" 'தமிழ்' என்பதும், 'தமிழர் கழகம் ' என்பதும் மொழிப் போராட்டத்திற்குதான் பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாசாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாசாரத்தைப் புகுத்திதான் நம்மை வெற்றிக்கொண்டார்கள்; நம் கலாசாரத்தைத் தடுத்துதான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாசாரத்தை மறந்து ஆரிய கலாசாரத்தை ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களுக்குக் கீழான மக்களாக அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம் எனவே, அக்கலாசாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப்போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கலாசாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவர்களாவோம்.

மொழிப்போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடமாட்டா." - தந்தை பெரியார் (‘விடுதலை ' – 27.01.1950)

திராவிடர் கழகத்தின் துணை அமைப்பான "தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்" கடந்த 20 ஆண்டுகளாகத் தை முதல் நாள் அன்று தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல்விழாவினை சென்னையில் நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவினை, "திராவிடர் திருநாள்" என்று தலைப்பிட்டு கலை இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அறிஞர்களின் கருத்துரைகள் என்று மூன்று நாள் விழாவாக, ஆரிய பண்பாட்டு படையெடுப்பிற்கு எதிராக மாற்று பண்பாட்டு நிகழ்வாகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இதுபோலவே திராவிடர் இயக்கத் தோழர்கள், பெரியாரின் தொண்டர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொங்கல் விழாவை, தமிழர் திருவிழாவாக, தமிழ்ப் புத்தாண்டு விழாவாக, ஆரிய/பார்ப்பன இந்துமதப் பண்டிகைகளுக்கு மாற்றான ஜாதி சமய சார்பற்ற தமிழர் பண்பாட்டு விழாவாக, சமத்துவ விழாவாக, அந்தப் பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்களும பங்கேற்கும் கொண்டாட்ட விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

பெரியார் திடலில் நடத்தபடும் நிகழ்ச்சியை முன்வைத்து, "தமிழர் திருநாள்" என்று இதுநாள்வரை சொல்லிவந்த பொங்கல் விழாவை "திராவிடர் திருநாள்" என்று சொல்லலாமா என்று சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் ஆங்காங்கே பொருமிக் கொண்டிருக்கிறார்கள். நம் மதிப்பிற்குரிய சில தமிழ்த்தேசிய நண்பர்களும் ஃபேஸ்புக்கில் இதே கருத்தை எழுதியிருக்கிறார்கள். திராவிடர் திருநாள் என்றால் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் பொங்கல் கொண்டாடுகிறார்களா என்ற புத்திசாலித்தனமான கேள்வியை, வழக்கமாக நுனிப்புல் மேய்பவரின் சாமர்த்தியத்தோடு கேட்டிருக்கிறார்கள்.

"திராவிடர்" என்பது பார்ப்பனரல்லாதவர் என்பதைக் குறிக்கும் அடையாளச் சொல். ஆரியர் பண்பாட்டு படையெடுப்பால் வீழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல் என்று பல ஆயிரம் முறை பெரியாரும் பெரியார் இயக்கப் பற்றாளர்களும் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் மானுடவியலாளர்களும், வரலாற்று அறிஞர்களும் ஆரியர்களின் படையெடுப்பால் அவர்களின் பண்பாட்டு ஊடுருவலால் வீழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக "திராவிடர்" என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் ஆரியர் என்பதன் எதிர்ச்சொல் திராவிடர் என்பதுதான் நாம் இன்றும் பயன்பாட்டில் கொண்டிருக்கும் பொருள்.

உண்மையில் "திராவிடர்" என்ற அடையாளத்தை எதிர்க்க வேண்டியது தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் ஆரிய அடிப்படைவாதிகள்தான். ஆனால் ஆரிய அடிப்படைவாதிகள் எப்போதும் நேரடியாக மோதமாட்டார்கள், அவர்கள் நம்மில் இருந்தே நமக்கு எதிரிகளை உருவாக்குவார்கள் என்பதை வரலாறு நெடுக நாம் கண்டிருக்கிறோம்.

