மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 5 மாதங்களுக்கு முன் பரவிய எபோலா எனும் நோய், உலக மக்கள் அனைவரையும் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதைக் கண்டு அஞ்சிய உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation - WHO) இதை உலக அளவில் அவசரநிலையாகப் பிரகடனப் படுத்தியது; இந்நோய் பரவாமல் இருக்கவும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடையவும், உலக நாடுகள் அனைத்தும் உதவ வேண்டும் என்று வேண்டுகோளையும் விடுத்தது.

Cuba fights ebola

எபோலா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, அந்த நோய் தங்கள் நாட்டு மக்களைத் தொற்றிக் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவேனும் உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி முதல் மருந்து மாத்திரைகள் அளித்தல், மருத்துவர்கள் செவிலியர்களை அனுப்புதல் வரை அனைத்து உதவிகளையும் செய்ய முனைந்து உள்ளன.

இச்சேவையில் அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும், வழிகாட்டியாகவும், முன்னணி நாடாகவும் கியூபா விளங்குவதை இலண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் 'தி கார்டியன்' (The Gaurdian) பத்திரிக்கை மறைக்க முடியாமல் வெளியிட்டு உள்ளதை இங்கு 6.12.2014 நாள் இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டு உள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் ஆயிரக் கணக்கில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்புவதோடு மட்டும் அல்லாமல் பெரும் நிதி உதவியையும் அளிக்க முன்வந்து உள்ளன. ஆனால் களத்தில் இவர்கள் அனைவருக்கும் வழி காட்டி நடத்திக் கொண்டு இருப்பது கியூபாவில் இருந்து வந்துள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

புதிதாகத் தோன்றி உள்ள இந்நோயின் தன்மையை ஆராய்ந்து, அதற்கான மருந்துகளை உருவாக்கித் தருவது முதல் நோயாளிகளிடம் தாங்கள் குணம் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, உளவியல் ரீதியாகவும் சிகிச்சை அளிப்பது வரையிலும் கியூப மருத்துவர்கள் மட்டுமே முன்னணியில் இருப்பதையும், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் மருத்துவர்கள், கியூப மருத்துவர்களின் தலைமையின் கீழ் செயல்படுவது போலச் செயல்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்து உள்ளது. கியூப மருத்துவர்கள் களத்திற்குச் செல்லும் வரை எபோலா நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்த நிலையில், கியூப மருத்துவர்கள் வந்து சிகிச்சை முறையை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளார்கள். இது மற்ற நாட்டு மருத்துவர்கள் கியூப மருத்துவர்களின் தலைமையை ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவச் சிகிச்சையில் கியூபாவின் அறிவுத் திறனும் மனித நேயமும் மற்ற நாடுகளுக்கு வழியாட்டியாக இருக்கும் உண்மை வெளிப்படுவது இது முதல் தடவை அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஹைடியில் (Haiti) நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுதும், 2005ஆம் ஆண்டு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுதும் இதே நிலை தான் நிலவியது.

"கியூப நாட்டின் மருத்துவச் சேவையால் உலகில் கோடிக் கணக்கான மக்கள் நோய்களில் இருந்து குணமாகி மறுவாழ்வு பெறுகிறார்கள்" என்று கனடா நாட்டுப் பேராசிரியர் ஜான் கிர்க் (John Kirk) கூறி உள்ளார்.

இவ்வளவு சேவையையும், அமெரிக்கா, கியூபா மீது விதித்து இருக்கும் பொருளாதாரத் தடைகளையும் கடந்து கொண்டு தான் என்றும், பொருளாதாரத் தடைகளை நீக்கப்பட்டால், கியூபாவினால் உலகில் மருத்துவத் துறையில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கார்டியன் பத்திரிக்கை தனது கருத்தைத் தெரிவித்து உள்ளது. மேலும் தனது பதவியின் கடைசிக் காலகட்டத்தில் இருக்கும் பாரக் ஒபாமா, தன்னுடைய காலத்தில் உலகுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால், கியூபா மீது 50 ஆண்டு காலமாக உள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கலாம் என்றும் அப்பத்திரிக்கை கூறி உள்ளது.

உயர் கல்வி மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டு மருத்துவர்களை விட, ஏழை நாடான, அதுவும் 50 ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடைகளின பளுவைச் சுமந்து கொண்டு இருக்கும் கியூயாவின் மருத்துவர்கள் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்க முடிவது எப்படி?

முதலாளித்துவப் பொருளாதார முறையில் நாடு இயங்கிக் கொண்டு இருக்கும் பொழுது மனிதர்கள் பொருள் தேட வேண்டும் என்பதற்குச் சிந்திக்கவே ஊக்குவிக்கப் படுவார்கள். அறிவுத் திறன், மனித நேயத்தை விடவும் பொருள் சேர்த்தலே முக்கியமாக மதிக்கப்படும். ஆனால் சமதர்ம (சோஷலிச) அமைப்பில் மக்களின் நலனுக்குச் சிந்திப்பதே ஊக்குவிக்கப்படும்; மக்கள் நலனுக்காகச் சிந்திப்பவர்களே சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். ஆகவே பணக்கார, வல்வரசு முதலாளித்துவ நாடுகளின் மருத்துவர்கள் பின் தங்கி இருக்க, ஏழை நாடாக இருந்தாலும் சமதர்ம நாடான கியூப நாட்டு மருத்துவர்கள் களத்தில் முன்னணியில் இருக்க முடிகிறது.

