நமது "பின்நவீனத்துவம் - கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி" நூல் குறித்து நடக்கும் விவாதங்களில் சில தோழர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அமைப்புகளில் முன்னணி ஊழியர்களாக இருக்கும் அவர்கள் அரசு மற்றும் ஆளும்வர்க்க எடுபிடிகளாக இருக்கும் N.G.O-க்கள் குறித்துக் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் பாதகம் விளைவிப்பவையாகும்.

நமது நூலில் கம்யூனிச எதிர்ப்பில் பின்நவீனத்துவம் ஏகாதிபத்தியங்களின் தத்துவமாக செயல்படுகிறது என்றும்; அதை நடைமுறைப்படுத்துவதில் போர்டு பவுண்டேஷன், தமிழ்நாடு தியாலஜிக்கல் செமினரி, எவாஞ்சலிக்கல் சர்ச், தலித் ஆதார மய்யம், வேர்ல்ட் விஷன், பிரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட் என N.G.O-க்களின் பாத்திரம் என்னவென்றும்; எஸ்.வி.ஆர் மற்றும் விடியல் சிவா ஆகியோரின் N.G.O உறவுகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளோம்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழரான மனுவேல் "ஏகாதிபத்திய காலகட்டத்தின் முதலாளித்துவ தத்துவமான பின்நவீனத்துவத்திற்கு எதிராக உறுதியான போராட்டங்கள் நடத்த வேண்டுமென்றும், அதை முறியடித்து வீழ்த்த வேண்டுமென்றும், அதனடிப்படையில் நான்காவது ஈழப்போர் காலக்கட்டத்திற்குப் பிறகு பின்நவீனத்துவவாதியான அ.மார்க்ஸை எங்களது கட்சி எதிர்க்கிறதென்றும்" தனது கட்சியின் நிலைப்பாடாக அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் எஸ்.வி.ஆர் மற்றும் விடியல் சிவா ஆகியோரை கம்யூனிஸ்டுகளாகவும், புரட்சிகர கட்சியின் ஆதரவாளர்களாகவும் கூறியிருக்கிறார். (2014 நவம்பர் 10 பேஸ்புக் விவாதத்தில்)

இளந்தமிழகம் (சேவ் தமிழ்ஸ்) இயக்கத்தின் தோழர்களான ஏர் வளவன் மற்றும் வினோத் களிகை ஆகியோர் "அனுபவமிக்க வ.கீதா அவர்கள் எங்களின் ஊடக அணிகளுக்கு அரசியல் பயிற்சியளித்து பல நன்மைகளை செய்து வருகிறார்" என்கிறார்கள். (2014 ஜூலை 25 பேஸ்புக் விவாதத்தில்)

முற்போக்கு மற்றும் புரட்சிகர இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், அவற்றிற்கு அரசியல் பயிற்சியளித்து வளர்த்து விடுவதற்குமா ஏகாதிபத்திய எசமானர்கள் N.G.O-க்களை நடத்துகிறார்கள்? எஸ்.வி.ஆர் - வ.கீதா - விடியல் சிவா ஆகியோரின் N.G.O உறவுகள் என்ன? N.G.O உறவுடன் இருப்பவர்களோடு இணக்கமாக இருப்பதால் அமைப்புகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்ன? என்பதை குறித்து நாம் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

வ.கீதாவின் N.G.O உறவு

வ.கீதா உலகறிந்த N.G.O ஆவார். வ.கீதா குறித்து நாம் பேசுவதைவிட புரட்சிகர இயக்கங்களுக்கு நன்கு அறிமுகமான அரவிந்த் என்கிற கோபட்காண்டி பேசுவதை கேட்போம்.

va geethaதோழர் அரவிந்த் 2004 நவம்பரில் பீப்பிள்ஸ் மார்ச் இதழில் எழுதியது bannedthought.net-இல் காணக்கிடைக்கிறது. FIGHT BACK THE GROWING ATTAACKS ON DALITS என்று தலைப்பிட்டு அவர் எழுதிய கட்டுரையில் "...தலித்துகளை காயடித்து நீர்த்து போகச் செய்யும் வேலையை BUILD என்ற நிறுவனமும் செய்து வருகிறது. அதன் இன்னொரு பெயர் VIKAS ADHYAAYAN KENDHRA (VAK). இந்நிறுவனம் ஏராளமான அந்நிய நிதியில் இயங்குவதாகும். இந்த தன்னார்வ அமைப்பானது சில ஆண்டுகளுக்கு முன் 'தலித் இண்டலெக்சுவெல் கலெக்டிவ்' என்ற அமைப்பை உருவாக்க நிதி வழங்கியது. ஒன்றுக்கும் உதவாமல் குழப்பம் விளைவிப்பதற்குதான் இந்த அமைப்பு என்பதை 1999-இல் நடந்த அமைப்பு விழாவின் அறிக்கையிலேயே வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த அறிக்கையை கோபால்குரு என்பவருடன் இணைந்து வ.கீதா தயாரித்துள்ளார்." என்று கூறுகிறார்.

சுவராஸ்யம் கருதி அந்த அறிக்கையிலிருந்து தோழர் அரவிந்த் மேற்கோள் காட்டுவதை ஆங்கிலத்திலேயே தருகிறோம்- "..thus, DIC has an ambhitious agenda to speak in universal but authentic terms realizing that authenticity will net be an impeddiment for reaching the universel.." குழப்புவதை எவ்வளவுத் தெளிவாகச் செய்கிறார்கள் என்பதை முடிந்தவர்கள் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் VAK என்கிற அந்நிய நிதி பெறும் நிறுவனத்தின் அறிக்கையை தயாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவமுடையவர் வ.கீதா என்பது முக்கியமானதில்லையா!