இந்திய அளவில் "ஆரியர்" என்ற சொல்லாடலை அதன் வரலாற்றுப் பொருளை எதிர்ப்பதற்கு, "ஆரியர்" படையெடுப்பு என்ற ஒன்று நிகழவேயில்லை, ஆரியர் X திராவிடர் என்ற பிரிவினையை ஆங்கிலேயர்கள் பொய்யாகச் சித்தரித்தார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், நம்மவர்கள் சிலரையும் அப்படிச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக ஆரியர்களுக்குத் தீராபகையாக எப்போதும் இருக்கும் தமிழகத்தில், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வை, ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான உணர்வை திராவிடர் என்ற அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்துக் கூர்மைபடுத்தி, கணிசமான அளவிற்கு வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம். எப்படி ஆரியர் படையெடுப்பு என்ற ஒன்று நடக்கவில்லை என்ற வரலாற்றிற்கு எதிரான சதிப் பிரச்சாரம் இந்தியா முழுமைக்கும் நடக்கிறதோ, அதே போலத் திராவிடர் என்ற சொல் தமிழர்களுக்கு எதிரானது என்பது போன்ற வரலாற்றிற்கு எதிரான மோசடிப் பிரச்சாரம் தமிழகத்தில் பல காலமாக நடந்து வருகிறது. நம்மவர்கள் சிலரும் அதற்குத் துணைபோகிறார்கள். எப்படித் துணை போகிறார்கள் என்றால், "திராவிடர்" என்பதைச் சொல்லாராய்ச்சி செய்து, அது பார்ப்பனர்களைக் குறிக்கிறது என்கிறார்கள், சிலர் அது தெலுங்கர்களைக் குறிக்கிறது என்கிறார்கள், தமிழகத்தில் உள்ள பிறமொழியாளர்களைக் குறிக்கிறது என்றெல்லாம் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். இத்தகைய பிரச்சாரம் பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு எதிராகப் பல காலமாக நடந்து வருகிறது என்றாலும், அது கொஞ்சமும் எடுபட்டதில்லை இத்தனை காலமும்.

"திராவிடர்" என்ற பண்பாட்டு அடையாளத்திற்கு எதிராகப் பல முறை முயன்றும் தோற்றுப்போன ஆரிய கைக்கூலிகள், 2009இல் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் "தமிழர்" என்ற அரசியல் அடையாள எழுச்சியைப் பயன்படுத்தித் தங்கள் விஷ/விஷமப் பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்ற நப்பாசையில் மீண்டும் தூசிதட்டி கிளம்பியிருக்கிறார்கள். அந்தப் பிரச்சாரத்திற்குப் பலியான சிலர்தான் இப்போது "திராவிடர் திருநாள்" என்று பொங்கலை சொல்லாமா என்று கூச்சல் எழுப்புகிறார்கள்.

பொங்கல் தமிழர் திருநாள் என்கிறார்களே அந்த முழக்கம் எப்படி ஏற்பட்டது, சாதாரணமாக வந்துவிட்டதா?

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆரிய பண்பாட்டு படையெடுப்பிற்கு எதிராக நடத்திய கருத்துப்போரின் விளைவுதானே தமிழர் திருநாள் என்கிற முழக்கமே! ஆரிய/ பார்ப்பன இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடாதே, தமிழர்களுக்கு விழா என்றால் அது பொங்கல்தான், அதுதான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட விழா, அதுதான் 'தீட்டு' என்கிற ஆரிய கருத்தாக்கத்தை ஏற்காத விழா, அதுதான் தமிழர்களின் புத்தாண்டு விழா என்று தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்று பரப்புரை செய்தவர் பெரியார். பல ஆயிரம் கூட்டங்களை, பொங்கல் விழாக்களை, பல லட்சம் சிறுவெளியீடுகளைத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தது திரவிடர் இயக்கத் தொண்டர்கள்.

ஆரிய புராணங்களில் அடிப்படையில் ஏற்பட்ட பண்டிகைகள் தமிழனுடையது அல்ல, மாறாக அவையெல்லாம் பார்ப்பனரல்லாத தமிழர்களை/திராவிடர்களை இழிவுபடுத்துகிறது. ஆகவே தீபாவளி கொண்டாடாதே, ஆயுதபூஜை/சரஸ்வதிபூஜை கொண்டாடாதே, வினாயகனுக்கு ஊர்வலம் நடத்தாதே, இராமனுக்குக் கிருஷ்ணனுக்கு விழா எடுக்காதே, ஜாதியைக் காப்பாற்றுகிற குல தெய்வ வழிபாடுகளைக் கைவிடு, ஜாதிச் சண்டையை ஏற்படுத்துகிற கிராம திருவிழாக்களைத் தடைசெய் என்று தந்தை பெரியாரும், பல ஆயிரம் திராவிடர் இயக்கத் தொண்டர்களும் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், இன்றைக்குத் தமிழர் திருநாள் என்ற ஒன்றிற்கான தேவை எங்கிருந்து வந்தது?

