இப்பணிகளுக்கிடையே டிசம்பர் 30 ஆம் தேதி காலையில் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. கடலோரப் பகுதிகளில் ஒரே அல்லோலகல்லோலமாகி விட்டது. அப்படியே போட்டது போட்டபடி கிடக்க ஊர்கள் 5 கிலோமீட்டர் உள்நோக்கி ஓடத் துவங்கின. சுனாமி அலையே வராத தூத்துக்குடி நகரமே இரண்டு மணி நேரத்தில் காலியாகி விட்டது. சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி, மினி லாரி, மாட்டு வண்டி என அத்தனை வாகனங்களும் ஊரை விட்டு ஓடிக் கொண்டிருந்தன.

Tsunamiநாகப்பட்டினத்தில் வாலிபர் சங்கத்தோழர் ஒருவர் ஒட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்தச் செய்தி வந்தது. சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்த பணியாளர் சாம்பார் வாளியை அப்படியே போட்டுவிட்டு ஓடினார். கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கடைச் சிப்பந்திகள் கல்லாப்பெட்டியில் இருந்தவர் என அத்தனை பேரும் அடுத்த பத்து நிமிடத்தில் காலி. இவர் மட்டும் நிதானமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு வந்தாராம்.

மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைத் தவிர அத்தனை பேரும் ஓடிவிட்டனர். வாலிபர் சங்கத் தோழர்கள் ஆரம்பத்திலிருந்தே தங்கியிருந்த நாகை பூரணி கல்யாண மண்டபத்தில் மாடியில் தங்கியிருந்த அரசு அதிகாரிகள் 130 பேர்-அத்தனை பேரும் ஓடிவிட்டனர். போகும்போது சமைத்த உணவை கேரி பேக்கில் பொட்டலமாக போட்டு எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். நிவாரணப்பணிக்காக கிராமத்துக்குப் போன மாவட்ட ஆட்சியரை தனியாக விட்டு விட்டு அவருடைய ஓட்டுநர் உட்பட அத்தனை பேரும் ஓடிவிட்டனர்.

நாகப்பட்டினத்துக்கு வருவதாக அறிவித்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களும் விமானத்தை விட்டு இறங்காமலே பறந்து போய்விட்டனர்.

ஆனால் வாலிபர் சங்கத் தோழர்கள் ஓடவில்லை. நாகை பூரணி மண்டபத்தில் 112 தோழர்கள் இருந்தனர். கூட்டம் போட்டுப் பேசி நாம் ஓடக்கூடாது. மக்களோடு இருப்போம் என்று உறுதியான முடிவு எடுத்தனர். பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து எல்லா முகாம்களுக்கும் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். நீங்க போகலியா என்று மக்கள் கேட்டபோது அங்கே எதுவும் தெரியாமல் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் காட்டி இவுங்களை விட்டுட்டு நாங்க எப்படி ஓடிப்போக முடியும் என்று பதிலளித்தனர்.

அந்த மண்டபத்துக்கு வெளியே ஒரு வயதான தாத்தாவும் பாட்டியும் சின்னதாக ஒரு டீக்கடை நடத்தி வந்தனர். அவர்களோடு வேறு யாருமில்லை. அவர்களும் ஓடவில்லை. நீங்க போகலியா தாத்தா என்று நம் வாலிபர்கள் கேட்டபோது “நீங்க யாரோ இந்த மக்கள் யாரோ? ஆனா ஏதோ கூடப்பிறந்த பிறப்பு மாதிரி நீங்கள்லாம் ஓடி ஓடி உதவி செய்றீங்க. நாலு நாளா நம்ம கடையிலேதான் நீங்க அப்பப்ப டீ குடிக்கிறீங்க. உங்கள மாதிரி சேவை செய்ய எங்களால முடியாது. ஒரு டீ போட்டுத் தரவாச்சும் நாங்க இருக்க வேண்டாமா?” என்று அவர் பதில் சொன்னது நம் தோழர்களைக் கண் கலங்க வைத்தது. அதுவரை ஒரு டீ ரூ.1.50க்கு விற்ற அவர்கள் வாலிபர் சங்கத் தோழர்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தந்தனர்.

மண்டபத்துக்கு வந்த சப் கலெக்டர் திரு.உமாநாத் எல்லா அதிகாரிகளும் ஓடிவிட்டதைக் கண்டு இனி இந்த மண்டபத்தை முழுவதுமாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று வாலிபர் சங்கத் தோழர்களிடம் சொல்லிச் சென்றார். அந்த ஒரு தேதியில் பல மாவட்டங்களில் பல மண்டபங்கள் வாலிபர் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்தன. எத்தகைய சிக்கலான நெருக்கடியான சூழலிலும் களத்தைவிட்டு அகலாமல் மக்களோடு நின்ற வாலிபர்களின் மனத் திண்மை இன்றைய இந்தியச் சூழலில் மகத்துவமிக்கதல்லவா? நினைக்கும்போதே நம் நெஞ்சங்கள் பெருமிதத்தால் விம்முகின்றன.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It