செப்- 27 கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாராவில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்கா அளித்த தீர்ப்பு இந்தியா முழுக்கவே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை இந்திய வரலாற்றில் பொறுப்பில் இருந்த முதல்வர் ஒருவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்திய மாநிலங்களிலேயே வேறு எவரும் கற்பனையிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத வல்லமை மிக்கவர் என்று அவராலும், அவரது கட்சியினராலும் கருதப்பபட்டவருக்கு நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனை!
ஜெயா சர்வ வல்லமை மிக்கவர் என கருதிக்கொண்டதில் ஏதேனும் பொருள் உண்டா இல்லையா என்பதை செப்-27-க்குப் பின்னர் தமிழகத்தில் ஜெயாவின் அமைச்சரவை சகாக்களும், அவரது கட்சியினரும் வெளிப்படுத்திய உணர்வுகளிலிருந்தே நாம் கணிக்க முடியும்.
ஜெயாவை சகல வல்லமை மிக்க கட்சித்தலைவராக, முதல்வராக மட்டுமல்ல, அவரின் சகாக்கள் அவரை சகல வல்லமை மிக்க கடவுளாகவும் சித்தரித்ததை தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அவரது கட்சியினர் செய்து காட்டிய செயல்களில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த உணர்விலேயே 1990- களுக்குப் பின்னர் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த ஜெயாவுக்கும், அவரது சகாக்களுக்கும் இந்தத் தீர்ப்பு நம்பமுடியாததாக, தமது கால் நூற்றாண்டு கால இனிய கனவு கலைந்து போனதாக அதிர்வலைகள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டதில், வெளிப்படுவதில் வியப்பேதும் இல்லை.
ஜெயாவின் இந்தப் பெருங்கனவுக்கும், இதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் அவரது கட்சிகாரர்களுக்கு மட்டுமே பங்கிருப்பதாக நாம் கருதிவிடமுடியாது, கூடாது. அவரை சகல வல்லமை மிக்க தலைவராக மட்டுமல்ல கடவுளாகவும் உசுப்பேற்றி விட்டதில், அவருக்கு வாக்களித்த தமிழக பெருங்குடி மக்களுக்குத்தான் மிகமுக்கிய பங்கிருக்கிறது.
அவர் திரைப்பட நடிகையாக இருந்து, அதன்மூலம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்தவராக, கட்சியின் பொதுச்செயலாளராக, அவரது வாரிசாக 1991-ல் ஆட்சிக்கட்டிலைப் பிடித்த போதே, தமிழ்ச்சமூகம் தனது தரத்தை வெளிப்படுத்திக் கொண்டது.
சமூக அக்கறையோ, அரசியல் ஈடுபாடோ, இவைகளில் எவ்வித அனுபவமோ அற்ற ஒருவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர், அதிலும் பின்புற வாசல் வழியாக கட்சியைப் பிடித்தவர் என்று சமூகத்தால் இழிவாக சித்தரிக்கப்படும் நிலையில் இருந்த ஒருவரை தமிழக முதல்வராக இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்த தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுதான், அவர் தன்னை சகல சக்திமிக்கவராக, நிலவுகிற சமூகத்தின் சட்டம், அரசு இயந்திரம், நீதிமன்றம், பாராளுமன்றம், சட்டமன்றம் இன்னபிற…. இவை எதுவுமே தன்னைவிட உயர்ந்தது அல்ல, இவைகள் அனைத்தும் தனக்கு கீழ்பட்டவையே, இந்த அமைப்புகள் எதுவும் தன்னை எதுவும் செய்துவிடமுடியாது என்ற ஆணவமே அவரை மிக அப்பட்டமான தவறுகளைக் கூட எவ்வித ஒளிவும், மறைவும் இன்றி மிக வெளிப்படையாக செய்ய வைத்தது.
ஜெயாவின் கட்சியினர் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் கூட அவர் நினைத்த போதெல்லாம் பந்தாடப்பட்டனர். அவரின் அபிமானத்தை, நம்பிக்கையைப் பெறுவதற்கான விசுவாசத்தின் அளவுகோல் என்னவென்று தெரியாமல் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் ஆடித்தான் போயினர். அந்த அளவுகோலை இலக்கண சுத்தமாக அறிந்த சிந்தாந்தவாதி இந்தியாவில் சோ மட்டுமே என்றால், அதன் வடிவ அடையாளம் தற்போதைய முதல்வர் மட்டுமே.
ஜெயாவிற்கு சட்டவிரோதமாக வந்த பணத்தை சட்டபூர்வமாக்கும் செயல் படாத பங்குதாரர்களாக 1990-களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் என்றால் இப்போதைய செயல்படும் பங்குதாரர் OPS. இந்த உண்மையும் ஒரு காலத்தில் வெளிச்சத்திற்கு வரும்.
தானே சகலத்திலும் வல்லமை மிக்கவர் என்ற ஜெயாவின் ஆணவமே அவரின் தவறுகளுக்கான மூலமாகவும், தண்டனைக்கான காரணியாகவும் அமைந்துவிட்டது. இந்த உண்மை பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளடங்கியிருப்பதை நாம் தெளிவாகக் காண முடியும்.
1.ஜெயா முதல்வராக 1991- ல் பதவியேற்றபோது அவரின் சொத்துமதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 –க இருந்தது.
அதுவே 1996- ல் பதவி காலத்தின் முடிவில் அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 – ஆக உயர்ந்துவிட்டிருந்தது.