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்று உண்மையை, சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பது ஆரிய சூழ்ச்சி என்கிற உண்மையை, கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழர்களிடையே பரப்புரை செய்துவருவது திராவிடர் இயக்க தொண்டர்கள்தானே? கலைஞர் கருணாநிதியை எதிர்ப்பதைப் போல பாவனை செய்துகொண்டே திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளைப் பரப்புகின்ற தமிழ்த்தேசியர்கள், அதே கலைஞர்தான் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அரசாணை பிறப்பித்து, ஆரிய சூழ்ச்சியை முறியடிக்க முயன்றார். தமிழ்த்தேசிய அமைப்புகள் சிலவற்றின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த பார்ப்பன ஜெயலலிதா, மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது தமிழறிஞர்கள் , தமிழ்த் தேசியவாதிகள் ஆற்றிய எதிர்வினை என்ன? தை முதல் நாளுக்கும் சித்திரை முதல் நாளுக்கும் இடையே நடப்பது திராவிட ஆரியப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அரசு அலுவலகங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் "சமத்துவப் பொங்கல்" என்ற பெயரில் ஜாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் திரட்டி, சமத்துவத்தை வலியுறுத்துகிற விழாவாகப் பொங்கலைக் கொண்டாடவேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்ததே அதைப் பார்ப்பன ஜெயாவின் அரசு கைவிட்டது ஏன்? அதை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தமிழ்த்தேசிய அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அரசு அலுவலகங்களில் ஆரியப் பண்டிகையான ஆயுதபூஜையை நடத்தக் கூடாது என்று திராவிடர் இயக்கம் தானே போராடுகிறது? எங்கே போனார்கள் தமிழ்த்தேசிய மெய்யன்பர்கள்? பொங்கலுக்கும் ஆயுத பூஜைக்கு இடையே நடப்பது திராவிட ஆரிய பண்பாட்டுப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

தமிழர் திருநாளான பொங்கல் அன்று, பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் சங்கரமடத்து ஆட்கள் சங்கராந்தி வாழ்த்துச் சொல்கிறார்களே, தமிழ்ப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமையாக இருப்பதில் சுகம்காணும் சில பார்ப்பனரல்லாத தமிழர்களும் Happy Sankaranti என்று வாழ்த்துச் சொல்கிறார்களே, இன்றைக்கு நம்மோடு மல்லுக்கு நிற்கிற தமிழ்த்தேசிய நண்பர்கள் சங்கராந்திக்கு எதிராக சின்ன சத்தம்கூடப் போடுவதில்லையே, ஏன்? சங்கராந்திக்குப் பின்னால் உள்ள ஆரிய புராணக் குப்பையை எரிக்கக்கூடிய மருந்து பெரியாரின் திராவிடர் இயக்கத்திடம்தானே உள்ளது? பொங்கலுக்கும் சங்கராந்திக்கும் இடையே நடப்பது திராவிட ஆரியப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பது, இந்துமதக் கடவுள்களை வணங்குவது போலவே பொங்கல் சடங்குகளை செய்வது என்று கிட்டத்தட்ட இந்துமத விழாவாகவே பொங்கல்விழா மாறிவிட்டதே, இதை ஏன் எந்த தமிழ்த்தேசியவாதிகளும் கேட்பதில்லை. தமிழர் திருநாள் என்பது இந்துமதத் திருநாளாக மாறிவிட்டதைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் இந்துமத எதிர்ப்புணர்வோடு "திராவிடர் திருநாள்" என்று சொன்னால் அது கெட்ட வார்த்தையா? பொங்கல் விழாவில் இருந்து ஆரிய இந்துமத சடங்குகளை வெளியேற்ற தமிழர் திருநாள் என்பது பயன்படுமா? திராவிடர் திருநாள் என்பது பயன்படுமா?

சித்திரை முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள் தமிழ்ப் பார்ப்பனர்கள், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள் பார்ப்பனரல்லாத தமிழர்கள்!

தொழில் கருவிகளுக்குப் பூஜை செய்து வணங்குவதற்கு ஆயுத பூஜை என்கிறார்கள் தமிழ்ப் பார்ப்பனர்கள். உழவுத் தொழிலுக்கு உதவும் கருவிகளுக்கு நன்றி செலுத்தும் விழா பொங்கல் என்கிறார்கள் பார்ப்பனரல்லாத தமிழர்கள்!

