கீற்றில் தேட...

   அந்த கோஷம் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாய் சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு கொடுக்கும் கல்வி உதவித் தொகை போல இந்து மாணவர்களுக்கும் கொடு என்கிற பாரதீய ஜனதாவின் போராட்டங்களால், அதில் எழும் முழக்கங்களால் . . . . தேசம் மட்டுமல்ல . . . . . முஸ்லிம்கள் கூட கொஞ்சம் அதிர்ந்துதான் போயிருக்கின்றனர். உண்மையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நமக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதோ என்று!

   இந்தியாவில் கல்வியில் முஸ்லிம்கள் மிகப் பின்தங்கியிருப்பதாக நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலான ஆணையம் அறிவித்தது. 25% முஸ்லிம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை எனவும் பெரும்பாண்மை முஸ்லிம் மாணவர்கள் உயர் கல்வி பயில்வதில்லை எனவும் தெரிவித்தது. இந்தியா முழுவதும் அடிமட்ட தொழில்களான பீடி சுற்றுவது, தையல் தொழில், சிறு மெக்கானிக்குகள் ஆகியவற்றை செய்யும் முஸ்லிம்கள் கல்வியை பற்றி சிந்திப்பதே இல்லை என்றது சச்சார் கமிட்டி.

   இந்தியாவில் 17 சதம்வரை வாழும் முஸ்லிம்கள் இந்திய அரசுப் பணிகளான IAS-ல் 3%, IFS-ல் 1.8%, IPS-ல் 4%, ரயில்வேயில் 4.5%, (அதுவும் கீழ்மட்ட வேலைகளில் மட்டுமே). வங்கிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் 1% கூட இல்லை எனவும், காவல்துறையில் 6%, சுகாதாரத் துறையில் 4.4% போக்குவரத்து துறையில் 6.5% மட்டுமே உள்ளனர் எனவும் அது அரசிடம் சுட்டிக்காட்டியது. எனவே, கல்வி வேலை வாய்ப்பில் குறைந்தபட்சம் 15 சதவிகித இட ஒதுக்கீடு சிறுபான்மை மக்களுக்கு கொடுத்திட வேண்டும் என மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது.

இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர் சதவிகிதம் 74.04 ஆக இருந்தபோதும் முஸ்லிம்களில் கல்வி அறிவு பெற்றவர் 40 சதவிகிதம் கூட இல்லை என்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களின் கண்டுபிடிப்பு இங்கே பெரும் அதிர்ச்சியை தந்தது. ஆகவே, மத்திய அரசின் சிறுபான்மை அமைச்சத்தின் அங்கமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அறக்கட்டளை மூலமாக சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது என காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. “யானைப்பசிக்கு சோளப்பொறி’’ என்பார்களே அதுபோல கேட்டது, இட ஒதுக்கீடு; கிடைத்தது உதவித் தொகை. இட ஒதுக்கீடு கொடுத்தால் பி.ஜே.பி. போன்ற மதவாத அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்டப்பஞ்சாயத்து உடன்படிக்கை போல கல்வி உதவித் தொகை கொடுக்கப்பட்டது. பின்னர் உ.பி.-யில் சட்டமன்ற தேர்தல் வந்த நேரத்தில் 4.5 சதவிகித இட ஒதுக்கீடு என கடந்த ஆண்டு அறிவித்து அதுவும் 1950 குடியரசுத் தலைவரின் ஆணையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்காக வானுக்கும், பூமிக்கும் குதித்து போஸ்டர் ஒட்டும் முஸ்லிம் கட்சிகள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு ரத்திற்கு சத்தமே போடாமல் இன்னமும் உறங்கிக் கொண்டிப்பருப்பது தனிக்கதை.

   பாரதீய ஜனதா கட்சியோ இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு கஜானாவையே அள்ளிக் கொடுத்துவிட்டதுபோல் ஒரு தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.

   இந்தியா முழுவதும் முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி ஆகிய சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த சுமார் 2 கோடி மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் கல்வி உதவித் தொகை கொடுப்பதாக அரசு அறிவிக்கவில்லை. வெறும் இரண்டு இலட்சம் சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்போவதாக அறிவித்தது. அதிலும், கடந்த 2012-2013-ம் கல்வியாண்டில் 43,755 முஸ்லிம் மாணவர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்தது. ஆந்திராவில் 2211, அஸ்ஸாம் 2610, பீகார் 4344, உ.பி. 9735, மேற்கு வங்காளம் 6408, ராஜஸ்தான் 1515, குஜராத் 1455, கர்நாடகா 2046, ம.பி. 1218, காஷ்மீர் 2151, ஜார்கண்ட் 1182, கேரளா 2490, ஹரியானா 387, ஹிமாச்சல் 39, மணிப்பூர் 60, சட்டீஸ்கர் 129, அருணாசலப் பிரதேசம் 6, மேகாலயா 30, மிஜோராம் 3, பஞ்சாப் 120, சிக்கிம்-3, கோவா 30 இப்படி, தமிழ்நாட்டில் வெறும் 1098 பேர் மட்டும், பாண்டிச்சேரியில் 18 பேர் மட்டும் இந்த உதவித் தொகை கல்வி கட்டணம் முழுமையும் அல்ல. . . மேல்நிலைப் படிப்பில் தொடங்கி, உயர்நிலை படிப்புகள் வரை அதாவது ரூபாய் பத்தாயிரம் தொடங்கி ரூபாய் 25 ஆயிரம் வரை.

