‘வைகோ’ இராஜதுரோகி என்று குற்றம்சாட்டியிருக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஈழத் தமிழர் பிரச்சினையில் மன்மோகன் சிங் ஆட்சி செய்த துரோகங்களை அவ்வப்போது கடிதங்களாக எழுதி, பிறகு அதைத் தொகுத்து

‘I accuse’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அதையே தமிழில் மொழி பெயர்த்து, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளி யீட்டு விழா, சென்னை இராணி சீதை அரங்கில் நடந்தது (அந்த விழாவில் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றார்). அப்போது ஈழத் தமிழருக்கு இந்திய அரசு தொடர்ந்து செய்து வரும் துரோகங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கே கேடு ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்தார். அந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ)வுக்கு எதிரான இராஜ துரோகம் என்று அன்றைய தி.மு.க. ஆட்சி வழக்கு தொடர்ந் தது. வழக்கில் ‘ஆம் இராஜ துரோகம் தான்’ என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்து, ஓராண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது.

‘ஈழத் தமிழருக்கு,  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது ‘இராஜ துரோகம்’ என்றால், அதைத் தொடர்ந்து செய்வேன்’ என்று கூறிய வைகோ, ‘அடக்கு முறைச் சட்டங்கள் பாய்ந்தபோது எவ்வளவு அதிகத் தண்டனை தர முடியுமோ, அவ்வளவு தாருங்கள்’ என்று பெரியார் கூறியதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்து, ‘நான் பெரியார் வழி வந்தவன்’ என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறியிருக்கிறார். இப்படி ஒரு பிரிவு இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருப்பதே அவமானம்.

இராஜ துரோகம் என்ற சொற் றொடரே இப்போது அர்த்த மற்றது, இராஜ்யம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியோடு முடிவுக்கு வந்துவிட்டது. ‘(‘இந்து இராஜ்யம் அமைப்போம்’ என்று இப்போது சங்பரிவாரங்கள் கூறிக் கொண் டிருக்கின்றன. அது வேறு கதை) இப்போது சட்டப்படி அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்ற ஆட்சியில்தான் நாம் குடி மக்களாக இருக்கிறோம். நாடாளு மன்ற ஜனநாயக அமைப்பு வந்து விட்ட பிறகு ‘இராஜ துரோகம்’ என்ற சட்டப் பிரிவு ஏன் இருக்க வேண்டும்? இந்த சட்டத்தின் வரலாறு என்ன? அதையும் பார்ப்போம்.

1) 1870ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டம் இது. 19ஆம் நூற்றாண்டில் சயித் அகமது பார்லவி தொடங்கிய வகாபி இயக்கத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப் பட்ட சட்டம், பிறகு பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது பாய்ந்தது.

2) முதலில் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஜோகேந்திரா - சந்தரபோஸ் என்ற வங்காளி. 1891இல் அவர் நடத்திய ‘பங்கோ பாசி’ எனும் பத்திரிகையில் பால்ய விவாகத் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுதினார். அதற்காக அந்த சட்டத்தில் கைது செய்யப்பட் டார்.

3) 1897இல் பாலகங்காதர திலகர் மீது இந்தச் சட்டம் பாய்ந்தது. ‘பிளேக்’ நோய் பரவியபோது, அதற்குக் காரணமான எலி களை ஒழிக்கும் நடவடிக்கை களுக்காக ராண்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரி தலைமை யில் பிரிட்டிஷ் அரசு குழு ஒன்றை அமைத்தது. எலிகள் வினாயக் கடவுளின் வாகனம் என்று கூறி அதை ஒழிக்க வந்த ராண்ட், குழுவினரை இந்துமத வெறிக் கும்பல் சுட்டுக் கொன்ற வழக்கு அது. பிறகு 1909இல் ‘கேசரி’ பத்திரிகையில் திலகர் எழுதிய சில கட்டுரைகளுக்காக இந்தச் சட்டம் ஏவப்பட்டது. (கொள்கை எதிரிகள் மீதும் ஆள் தூக்கிச் சட்டங்கள் பாயக் கூடாது என்பதே நமது உறுதியான கருத்து)

4) 1922இல் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தி எழுதிய மூன்று கட்டுரைகளுக்காக அவர் மீது இந்தச் சட்டம் பாய்ந்தது.

5) 1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய பெரியார் மீது அன்றைய இராஜாஜி தலைமையிலான பார்ப்பன ஆட்சி கிரிமினல் திருத்தச் சட்டம் 7(1)(ஏ) என்ற பிரிவைப் பயன்படுத்தி கைது செய்தது. 1933இல் ‘குடிஅரசு’ ஏட்டில் சோவியத் நாடு சென்று திரும்பிய பிறகு அவர் எழுதிய “இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?” என்ற கட்டுரைக்குத் தான் பெரியார் மீது 124(ஏ) என்ற இராஜ துரோகச் சட்டம் ஏவப் பட்டது. (இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வில்லை அப்போது பயன் படுத்தப்பட்டது 7(1)ஏ என்ற சட்டப் பிரிவு)

‘சுதந்திர’ இந்தியாவில்...

6) 2011இல் மும்பை கார்ட் டூனிஸ்ட் அசீம் திவேதி, டாக்டர் பினாய்க் சென், அருந்ததிராய், சையத் அலிஷா, கிலானி, பிரவின் தொகடியா, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையாகுமார் உள்ளிட் டோர் மீது இந்தச் சட்டங்கள் பாய்ந்தன.

7)  2019ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த 124(ஏ) சட்டத்தை நீக்கம் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இப்போது 124(ஏ) தண்டனைச் சட்டத்திலிருந்தே நீக்கப்பட வேண்டும் என்பதே ஒற்றை முழக்க மாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இதைக் கூறத் தயங்க வேண்டிய  அவசியமே இல்லை. மாநிலங் களவையில் ‘வைகோ’ இந்த ஆள்தூக்கி சட்டத்தை எதிர்த்து உறுதியாகப் போராடுபவர் என்று உறுதியாக நம்பலாம்.

Pin It