கடந்த விவாதத்தில் "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் தங்களுடைய அரசியல் - பொருளாதார - பண்பாட்டு வாழ்வைத் தாங்களேத் தீர்மானித்துக் கொள்கிற உரிமையென்றும்; அப்படித் தீர்மானிப்பதற்கான அரசை அமைத்துக் கொள்வதற்கான உரிமைதான் அதுவென்றும்" எழுதியிருந்தோம்.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனி அரசு என்பது மார்க்சியமல்ல என்று நமது முகநூலின் உள்பெட்டியிலும், கருத்துப் பதிவுகளிலும் சில தோழர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்டத் தேசிய இனங்கள் ஒற்றை ஆட்சிமுறையில் இருப்பதுதான் சரியானதென்பது அவர்களின் கருத்து. உண்மையில் இதுதான் மார்க்சியத்திற்கு விரோதமானதாகும்.
நம்மால் சோவியத் இரசியா என இன்றுவரை உச்சரிக்கப்படும் புரட்சிகர நாட்டின் உண்மையானப் பெயர் அதுவல்ல. USSR - யுனைட்டெட் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் - என்பது ஐக்கிய சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகள் (அரசல்ல, அரசுகள்) என்பதேயாகும். இதையே சோவியத்துகளின் ஒன்றியம் என்று அழைப்பதுமுண்டு. அது பல குடியரசுகளைக் கொண்டதாகும். இந்த குடியரசுகளின் ஒன்றியத்தில் இரசிய குடியரசு ஒரு அங்கம் அவ்வளவே!
சோவியத்துகளின் ஒன்றியம் என்கிற அமைப்புமுறையை வைத்துவிட்டதாலே தேசியப் பிரச்சினைகள் தீர்த்துவிடவில்லையென தோழர் லெனின் கூறுகிறார் - "ஒன்றிணைந்த பொறியமைவு அவசியமெனக் கூறப்பட்டது. இதற்கான உத்தரவாதங்கள் எங்கிருந்து வந்தன? எனது நாட்குறிப்பின் முந்தையப் பகுதி ஒன்றில் நான் சுட்டிக்காட்டியிருப்பதுபோல இது ஜாராட்சியிடமிருந்த அதே ருசிய பொறியமைவை எடுத்து நாம் சோவியத் எண்ணெயைக்கொண்டு கொஞ்சம் அபிஷேகம் செய்தது அல்லவா?
இது நமக்கு சொந்தமானதாக, இது நமது பொறியமைவு என உறுதியோடு சொல்லதக்கதாக மாற்றுவதற்கு நாம் நமது நடவடிக்கைகளை தாமதப்படுத்தியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் இப்போது நமது மனசாட்சிபடி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்முடையது என்று நாம் கூறிக்கொள்ளும் இப்பொறியமைவு இன்னமும்கூட நமக்கு அன்னியமானதாகவேயுள்ளது. இது பூர்சுவா மற்றும் ஜாராட்சியின் கதம்ப கலவையாகவேயுள்ளது" தேசிய இனப்பிரச்சினையும் பாட்டாளிவர்க்க சர்வதேசியமும் - 268.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனி குடியரசுகளும், அக்குடியரசுகளையெல்லாம் ஒருங்கிணைத்த ஒன்றியமும் என்றப் பொறியமைவுக்குள்ளேயே எளிதாக சிக்கல் தீர்க்க முடியவில்லை என்றும்; கூடுதலாக உழைப்பும், ஒழுங்கமைப்பும் வேண்டுமென தோழர் லெனின் கூறுகிறார். ஆனால் நமது தோழர்கள் ஒற்றை ஆட்சி வடிவம்தான் மார்க்சியமெனக் கூறுகிறார்கள்.
இதில் சோகம் என்னவென்றால், அரசு என்றாலே அது தனித்திருப்பதுதான் என தோழர்கள் முடிவு செய்துக் கொள்வதேயாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுகள் ஒருங்கிணைந்து ஒன்றியமாக இருக்க முடியும், அவ்வாறுதான் இருந்தது என்பதை அறியாததாகும்.
சரி, ஏன் ஒரு தேசிய இனத்திற்கு தேசிய அரசு அவசியம்? என்பதைப் பார்ப்போம்.
