smruthi irani

(இஸ்ரேலிய தூதருடன் உரையாடும் இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் ஈரானி)

ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் மோடி என்ற தனது வளர்ப்பு பிள்ளைதான். ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ கோட்பாட்டிற்கும் இஸ்ரேலின் சியோனிச கோட்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இரண்டு கோட்பாட்டாளர்களின் பொது எதிரி முஸ்லிம் இன மக்கள்தான். 1999 முதல் 2004 வரையிலான பாஜக ஆட்சி காலத்தில்தான் இஸ்ரேல் அதிபர் ஏரியல் சரோன் முதன் முதலாக இந்தியாவிற்கு வருகை தந்தார். அதேபோன்று அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஷ்வந்த் சிங் 2000மாவது ஆண்டில் ஜெருசலத்திற்கு பயணம் செய்து பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் செய்தார். பலமுறை ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகளிலும் ரகசிய ஆலோசனைகளிலும் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் உருவாக்கத்தின் முக்கிய கருத்தாளர்களான பார்ப்பன தலைவர்களுக்கும் சியோனிச கருத்தாளர்களுக்குமிடையே கலாச்சார ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. 1967ம் ஆண்டு ஆர்கனைசர் பத்திரிக்கையில் சித்திரகுப்தர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய கட்டுரையில் இஸ்ரேலும் இந்துக்களும் இணைந்து ஏன் அரபுக்களையும் அவர்களின் கூட்டாளியான பாகிஸ்தானையும் எதிர்கொள்ளக்கூடாது என்று எழுதியிருந்தார். அந்த அளவிற்கு யூத மேலாதிக்கத்திற்காகப் போராடும் சியோனிசவாதிகளுக்கும் பார்ப்பன‌ மேலாதிக்கத்திற்காகப் போராடும் இந்துத்துவவாதிகளுக்கும் மிக ஆழமான கருத்தொற்றுமை இருந்து வருகிறது.

மோடி குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதற்கொண்டு இஸ்ரேலின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் குஜராத்திற்கு வருகை தந்து பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளனர். மோடியின் குஜராத் வளர்ச்சிக்குப் பின்புலம் அமைத்து கொடுத்தது இஸ்ரேல்தான். மோடியின் குஜராத் வளர்ச்சியின் பிம்பத்தை வெளி உலகத்திற்கு காட்ட பயன்பட்ட திட்டங்களான புதிய வர்த்தக துறைமுகங்கள், கடல் நீரை குடி நீராக்கும் திட்டம், விவசாய தொழில் நுட்பம், மருந்து பொருட்கள் தயாரிப்பு துறை, மரபு சாரா எரி சக்தி துறை, தகவல் தொழில் நுட்ப துறை போன்ற துறைகள் இஸ்ரேல் குஜராத்தில் நடை முறைப்படுத்தியதுதான். அவ்வளவு பாசம் மோடி மீது இஸ்ரேலியர்களுக்கு. இந்த மோடி குழந்தையை பார்த்து, பார்த்து இஸ்ரேல் கவனித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லிம் இன மக்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம் இன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்திய அனைத்து யுக்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் இன கலவரத்தில் இஸ்ரேலின் கூட்டு குறித்து மதச்சார்பின்மைவாதிகள் தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டும்.

(குஜராத் கலவரத்தில் மோடி பங்கு குறித்து பேச துவங்கினாலே நம்மூர் தமிழ் ஆர்வலர்கள் அதுதான் நீதிமன்றமே மோடியை குற்றமற்றவர் என்று கூறிவிட்டதே எனக் கூறுகிறார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான நமது தமிழ் உறவுகளை வேட்டையாடிய ராஜபட்சேவை எந்த நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு எதிராக இன சுத்திகரிப்பில் ஈடுபடுவதில் ராஜபட்சேவுக்கு சளைத்தவர் அல்ல மோடி)