சூரிய பகவானை வணங்குகிற ஹிந்துக்களின் பண்டிகை மகரச் சங்கராந்தி என்கிறார்கள் தமிழ்ப் பார்ப்பனர்கள். இயற்கைக்கு நன்றி செலுத்துகிற சமயசார்ப்பற்ற விழா பொங்கல் என்கிறார்கள் பார்ப்பனரல்லாத தமிழர்கள்!

திராவிடர் திருநாள் என்று ஆரிய பண்பாட்டு படையெடுப்பிற்கு எதிரான விழாவாக பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் கொண்டாடுவதால், இன்னமும் சில தமிழ்த்தேசிய நண்பர்களுக்கு வீண்கோபம் வந்து தமிழர் திருநாள் பொங்கல் என்று முழக்கமிடத் தோன்றினால், ஜாதி-மத-பாலின-வர்க்க பேதங்கள் இன்றி அனைவரும் தமிழராகக் கொண்டாடும் விழாவாக இதை மாற்றும் வேலையை செய்யுங்கள். அதைவிட மகிழ்ச்சி பெரியாரின் திராவிடர் இயக்கத்திற்கு ஏது? பொங்கல் விழா முற்றும் முழுதான தமிழர்களின் திருவிழாவாக ஆக வேண்டுமென்றால், தமிழர்களை ஆரிய/பார்ப்பன பண்டிகைகளைக் கைவிடச் செய்யுங்கள். ஜல்லிக்கட்டு போன்ற ஆணாதிக்க, ஜாதி ஆதிக்க காட்டுமிராண்டி செயலை கைவிடச் செய்யுங்கள். ஜாதி உணர்விற்குத் துணை புரிகிற குலதெய்வ வழிபாடுகளைக் கைவிடச் செய்யுங்கள். ஜாதி வேற்றுமையைப் பேணிப் போற்றுகிற கிராம கோயில் திருவிழாக்களைத் தடை செய்யப் போராடுங்கள். வினாயகன் ஊர்வலம், அட்சய திருதியை போன்ற புதிய ஆபத்துகளைத் தடுத்து நிறுத்துங்கள். தேவர் ஜெயந்தி, வன்னியர்களின் சித்திரா பௌர்ணமி விழா போன்ற தமிழர் ஒற்றுமைக்கு எதிரான பேராபத்துகளை உயிரைக் கொடுத்தாவது முறியடியுங்கள்!

இதையெல்லாம் செய்யாமல் தமிழர் திருநாள் பொங்கல் என்பதெல்லாம் தமிழ் உணர்வை சொறிந்து கொள்வதற்குத்தான் பயன்படுமேயல்லாமல், உண்மையான தமிழர் திருவிழா ஆகாது!

"பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.

ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே நீங்கள் அனேகமாய் விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது ஆகும்.." தந்தை பெரியார் "விடுதலை" -19.01.1969

மேலும் வாசிக்க :

1. பொங்கல் விண்ணப்பம் : தந்தை பெரியார் - குடிஅரசு தலையங்கம் - 18.01.1947

2. பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்? : தந்தை பெரியார் - குடிஅரசு தலையங்கம் : 15.01.1949

