27ஆம் தேதி காலையிலேயே நிவாரணப் பொருட்களுடன் லாரிகள் வரத் துவங்கின. பத்திரிகைகள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் துயரத்தின் கடுமையை உணர்ந்த மக்கள் நாடெங்கும் பதைத்தெழுந்து தங்கள் உள்ளங்களையே அள்ளித் தந்தார்கள். ஆங்காங்கு இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து வீடுவீடாகச் சென்று பணமும் துணிமணிகளுமாக சேகரிக்கத் துவங்கினர். லாரிகளில் அவற்றை ஏற்றிக்கொண்டு அவரவருக்குப் பக்கமாக இருந்த சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிக்குத் தாங்களே சென்று மக்களுக்குப் பொருட்களை வழங்கத் துவங்கினர். தமிழகமே ஒரு மனிதனைப்போல சிலநாட்கள் எழுந்து நின்று உதவிக்கரம் நீட்டியது. பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி சானல்களுக்கும் அரசுக்கும் என மக்கள் வாரி வழங்கிய நிதி வந்து குவியத் துவங்கியது.

யாரும் சொல்லாமலே அருகாமையிலிருந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடற்கரைகளை நோக்கி விரைந்தனர். சடலங்களை அப்புறப்படுத்தி அடக்கம் செய்தனர். காயம் பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு இட்டுச் சென்றனர்.

“மக்கள் கடற்கரையிலிருந்து ஓடிவருவதைக் கண்ட நாங்கள் என்ன ஏது என்று விசாரித்துவிட்டுக் கடற்கரைக்கு ஓடினோம். கடல் பொங்கி வருகிறது என்கிற செய்தி காட்டுத்தீ போல குளச்சல் முழுவதுக்கும் பரவியது. கடற்கரை நோக்கிச் சென்ற எங்கள் காலடிகளில் பிணங்கள் வந்து விழுந்தன. குளச்சல் நகரத்தின் இளைஞர்களை உடனடியாகத் திரட்டி சடலங்களை அப்புறப்படுத்தத் துவங்கினோம். காயம் பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் தகவல் பரவியதில் மருத்துவமனையில் யாரும் இல்லாமல் பயத்தில் ஓடியிருந்தனர். .மக்களை கரையிலிருந்து தூரத்துக்கு அப்புறப்படுத்த எங்களால் முடிந்த வாகனங்களை ஏற்பாடு செய்தோம்” என்கிறார் குளச்சல் ஒன்றிய வாலிபர் சங்க தலைவர் தோழர் சசி. தக்கலைப் பகுதியைச் சேர்ந்த தோழர்களும் தங்கள் முயற்சியில் வேன் ஏற்பாடு செய்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்

“டிசம்பர் 26 காலை ஒரு ஒன்பது மணி இருக்கும் திருமெய்ஞ்ஞானத்தில் நின்று கொண்டிருந்தோம். கிழக்கே ஒரே கூப்பாடாகக் கேட்டது. அப்பக்கமாக ஓடினோம். குழந்தைகள், சிறுவர்கள் ஒரு பத்துப்பேர் கடல் புரண்டு வருது என்று கத்தியபடி ஓடிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் பெரியவர்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அப்படியே கடற்கரையிலிருந்த தாழம்பேட்டைக்கே நேரடியாகப் போனோம். முதலில் நான்கு சடலங்கள் எதிரே மிதந்து வந்ததைப் பார்த்ததும்தான் எங்களுக்கே பயம் வந்தது. அதற்குள் வாலிபர் சங்கத் தோழர்கள் ஒரு 50 பேர் கூடிவிட்டோம். சடலங்களைக் கரையில் இழுத்துப் போட்டோம். அப்போது மீண்டும் பெரிய அலை வந்தது. நாங்களும் ஓடிவந்துவிட்டோம். இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்குப் போனோம். நாங்கள் இழுத்துப்போட்ட சடலங்களைக் காணவில்லை. மீண்டும் சுற்றுமுற்றும் மக்களைத் தேடினோம். 12 சடலங்களை அன்று மீட்டோம். ஓடிவந்த மக்களுக்கு திருக்கடையூரில் தங்குவதற்கு அபிராமி கோவில், பள்ளிக்கூடம், மண்டபங்களில் ஏற்பாடு செய்தோம். பஞ்சாயத்துத் தலைவர் எல்லோருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்தார். கட்சி வித்தியாசமின்றி எல்லோருமே ஒத்துழைப்புத் தந்தார்கள். மறுநாள் 8 கிராமங்களைச் சேர்ந்த 5000 பேர் திருக்கடையூருக்கு வந்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு ரேஷன் கடை அரிசியை எடுத்து சமையல் செய்து மக்களுக்குப் போட்டோம்” என்று விவரித்துச் செல்கிறார் தரங்கை வட்ட வாலிபர் சங்கச் செயலாளர் டி.பால்ராஜ்.

“தெருவில் கடல் பொங்கி வருவதாகக் கேள்விப்பட்டு பைக் எடுத்துக்கொண்டு காலை பத்து மணிக்கு கிள்ளைக்கு வந்தோம். பைக்கை நிறுத்திவிட்டு நாங்கள் மூன்று பேர் முழுக்குத்துறை நோக்கிப் போனோம். வழியிலேயே கடல்நீர் எங்களை எதிர்கொண்டது. தண்ணீருக்குள்ளே நடந்தால் காலில் ஒரு சடலம் தட்டுப்பட்டது. தூக்கினால் ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தையின் சடலம் அது. அதைத் தூக்கி ஓரமாக மேட்டில் வைத்தோம். பக்கத்து வீடு தண்ணீரால் சூழ்ந்திருந்தது. கதவை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை போர்வையில் சுற்றி உயிரோடு தூக்கி வந்தோம். தோழர் PK யிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் உள்ளே போனோம். பத்து சடலங்களை அன்று மீட்டோம். மறுநாள் ஆட்டோவில் மைக் கட்டி தெருத் தெருவாகச் சென்று 4000 ரூபாய் வசூல் செய்தோம்” என்று நடந்ததை விளக்குகிறார்கள் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் எம்.ஷேக் காலீப்பும் சிதம்பரம் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த சரவணனும்.

