அன்புள்ள தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு,
வணக்கம். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்திலும், கீற்று, பதிவு முதலான வலைத்தளங்களிலும், நீங்கள் எழுதியுள்ள ‘முள்ளிவாய்க்கால் முற்றமும், முக்காடு நீங்கிய தமிழின வெறுப்பும்’ என்னும் கட்டுரையைப் படித்தேன். அதில் என்னைப் பற்றியும், என்னை விமர்சனம் செய்தும் சில செய்திகள் எழுதப்பட்டிருந்தன. எனவே, நான், கீழ்க்காணும் செய்திகளை உங்களோடும், நம் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
1. “பா.ச.க., இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்புரை ஆற்ற அழைத்திருக்க வேண்டியதில்லை என்பது த.தே.பொ.க. நிலைப்பாடு” என்றும், “முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் உரையாற்றத் தோழர் திருமாவை அழைத்திருக்க வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் கருத்து” என்றும், உங்கள் கட்டுரையில் குறித்துள்ளீர்கள்.
மகிழ்ச்சி. ஆனால் உங்கள் நிலைப்பாட்டை, உங்கள் இதழிலோ, அறிக்கைகளிலோ இதற்கு முன் வெளிப்படுத்தவே இல்லையே, ஏன்? இத்தனை விவாதங்கள் வந்தபின்புதானே, இப்போது எங்கள் நிலைப்பாடு இது என்று தெரிவிக்கின்றீர்கள். ‘புதிய தலைமுறை’த் தொலைக்காட்சியில், முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவிற்கு நண்பர் திருமாவளவனையோ, என்னையே பார்வையாளர்களாகக் கூட அழைக்கவில்லையே, இது நியாயந்தானா என்று உங்களிடம் நேரடியாகக் கேட்டேன். அதற்கு நீங்கள் சொன்ன விடை என்ன...? ‘வரவேற்புக் குழுவில் நான் இல்லை, அது பற்றி எனக்குத் தெரியாது’ என்பதுதானே! அப்போதும் உங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூறவில்லையே. இன்னொரு தொலைக்காட்சியில், இதே வினாவைத் திரு பீட்டர் அல்போன்ஸ் உங்களிடம் நேராகவே கேட்டார். அந்த நிகழ்ச்சியிலாவது, உங்களின் நிலைப்பாட்டின் ரகசியம் என்ன என்பதை நீங்கள் உடைத்திருக்கலாம்.
ஒரு கட்சியின் நிலைப்பாட்டை இவ்வளவு ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.
2. முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில், பெரியார், காமராசர் படங்கள் வைக்கப்படாதது குறித்து உங்கள் விளக்கங்களை எழுதியுள்ளீர்கள்.
“இலக்கிய படைப்புகள் செய்தவர் அல்லர் பெரியார். எனவேதான் அங்கு பெரியார் படம் வைக்கப்படவில்லை” என்றும், “அவர் (காமராசர்) இலக்கியப் படைப்பு எதுவும் வழங்கியவர் இல்லை என்பதுதான்” என்றும் ‘அரிய’ விளக்கங்களைத் தந்துள்ளீர்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது வரலாற்று முற்றம் என்று கருதிக்கொண்டிருந்தோம். ஆனால் அது வெறும் இலக்கிய முற்றம்தான் என்று இப்போது தெரிய வந்துள்ளது. சரி, பொன்னப்ப நாடார், வாஞ்சிநாத அய்யர் படங்களை எல்லாம் அங்கு வைத்துள்ளீர்களே... அவர்களின் இலக்கியப் படைப்புகள் குறித்து எம்போன்ற எளியவர்களுக்குத் தெரியப்படுத்துவீர்களா?
3. சாதிப்பட்டம் குறித்து நீங்கள் எழுப்பியுள்ள வினா சரியானதாகவே எனக்குப் படுகின்றது. என் பிழையை ஏற்றுக்கொள்கின்றேன். சேதுப்பிள்ளை, சிதம்பரநாதன் செட்டியார் ஆகிய சாதிப்பட்டங்களை எதிர்க்கும் சுபவீ, டி.எம்.நாயர் என்று அழைப்பது மட்டும் சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
சரியில்லைதான். இனிவரும் நாள்களில் திருத்திக் கொள்கின்றேன். டி.எம். நாயர். ஜி.டி. நாயுடு, மூப்பனார் ஆகிய சாதிப் பட்டங்கள், நீங்கள் குறிப்பிடுவது போல, இயற்பெயர்கள் போலவே நிலைத்துவிட்டன. எனினும், வருங்காலத்தில் டி.எம். நாயர் என்று அறியப்பட்டுள்ள டி. மாதவனார், ஜி.டி. நாயுடு என்று அறியப்பட்டுள்ள அறிவியல் மேதை துரைசாமியார் என்று மேடைகளில் பேசுவோம். எழுதும்போதும் ‘கருப்பையா(மூப்பனார்)’ என்று சாதிப்பட்டத்தைச் சில காலம் அடைப்புக் குறிகளுக்குள் போடுவோம். காலப்போக்கில், சாதிப் பட்டங்களை எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்த வேண்டிய தேவையே வராது.
பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும், திருத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், செட்டியார், பிள்ளை ஆகிய தமிழ்ச் சாதிகளைக் கண்டு நாங்கள் எரிச்சல் அடைவதாகவும், நாயர் என்பது திராவிட மலையாளச் சாதி என்பதால் ஏற்றுக்கொள்வதாகவும் ‘உள்நோக்கம்’ கற்பித்து எழுதியுள்ளீர்கள். என் போன்ற திராவிட இயக்கப் பற்றாளர்களைத் தமிழினப் பகைவர்களாக உலகுக்குக் காட்டிடும் உங்களின் முயற்சியை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள்! அது உங்கள் விருப்பம்.
சாதியே கூடாது, சாதிகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரியம். பிறகு தமிழ்ச்சாதி என்ன, திராவிடச் சாதி என்ன? அழித்தொழிக்கப்பட வேண்டிய சாதிக்கு எந்த முன்னொட்டும் பொருந்தாது.
4. ஜவாஹிருல்லா, கவிஞர் இன்குலாப், ஹென்றிடிபேன், மருத்துவர் கிருஷ்ணசாமி ஆகியோரை முற்றத் திறப்பு விழாவிற்கு நாங்கள் அழைத்திருந்தோம். நாங்கள் தலித், இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
உண்மைதான். நான் அப்படி உங்களைக் குற்றம் சாற்றவில்லை. ஆனால் திரு நடராசன், பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார் என்பதால், அவர் பிறந்த சாதி தொடர்பான விளம்பரங்கள், வரவேற்புப் பாதாகைகள் ஏராளமாக இடம் பெற்றிருந்தன என்பது உண்மைதானே!
‘தமிழினத்தின் பொதுச் செல்வம்’ என நீங்கள் சரியாகவே குறிப்பிடும் முள்ளிவாய்க்கால் முற்றம், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.
5. “பெரியாரில் இருந்துதான் தமிழினத்தின் வரலாறு தொடங்குகிறது என்று கூறி மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள்” என்று கூறுகிறீர்கள். அப்படிக் கூறுகின்றவர்கள் யார் என்பதை வாய்ப்பிருந்தால் தெரியப்படுத்துங்கள்.
6. தமிழ் மற்றும் ஆங்கில மொழி குறித்த பெரியாரின் கருத்துகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏற்கனவே 1000 முறைகள் இதுபோன்ற குற்றச்சாற்றுகளை நீங்களும், சோ போன்றவர்களும் கூறிவிட்டீர்கள். அதற்கான விடைகளை நாங்களும் ஆயிரம் முறைகளுக்கும் மேலாகக் கூறிக்கூறி அலுத்துப் போய்விட்டோம். தேவைப்பட்டால் நான் எழுதியுள்ள, ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள விடைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
7. ‘சுபவீ போன்றவர்கள் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி மேடையில் பேசுவதில்லை. அதற்காகக் கட்டுரைகள் எழுதுவதில்லை, ஏன்?’ என்று ஒரு வினாவை எழுப்பியுள்ளீர்கள். மேடைகளில் பேசியும், கட்டுரைகள் எழுதியுமே தமிழ்நாடு விடுதலையைப் பெற்றுவிட முடியும் என்று கருதுகிறவன் இல்லை நான். அதற்கான திட்டமோ, படையோ என்னிடம் இல்லை. அதனால்தான் என்னால் இயலாத ஒன்றைப் பொய்யாய், போலியாய் நான் முன்வைப்பதில்லை. உங்களைப் போன்றவர்களிடம் அதற்குரிய திட்டமும், பெரும்படையும் பின்னால் ஒளிந்திருக்கக் கூடும். இன்னும் ஓரிரு மாதங்களில் நீங்கள் தமிழ்நாடு விடுதலையைப் பெற்றுத் தந்துவிடவும் கூடும். அதனால்தான் நீங்கள் தொடர்ந்து அது குறித்து மேடைகளில் பேசியும், கட்டுரைகள் எழுதியும் வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கான என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்டிருந்த வினாக்களுக்கு எல்லாம் எனக்குத் தெரிந்த விடைகளைக் கூறிவிட்டேன். இறுதியாக உங்களிடம் கேட்கவேண்டிய ஒரே ஒரு வினா உள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் கேட்டு ஐயா நெடுமாறன் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியதாகவும், அதற்கு எந்த விடையும் வராத காரணத்தால், மீண்டும் தோழர் தா. பாண்டியன் மூலம் முயற்சி செய்ததாகவும், அதற்கும் பயன் ஏதுமில்லை என்றும் திரு வைகோ அவர்கள் தொலைக்காட்சியில் கூறினாரே... ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் என்னென்ன உதவிகளை ஜெயலலிதா செய்துள்ளார் என்று எண்ணி அவரை நீங்கள் அழைத்தீர்கள்? ‘எனக்குத் தெரியாது, நான் வரவேற்புக் குழுவில் இல்லை’ என்று விடை சொல்லிவிட மாட்டீர்கள் என நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் நாணயமானவர்!
மற்றபடி, வன்னெஞ்சக்காரன், தமிழ் இனத்தின் மீது காழ்ப்புணர்வு உடையவன், கித்தாப்பு பேசுகிறவன், கோயபல்சின் கொள்ளுப்பேரன் முதலான, நீங்கள் எனக்கு வழங்கியிருக்கும் இலவயப் பட்டங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி!
தோழமையுடன்,
சுப. வீரபாண்டியன்