3. பொங்கல் விழா - தமிழர் விழா! : தந்தை பெரியார் - விடுதலை 30.01.1959

4. எனது பொங்கல் பரிசு : தந்தை பெரியார் - விடுதலை 19.01.1969

5. பொங்கல் விழா : தந்தை பெரியார் - விடுதலை - 14.1.1972

6. திராவிடர் விழாக்கள் - அதி அசுரன்

7. தமிழர் திருநாளும் பெரியாரும் – தமிழேந்தி

8. விழாக்களும் அரசியலும் - சுப.வீரபாண்டியன்

9. பொங்கட்டும் இனஉணர்வு பொங்கல்! கி.தளபதிராஜ்

10. பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே! - வே.மதிமாறன்

11. பொங்கல் - சில குறிப்புகள் : கணேஷ் எபி

- அ.பிரபாகரன்

Comments

11 comments

11
Kaarunyan, Palladam.
தோழர் பிரபா! நம் தமிழ்னாட்டில் தமிழ் தேசியம் என்பது கூட கருணானிதி எதிர்ப்பு தான். அதுவும் யாருக்கோ சொரிந்து விடும் எட்டப்ப சித்தாந்தம். வடக்குக்கு சுப்ரமணியம் சுவாமி மாதிரி இப்போ தமிழ்னாட்டில் தமிழருவி மணியன்கள். இவர்களுக்கு இப்போ ஒரு வேலை கிடைத்து இருக்கிறது. அது எல்லா சேனல் களிலும் கருத்துக்கூறுவது இல்லை பட்டிமன்றம் நடத்துவது. இதை தமிழ் வளர்க்கும் ஒரு கலையாக தஙக்ளை தாஙகளே விபச்சாரப்படுத்திக் கொள்கிரார்கள். ஆனால் கருணநிதி வாய் திறந்து விடக்கூடாது. உடனே தமிழ்தேசியம் என்று தரம் கெட்டு.....! ஆனால் மறைந்த தலைவர் வாலி அவர்கள் ஒரு முறை ஒரு பத்திரிக்கைக்கு.. ஏன்? எனக்கு கலைஞ்ரை பிடிக்கிறது என்ற கேள்விக்கு அவருக்கு தமிழை பிடிக்கும் அதனாலேயே எனக்கு அவரைப்பிடிக்கும். தவிர அவருக்குப்பிறகு தமிழுக்கான போரட்ட களம் வீரியம் இருக்காது. இதுதான் உண்மையான வார்த்தை.
alagarasan
என்ன அபத்தமான கட்டு(ரை)கதை.
1.உஙகள் கன்னட ராமசமியார் எப்போது தமிழர் நலம் பேசினார் ?2. பொஙகல் திராவிட விழாவா ? (அ) தமிழர் விழாவா ? சரியாக சொல்லவும். திராவிட விழா என்றால் ஏன் வேறு வேறு பெயர்களில் கொண்டாடபடுகிரது ? பக்கத்து மாநிலாமான கேரளாவில் ஏன் இல்லை? 3. பொஙகல் தமிழவிழா. திராவிட விழா என்பது ஒன்ட வ ந்த பிடாரிகளின் இடைசெருகல். 4. பொஙகல் வேவ்வெறு பெயர்களில் சூரியன் சம்பந்தபட்ட விழாகவே இ ந்தியா எங்கும் (தமிழ் நாடு உட்பட) கொண்டாடபடுகிறது.
5. திராவிடர்" என்பது பார்ப்பனரல்லாதவர் என்பதைக் குறிக்கும் அடையாளச் சொல் எனில் ஆதி திராவிடர்"
என்பது யாரை குறிக்கும் அடையாளச் சொல் ?
சம்பூகன்
மிகச்சிறந்த கட்டுரை.அ.பிரபாகரன் கருத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன்.தமிழர்களாய் ஒன்று திரள திராவிடர் திருநாளாம் பொங்கல்-தமிழ்ப்புத்தாண்டுதான் உணர்வுபூர்வமான விழாவாகும்.ஆரிய ஜாதியை,சடங்குகளை,பழக்கவழக்கங்களை விடாமல் நாங்களும் தமிழர்கள்தான் என்பது உலகை ஏமாற்றும் செயலே.தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஜாதி அடையாளத்தை விடு என்றார் பெரியார்.தமது பெயரிலும் தமது தோழர்கள் பெயர்களிலும் ஒட்டிக்கொண்டு இருந்த ஜாதி வாலை வெட்டி எரிந்தார் பெரியார்.ஜாதிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு இருந்த தமிழனுக்கு சித்தார்த்தன்,கவுதமன்,புத்தன்,சங்கமித்ரா,கவுதமி,அசோகன் என்று ஜாதிக்கு எதிரான பவுத்தப் பெயர்களைச் சூட்டியவர் பெரியார்.பெரியாரைப் பின்பற்றிய திராவிட இயக்கமே தனித்தமிழ்ப் பெயர்களைச் சூட்டியது.