகர்கள், வந்தேறிகள் எனப் பிரிவினை பேசும் போக்கு அண்மைக்காலமாகவே செவிகளில் அதிகம்மாக விழுகிறது. தமிழ் மொழி என்பது இன்றைக்குப் பேசுகிற தமிழ் மொழியாக பரிணமிப்பதற்கு முன்பு, தமிழில் இருந்து மலையாளம் என்கிற மொழி பிரிவதற்கு முன்பு, தமிழகம் என்கிற ஒரு நிலப்பரப்போ அல்லது இந்தியா என்கிற ஒரு அமைப்போ உருவாவதற்கு முன்பு, ஆயிரம் கிலோமீட்டார் தள்ளி இருந்த நிலப்பரப்பில் இருந்து, 700 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களை, தமிழர்கள் அல்லாதோர்.. வந்தேறிகள் .. எனப் பிரித்துப் பட்டியலிட்டு விரட்டுவது, அதன் மூலம் தமிழனின் தனித்தன்மையை, இனத்தின் பெருமையை நிலைநாட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்...
அதற்கு முன், கடந்த இருபது ஆண்டுகளாக, பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தஞ்சம் கோரி வாழ்ந்து வரும் வந்தேறி ஏதிலித் தமிழர்களை அந்தந்த நாடுகள், போர்க்கால அடிப்படையில் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தக் கருத்தை நான் முன்னெடுக்கிறேனோ இல்லையோ, தமிழர்களின் மானத்தைக் காப்பாற்ற வேண்டி, நேற்று பெய்த ஈழ மழையில் தமிழகத்தில் முளைத்துள்ள காளான்கள், அதான் பிரபாகரனின் தம்பிகள் இந்தக் கருத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஏனெனில், அவ்வாறு தஞ்சம் கோரி வாழ்ந்து வருபவர்களில், ஈழத்தில் புலிகள் எங்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டு போயி போரில் நிறுத்துகிறார்கள், எனவே எனக்கு இங்கே இடம் கொடுங்கள் எனக் கேட்டவர்கள், ஈழத்தில் நடக்கும் சண்டை காரணமாக எங்கள் வாழ்விற்கு உத்தரவாதம் இல்லை எனக் கோரி தஞ்சம் புகுந்த அப்பாவித் தமிழ் மக்கள், புலிகளால் பாதிக்கப்பட்டோம் எனக் கூறி தஞ்சம் கோரிய எதிர் தரப்பு மக்கள் எனப் பல வகை உண்டு.
அவர்கள் அனைவரும் கூறிய காரணங்கள் வேறாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் தமிழர்களே. அத்தகைய பெருமை மிக்க தமிழ் இனம் ஐரோப்பாவில் கையேந்தி உயிர்ப்பிச்சை கேட்டு வாழ்ந்து வருவது தமிழ் இனத்திற்கு அடுக்குமா, பொறுக்குமா என்கிற கேள்வியை தமிழ் பெருமையாளர்கள் சற்றே கருதிப் பார்க்க வேண்டுகிறேன்.
மேலும் தற்போது, தமிழகத்தில் வேண்டுமானால் "புளிகள்" உருவாகி இருக்கின்றனவே அன்றி, ஈழத்தில் புலிகள் அமைப்பு இல்லை, அங்கே யுத்தமும் இல்லை, துப்பாக்கி சத்தமும் இல்லை. பிறகு ஏன் இவர்கள் ஐரோப்பாவில் வாழ வேண்டும்?
நியாயமாகப் பார்த்தால், இதுவரை தாங்கள் சம்பாதித்த பொருட்களை எடுத்துக் கொண்டு, தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்பி அங்கே உள்ள தங்கள் தமிழ் இன மக்களை பாதுகாக்க வேண்டும், இவர்கள் கொண்டு வரும் பொருளாதாரத்தையும், அறிவையும் கொண்டு அங்குள்ள தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்த அல்லவா முனைய வேண்டும்.
நான் மதிக்கும் தமிழர்கள், தமிழகத்து திடீர் டமில் புலிகள் உயிரினும் மேலாக கண்ணின் இமையாகப் போற்றிப் பாதுகாக்கும் பெருமைமிகு தமிழ்ப் பிள்ளைகள், வருங்காலத்தில் அந்தந்த நாடுகளில் 'வந்தேறிகள்' என அழைக்கப்பட்டு, தங்கள் நாட்டில் தங்கள் வளத்தையும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் பறித்து உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள் என பரிகாசிக்கப்பட்டு, சிறிதளவு வருத்தத்திற்கும் கூட ஆளாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் தான் கூறுகிறேன்.
ஆக்கிரமிப்பாளர்களாக 700 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள் மீது இன்றைக்கு தமிழர்களுக்கு வன்மம் எழுகிறதென்றால், 25 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக வந்து, உலகப் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதே அகதிகள் மீது ஐரோப்பியர்களுக்கு வன்மம் எழாது என எப்படிச் சொல்ல முடியும்? அது பழம் பெருமைமிகு தமிழ் இனத்திற்கு எத்தகைய அவமானம்.. அய்யகோ.. நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை!
மேலும் வந்தாரை வாழ வைக்கும் மாசறு மனம் கொண்ட தமிழர்கள், ஐரோப்பாவில் தங்களுக்கான இடத்தை, தற்போது தங்களை விட மிகவும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிற சோமாலியா, சிரியா போன்ற நாட்டிலிருந்து வருவோர்க்கு இடம் கொடுக்க வேண்டும். வந்தாரை வாழ வைப்பதும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதல்லவா தமிழனின் அடையாளம்!
கேவலம், கிடைக்கிற அற்ப சொற்ப பொருளாதார வளத்திற்காக, வசதி வாய்ப்புகளுக்காக வந்த இடத்திலேயே தங்கி விட்டால் நாளை இனத்தையும், நாட்டில் வாழும் தன் இன மக்களையும் யார் காப்பாற்றுவார் என்கிற கேள்வியை தமிழகத்து பிராபாகரனின் தம்பிகள் எழுப்ப வேண்டும்.
அதை தமிழகத்து தமிழ் தற்குறிகள் முன்னெடுக்கின்றீர்களோ இல்லையோ... தங்கள் இனப் பற்றை, மன வேதனையை, 700 ஆண்டுகளாக வந்தேறிகளால் வதைபட்ட தங்கள் வலியை உணர்ந்தவன் என்கிற அடிப்படையில், 'புலம் பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்களை தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்' என்கிற கருத்தை முன்னிறுத்தி ஒரு இயக்கத்தைக் கட்டமைத்து, அந்தந்த நாடுகளில் உள்ள அரசு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதை நார்வே நாட்டிலிருந்து தொடங்கலாம் என இருக்கிறேன்.
உங்கள் சார்பாக நான் முன்னெடுக்க இருக்கும் 'தமிழனின் மானம் காக்கும் இப்பணிக்கு' டமில் தற்குறி தம்பிகளின் மேலான ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். தயவுசெய்து இல்லை என மட்டும் கூறி விடாதீர்கள்.. பின்னர் இந்தியாவில் வடுகர்களுக்கு ஒரு நீதி, ஐரோப்பாவில் தமிழர்களுக்கு ஒரு நீதியா? என வருங்காலம் தமிழ் இனத்தைப் பழிக்கும். கண்ணகிக்கு தவறான நீதியை வழங்கிய காரணத்தால், உயிர்நீத்த பாண்டிய மன்னன் வழி வந்த தமிழர்களுக்கு அது அழகல்லவே. ஹ்ம்ம்... ஏதோ பாத்துச் செய்ங்க....
- லோகேஷ் கோபால்சாமி