தோழர் அரவிந்த் தனது கட்டுரையில் தலித் மக்களின் எழுச்சியை திசை திருப்பவும், அவர்களின் கோபத்தை வடியச் செய்யவும் N.G.O-க்கள் முனைப்புடன் செயல்படுவதையும், அதில் வ.கீதாவின் பாத்திரத்தையும் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.

ஹையர் எஜுகேஷன் செல் - பெங்களூர் என்றொரு அமைப்புள்ளது. இது தமிழ்நாட்டில் பாலினம் சம்பந்தமாக செயல்படும் ஜெண்டர் ட்ரைனிங்க் புரோக்கிராம் குறித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்தது. N.G.O-க்களின் பயிற்சித்திட்டங்கள் மற்றும் வரலாறு குறித்து ஆய்வு செய்த இப்பணியில் வ.கீதாவுடன் சாலைசெல்வம், பொன்னி அரசு, மீனா கோபால் ஆகியோர் ஈடுபட்டனர். வ.கீதாதான் இதன் ஒருங்கிணைப்பாளர். இவர்கள் அனைவருமே பல ஆண்டுகளாக N.G.O - க்களோடு இணைந்து செயல்பட்டு வருபவர்கள் என்று அறிக்கையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வ.கீதாவின் N.G.O தொடர்புக்கு ஏராளமான‌ ஆதாரங்கள் இருந்தாலும் இன்னும் ஒன்றை மட்டும் நாம் தெரியப்படுத்துவோம். சென்னையில் டாறா BOOKS CHENNAI என்றொரு வெளியீட்டகம் உள்ளது. இது நிதி திரட்டலுக்காக Tara books and educational out reach என்றொரு டிரஷ்டை வைத்துள்ளது. இந்நிறுவனம் HIVOS என்ற நெதர்லாந்தின் N.G.O அமைப்பிடமிருந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக கணிசமாக நிதி பெற்று வருகிறது. TARA-வின் ஆசிரியர் குழுவில் வ.கீதாவும் ஒருவர். இதன் விபரம் வேண்டுவோர் tarabooks.com-இல் தேடட்டும்.

உலகறிந்த N.G.O-வான வ.கீதாவின் "காந்திய அரசியல்" என்ற நூலும், 'காந்தி மனசாட்சி என்று சொன்னதைத்தான் பெரியார் பகுத்தறிவு என்று சொன்னார்' என்ற கூற்றும் அரசியல் திரிபு என்றும்; பெரியாரை காந்தியவாதியாக்கும் முயற்சி என்றும்; ஒரு தத்துவார்த்த சதி என்றும் தோழர் வே.மதிமாறன் மிக அழகாக  (http://mathimaran.wordpress.com/2014/04/22/secular-798/) தோலுரித்திருக்கிறார்.

எஸ்.வி.ஆரின் N.G.O உறவு

எஸ்.வி.ஆர் கரூரை மய்யமாகக் கொண்டு இயங்கும் "AREDS" என்ற N.G.O-வோடு நேரடியாகவே தொடர்புடையவர். சந்தேகமிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கட்டும்.

அடுத்து எஸ்.வி.ஆரின் நடவடிக்கைகளை வ.கீதாவின் நடவடிக்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. தன்னார்வத் தொண்டு நிறுவன செயல்பாட்டாளாரான வ.கீதாவோடு இணைந்து செயல்பட்ட எஸ்.வி.ராஜதுரை, தனது இருத்தலியம் பற்றிய நூல்களையும், பெரியார் பற்றி தனது ஆய்வுகளையும் ஒரு மார்க்சியவாதியாக இருந்துகொண்டுதான் செய்ததாக சொல்லிக்கொள்கிறார்.

S.V.Rajaduraiஆனால் எஸ்.வி.ஆரும், வ.கீதாவும் இணைந்து தோழர் மார்க்ஸை பெண்களுக்கு எதிராக சித்தரிக்க "அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்" நூலை (விடியல் பதிப்புதான்) கொண்டு வந்ததையும்; "பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூலை (விடியல் பதிப்புதான்) பின்நவீனத்துவவாதியான இரவிகுமாரை வைத்து வெளியிட்டதையும் தோழர் வே.மதிமாறன் கேள்விக்குள்ளாக்கி வருவதை இதுவரை மறுக்க முடியாமல் இருக்கிறார்.

எஸ்.வி.ஆர் மற்றும் வ.கீதாவின் பணிகளை N.G.O பின்புலத்திலும், அரசியல் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கிலும் உள்ளதாக பார்க்கும் தோழர் வே.மதிமாறன் கண்ணோட்டம் சரியானது. இந்த வகையில் N.G.O project-களுக்கு இணையாகத்தான் எஸ்.வி.ஆரின் ஸ்டாலினிய எதிர்ப்பும்; மார்க்சியத்திற்கு எதிராக தலித்தியத்தையும், பெரியாரியத்தையும் நிறுத்த முயற்சித்ததையும் நாம் காண வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களது கைக்கூலிகளும் ஸ்டாலின் எதிர்ப்பையும், கம்யூனிச எதிர்ப்பையும் மேற்கொண்டபோதுதான் எஸ்.வி.ஆர் பின்நவீனத்துவவாதிகளின் செயல்பாட்டுக்குத் துணையாக 'நெறிக்கப்பட்ட குரல்வளைகள்', 'அந்நியமாதல்' ஆகிய நூல்களைக் கொண்டு வந்தார். பின்நவீனத்துவவாதிகள் மார்க்சியம் என்கிற பெருங்கதையாடல் தவறு என்று விதண்டாவாதம் செய்து; வர்க்க ஒற்றுமையை குலைக்கும் விதமாக பெண்ணியம், பாலினம் போன்ற அடையாள அரசியலை விதைத்தபோதுதான் எஸ்.வி.ஆர் 'அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்' நூலைக் கொண்டு வந்தார். பின்நவீனத்துவவாதிகள் அரசியலின் அனைத்தும் தழுவிய தன்மையைப் புறக்கணித்து பண்பாட்டு அரசியலை மட்டுமே ஊதிப்பெருக்கிய போதுதான் எஸ்.வி.ஆர், பெரியார் மற்றும் தலித்தியல் நூல்களை கொண்டு வந்தார். இப்பணிகள் அனைத்தையும் வ.கீதாவுடன் இணைந்தே செய்தார்.