தஞ்சாவூரில் காப்பீட்டுத்துறையில் பணியாற்றும் தோழர் T.S.வாசுதேவன் கூறுகிறார்:

“25ஆம் தேதி கீழ் வெண்மணித் தியாகிகள் தின நிகழ்ச்சிக்குப் போய்விட்டு இரவு 3 மணிக்குத்தான் வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் காலையில் 11 மணிக்கு தொலைக்காட்சி மூலம் சுனாமி தாக்கியதை அறிந்தேன். உடனே வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 40 தோழர்கள் ஒன்று கூடினோம். பல தோழர்கள் துக்கம் தாளமுடியாமல் அழுதனர். வாலிபர் சங்க மாநிலத்தலைவர் தோழர் கண்ணனை தொடர்பு கொண்டோம். உடனடியாக நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வெறும் கையோடு போகக்கூடதென்று முடிந்தவரை துணிமணிகளைச் சேகரித்துக்கொண்டு இரவு 11 மணிக்கு அம்மாப்பேட்டை முகாமுக்குப் போய் அவற்றை வழங்கினோம். அவர்கள் தேவைகளை அறிந்துகொண்டு மறுநாள் ஆட்டோவில் பிரச்சாரம் செய்து பணமும் பொருட்களும் சேகரித்தோம். அது ஒரு லாரிக்குமேல் சேர்ந்துவிட்டது. மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டோம். அவர் சடலங்களை தேடி எடுத்து அடக்கம் செய்ய உடல் உழைப்புக்குத் தயாரான குழுக்கள்தான் உடனடித் தேவை என்றார். தோழர்களை அவசரமாகத் திரட்டினோம். வாலிபர் சங்கத்தையும் மாணவர் சங்கத்தையும் சேர்ந்த 60 தோழர்கள் கூடினோம். வேலைப்பிரிவினை செய்தோம். 35 தோழர்கள் மறுநாளே நாகப்பட்டினம் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள பாப்பாகோவில் என்ற கிராமத்துக்குச் சென்றோம். இருபதிலிருந்து முப்பது சடலங்கள் பேப்பரைக் கிழித்து விசிறிவிட்டதுபோல ஆங்காங்கே சிதறிக்கிடப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டோம். முதல் சடலம் ஒரு புதருக்குள் இருந்து வெளியே எடுத்தோம். மூன்று மடங்கு பெரிதாக ஊதிப்போயிருந்த அந்த உடம்பைத் தொட்டதும் தோல் கையோடு வந்தது.

ஒரு பெண் சடலத்தில் பிறப்பு உறுப்பு வழியாக குடலெல்லாம் வெளியே வந்து கிடந்தது. பல தோழர்களுக்கு வாந்தி வந்தது. இரண்டு டாக்டர்களும் எங்களோடு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் உதவியோடு சமாளித்துக்கொண்டு சடலங்களை எடுத்து குழிகள் தோண்டி புதைத்தோம். எங்களோடு வந்திருந்த காவல்துறையினர் நான்குபேர் கரையில் நின்று பார்த்தபடி நின்றனர். நாங்கள் எடுத்த சடலங்களின் எண்ணிக்கையை அவர்கள் பதிவு செய்து கொண்டனர். காலையில் 9 மணிக்குத் துவங்கிய இப்பணியை மதியம் 1.30 வரை செய்தோம். மொத்தம் 32 சடலங்களை கண்டுபிடித்து அடக்கம் செய்தோம். எங்கள் குழுவில் பத்துத் தோழர்களுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. இரவு அவர்களை நிவாரண லாரிகளில் ஏற்றி ஊருக்கு அனுப்பிவிட்டோம். அன்று இரவு வாலிபர் சங்கத் தலைவர்கள் விரிவான திட்டங்களுடன் நாகை வந்து சேர்ந்தனர். அவர்களோடு நாங்கள் உடனே இணைந்துகொண்டோம்”

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களில் பெரும்பாலானோர் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகள் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கீழ வெண்மணித் தியாகிகள் தினத்தில் கலந்துகொண்டுவிட்டு நள்ளிரவுக்குப் பிறகுதான் அவரவர் ஊர் திரும்பியிருந்தனர். காலையில் கண் விழித்தால் இத்தனை பெரிய சோகத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

உண்மையில் நாகப்பட்டினத்தில் மக்களெல்லாம் வெளியே ஓடிக்கொண்டிருக்கையில் மார்க்சிஸ்ட் தோழர்கள் மற்றும் வாலிபர் சங்கத் தோழர்கள் எதிர்திசையில் கடற்கரையை நோக்கி மக்களுக்கு உதவுவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சங்கம் சொல்வதற்காக வாலிபர்கள் காத்திருக்கவில்லை. தன்னெழுச்சியாக அவர்கள் களத்தில் இறங்கினார்கள். தன்னலமற்ற சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஆம். அதுதான் வாலிபர் சங்கத்தின் வளர்ப்பு. அவர்கள் வாலிபர் சங்கத்தின் வார்ப்புகள்.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It