பெயரால் ஜாதி அடையாளம் சொல்லிவிடும் அளவுக்குப் பரம்பரையாக சூட்டப்பட்டிருந்தமுனுசாமி,பாவாடை,மாரியப்பன்கள் எல்லாம் செழியன்,மாறன்,அன்பழகன்,அறிவழகன் என பெயரை மாற்றிக்கொண்டு தமிழர்களாய் ஆனார்கள்.இந்த மாறுதல்களைச் செய்தது பெரியாரும் திராவிடர் இயக்கமும்தான்.தமிழனுக்கு தமிழுக்கு பெரியாரும் திராவிட இயக்கமும் செய்த ஒப்பற்ற தொண்டை வேறு எவரும் செய்ததில்லை என்பது கல்லில் செதுக்கிய உண்மை.புதிய தமிழ்தேசியர்கள் பார்ப்பன அடிவருடிகளாய் ஜாதி வெறியர்களாய் உலாவருவது வெட்கக்கேடானது.
சண்முகநாதன்
தோழர் மிக அருமையான கட்டுரையை கொடுத்துள்ளார்..புதிதாக புறப்பட்டுள்ள ஆரிய குள்ளநரிக்கூட்டத்தினர்..சாதிய தமிழ்தேசியத்தினை மிக நுட்பமாக முன்நிறுதியுள்ளனர்..அவர்களின் முப்பெரும் கொள்கை..கருணாநிதி எதிர்ப்பு..திராவிட எதிர்ப்பு...பெரியார் எதிர்ப்பு..மட்டும்தான்..உண்மையில் இந்த தமிழ்ச்சமூகத்தினை மேலும் மேலும் எப்படி பிளவுபடுத்துவது..என்பதுதான்..திராவிடம் பேசும் தமிழர்கள் மட்டும்தான் தனித்தமிழ்நாடு கோரிக்கையாளர்களாக இருக்கின்றனர்..தெலுஙகன்/மலையாளி/கன்னடன்..யாரும் தனி நாடு கேட்டு போராடவில்லை..அவர்கள் மொழி சம்சுகிருதத்தில் கரைந்துகொண்டு இருக்கின்றது..அவர்கள் தேசம் சிதருண்டு இந்தியத்தில் அய்க்கியமாகிக்கொண்டுளது..திராவிடம் என்கிற இருப்புதான் தமிழ்தேசியத்தை தொடர்ந்து வழிநடத்திக்கொண்டு இருக்கிறது..இதனை அழித்தொழிக்க ஆரியம்/பார்ர்பனியம் பல காலம் பாடுபட்டுக்கொண்டுள்ளது...1990 களில்..அண்ணல் அம்னபேத்கரின் நூற்றாண்டுக்குள் நுழைந்து தலித் சிந்தனை என்கிற பெயரில் சில பார்ப்னிய அடிவ்ருடிகள்/கூலிகளை வேலைக்கு அமர்த்தி பெரியார் எதிர்ப்பு/திராவிட எதிர்ப்பு வேலைகளை செய்து தோற்றுபோனவுடன்..ஈழ அரசியலை முன்வைத்து..திராவிட எதிர்ப்பு..பெரியார் எதிர்ப்பு..கருத்தியலை வேலைத்திட்டமாக சில கைக்கூலிகளிடம் கொடுத்து தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளனர்..அவர்களின் நோக்கம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை..தமிழ்..தமிழர்(திராவிடர்)..தமிழ்நாடு என்பது இயற்கையாந்து..இந்தியத்தால்/ஆரியத்தால்/பார்ப்பனியத்தால் வெல்ல முடியாதது..ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம்..தமிழியத்தால் வெல்வோம்..இந்துத்துவத்தால் விழுங்க முடியாத நெருப்பு பெரியார்...அவர் காட்டிய அறவழியில் திராவிட இயக்கம் தனது நெடும்பயணத்தில்..தனது இலககை அடையும்வரை ஓயாது..
சம்பூகன்
alagarasan அவர்களுக்கு...
நமது கன்னட ராமசாமியார் தம் வாழ்நாள் முழுதும் தமிழர்(திராவிடர்)நலம் பேசினார்.அவரது பேச்சு.எழுத்து,உழைப்பை வரலாற்றில் இருந்து படித்தறியுங்கள்.நான்கு ஆரிய அல்லக்கைகள் முகநூலில் எழுதும் அவதூறுகளைப் ப்டித்துவிட்டு எழுதாதீர்கள்.அநேகமாக நீங்கள் வேறு கண்டத்தில் இருந்து வந்திருக்கலாம்?