எஸ்.வி.ஆரின் ஸ்டாலினிய எதிர்ப்பு புகழ் வாய்ந்தது. இங்கிலாந்தில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகளை பட்டியலிட்டுக் காட்டிக்கொடுத்தவன் ஜார்ஜ் ஆர்வெல் என்கிற உளவாளி. இவன் சோசலிச ஒன்றியத்தை கேவலமாக சித்தரித்து எழுதிய நூலின் பெயர் 1984. இந்நூல் உலக கம்யூனிஸ்டுகளால் நஞ்சென வெறுக்கப்பட்டதாகும். இதைத் தமிழில் அமெரிக்க கையாளான க.நா.சு மொழிபெயர்த்தார்.

சீந்துவாராற்றுக் கிடந்த இந்த நூலை எல்லோரும் படிக்க வேண்டுமென்று 2004-இல் கட்டுரை எழுதியவர் எஸ்.வி.ஆர். ஜார்ஜ் ஆர்வெல் கம்யூனிஸ்டுகளை காட்டிக்கொடுத்தது ஸ்டாலின் மீதான வெறுப்பினால் என்றும்; அது, காச நோயில் ஆர்வெல் படுக்கையில் இருந்தபோது செய்துவிட்ட பலவீனமான செயல் என்றும் ஞாயப்படுத்தினார்.

ஆர்வெலின் 1984 நூல் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூலென்றும்; அந்நூல் இரசியாவைப் பேசுவதாக மட்டும் பார்க்க முடியாது, அது அமெரிக்காவைப் பேசுவதாகவும் பொருத்திப் பார்க்கலாம் என்றும்; அதை மொழிப்பெயர்த்த க.நா.சு-வைப் பாராட்டியும் எழுதிக்கொண்டே போனார் எஸ்.வி.ஆர்.

முடிவுறாமல் நீளும் எஸ்.வி.ஆரின் N.G.O பின்புலத்தையும், கம்யூனிச எதிர்ப்பையும் இப்போது நிறுத்திக் கொள்ளலாம். சிறீலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் (SLDF), லிட்டில் எயிட் போன்ற N.G.O-க்களைச் சார்ந்த சுசீந்திரன் I.N.S.D என்ற N.G.O-வுடன் இணைந்து திருவனந்தபுரத்தில் நடத்திய புலியெதிர்ப்புக் கூட்டத்தில் எஸ்.வி.ஆர். கலந்து கொண்டதையும், தமிழ்நாட்டில் புலி ஆதரவு நாடகமாடிய மோசடியையும் புதிய ஜனநாயகம் இதழ் உட்பட பலரும் விமர்சித்திருப்பதை வாசகர்கள் நினைவூட்டிக் கொள்ளலாம்.

விடியல் சிவாவும் பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டும்

பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமானது. பிரான்ஸ் ஒரு ஏகாதிபத்திய நாடு என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது போலவே கம்யூனிச எதிர்ப்பிலும், பின்நவீனத்துவத்தை வளர்த்தெடுப்பதிலும், பின்நவீனத்துவ பிரதிநிதிகளான ஜாக் தெரீதா- மிகேயில்பூக்கோ- லியோத்தார் போன்றவர்களை வளர்த்தெடுத்ததிலும் அந்த நாட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் விளக்க வேண்டியதில்லை.

vidiyal sivaசிவா பின்நவீனத்துவத்தைப் பரப்பி கோவையில் இருந்த அற்புதமான கலைத்திறன் மிக்க R.Y.L குழுவின் பெரும்பான்மையோரை குடிக்கலாச்சாரத்திற்கு பலியாக்கினார். இன்றுவரை பலர் அதிலிருந்து மீளவில்லை. அவர்கள் புதிய தமிழகத்தில் இணைந்து செயல்படத் தூண்டுதலாயிருந்தார். சிவாவோடு இணைந்தேயிருந்த உறுதி வாய்ந்த புரட்சிகரத் தோழரான தண்டபாணி(விடியல் கல்யாணியின் கணவர்) புதிய தமிழகத்திற்குப் போனார்.

சிவா பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் உறவுடன் இருந்து மறைந்தார். விடியல் பதிப்பகத்தில் இப்போதும் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் கண்ணன் முக்கியமானவர்.

ஈரான், விடுதலையின் நிறம் போன்ற பல படைப்புகளை பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டுக்கு நன்றி தெரிவித்து சிவா வெளியிட்டார். நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கண்ட வெளியீடுகளுக்கு பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் என்ன உதவிகள் செய்தது? உண்மையில் எளிதாகக் கிடைக்கிற இந்த நூல்களின் உரிமம் பெற பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டின் உதவி அவசியமில்லை. வேறு உதவிகளை பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் செய்திருக்குமானால் அது விரும்பும் வெளியீடுகளைக் கொண்டு வருவதற்குதானே செய்யும்? என்பது இயல்பாக எழும் கேள்வி.

ஈரான் நூல் ஈரானியப் புரட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பை மறுக்கும் நூலாகும். ஈரான் புரட்சியில் முன்னணியிலிருந்த ஈரானிய விமானப்படையினரை ஈரான் புரட்சிக்கு எதிராக இருந்தார்கள் என்பது போன்ற உண்மைக்கு மாறான பல அபத்தங்களைக் கொண்டது அந்நூல். நடைமுறையில் புரட்சிகர அரசியலுக்கும், புரட்சிகர இயக்கங்களுக்கும் கடைசி வரை ஆதரவாளராகவே இருந்த(!) சிவாவுக்கு இந்நூல்களைக் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன? என்பதே நமது கேள்வி.

