இன்று தீர்ப்பு வரும் என்ற நிலையில் அஇஅதிமுக பற்றிய பரபரப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அகம்பாவம் பிடித்த சின்னம்மாவின் இறுமாப்பின் மீது கொண்ட கோபம், பன்னீர் மீது பாசமாக வேதி மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. சசி முகாம் காலியாகிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கும் அதிமுகவிற்கு என்று யோசிப்பதற்கு முன்னால், அக்கட்சி எப்படி தோன்றி வளர்ந்தது என்ற பாதையைப் பார்ப்போம்.
சுதந்திரமடைவதற்கு முன்பு தமிழகத்தில் நிலவிய நிலவுடமை - சாதி முறைக்கு எதிரான வலுவாக குரலாக பெரியார் இருந்தார். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மதம்- சாதி எதிர்ப்பு, பெண்ணுரிமையை முன்னிறுத்துவது, முற்போக்குச் சிந்தனை என்பவற்றை உள்ளடக்கியதாக, கம்யூனிசத்திற்கு ஆதரவு என்று பணியாற்றிய அவர், சமூக சீர்திருத்தத்தை முன்னிருத்திப் பணியாற்றினார். எனவே, அது அப்போது மாறுதல் வேண்டி நின்ற சக்திகளின் ஆதரவு பெற்ற பெரிய இயக்கமாக வடிவெடுத்தது.
பிற்படுத்தப்பட்ட சாதி அடுக்குகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள், பெரியாரின் முற்போக்கை ஆதரித்து எழுந்தனர். அப்பிரிவினர், அரசியல் வெளியில் காங்கிரசுக்கு மாற்று தேடியபோது அண்ணாதுரை தலைமையில் திமுக பிறப்பெடுத்தது. தமிழர் என்ற பொதுப் பதாகையில், தமிழகத்தின் முன்னேற்றம் எதிர் வடவர் ஆதிக்கம் என்ற முழக்கத்தில் தமிழகத்தின் பெரும்பகுதியினரைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதில் அண்ணா வெற்றியடைந்தார்.
60களின் நிலச்சீர்திருத்தம் (அடையாளத்தக்கானது என்றாலும்), அத்துடன் சேர்ந்துகொண்ட பசுமைப் புரட்சி, தொழில் முன்னேற்றம் என்ற பின்புலத்தில், ஆட்சிக்கு வந்த திமுகவின் கிராமப்புற- மாவட்ட- மாநில தலைமையை நோக்கி பார்ப்பனர் அல்லாதவர்கள் முன்னேறினர். பார்ப்பனர், ஏற்கனவே பெற்றிருந்த முன்னேற்றத்தின் அடித்தளத்திலிருந்து, இந்திய அரசின் அதிகார வர்க்கம், தொழில் நிறுவனங்களின் நிர்வாக மட்டம், பின்னர், அமெரிக்கா போன்ற நாடுகளின் பசுமையை நோக்கி முன்னேறி, வெளியேற, திமுகவுடன் கைகோர்த்து வளர்ந்த பிற்பட்ட சாதிகளின் ஆதிக்கப் பிரிவினர் கிராமப்புறம் துவங்கி, மாநில மையம் வரை தமிழக அரசியலைக் கவ்விக் கொண்டனர்.
பின்னர், எம்ஜிஆர் அரசியலில் தனிக் கட்சி காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. திமுகவின் அதிகாரப் பிரிவுகளுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த கீழ்மட்ட பிற்பட்ட சாதிப் பிரிவினர்- தலித்துகள் அவரிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர். தர்மத்தின் தலைவன், தாயை மதிப்பவன், சோசலிசம் பேசுபவன், அத்துடன், மீனவர், குப்பத்து ரிக்ஷாக்காரன், போராளி, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற மதிப்பீடுகளைத் தன்னைப் பற்றி திரை பிம்பத்தால் உருவாக்கி வைத்திருந்த எம்ஜிஆர், திமுகவின் ஊழல், மேல்தட்டு சார்பு, மக்களிடம் இருந்த அதிருப்தி உள்ளிட்ட விஷயங்களைப் பயன்படுத்தி அரசியலில் தன் இருத்தலை நிலைநிறுத்திக் கொண்டார். தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அப்போது புதிதாக வடிவெடுத்த கீழ்மட்ட சமூக விரோதிகளை மேலே தூக்கி (உதாரணமாக சாராய உடையார்) தனக்கான அரசியல் கட்சியை வலுப்படுத்தினார். ஆனால், அவரைப் பின்பற்றிய தலித்துகள், மீனவர்களுக்கென்று, அடையாளத்துக்குக் கூட ஏதும் செய்யவில்லை. அதற்கு எதிரானவற்றைச் செய்தார். உதாரணமாக, மெரீனா கடற்கரையை அழகுபடுத்துவதற்காக, அந்த மண்ணின் மைந்தர்களான மீனவர்களைச் சுட்டுக் கொன்றார். அதேசமயம், வளர்ச்சி கண்டிருந்த இந்திய முதலாளித்துவத்திற்குப் பட்டுக் கம்பளம் விரித்தார். அதிமுக என்ற கட்சிப் பெயரை அஇஅதிமுக என்று மாற்றிக் கொண்டார். அதேசமயம், பெரியாரின் பகுத்தறிவிலிருந்து வெகுதூரம் விலகி மூகாம்பிகை பக்தராகி நின்றார்.
