farmers

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீண்ட விவாதங்களுக்குப் பின் கொண்டு வந்தது. அந்தச் சட்டமே விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதாக இல்லை என்ற கடுமையான விமர்சனத்தை விவசாய அமைப்புகள் கூறிவந்தன. அதே நேரத்தில் காங்கிரஸ் அரசின் புதிய சட்டமானது தங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு கூடுதலான செலவை உருவாக்குகிறது என கார்பரேட் நிறுவனங்கள் குரல் எழுப்பி வந்தன.

மத்தியில் நரேந்திர மோடி அரசு வந்தவுடன் கார்பரேட் குழுமங்கள் தங்கள் நலனுக்கு பாதகமாக இருக்கின்ற நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. நீண்ட கால விவாதத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை கார்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தின் முன் வைத்து விவாதிக்காமல் அவசரச்சட்டத்தின் மூலம் மோடி அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த அவசரச்சட்டம் பல்வேறு தேவைகளுக்கும் விவசாயிகளின் ஒப்புதலுடன் தான் நிலம் எடுக்க வேண்டும் என்று இருந்த பிரிவை விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே நிலத்தை எடுக்கலாம் என்று மாற்றியுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நிலத்தை கார்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப பறித்துக் கொள்வதாகும்.

இந்த மிகமோசமான நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றோம். நசிந்து வரும் விவசாயிகளின் நிலத்தையும் அவசரச்சட்டம் மூலம் மோடி அவர்களின் அரசு பறிப்பது வேதனையானது.

தமிழகத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இந்த சர்வாதிகாரமாக போடப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை நீக்கக் குரல் கொடுக்க வேண்டும் என தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Pin It