அதுபோலவே டிராட்ஸ்கி, நீட்ஷே மாதிரியான நூல்களும் என்ன தேவைகளுக்காகக் கொண்டு வரப்பட்டன? பெரிய விற்பனை எதுவும் இல்லாமல் பின்னர் கிடைத்த வரைக்கும் இலாபமென 70% தள்ளுபடியில் விற்கப்பட்ட இந்நூல்களுக்கு அரசியல் நோக்கமிருந்தது. அது யாருடைய அரசியல் நோக்கம்? என்பதே நமது கேள்வி.

டிராட்ஸ்கியோ, கிராம்ஷியோ, அலெக்ஸாண்ட்ரா கொலாந்த்ராயோ பாட்டாளிவர்க்க கட்சியைப் புறக்கணித்தவர்களல்ல; பாட்டாளிவர்க்கப் புரட்சியையும், சர்வாதிகாரத்தையும் மறுத்தவர்களல்ல; இவை குறித்த வழிமுறைகளில் மாறுபட்டவர்கள். இந்த விவாதங்களின் தளம் வேறு. டிராட்ஸ்கி உலகப் புரட்சியையும், அதற்கான கட்சியையும் வலியுறுத்தினார். பின்நவீனத்துவவாதிகள் உலகப் புரட்சியை ஏற்றுக்கொண்டார்களா? அதற்காக அமைப்பு கட்டினார்களா? அதற்காக இந்த நூல்கள் பயன்படுத்தப்பட்டு விவாதங்கள் மூண்டனவா? இல்லவே இல்லை. மாறாக இந்நூல்களைக் கொண்டு இங்குள்ள பின்நவீனத்துவவாதிகள் ஸ்டாலின் எதிர்ப்பு, அதிகாரத்திற்கு எதிராக என்ற பேரில் அமைப்பு எதிர்ப்பு போன்ற சீர்குலைவு பணிகளுக்குத்தான் பயன்படுத்தினர்.

பிளேவியா அக்னேஸ் என்பவர் எழுதிய பெண்ணுரிமையும் காகித சட்டங்களும் அல்லது பெண் விடுதலையும் காகித சட்டங்களும் (பேர் சரியாக நினைவில்லை) என்ற நூலை விடியல் பதிப்பகம்தான் வெளியிட்டது.

பெண்ணுரிமையின் பேசாத விசயங்களையெல்லாம் பேசுகிறவர் என அறிமுகப்படுத்தப்பட்ட பிளேவியா அக்னேஸ் MAJLIS என்ற N.G.O அமைப்பை நடத்துபவராவார். இவரது தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஃபோர்ட் பவுண்டேஷன், குளோபல் பண்ட் ஃபார் உமன், HIVOS போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று செயல்படுவதாகும்.

ஃபோர்ட் பவுண்டேஷன் MAJLIS-உடன் சினிமா திட்டங்களுக்காக மூன்றாண்டு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. (Annual reports of majlis 2008-2009) இன்று N.G.O அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் பிளேவியா அக்னேஸ் முன்பு பெண் விடுதலைக்கான தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டவர் என்று விக்கிப்பீடியா சொல்கிறது. 1990-க்கு பின்பு சட்ட ரீதியான வழிமுறைகளே சரியென்று கூறி N.G.O அமைப்பைத் தொடங்கிய பின் அவருக்கு ஏராளமான அந்நிய நிதி கிடைத்து வருகிறது.

தமிழ் வாசகர்களுக்கு யாரென்றே தெரியாத பிளேவியா அக்னேஸை அறிமுகப்படுத்திய பெருமை விடியல் சிவாவுக்கே உரியது.

அவர் தனது இறுதி காலம் வரைக்கும் இதுபோன்ற மார்க்சிய விரோத நூல்களைக் கொண்டு வந்தார். ஜெகன்னாபாத் சிறையுடைப்பு வந்த பிறகுதான் நீட்ஷே போன்ற அபத்தங்களும் கொண்டுவரப்பட்டது. இப்படியான சிவாதான் "நடைமுறையில் புரட்சிகர அரசியலுக்கும், புரட்சிகர இயக்கங்களுக்கும் கடைசி வரை ஆதரவாளராகவே இருந்தார்" என்பது எவ்வளவு பெரிய விமர்சனத்திற்கு உரியது.

எஸ்.வி.ஆர், வ.கீதா, விடியல் சிவா ஆகியோர் கம்யூனிச போர்வையில் செய்தது என்ன?

"இடதுசாரி அறிவுஜீவிகளை கள‌த்தில் நேர்கொண்டு தோற்கடிப்பதைவிட, அவர்களை இலட்சியத்திலிருந்தும், நோக்கத்திலிருந்தும் தூர இழுத்துச் செல்வதே ஃபோர்டு பவுண்டேசனின் நோக்கம்" என்று 1952 முதல் 1954 வரை ஃபோர்டு பவுண்டேசனின் தலைவராக இருந்த ரிச்சர்டு பிசல் கூறியதை நாம் மறக்கலாகாது.

இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகளை இலட்சியத்திலிருந்தும், நோக்கத்திலிருந்தும் தூர இழுத்துச் செல்ல வேண்டுமானால் அவர்களின் தத்துவத்திற்கு எதிரானதைப் பேசி முறியடித்து அதைச் செய்ய முடியாது. அது நேரடியாக மோதுவதேயாகும். மாறாக, முதலில் கம்யூனிசத்தைப் பேசி, அதன்பின் கம்யூனிசம் தடவிய கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களைப் பேசி மெல்ல அவர்களை தடம் மாற்ற வேண்டும். இதுதான் ரிச்சர்டு பிசல் கூறுவது. இதைத்தான் எஸ்.வி.ஆர் - வ.கீதா - விடியல் சிவா ஆகியோர் செய்தார்கள்; செய்கிறார்கள்.