கருணாநிதியின் இரும்புப் பிடியிலிருந்து மக்களின் அடித்தளத்தைப் பிரித்தெடுக்க எம்ஜிஆர் மேற்கொண்ட அணுகுமுறை மிக வித்தியாசமானது. தமிழக மக்கள் மத்தியில் இருந்த பின் தங்கிய அறிவு/ கருத்துகளின் மீது நம்பிக்கை வைத்தார். அங்குதான் ஆபத்து துவங்கியது.
இதுவரை, பெரியாரின் கருத்துகளின் அடிப்படையில் பயணப்பட்ட தமிழக அரசியல் பிற்போக்குப் பாதையில் பயணப்படலாயிற்று. ஊழலை எதிர்த்து வளர்ந்த எம்ஜிஆர் கட்சியை வளர்க்க அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைச் சார்ந்தவர்களை வளர்த்தார். அவர்களை நம்பி கட்சியை வளர்த்தார்.
எம்ஜிஆர் மரணத்துக்குப் பின்பு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அதிமுக மிகவும் சிரமப்பட்டது. அது எம்ஜிஆரின் மனைவி எதிர் ஜெயலலிதா என்று வெடித்து பின்னர், ஜெயலலிதாவின் கீழ் ஒரே கட்சியானது.
ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணி, அதுவும் தான் ஒரு பார்ப்பனர் என்பதால் பெருமை கொண்ட பெண்மணி, திராவிட என்ற பெயர் கொண்ட கட்சியின் தலைவியானது வரலாற்று விபத்து அல்ல. மாறாக, வரலாற்றின் அடுத்த (சோகக்) கட்டம். பார்ப்பனர் விட்டுச் சென்ற இடத்தைப் பிடித்து நவ பார்ப்பனர் ஆன பார்ப்பனர் அல்லாத சாதிகள் மற்றும் அவை கட்டிக்காக்கும் பிற்போக்கின் செல்வாக்கின் கீழ் உள்ள மக்கள் என்ற சமூக அடித்தளத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதா வளர்ந்தார்.
சமூகத்தின் வெகு கீழே உள்ளவர்களை மேலே கொண்டு வருவது, அவர்களைக் கொள்ளையடிக்க அனுமதிப்பது, (உதாரணமாக புளி வியாபாரி நத்தம் விஸ்வநாதன்) அதனைப் பயன்படுத்தி அரசு சொத்துகளைக் கொள்ளையடித்து தன் சொத்தாகவும் மாற்றிக் கொள்வது, அதனால் வலுவூட்டப்பட்ட கட்சியின் சர்வாதிகாரியாக உயர்வது என்பதாக ஜெவின் அரசியல் பாதை இருந்தது. உலகமயமாக்கத்தில் தனியார்- அன்னிய மூலதனத்துடன் உறவாட நேர்ந்ததை மிக லாகவமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஊழல் பணத்தை வெளுக்க வைக்கவும், புதிய முதலீடுகளுக்கும் அதனை வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். இந்த கொள்ளைப் பாதையின் நம்பகமான துணையாக சசி வளர்ந்தார்.
ஜெயலலிதாவின் வெற்றியின் மிக முக்கியமான அம்சம் அவர் ஆற்றிய சமூகப் பாத்திரம். பெரியார் அடித்து நொறுக்கிய பின்பும் எஞ்சியிருந்த, பிற்போக்குச் சிந்தனையில் ஊறியவர்களை, எம்ஜிஆர் வழியில் சென்று தன் அடித்தளம் ஆக்கிக் கொண்டார். எம்ஜிஆர் என்ற தர்ம தேவனோடு தனக்கிருந்த உறவு என்ற சொந்த விவகாரம் துவங்கி, அந்த தர்ம தேவனுக்கு எதிரான கருணாநிதி என்ற தீய சக்தி வரை மட்டுமே அவரின் அரசியல் இருந்தது. கருத்து ரீதியில் மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவினரை, சமூகத்தின் பிற்போக்கை தன் அடித்தளமாக ஆக்கிக் கொண்டார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜனநாயக அரசியலுக்கு வெளியே நின்றவர்களின் அரசியல் அற்றத் தன்மையைப் பயன்படுத்தி, அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து, அந்தப் பிற்போக்கின் மேல் மிகவும் கேடுகெட்ட ஜனநாயக விரோதக் கட்சியைக் கட்டி நிறுத்தினார்.
பார்ப்பனர்களின் பண்டைய பெருமையின் இன்றைய அடையாளமாகவும், கடந்த சில பத்தாண்டுகளில் மேலே வந்த பிற்பட்ட சாதி ஆதிக்க நபர்களின் கையாளாகவும், அதே சமயம், கிராமப்புற வறியவர்களின் நம்பிக்கைச் சின்னமாகவும் அவரால் விளங்க முடிந்தது.