துண்டுதுண்டான நிலவுடமை உற்பத்திமுறையின் கீழ் இனக்குழுக்களாக இயல்பாக சிதறியிருக்கும் ஒரே தேசிய இனம், வளர்ச்சியின் தேவையிலிருந்து ஒருங்கிணைந்த உற்பத்திமுறையான தேசிய உற்பத்தி (முதலாளித்துவ உற்பத்தி) முறைக்குள் வருவதே ஒரு தேசிய இனம் நவீன தேசமாக மாறுகிறது அல்லது வளருகிறது எனப்பொருளாகும்.
இரண்டுவித சிக்கலை எதிர்கொண்டே இந்த வளர்ச்சிப்போக்கு நிறைவேறுகிறது.
ஒன்று, ஒரே நிலப்பரப்பில் ஒரே தேசிய இனமாக இருக்கும் பட்சத்திலும்கூட அது தேசமாக ஒருங்கிணைவதற்கு முன் துண்டுதுண்டான சமூக அமைப்புகளாக இருக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட அத்துண்டு துண்டான சமூக அமைப்புகள் பொருளாதாரம் மற்றும் அதன் அதிகார பலத்தில் ஏற்றத்தாழ்வான நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன.
ஏற்றத்தாழ்வான நிலையில் தேசிய பொருளாதாரத்தில் பலம்பொருந்தியப் பகுதி தனது செல்வாக்கினால் தமது நலனை முதன்மைப்படுத்திக் கொள்ளும். இதனால் மற்றப் பகுதிகள் பாதிக்கப்பட்டு தேச உருவாக்கத்தில் சிக்கல் உருவாகும்.
ஆந்திராவில் அதுதான் நடந்தது. தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு மாவட்டங்களிடையே இப்போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே ஒரு தேசிய இனம் தனக்குள்ளேயான வேறுபாடுகளை (வர்க்க முரண்பாடுகளுக்கு உட்பட்டு) தீர்த்து ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு சொந்த அரசு தேவைப்படுகிறது.
இரண்டாவது, ஒரு தேசிய இனம் தேசமாக அமைவதென்பது பல்வேறு தேசிய இனங்களும் ஒன்றுகலந்து சர்வதேசமாக மாறுவதற்கு முந்தைய காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு தேசிய சமூகங்களும் சுரண்டல் சமூகங்களாய் இருப்பதோடு பலம், பலவீனத்தின் அடிப்படையில் ஒரு தேசம் மற்றொரு தேசத்தை சுரண்டுவதாகவும் உள்ளது. இது தேசங்களிடையே ஒன்றுகலத்தல் நிகழ விடாமல் சிக்கலை உருவாக்குகிறது.
ஆகவே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தத்தமது அரசியல் - பொருளாதார - பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு சொந்த அரசு தேவையானதாக உள்ளது.
நம்மவர்கள் இதை மறுக்கிறார்கள். புரட்சிகர அரசாங்கம் ஒரு தேசம் மற்றொரு தேசத்தை சுரண்ட அனுமதிக்குமா? என கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு தோழர் லெனின் பதில் சொல்கிறார் - "ஒரு சமுதாயப் புரட்சியை நடத்திவிட்ட ஒரே காரணத்தால் மட்டும் பாட்டாளிவர்க்கம் புனிதத்தன்மையை அடைந்துவிடாது. அதனால் நடக்கக்கூடிய சில தவறுகள் (மற்றவர்கள் மேலேறி சவாரி செய்வதற்கான விருப்பமும், சுயநலமும் சேர்ந்துதான்) இந்த உண்மையை இறுதியில் புரிய வைக்கும்." மேலே கூறியுள்ள நூல் 225.
ஆகவே தேசிய எல்லைகள் மறைந்து சர்வதேசம் உருவாவதற்கு முந்தைய எல்லா நிலையிலும் ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் சொந்த அரசுகள் அவசியம் என்பதே மார்க்சியம். சோவியத் ஒன்றியம் அமைவதற்கு தேசிய அரசுகள் தடையானதல்ல. சொல்லப்போனால் ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களும் அவற்றின் அரசுகளும் இருப்பதாலேதான் ஒன்றியம் என்பது அவசியமாகிறது.
- திருப்பூர் குணா