ஒரு இடதுசாரி இளைஞனிடம் ஜெகனாபாத் சிறையுடைப்பைக் காட்டாமல் அவனிடம் நீட்ஷேயை நீட்ட முடியாதென்பது நமக்குத் தெரியாதா என்ன? அதை விடியல் சிவா தெளிவாகச் செய்தார். விளைவு அவரிடம் வந்த புரட்சிகர இயக்க ஆதரவாளர்களில் பலபேர் பின்நவீனத்துவவாதிகளான பூக்கோ, தெரிதா முதலானவர்களில் இருந்து ஓஷோ வரைக்குமானவர்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்; தோழர் மார்க்ஸையும் கம்யூனிஸ்டுகளையும் கொச்சைப்படுத்துகிறார்கள்; அமைப்பிலிருந்து விலகுவதோடு நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறார்கள்.

எஸ்.வி.ஆரும், வ.கீதாவும் இதே வழிமுறையில்தான் கம்யூனிசத்தை நேசித்து வரும் இளைஞர்களை காயடிக்கிறார்கள். இவர்கள் தங்களது கடந்தகால செயல்பாட்டை சாதகமாக்கிக்கொண்டு தங்களை கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்கின்றனர். அந்த முத்திரையோடுதான் கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை விதைத்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் என்று பெருமைப்பட ஒன்றுமில்லை என்றும்; இவர்களும் சராசரி மனிதன்போல பொறாமை, கோபம், வன்மம் கொண்டவர்கள்தான் என்றும் இழிவுப்படுத்துவதன் மூலம் 'இப்படியானவர்கள் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சணம் தெரியாதா' என்று கொச்சைப்படுத்துவதுதான் இவர்களின் ஃப்ராங்க்பார்ட் மார்க்சியம் என்னும் நூல். அதுபோல 'கம்யூனிஸ்ட் கட்சியை ஒருவர் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய அறிவுசார்ந்த செயலல்ல என்றும்; அது சூழல் விளைவிக்கும் விபத்து என்றும்; கட்சிக்குள் சுதந்திரம் இருக்காது என்றும்' அமைப்பு விரோதத்தை தூண்டுவதுதான் இருத்தலியமும் மார்க்சியமும் என்ற நூல். இதேபோல அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் என ஒவ்வொன்றிலும் இருக்கும் கம்யூனிச எதிர்ப்பு நச்சுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஒரு கட்டத்திற்குமேல் சாயம் வெளுக்கும் நேரத்தில்தான் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" விரிவாக்கம் போல எதையாவது செய்து சிவப்பை பூசிக்கொள்கிறார்கள்.

2004-லிலேயே தோழர் அரவிந்த் தனது கட்டுரையில் வ.கீதா தலித் மக்களின் எழுச்சியை திசை திருப்பவும், அவர்களின் கோபத்தை வடியச் செய்யவுமான N.G.O பணியினை செய்கிறார் என்று எச்சரித்தது முக்கியமானதில்லையா?

கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்த க.நா.சு மற்றும் சுந்தரராமசாமிகளை விட கம்யூனிசப் போர்வையில் எஸ்.வி.ஆரும், வ.கீதாவும், விடியல் சிவாவும் செய்த இயக்க விரோத செயல்கள்தான் அமைப்புகளை அதிகம் பாதித்தவை. வெளிப்படையாக எதிர்த்தவர்களை அடையாளம் கண்டு, கருத்து ரீதியாக முறியடிப்பதால் இயக்கங்கள் பலம்பெறும். ஆனால் கூட இருந்தே குழிப்பறிப்பவர்களைப் புரிந்து கொள்ளாததால்தான் இயக்கங்கள் இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

N.G.O உறவுகளோடு நீடித்துக் கொண்டும், கம்யூனிச எதிர்ப்பு செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டும் இருப்பவர்களை எவ்வித விமர்சனமும் இல்லாமல் கட்சிகள் ஆதரவாளர்களாகவும், நட்புசக்திகளாக‌வும் கொண்டிருப்பது கவலைக்குரியது இல்லையா?

2009 ஈழ இன அழிப்பையொட்டி வந்த இளைஞர்களையும், அவர்களின் இயக்கங்களையும் காயடிப்பதற்கு இந்திய ஆளும்வர்க்கமும், உளவுத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது வ.கீதாவை அரசியல் வழிகாட்டியாகக் கொண்டு "இளந்தமிழகம் இயக்கம்" செயல்பட்டால் என்ன பொருள்?

அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராடும் இயக்கங்களை அழிப்பதற்கு கட்சிக்குள் ஊடுருவதையும் ஒரு வழிமுறையாக எதிரிகள் கொண்டிருக்கும்போது N.G.O-க்களை ஆதரவாளர்களாகவும், நட்பு சக்திகளாகவும் கொண்டிருக்கும் தோழர் மனுவேலுவின் கட்சி எப்படி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்? எப்படி அதன் தலைவர்கள் கைதாகாமல் இருக்க முடியும்?

