பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் காஷ்மீரப் பார்ப்பனர்கள், சொந்த நாட்டில் அகதிகளாகத் திரிவதாக, ஊடகங்களில் பார்ப்பனர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்; அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று குடம் குடமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

kashmir pandits

நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற உடன் 12.6.2014 அன்று, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பண்டிட்டுகளின் மறுவாழ்விற்காக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவ்வரசு பண்டிட்டுகளின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 16.6.2014 அன்று பேசுகையில் நாட்டில் சிதறிக் கிடக்கும் பண்டிட்டுகளுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும், அவர்களின் மறுவாழ்விற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் கூறி உள்ளார். இதன் தொடர்ச்சியாக 20.6.2014 அன்று உள்துறை அமைச்சர் காஷ்மீர் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது பண்டிட்டுகளைக் காஷ்மீரத்தில் பாதுகாப்பாகக் குடியமர்த்த இந்திய அரசு மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறது என்று தெளிவு படுத்தி உள்ளார்.

இந்திய அரசும், ஊடகங்களும் கூக்குரலிடுவதைப் பார்த்தால் இந்தப் பண்டிட்டுகள் ஏதோ பதுங்கு குழிகளில் வாழ்கிறார்கள் என்பது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை. அவ்வாறு இல்லை என்பது மட்டும் அல்ல; அவர்கள் மிக மிக வசதியாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர் கல்வி நிலையங்களில் "போதிய" இடங்கள் கிடைக்கவில்லை என்று கூக்குரலிட்டார்கள். ஆனால் மக்கள் தொகையில் அவர்களுடைய விகிதத்தை விட மிக அதிகமாகவே இடம் கிடைத்து இருக்கிறது.

அகதிகளாக இல்லாமல் சாதாரண வாழ்வு வாழ்வதாகக் கூறப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கையை விட பண்டிட்டுகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் துன்புறுவதாகப் பண்டிட்டுகள் பாசாங்கு செய்வதும், ஊடகங்கள் அவர்களுடன் சேர்ந்து கூக்குரல் இடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

இதைப் பற்றிக் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் 86 வயது சையத் அலி ஷா ஜீலானி (Syed Ali Shah Geelani) 11.6.2014 அன்று பேசுகையில் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற உடன், பண்டிட்டுகளுக்கு தேவை இல்லாத பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொடுப்பதற்காக மக்களின் வரிப் பணத்தை அனாவசியமாக வாரி இறைக்கும் முயற்சியைக் கண்டித்து உள்ளார். பண்டிட்டுகள் காஷ்மீரில் வாழ்வதற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், என்றுமே அப்படி ஒரு அச்சுறுத்தல் இருந்தது இல்லை என்றும் அவர் கூறினார். பார்ப்பனர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்; மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் படிந்து இருக்க வேண்டும் என்பதை எழுதாத விதியாகப் புகுத்த முயல்வதால் தான் பிரச்சினைகள் எழுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு பார்ப்பன ஆதிக்க அரசு. காஷ்மீர் மக்கள் மட்டும் இவ்வரசின் பார்ப்பன ஆதிக்கத் தன்மையை முறியடித்து விட முடியாது. அனைத்து மாநில ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் ஒன்றாய் இணைந்து இந்திய அரசின் பார்ப்பன ஆதிக்கத் தன்மைக்கு எதிராகப் போராட வேண்டும். அதாவது அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் நிரம்பி வழிவதை மாற்றி அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் தாழ்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதசிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு அவரவர்களுடைய மக்கள் தொகை விகித்தில் இடம் பெறும் படியாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் பண்டிட்டுகள் அகதிகளாகத் திரிகிறார்கள் என்பது போன்ற பிதற்றல்கள் மறையும்.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.7.2014 இதழில் வெளி வந்துள்ளது)

- இராமியா

Pin It