நாம் முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் மயக்கு மொழிப் பேச்சுகளின் மயங்கி நம் உடல் நலனைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இருக்கப் போகிறோமா அல்லது நம் உடல் நலனைப் பேண, சமதர்ம முறை வேண்டும் என்று போராடப் போகிறோமா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.12.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Comments

3 comments

3
இராசா
இந்த அறிவுத்திறனும், மனித நேயமும் ஏன் இலங்கை தமிழினத்தை அழித்தொழிக்க துணை நின்றது?

அமெரிக்க எதிர்ப்பு என்பதற்காக எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாமா?
Ramea
நண்பரே! ஈழப் பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என்பது தான் கியூபாவின் நிலைப்பாடு. இந்தியா ஈழப் பிரச்சினையில் தலையிடாது இருந்திருந்தால் தனி ஈழம் உருவாவதைத் தடுத்து இருக்க முடியாது. கியூபாவின நிலைப்பாட்டைத் திரித்துக் கூறி, ஆதிக்க சக்திகள் உழைக்கும் மக்களைப் பிளவு படுத்த முயல்கின்றன. அதற்குப் பலியாக வேண்டாம்.
Gowrikanthan
முதலாளித்துவ சமுக அமைப்பின் சமூக விழுமியங்களை ஏற்றுக்கொண்ட மனிதர்கள் பொருளாதார அரங்கினில் பண்டமைய சிந்தனையாளர்களாவே இருப்பார்கள் என்பது சரியானதே. பிறமனிதர்களைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியதுமான அவர்களின் சிந்தனை தமது பண்டநலன் சார்ந்ததாகவே இருக்கும். பணப்பிசாசுகள் என்ற வார்த்தை இங்கு பொருந்தும். ஆனால் கியுபாவின் சாதனைக்கு கியூபா இப் பிசாசியத்தில் இருந்து விடுபட்டது என்பது மட்டும் காரணமல்ல. அதைவிட அழுத்தமான வேறோர் காரணமும் உண்டு.
அதுதான் கியுபாவின் அரசியல் அரங்கினில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மிருகக் குணாசமாகும். முதலாளித்துவ சமூகத்தின் அரசியல் அரங்கின் அரசியல்வாதிகளெல்லாம் அரசியல் மிருகங்களேயாகும். மேட்டுக்குடியின் அரசியல் நலனுக்கான சேவையுடன் தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் இவ் அரசியல்வாதிகள், காலப் போக்கில் தமது கட்சிக்கான சேவகர்களாகவும், பின்னர் கட்சியின் தலைமைக்குழுவுக்கான சேவகர்களாகவும் மாறிவிடுகிறாரகள். தலைமைக் குழுவின் நலனுக்காக செயற்படும் அரசியல் மிருகங்களாக ஆகிவிடுகிறார்கள். அதிகாரப்போட்டியில் ஈடுபடும் இந்தப் பேய்கள் சாத்திரங்களையும் பிணந்தின்னிகளாக ஆக்கிவிடுகின்றன. நோய்களைப் பரப்பி பிற நாடுகளையும், தேசியங்களையும், ஊர்களையும் , சாதிகளையும் எவ்விதம் வெல்லலாம் என்பதுதான் இவர்களின் சிந்தனையாக இருக்கின்றதே தவிர. பிறரின் எந்த நலனிலும் இவர்களுக்கு அக்கறையில்லை. ஆனால், சமதர்மவாதிகள் அவ்விதமல்ல. சமுதாய நலனில் இருந்துதான் அவர்கள் மக்கள் நலனை அணுகுகிறார்கள், மக்கள் நலனில் இருந்து கட்சிநலனை அணுகுகிறார்கள், கட்சி நலனில் இருந்து கட்சித் தலைமை நலனை அணுகிறார்கள், இது முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பார்வைக்கு நேரெதிர்த் திசையில் பயணிக்கும் அணுகுமுறையாகும்.
இந்த அணுகுமுறைதான் தோழர் பிடலினதும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் முன் சொன்ன சாதனைக்கான காரணமாகும். என்ன மரபணு மாற்றம் செய்தாலும் பாவற்காய் இனிக்காது, அவ்விதமே எத்தனை காந்தியர்கள் வந்தாலும் பணப்பிசாசின் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. பாவனைக்கு உகந்ததல்ல என தடைசெய்யப்பட்ட சுமார் 400 மருந்துகளின் மீதான தடையை நீக்கிய நீதிமன்றம் சாஸ்திரங்கள் பிணம் தின்று வருகின்றன என்பதற்கானதொரு ஒரு எடுத்துக்காட்டாகும்.(இது நடந்து இன்னும் இரு வாரங்கள் கூட ஆகவில்லை)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.