2.இந்த சொத்துமதிப்பு உயர்வுக்கான வருமானம் தனக்கு சரியான வழியில்தான் வந்தது என்பதை ஜெயாவால் நீதிமன்றத்தில் எந்த நிலையிலும் நிரூபிக்கவே இயலவில்லை. மாறாக அவைகள் தவறான வழியில்தான் வந்தது என்பதற்கான ஆதாரங்களை மிகத்தெளிவாக எவ்வித குழப்பமோ ,ஒளிவு மறைவோ இன்றி வெளிப்படையாக வைத்திருந்தார். அந்த அளவிற்கு ஆணவம் அவரின் கண்களை மறைத்திருந்தது.
3.அதே போன்று தனது வீட்டில் வைத்திருந்த 27.588 கிலோ தங்க நகையில் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் 20 கிலோ தங்கத்திற்கு அவரால் கணக்கேதும் காட்ட இயலவில்லை.
இப்படி அவரின் ஒளிவு, மறைவற்ற மிகவும் துணிச்சலான தவறுகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்,
சட்டத்திற்குட்பட்ட, சமூக நியதிகளுக்கு உட்பட்டவராக தன்னை ஜெயா கருதியிருந்தால் 1 ஏக்கர் விளைநிலத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கும், 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை வெறுமனே ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும் வாங்கியதாக சட்டப்பூர்வமாகவே பதிவு செய்திருப்பாரா?
எனவேதான் அவர் தனது ஆணவத்திற்கு கொடுத்த விலைதான் ஊழல் வழக்கில் அவர் அடைந்த இந்த சிறை தண்டனை என்று கூறுகிறோம்.
ஆனால் அவரது கட்சிக்காரர்களோ இன்னமும் அவரை உசுப்பேற்றும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே மொட்டையடித்து, தேங்காய் உடைத்து…
அல்லாகு அக்பர்- அல்லாவே அனைத்திலும் பெரியவர் என்ற திருக்குரானின் புனித வாசகத்தை அவரது கட்சியில் உள்ள சில கழிசடைகள் சிறைவளாகத்தில் ஓதுகின்றன. அதாவது ஜெயாவே அல்லாவிலும் பெரியவர் என்று…
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக தாங்களே தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்பதை மறந்து சட்டத்திற்கு விரோதமாக அவர்கள் ஆடிய கூத்துக்களை நாம் அனைவரும் அறிந்ததுதான்.
ஜெயா சகாக்களின் இந்த ஆட்டங்களும், கூத்துக்களும் எதிர்பாரா நிகழ்வுகள் அல்ல. பொய்வழக்கு, வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா, கருணாநிதி குடும்பம் ஊழல் செய்யவில்லையா போன்ற கேள்விகளை அவர்கள் கேட்காமல் இருந்திருந்தால் மட்டுமே நாம் அதிசயப்பட வேண்டும்.
ஆனால் பிரச்சனையே தம்மை முற்போக்குகள், புரட்சியாளர்கள் என்றுக் கருதிக் கொள்வோர் ஜெயா மீதான தீர்ப்பு பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் ஊதிப்பெருக்கி காட்டுவதுதான்!
ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கின் எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஒரு வக்கீல் குமாஸ்தாவோ (அ) முதலாமாண்டு சட்டக்கல்லூரி மாணவரோ படித்தால் கூட மிக எளிமையாக இவ்வழக்கில் தீர்ப்பு சொல்லிவிட முடியும். பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டாலும் மிகச்சாதாரண வழக்கு இது என்பதை ஒரு பாமரன் கூட சொல்லிவிட முடியும். ஆனால் இவர்களோ இந்தத் தீர்ப்புக்கு பின்னால் பெரும் பூகம்பங்கள் ஒளிந்திருப்பதாக சரடு விடுகின்றனர். தமது பங்குக்கு இவர்களும் ஜெயாவை அசகாய சூரராக ஊதிப்பெருக்கிக் காட்டி ஆனந்தமடைகின்றனர்..
அரசியல் பழிவாங்கல், கார்ப்பரேட்டுகளின் சதி, காங்கிரசின் சதி, கருணாநிதியின் சதி, பாஜக விடம் மோதியதின் எதிர் விளைவு ………………. போன்ற வெளிப்படுத்தல்களின் மூலம் இவர்கள் தம்முடைய மேதாவித்தனத்தை காட்டுவதாக கருதிக்கொள்கினறார்கள்.
எது எப்படியோ இவ்வளவு களேபரத்திலும் ஜெயாவும், அவரைச் சார்ந்தோரும் தம்மையே அறிந்தும், அறியாமலும் ஒரு உண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இந்தியாவில் அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அங்கமும் நிர்வாக எய்ட்ஸ் நோயான லஞ்சம்-ஊழலால் பாதிப்பிற்குள்ளாகிவிட்டதைப் போன்றே நீதித்துறையும் ஆகிவிட்டுள்ளது.
ஆயிரமாயிரம் தமது குற்றவழக்குகளில் நீதித்துறையை விலைக்கு வாங்கியதைப் போன்றே இந்த வழக்கிலும் அதை விலைக்கு வாங்கிவிடலாம், மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்ற அவர்களின் கணக்குதான் தவறாகிப் போனது. இதுதான் இவர்களை ஆத்திரம் கொள்ள வைக்கிறது.
நீதிபதி குன்கா வளைந்து கொடுக்காத நேர்மையாளராகக் கூட இருக்கலாம், இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த நீதித்துறை என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கும்போது சாராயம் காய்ச்ச அனுமதி தந்துவிட்டு அதற்கு மாமூலும் வாங்கும் போலிசு, சில நேரங்களில் கள்ளச்சாராய கும்பலை பிடித்ததாக கூறி பரபரப்பாக ஊடகங்களுக்கு செய்தி தரும் நடவடிக்கைக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு!
- சூறாவளி (