பொங்கல் திராவிடர் - தமிழர்விழா சரியான விளக்கத்தை பிரபாகரன் கொடுத்துள்ளார்.மீண்டும் ஒரு முறை படிக்கவும்.தமக்கெதிரானவற்றை முதலில் அழிக்கமுனைவதும்,இயலவில்லையெனில் பின்னர் அதனைத் தமதாக்கிக் கொள்ளுதலும் ஆரியத்தின் இயல்பு.அப்படியே பொங்கலுக்கும் ஒரு கதை கட்டி மகரசங்கராந்தியாக்கிவிட்டது.(புத்தரை அழிக்க முனைந்து முடியாமல் தசாவதாரத்தில் ஒன்றாக்கியதுபோல.)ஆரியத்தின் மனுதர்மம் விவசாயத்தை ஏற்கவில்லை.ஆனால்,மனிதன் கண்டறிந்த முதல் அறிவியல் விவசாயம்.அதனால்தான் தமிழன் விவசாயிக்கு,விவசாயத்துக்கு,அதற்கு ஒத்துழைக்கும் மாடுகளுக்கு,எல்லாவற்றுக்கும் அடிப்படையான இயற்கைக்கு(பகலவனுக்கு)நன்றி காட்ட பொங்கலைக் கொண்டாடத்தொடங்கினான்.தமிழன் தவிர திராவிடனாக இருந்த மற்றவர்களான மலையாளி,தெலுங்கர்,கன்னடர்கள் ஆரியத்தை ஏற்று திராவிட உணர்ச்சியை இழந்ததால் கொண்டாடவில்லை.அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?திராவிடனே(தமிழனே)ஆரியச் சுழ்ச்சிக்கு அடிமையாகி மெல்ல மெல்ல தெலுங்கனாக்,மலையாளியாக.கன்னடனாக ஆனான் என்பதே வரலாறு.ஒரு குடும்பத்திலிருந்து சில பிள்ளைகள் பெற்றோருடன் முரண்பட்டு செல்வதைப்போல.
திராவிடன் என்பது பார்ப்பனரல்லாத தமிழனைக் குறிக்கும் சொல்.ஆதி திராவிடன் என்பது திராவிடனின் மூதாதை.அவனது நிறமே அதற்கு சாட்சி.திராவிடனின் நிறம் கருப்பு.ஆகவே,திராவிட மண்ணுக்கு தமிழ் இனத்துக்கு பெரும் உரிமையுடவன் ஆதி திராவிடன்.வட புலத்தில் கூட ஆதி திராவிடன் உண்டு.இது அண்ணல் அம்பேத்கரின் ஆய்வு.
சாணக்கியன்
/// எப்படிப் பார்த்தாலும் ஆரியர் என்பதன் எதிர்ச்சொல் திராவிடர் என்பதுதான் /// -------- ஹிந்து எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு பார்ப்பனரை எதிர்க்கிறேனென்று சொல்வது படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போலிருக்கிறது ----- முதலில் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள் --- ஹிந்து என்பதன் எதிர்ச்சொல் இஸ்லாம்.
alagarasan
அய்யா சம்புகன் அவர்களே-' கன்னட ராமசாமியார்' என்று சொன்னதர்க்கு நன்றி. நானும் அதைத்தான் சொன்னேன். முக நூல் படிக்கும் வழக்கம் எனக்கு இல்லை. பழைய குடியரசு,விடுதலை களில் படித்தைதான் எழுதினேன். நான் நீஙகள் எந்த கண்டத்தில் உள்ளீறோ- அன்கேதான நானும் உள்ளேன் . புத்தரை அழிக்க முனைந்து முடியாமல் தசாவதாரத்தில் ஒன்றாக்கியதுபோல ஏசு ,அல்லா வை ஏன்
ஒன்றாக்கவில்லை? ஆதி திராவிடன் என்பது திராவிடனின் மூதாதை.அவனது நிறமே அதற்கு சாட்சி.திராவிடனின் நிறம் கருப்பு -என்ன் வழவழ விளக்கம். தற்போது ஏன் இரு பிரிவுகள் உள்ளன ? ஆதி திராவிடன் இப்போதும் ஆதி திராவிடந்தான்(தாழ்த்த்பட்டவர்கள்). திராவிடனின் நிறம் கருப்பு எனில் தற்போதைய சிகப்பு /மாநிற தமிழக திராவிட தலைவர்கள் யார்?
சாணக்கியன்
/// திராவிடனின் நிறம் கருப்பு எனில் தற்போதைய சிகப்பு /மாநிற தமிழக திராவிட தலைவர்கள் யார்? //// --------- ஆரியருக்கும் திராவிடருக்குமுள்ள பத்து வித்தியாசங்களை அடிப்பிறழாமல் எழுதுக -------- 1. பொன்னிற மேனி, கருத்த ஒடம்பு --- 2. கூரிய நாசி, சப்ப மூக்கு --- 3. செவ்விதழ்கள், தடித்த ஒதடு --- 4. தாமரை விழிகள், ஆந்தை முழி --- 5. அகன்ற நெற்றி, குறுகிய மண்டை ----- 6. மென்மையான கேசம், சுருண்ட முடி -- 7. பரந்து விரிந்த தோள்கள், சூம்பிப்போன நெஞ்சு ---- 8. உருண்டு திரண்ட மார்பு, காஞ்சி போன காம்பு ---- 9. அறிவுக் கூர்மை, ஆட்டு மூளை --- 10. கோபுரக் கும்பம், வத்தல் கும்பி ---- 11. "சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ", "கட்டப்புள்ள குட்டப்புள்ள கருகமணி போட்ட புள்ள".