- திருப்பூர் குணா

Comments

16 comments

16
Selvakumar
நவயானா பதிப்பகத்தோடு சேர்ந்து வ.கீதா பணியாற்றியபோதே பெரியாரியவாதிகள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். பாஜகவுக்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதற்காக ஜோடி க்ரூஸை நிராகரிக்கும் வ.கீதா, நவயானாவின் லிட்டில் ஆனந்தின் பார்ப்பன சார்பு கருத்தியல் பற்றி வாய் திறக்கவில்லையே! இரவிக்குமாரும், லிட்டில் ஆனந்தும் சேர்ந்து, தலித் மக்களின் எதிரிகளாக பிற்படுத்தப்பட்டோரை முன்னிறுத்தி, பார்ப்பனர்களைக் காத்த போதும், பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதியபோதும் பொங்கி எழுந்திருக்க வேண்டாமா? அப்படி எழாவிட்டாலும் கூட பரவாயில்லை, அவர்களோடு எப்படி கூட்டு சேர்ந்து வேலை பார்க்க முடிகிறது? இதுதான் காரியத்தில் கண்வைக்கும் ஆரிய புத்தி என்பதா?
Rajavel
எஸ்.வி.ஆரின் என்.ஜீ.ஓ. தொடர்புகள் குறித்து அடிக்கடி செய்தி வருகிறது. இத்தினியூண்டு விஷயத்திற்கு எல்லாம் பக்கம் பக்கமாக எதிர்வினை ஆற்றும் எஸ்விஆர் இது குறித்து காக்கும் மௌனம் எதன்பாற்பட்டது? உண்மை வெளியே வந்துவிட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் அஞ்சுகிறாரா?
சுதாகர்
ஜெகத் கஸ்பர், அ.மார்க்ஸ், வ.கீதா என என்.ஜீ.ஓக்களின் கைப்பாவையாகவே சேவ் தமிழ்ஸ் இயக்கம் (தற்போது இளந்தமிழகம்) செயல்பட்டு வருகிறது. என்.ஜீ.ஓ நபர்களையே எப்படி தங்களது அரசியல் குருவாக தேர்வு செய்கிறார்கள்? அல்லது என்.ஜீ.ஒ.க்கள் இவர்களை வாரி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்களா? எப்படியே அரசியலில் கத்துக்குட்டிகள் என்பதையே இளந்தமிழகத்துக்காரர்கள் தொடர்ந்து நிருபித்து வருகிறார்கள்
Sundararajan
திருப்பூர் குணா புதுத் தோழர் போலிருக்கிறது. விடியல் சிவாவின் கட்சி பின்னணி பற்றி அவர் சொல்லவில்லை. சிவா ம.ஜ.இ.க அமைப்பில் முழு நேர ஊழியராக இருந்தார். தன்னார்வத் தொண்டு நிறுவன ஆதரவு செயல்பாடுகளுக்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்காக அவர் வருந்தவில்லை. தன்னை மாற்றிக் கொள்ளவுமில்லை. தொடர்ந்து கலைப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கோயமுத்தூரில் மஜ இக செயல்படாமலேயே போயிற்று. அதற்கு முன்பு விடியலின் ஆரம்ப வெளியீடுகளில் கட்சித் தோழர்களின் பங்கு பெரிய அளவுக்கு இருந்தது. சிவாவின் அமைப்பு விரோத மார்க்சிய விரோத நடவடிக்கைகளின் காரணமாக எல்லா மார்க்சிய லெனினிய அமைப்புகளும் அவரிடமிருந்து விலகியே இருந்தன. தங்களை அதிதீவிரவாதிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்தக் குழு மட்டுமே அவரைப் புரட்சியாளராக கொண்டாடி வருகிறது. இதே குழுதான் தொண்டு நிறுவனங்களுக்கு எஹ்டிரான நிலைபாடு கொண்ட மற்ற மா.லெ அமைப்புகளைக் கேலியும் கிண்டலும் செய்து வருகிறது. இதெல்லாம் குணாவுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தே சொல்லவில்லையா என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அமைப்புகளுக்குள் இருந்த இந்த விவாதம் வெளியே வருவது நல்லதுதான்.
manithan
புரட்சிகர சக்திகள், மார்க்சியத்தின் மீதான விமர்சனமோ மறு ஆய்வோ அவர்களின் வர்க்க விடுதலை என்ற இலட்சியத்திற்கு எதிரானதாகவும் துரோகமானதாகவும் எண்ணுகிறார்கள். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸ்- ஏங்கெல்ஸ்- லெனினும்- மாவோவும் போராடிவிட்டதாலேயே அவர்களின் எல்லா சிந்தனைகளும் மறு பரிசீலனையின்றி, மறு ஆய்வின்றி ஏற்கப்படுகின்றன.
உலகம் முழுமைக்கும் பொருந்துமென சாதிக்கப்படுகின்றன.
இந்த பார்வைதான் முதலாளித்துவம் ஒரு கட்டம் வரை புரட்சிகர பங்காற்றும். பின் அழுகி போகும் என்ற இயங்கியல் கோட்பாட்டின் சாரத்தை மறுக்க வைத்தது.