இந்தப் பின்புலத்தில் அவர் இறந்தபோது, ஊழல், ஊழலால் பிழைக்கும் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள், கட்சியின் சொத்துகளை கட்சியின் சொத்தாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், அதேசமயம் அரசியலற்ற பிரிவினரை கட்சியின் அடித்தளமாக வைத்திருப்பதைத் தொடர வேண்டிய தேவை என்ற அடிப்படையில் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்தது. ஆனால், தலைமையைக் கைப்பற்றுவதுதான் தன் இருத்தலுக்கு அவசியம் என்பதை சசி உணர ஆரம்பித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய, தாங்கள் கொள்ளையடித்ததைத் தக்க வைத்துக்கொண்டு மேலும் கொள்ளையடிக்க, சசியை பன்னீர் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரித்தனர். ஜெவின் இடத்தில் சசிதான் என்று காட்ட காலில் விழுந்து வணங்கினர். சசியின் காலில் விழுந்தவர்களின் முதன்மையானவர் ஓபி என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஆனால், 'தை வசந்தம்' என்று குறிப்பிடப்படும் இளைஞர் மாணவர் எழுச்சி வெளிப்படுத்திய சசிக்கு எதிரான கோபம், அத்துடன் கிராமப்புற - நகர்புற வறியவர்களின் சமூக அடித்தளம் சசிக்கு எதிராகத் திரும்பியதை சற்று தாமதமாக உணர்ந்த ஓபி, தனது அரசியல் இருத்தலை, தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதைக் கண்டுகொண்டார். ஆனால், அவருக்கு அதற்கான பின்புலம் இல்லை.
அந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட உத்திரவாதமான துணையாக பிஜேபி (இரகசியமாக களம்) இறங்கியவுடன், சிட்டுக்குருவிக்கு சிறகு பெரிதானது போல, ஓபி வல்லூறு ஆனார். ஜெயலலிதாவின் பிம்பத்தின் மறு உருவாகத் தன்னைக் காட்டிக்கொண்ட, டம்மி பீசாகிய சசி என்ற (அ)சிங்கக் குட்டிக்கு சிம்ம சொப்பனமாக உருவாகி நிற்கிறார்.
1. அறிவற்ற பிற்போக்கு, அரசியலற்ற பிற்போக்கு சக்திகளின் கூடாரமாகிய அதிமுக உறுப்பினர்களின் உணர்வைப் பிரதிபலிப்பவராக ஓபி இருக்கிறார்.
2. திராவிட இயக்கத்தின் முற்போக்கு மாண்புகளை குழிதோண்டிப் புதைத்துவிட வெறிகொண்டு அலையும் பிஜேபியின் அரசியல் (எனவே, மத்திய அரசின்) ஆதரவு பெற்றவராக ஓபி இருக்கிறார்.
3. ஊழல் செய்து சம்பாதித்த அதிமுகவின் கட்சி சொத்து, தனிநபர்களின் சொத்து உள்ளிட்டவற்றைக் காப்பாற்றும் வல்லமை அவருக்கு இருப்பதாக அதிமுகவின் தலைவர்கள் கருதத் துவங்கிவிட்டனர்.
4. அதேசமயம், ஜெவின் செருக்கு, திமிர், டாம்பீகத்திலிருந்து, செயல்படாத் தன்மையிலிருந்து மாறுபட்டு, எளியவராக, உங்களில் ஒருவராக, கொள்ளைக் கோஷ்டிக்கு எதிராகத் தனியே சண்டையிடும் ஹீரோவாக, அதனால், இளைய தலைமுறையை மயக்கி மடங்கும் பிம்பமாக ஓபி இருக்கிறார்.
எனவே, ஒபி வெல்வது உறுதி.
அதேசமயம், தமிழ்ச் சமூகம் மற்றொரு மாய வலையில் சிக்கி, பிற்போக்கின் பிடியில் நிலை இழப்பதும் நடக்கும்.
பெரியார் கண்ட முற்போக்கு முதலாளித்துவக் கனவு மற்றொரு முறை புதைகுழிக்கு அனுப்பப்படுவது பெரியாரை நேசிப்பவர்கள் மட்டும் அல்ல, பார்ப்பனிய கருத்தியலை வீழ்த்தப் புறப்பட்ட அம்பேத்கரின் வழிவந்த தலித் இயக்கங்களுக்கும், முற்போக்கு முதலாளித்துவம் தாண்டி யோசிக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் கவலைக்குரிய ஒன்று.
மாற்றம் நடப்பதை உணராதவர்கள் அழிந்து போவார்கள். ஆனால், மக்களின் முன்னோக்கிய பயணம் அனைத்து பிற்போக்கு மாயைகளையும், முற்போக்காளர்களின் தவறுகளையும் உடைத்து நொறுக்கி முன்னேறும்.
- சி.மதிவாணன்