சர்வதேச அளவில் குண்டு வெடிப்பு, பயங்கரவாதம் போன்ற சொற்பதங்களுக்கு இசுலாம் அல்லது முசுலீம் என்று அர்த்தம் கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தியல் ஏகாதிபத்திய நாடுகளாலும் அவர்களை தூக்கிப்பிடிக்கின்ற கருத்தியல் வல்லுநர்களாலும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற முசுலீம் இன மக்கள் அதிகமாக வசிக்கின்ற தெற்கு ஆசிய பிராந்தியங்களில் இத்தகய போக்கிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தகுந்த களங்களை அமைத்து கொடுத்து வருகிறது. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடக்கின்ற பயங்கர வாத செயல்களுக்கும் இந்த அமைப்புக்குமான தொடர்பு வெகு இடைவெளியில் இல்லை.

சமீபத்தில் உலக மக்களையே கவலைகொள்ள செய்த பெஷாவர் குண்டு வெடிப்பின் உண்மையான தொடர்புகள் குறித்து சர்வதேச அளவிலான பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஆனால் இத்தகய செய்திகள் வெகுஜன ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது இந்த உலகத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தும். பெஷாவர் குண்டு வெடிப்பை அரங்கேற்றியவர்கள் தஹ்ரீக்-ஏ-தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என அமெரிக்கா சொல்லிக்கொடுத்த செய்தியையே அனைத்து ஊடகங்களும் மறு வாசிப்பு செய்வதன் மூலம் மறைமுகமாக உலக முசுலீம் சமூகத்தின் மீதான களங்கம் ஊதி பெரிதாக்கப்பட்டு வருவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கூலிப்படைதான் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பதாக தற்போது காலம் தாழ்ந்து வரும் இந்த செய்தியை எந்த ஊடகமும் வெளிக்கொணர தயாராக இல்லை என்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

கடந்த டிசம்பர் 28ம் தேதி பெங்களூரு மகாத்மா காந்திசாலை சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழகத்தை சார்ந்த பவானீஸ்வரி என்பவர் மரணம் அடைந்தார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களிலையே உள்ளூர் தொலைக்காட்சி முதல் சர்வதேச ஊடகங்கள் வரை இந்தியன் முஜாகிதீன் என்றும் சிமி என்றும் கூவ ஆரம்பித்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த அடுத்த நாள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், சுவர்ணா நியூஸ் என்ற தொலைக்காட்சி நிலையத்திற்கும் அப்துல் கான் என்ற பெயரில் வந்த ட்விட் செய்தியில் இந்த குண்டு வெடிப்பை நடத்தியவன் நான் தான் என்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிமி இயக்கத்தை சார்ந்த மெஹ்தி பிஸ்வாஸை உடனே விடுதலை செய்யாவிட்டால் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து களத்தில் இறங்கிய பெங்களூரு போலீசார் சரியான கோணத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ட்விட்டர் செய்தி அனுப்பிய நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் பெங்களூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் ஆர்.எஸ்.எஸ்ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் இருப்பதாகவும் தெரிவித்தார். குண்டு வெடிப்பு சம்பவத்தை திசை திருப்புவதற்காகவே ட்விட்டர் செய்தியை அனுப்பியதாகவும் அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். விசாரணை நன்றாக நடந்து கொண்டிருக்க மத்திய புலனாய்வு நிறுவனம் திடீரென விசாரணையை திசை திருப்பும் வகையில் சம்பந்தப்பட்ட மாணவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற பொய்யை பரப்பி முழு பூசனிக்காயையும் சோற்றில் மறைத்த கதையாக அனைத்து செய்தியையும் மறைத்து அப்படி ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

இது இப்படி இருக்க கடந்த ஜனவரி 3ம் தேதி சென்னை கானத்தூர் பகுதியில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு என்றும் சிவசேனா நிர்வாகியை கொல்ல சதி என்றும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்து கொண்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சில இசுலாமிய இயக்கங்களின் பெயர்களை தொடர்பு படுத்தி அன்றைய மாலை பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரிகள் உண்மையான தொடர்புகளை அம்பலப்படுத்தினர். குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன கோவில் திருவிழாவின் போது வாங்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை அப்பகுதியை சேர்ந்த சூரி என்ற ஆர்.எஸ்.எஸ். நபர் தனது நண்பர்களுடன் இணைந்து குண்டு வெடிப்பு போன்ற ஏற்பாட்டை உருவாக்கியது அம்பலமானது. ஆனால் காவல்துறை விளையாட்டாக செய்ததாக கூறி வழக்கை திசை திருப்பியது.

ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்த அவர்களே நடத்துகின்ற நாடகங்களுக்கு முசுலீம் இன மக்கள் பலிகடா ஆகுவது மிகவும் வேதனைக்குரிய செயல்பாடாகும். இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் நடத்த குண்டு வெடிப்புகள் குறித்த உண்மையான விசாரணை நடந்தால் இந்த நாட்டில் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு கைக்கூலிகளாக வேலை செய்யும் பயங்கரவாத அமைப்புகள் கண்டிப்பாக சிக்கும் என்பது உண்மை என்றாலும் கார்கரேயை யாரும் மறந்து விடவேண்டாம்.

Pin It