மார்க்சிய - லெனினிய , மாவோ சிந்தனையை விமர்சிக்கும் எவரும் CIA ஏஜென்டாகவோ, NGOஅமைப்பாகவோ, பின் நவீனத்துவவாதியாகவோ, புது இடது சிந்தனையாளராகவோ , ஏகாதிபத்திய கைகூலியாகவோத்தான் இருக்க முடியும் என தன் அமைப்புகளுக்கு பரப்புரை செய்வதன் மூலம் புரட்சிகர இயக்கங்கள் சேனைக்கட்டிய குதிரை சிந்தனைகளையும் , யதார்த்த சமூக நிலையில் இருந்து வரும் புதிய சிந்தனைகளின் புறக்கணிப்பையும் உருவாக்குகின்றன.
பிரசன்னா பாலசந்திரன்
தொடர்ந்து விடியல் சிவா பற்றி துப்பறிந்து சொல்லும் குணா தான் அதே என் .ஜி .ஒ சிவாவோடு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பழகி வந்தது பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட எங்குமே குறிப்பிடுவதில்லை?இப்போது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை சிவா உயிரோடு இருந்த காலத்தில் ஏன் குணா முன்வைக்கவில்லை ?நேற்று முன்தினம்தான் அவருக்கு துப்பு கிடைத்ததா? ஏகாதிபத்திய எடுபிடிகளான என் .ஜி .ஒ க் கள் பற்றிய உண்மை அறியாமல் பல்வேறு இயக்கங்கள் அவர்களோடு உறவில் இருப்பதாக விமர்சிக்கும் குணா , இரா .முருகவேள் போன்ற தோழர்கள் சிவாவுடன் கொண்டிருந்த உறவு பற்றி மவுனம் சாதிப்பது ஏன். அவர் தனக்கு வேண்டப்பட்டவர் என்பதாலா ? மற்றவர்கள் உடைத்தால் பொன்குடம் , குணா உடைத்தால் மண்குடமா?குணாவுக்கு துளியேனும் நேர்மை இருந்தால் முகநூலில் நான் அவரிடம் கேட்ட வெளிப்படையான கேள்விகளுக்கு வரிசையாக ஒரு கேள்வி மீதம் விடாமல் பதில் சொல்லட்டும் .
திருப்பூர் குணா
//இந்த பார்வைதான் முதலாளித்துவம் ஒரு கட்டம் வரை புரட்சிகர பங்காற்றும். பின் அழுகி போகும் என்ற இயங்கியல் கோட்பாட்டின் சாரத்தை மறுக்க வைத்தது.// தோழர் மனிதன்! வளர்ந்த நாடுகளில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக மாறியதோடு, பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியங்களின் தொங்குசதையாக (தரகு) மாறிவிட்டது. ஆக முதலாளித்துவத்தின் இருபிரிவுகளும் புரட்சிகரத்தன்மை காலாவதியாகிவிட்டது. இதை மார்க்சியம்தான் தெளிவுப்படுத்துகிறது.

//மார்க்சிய - லெனினிய , மாவோ சிந்தனையை விமர்சிக்கும் எவரும் CIA ஏஜென்டாகவோ, NGOஅமைப்பாகவோ, பின் நவீனத்துவவாதியா கவோ, புது இடது சிந்தனையாளராகவோ , ஏகாதிபத்திய கைகூலியாகவோத்தா ன் இருக்க முடியும் என தன் அமைப்புகளுக்கு பரப்புரை செய்வது// என மொட்டையாக பெருந்தன்மை பேசாமல் நாங்கள் உண்மைக்கு மாறாக பேசினால் ஆதாரத்தோடு விளக்கப்படுத்துங்களேன்!
திருப்பூர் குணா
தோழர் பிரசன்னா! எங்களுக்கு விடியல்சிவா,எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ் போன்றோர் முக்கியமல்ல. தமிழ்நாட்டில் புரட்சிகர கட்சி எதிர்கொள்கின்ற சிக்கல்களை விவாதிக்கும்போது இவர்களை குறித்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது. அது குறித்து நீங்கள் மேலும் மேலும் கேட்கும்போது கூடுதல் விளக்கம் கொடுக்க வேண்டியதாகிறது.

//சிவாவோடு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பழகி வந்தது// என்பது அவரை கட்சி தனது ஆதரவாளராக அடையாளப்படுத்தியதால்தான். அதுதான் விவாதமாக ஓடிக்கிட்டு இருக்குது. நீங்க பதிவிட்டப்பிறகு அடுத்தவர் பதிலிடுவதையும் படியுங்கள்.
rozio
நண்பர் குணா சொல்வதைப் பார்க்கிற போது அவரும் விடியல் சிவாவால் காயடிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் என்பது புரிகிறது. திரு.குணா அவருடைய சொந்த அனுபவத்தில் இருந்து விடியல் சிவா பற்றிய முடிவிற்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் த.நா.மா.லெ.க கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் அவருடைய கடந்த கால நண்பர் சிவாவின் வழிகாட்டுதல் அவருக்கு பெரிதும் உதவியது என்பதை அவர் கட்டாயம் நினைத்துப் பார்த்திருப்பார். ஒரு வேளை சிவா உயிரோடிருந்து இந்த விமர்சனத்தைப் படித்திருந்தால் பாம்பிற்கு பால் வார்த்த உணர்வு அவருக்கு எழுந்திருக்கும். திருவாளர் குணா அவரது கட்சிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உற்ற தோழனாய், வழிகாட்டியாய், ஆசானாய், புகலிடம் தந்தவராய், பின்களமாய் இருந்த சிவாவை விமர்சித்திருப்பது உண்மையிலேயே ஆரோக்கியமான ஒன்றுதான். தோழர் பிரசன்னாவின் கேள்வி நியாயமானது. குணா சிவாவைப் பற்றி விமர்சிக்கிற அதே நேரத்தில் அவருடனான குணாவின் உறவினையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக தவிர்த்திருப்பார் போலும். இருந்தாலும் குணா உங்கள் பழைய நண்பருடனான உங்களின் ஆசானாவகவும், வழிகாட்டியாகவும் இருந்த திருவாளர்.கலைப்பு வாதி விடியல் சிவா உடனான உங்களது உறவையும், அதில் ஏற்பட்ட அனுபவத் தொகுப்பையும் சற்று பகிரங்கப்படுத்துங்கள்.
குமரன்
//... அதை விடியல் சிவா தெளிவாகச் செய்தார். விளைவு அவரிடம் வந்த புரட்சிகர இயக்க ஆதரவாளர்களில் பலபேர் பின்நவீனத்துவவாதிகளான பூக்கோ, தெரிதா முதலானவர்களில் இருந்து ஓஷோ வரைக்குமானவர்களை உயர்த்திப் பிடிக்கிறார்கள்; தோழர் மார்க்ஸையும் கம்யூனிஸ்டுகளையும் கொச்சைப்படுத்துகிறார்கள்; அமைப்பிலிருந்து விலகுவதோடு நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறார்கள்.// என்கிறார் திருப்பூர் குணா. முன்பு அவர் இருந்த அமைப்பின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டதற்கும் அதிலிருந்து விலகியதற்கும் இதுதான் காரணமா?
//...கட்சிக்குள் சுதந்திரம் இருக்காது என்றும்' அமைப்பு விரோதத்தை தூண்டுவதுதான் இருத்தலியமும் மார்க்சியமும் என்ற நூல்.// இந்தத் தூண்டுதலுக்கு இரையாகித்தான் அவர் தான் இருந்த அமைப்பிலிருந்து வெளியேறினாரா?
திருப்பூர் குணா
rozio மற்றும் குமரன் அவர்களுக்கு! விடியல்சிவாவால் த.நா.மா.லெ.க-விலிருந்து வெளியேறுகிற அளவிற்கு நாங்கள் பலவீனர்கள் அல்ல. நாங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு சாட்சியாக இரண்டு ஆவணங்கள் இருக்கிறது. அந்த ஆவணங்கள் மூலம் நாங்கள் உட்கட்சிப் போராட்டக்குழுவாக போராடிக்கொண்டிருந்தபோது விடியல்சிவா "எதுக்கு வெட்டிவேலை? விடியல் பதிப்பகத்தில் பணியாற்றுங்கள்" என கூறினார். நாங்கள் அரசியல் பணியில்தான் இன்றுவரை நீடிக்கிறோம்.