குஜராத் இன கலவரத்திற்குப் பின்பு பல நாடுகள் மோடிக்கு தனது நாட்டிற்கு வர தடை விதித்த பின்பும் இஸ்ரேல் வெளிப்படையாகவே மோடிக்கு அழைப்பு விடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இஸ்ரேலின் அழைப்பை ஏற்று 2006ம் ஆண்டு 5 நாள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் சென்ற ஒரே முதலமைச்சர் மோடி மட்டும்தான். இஸ்ரேல் கிராமப் புறங்களில் விவசாயத்தை வளர்க்க பயன்படுத்தப்பட்ட திட்டங்கள் அப்படியே குஜராத் கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று இஸ்ரேல் நகர விரிவாக்கங்களுக்கு பயன்படுத்துகின்ற அதே திட்டங்கள் அப்படியே குஜராத் நகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குஜராத்தின் வளர்ச்சி என்பது மோடியின் மூளையில் உருவானது அல்ல; அது இஸ்ரேலின் முழுமையான உருவாக்கம்தான். போர்பஸ் பத்திரிகை கூறுவதைப் போன்று உலகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் அஹமதாபாத் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணம் மோடிக்கு பின்பலமாக இருக்கும் இஸ்ரேல்தான். குஜராத்தை வளப்படுத்தி மோடியை வளர்ச்சியின் நாயகனாக உருவாக்க இஸ்ரேல் எடுக்கின்ற நடவடிக்கைகளின் பின்னால் உள்ள அரசியல் மிகவும் நுட்பமாக ஆராயப்பட வேண்டி உள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இஸ்ரேலிய ஆதரவு இதழான டேப்லட் மேகசின் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் மொசாத் உளவு பிரிவின் ஒரு அமைப்பான இன்ஸ்டியூட் பார் நேஷ்னல் செக்யூரிட்டி ஸ்டடீஸ் என்ற பிரிவு நடத்திய பாதுகாப்பு துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கான முகாமில் மோடியின் வெற்றி குறித்து மிகவும் அங்கலாய்த்து பேசப்பட்டுள்ளது. மோடிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் உள்ள ஒற்றுமை குறித்து சிலாகித்துப் பேசப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களுக்கு மிகவும் சாதகமான அரசு இந்தியாவில் அமைந்துள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே இதழில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனது அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு பேசி உள்ளார், "மோடிக்கு வெற்றிக்கான வாழ்த்து கூறிய போது அவர் தனது காலகட்டத்திற்குள் இஸ்ரேலுடனான இந்தியாவின் நட்பையும் பொருளாதார உறவுகளையும் மேலும் ஆழப்படுத்த தான் விரும்புவதாக மோடி கூறியுள்ளார்."

இந்த அளவிற்கு இஸ்ரேல் மோடியிடம் இணக்கம் காட்டுவது ஏன்? உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை, சில வளர்ச்சித் திட்டங்களை அந்தந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தி இஸ்ரேல் தனது கைவசம் வைத்துள்ளது. ஏன்? உலகத்தின் மிகப்பெரிய வல்லரசாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவே யூதர்களின் கைவசத்தில்தான் உள்ளன. அந்த அளவிற்கு ஆதிக்க மனப்பான்மை கொண்ட யூதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கைப்பாவைதான் மோடி. மோடிக்கு தனிப்பட்ட ரீதியில் வளர்ச்சி குறித்த எந்தவித அறிவும் கிடையாது. இதனால் இஸ்ரேலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலையசைக்க கூடிய ஒரே தலைவர் ஆசிய நாடுகளில் மோடியாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் மோடிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முன் நின்று செய்து வருகிறது. இந்தியாவின் முக்கிய துறையான மனித வளம் மற்றும் கல்வித்துறையின் அமைச்சராக ஸ்மிருதி சுபின் ஈரானி பதவியேற்ற அன்றே இஸ்ரேல் தூதர் ஆலன் உஸ்பிஸ் சந்தித்துப் பேசியது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அரசியல்.

உலகிலேயே இரண்டாவது அதிக அளவில் முஸ்லிம் இன மக்கள் வசிக்கும் இந்தியா தங்களுக்கு எதிராக எப்போதும் திரும்பி விடக்கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு ஜவஹர்லால் நேரு காலத்திலேயே இஸ்ரேல் வலையை வீசி அதில் வெற்றியும் கண்டு உள்ளது. தற்போது மோடி மூலமாக இந்தியாவில் இஸ்ரேலால் வேகமாக இனி கால் பதிக்க முடியும். முஸ்லிம் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு இஸ்ரேலுடன் கைகோர்க்கும் மோடி ஒரு பசி தீராத கழுகிடம் ஒட்டு மொத்த இந்தியாவையும் காவு கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்திய மக்கள் உணர வேண்டும்.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)