நிலவன்
பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் தமிழர் பண்பாட்டை இன்னும் பறைசாற்றி கொண்டிருக்கும் தமிழரின் அடையாளம் இதையும் தமிழர்களுக்காக விட்டு வைக்க திராவிடர்களுக்கு மனமில்லையா? தமிழர்களை அடையாளம் இல்லாமல் அழித்துவிட எண்ணுகிறீா்களா? திராவிட சாயம் பூசி தமிழனை யார் என்றே அவன் தெரிந்துக் கொள்ளாமல் திராவிடத்தை அவன் மேல் திணிக்காதே. சமா் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் என்று இல்லாமல் தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் என்று இருக்கட்டும். தமிழா நீ திராவிடன் இல்லை. திராவிட ஆரிய மாயை எல்லாம் வெறும் பொய். திராவிடம் என்பது மாற்று மொழிகாரர்களின் தந்திரம் அதில் கன்னட ராமசாமியும் ஒருவா் இதை ஆரியர்கள் ( பார்ப்பனர்கள் ) பயன்படுத்திக்கொண்டார்கள். தமிழர்கள் இனியும் இந்த சூழ்ச்சியில் பங்கு பெற வேண்டாம்.
நலங்கிள்ளி
எல்லாம் சரி பிரபாகரன், உங்களின் திராவிடக் குலக்கொழுந்து கலைஞர் இந்துத்துவ வெறியன் வாஜ்பாயை "மனிதருள் மாணிக்கம்" எனப் புகழ்கிறார். தமிழினத்தை வேரறுத்த சோனியாவை "மணிமேகலை" எனப் பாராட்டி மகிழ்கிறார். திரு வீரமணியோ ஆரியத் தலைவி என நீங்கள் சித்திரிக்கும் ஜெயலலிதாவை "சமூகநீதி காத்த வீராங்கனை" எனப் போற்றினார். உங்களைப் போன்ற கலைஞர் ரசிகர்களுக்கும் திராவிடவாதிகளுக்கும் வேண்டுமானால் இப்புகழுரைகள் தேனாய் இனிக்கக் கூடும். திராவிடத்தின் பேரில் இந்த இந்திய வெறியர்களை எல்லாம் தயவுசெய்து தமிழ்த் தேசியர்களின் தலையில் கட்டாதீர்கள். திராவிடத்துவா இந்துத்துவாவில் கரைந்து பல காலம் ஆகி விட்டது. பேராசிரியர் த. செயராமன் திராவிடக் கருத்தியல் பொய்யானது எனத் திட்டவட்டமாக மெய்ப்பித்து, திராவிடத்துக்கு மரண அடி கொடுத்துள்ளார். ஆனால் தங்களைப் பகுத்தறிவுகள் எனச் சொல்லிக் கொள்ளும் திராவிடவாதிகள் யாருக்கும் செயராமனுக்கு அறிவியல் அடிப்படையில் விடையளிக்கும் திராணி இல்லையே, ஏன்? ஆனால் திராவிடம் என்பதற்குப் பல முறை விளக்கம் அளித்து விட்டதாக உங்களைப் போன்றவர்கள் அலுத்துக் கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. திரு கொளத்தூர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், "ஆரிய புராணங்கள் சாஸ்திரங்கள் சொல்வதைப் போல சூத்திரர்களுகான மறுசொல்லாக திராவிடரை எடுத்துக் கொள்ளலாம்" எனக் கூறினார். திராவிடர் என்பது தமிழர்களுக்கு எதிராக ஆரியம் பயன்படுத்திய இழிசொல் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா? – நலங்கிள்ளி
Selva
இனி திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. திராவிடம் என்ற சொல்லை தெலுங்கர்கள் அதிகார நாற்காலியில் உட்கார இனி தமிழர்கள் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.பொய்யும் புனை சுருட்டும் சொல்லிச் சொல்லி ஏமாற்றியது ஒரு காலம். ஒருபோதும் திராவிடப் புரட்டு கதைகளை ஏற்கவே மாட்டார்கள். ஆரியமும் திராவிடமும் கள்ள காதல் கொண்டு தமிழரை ஆள்வதற்கு ஏற்படுத்திய சூழ்ச்சி இனி எடுபடவே எடுபடாது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.