தோழர் rozio! உங்களது தந்திர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களாக நாங்கள் இருந்திருந்தால், இன்றைக்கு விடியல் பதிப்பகத்தின் வெளிப்படையான டிரஸ்ட் அல்லது அதன் பின்னாலிருக்கும் குழு என ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்திருப்போம்.

அப்புறம், பிழைப்பு நடத்தணும்னு நாம முடிவு பண்ணினா இப்படி அல்லரை சில்லறைகளிடம் போய் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. அல்வா மாதிரி கொத்திட்டு போக ஆளுவர்க்க காட்சிகளே நிறைய இருக்கு. சும்மா காமடியெல்லாம் பண்ணாதீங்க பாஸ்.
குமரன்
திருப்பூர் குணா உட்கட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை, அவர் இருந்த அமைப்பு வெளியேற்றியதாகக் கூறுகிறார். அப்படியானால் அவர் இருந்த அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவம் இல்லையா? உட்கட்சிப் போராட்டம் நடத்தச் சுதந்திரம் இல்லையா?
prasanna balachandran
தென்னை மரத்தில் ஏதப்பா புல் என்று கேட்டால் ,அதற்கு தான் இறங்கி வருகிறேன் என்கிறார் குணா .கட்சி ஆதரவாளராக அடையாளப்படுத்திய சிவாவின் என் . ஜி . ஒ பின்னணி பற்றி குணா அப்போது சந்தேகம் கொள்ள வில்லையா ? அது பற்றி யாரிடமாவது விவாதித்தது உண்டா ? தொண்ணூறுகளிலேய பின்நவீனத்துவ நூல்களை வெளியிட்டுவிட்ட சிவாவோடு எந்த விமர்சனமும் இன்றி 2005க்கு பிறகு துவங்கி 2011 ல் சிவா இறக்கும் வரை குணா பழகியது எப்படி?பொருளாதார அடியாளும் , எரியும் பனிக்காடும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி வெளியிட முருகவேள் எப்படி சம்மதித்தார் ? என் .ஜி .ஒ க்கள் பலர் எழுதுகின்ற தலித் முரசு இதழில் சிவாவின் கருவேல மர ஆய்வை இரா .முருகவேள் பாராட்டி எழுதினாரே , அது பற்றி குணாவின் கருத்து என்ன ?சோளகர் தொட்டி யாருடைய வலியுறுத்தலின் பெயரில் விடியலில் மறு பதிப்பாக வெளிவந்தது ? சிவாவின் வழக்கை முருகவேள் ஏன் ஏற்று நடத்தினார் ? எல்லாவற்றையும் குணா குழுவினர் செம்மையாக செய்துவிட்டு, இன்று மற்றவர்களின் மீது சேற்றை வாரி வீசுவது ஏன்?முதலில் குணா குழுவினர் என் .ஜி .ஒ க்களோடு தாங்கள் கொண்டிருந்த பல ஆண்டுகால நட்பிற்கு விளக்கம் சொல்லட்டும் . பிறகு மற்றவர்களுக்கு புத்தி சொல்லலாம் .பின் குறிப்பு :இதில் ஒரு கேள்விக்கு கூட குணா நேரடியான பதிலை அளிப்பார் என்று நான் நம்பவில்லை .
குமரன்
திருப்பூர் குணா, அவர் முன்பு இருந்த அமைப்பில் உட்கட்சி ஜனநாயகம் இல்லையா? உட்கட்சிப் போராட்டம் நடத்த சுதந்திரம் இல்லையா? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்?
குமரன்
திருப்பூர் குணா தான் முன்பு இருந்த அமைப்பில் உட்கட்சி ஜனநாயகம் இருந்ததா இல்லையா என்பது பற்றி நுணுகி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன். ஏனென்றால் விடியல் சிவாவைப் பற்றி ஆய்வு செய்து அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வர அவருக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. அதே போல இதைப் பற்றி ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வர அவருக்குப் பல ஆண்டுகள் தேவைப்படலாம்!
செங்கல்
திருப்பூர் அண்ணே,
.
உட்கட்சி போராட்டம் எல்லாம் வெட்டி வேலைனு யாராவது கூப்டா போய்ருவீங்களா,அருமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.