   தமிழ்நாட்டில் 1098 முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு கொடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட இந்த உதவித் தொகைக்குத்தான் பிஜேபி.-யின் இந்த கூப்பாடு. கடந்த ஆண்டு மட்டும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி இன சிறுபான்மை மாணவியருக்கு அதாவது முப்பது சதவிகிதம் கல்வி உதவித் தொகை மாணவியருக்கு வழங்க வேண்டும். 25,126 பேருக்கு அப்படி உதவித் தொகை இந்த திட்டத்தின்படி வழங்கப்பட்டது. அதன் மொத்த தொகை எவ்வளவு தெரியுமா? இந்தியா முழுவதும் 30 கோடி ரூபாய் மட்டும்தான். இந்த 30 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களையும் பா.ஜ.க. நடத்துகிறது. இதன்காரணம் முஸ்லிம்களை எதிரிகளாக காண்பித்து, இந்து மதவெறியைத் தூண்டி தேர்தல் லாபம் பெறமுடியும் என பாரதீய ஜனதா நினைக்கிறது.

சச்சார் குழு பரிந்துரைத்த முக்கிய விஷயங்களில் ஒன்றான அரசு நிதிநிலை அறிக்கையில், திட்ட ஒதுக்கீட்டில் 15% நிதியை முஸ்லிம்களுக்கு ஒதுக்கிட வேண்டும், அரசு மற்றும் அதன் சார்பு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கான நேர்காணல் நடக்கும்போது அதிகாரிகள் குழுவில் முஸ்லிம்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் போன்ற எந்த விஷயத்தையும் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பிச்சை போடுவதுபோல் எதையாவது தூக்கி எறிந்தால் போதும்; முஸ்லிம்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என கருதித்தான் சிறுபான்மை கல்வி உதவித் தொகையை கொடுக்க முன் வந்தது. இதைக்கூட ஏற்றுக்கொள்ள பா.ஜ.க. தயாரில்லை.

   பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மை மாணவ மாணவியருக்கு உதவித் தொகை கொடுக்காதே! என தான் நடத்தும் போராட்டங்களில் ஒரு துண்டறிக்கையை கொடுத்து வருகிறது. அதில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் சில.

   இந்துக்களில் ஜாதி இருப்பதுபோல முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களில் ஜாதியில்லை. ஆனால், அந்த மதங்களில் ஜாதியை உருவாக்கி இந்து மாணவர்களின் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என இந்துக்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெற 2007-ம் ஆண்டிலிருந்து சிறுபான்மை இன மாணவர்களுக்கு இதுபோன்ற சலுகைகளை உருவாக்கி வழங்கி வருகிறது.

   கல்வியும் வேலை வாய்ப்பும் தான் இந்த நவீன யுகத்தில் அதிகாரத்திற்கும், வறுமையை விரட்டவுமான சாவி. அப்படிப்பட்டக் கல்வியும், வேலைவாய்ப்பும் இந்து மாணவர்களுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்கு களம் அமைத்து இறங்கி செயல்படுகிறது. இந்த மாநிலத்தை ஆளும் திராவிட அரசுகளும் துணை நின்று அப்பாவி இந்துக்களுக்கு துரோகம் செய்கின்றன. . . .

   இரண்டு ரூபாய்க்கு தட்டேந்தும் ஏழை பிராமணருக்கோ. . . . . இறப்பு காரியங்களில் சடங்கு செய்யும் சவண்டியின் ஏழை இந்து குழந்தைகளுக்கு கொடுக்க மனமில்லை. . . . . தோல் தொழிற்சாலை வைத்திருப்பவருக்கும், மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்து கோடி கோடியாய் பணம் வைத்திருப்பவர்களின் வாரிசுகளுக்கும் உதவித் தொகை என்ற பெயரில் அள்ளிவீச அரசுகள் தயாராய் இருக்கிறது. ஏன் இந்த கேவலமான நிலை. எல்லாம் சிறுபான்மை வாக்கு வங்கியை குறித்துவைத்து ஓட்டு பொறுக்குவதற்குதான்.

இப்படி போகிறது அந்த துண்டறிக்கையின் வாசகங்கள்.

   என்ன செய்வது? பாரதீய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். விரும்பியவாறு இந்திய முஸ்லிம்கள் இல்லை. இதுதான் பா.ஜ.க-வின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம். முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என பா.ஜ.க. நினைத்தது? இதோ அதன் ‘பிதாமகன்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் எழுதிய ‘நாம்’ என்கிற நூலில் அவரே கூறுகிறார்

“இந்தியாவில் வாழும் இந்துக்கள் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் இன்னும் மற்ற மதத்தவர்கள் இந்து கலாச்சாரத்தையும், சமஸ்கிருதத்தையும், அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்துக்களுக்கு மற்ற மதத்தவர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். மற்ற மதத்தவர்களுக்கு சொந்த விருப்பங்களோ, சலுகைகளோ இருக்க கூடாது. சலுகைகளை கேட்கவும் கூடாது.

இந்த நாட்டில் வாழ்ந்து கொள்ளலாமே தவிர சிறப்பாக தம்மை நடத்த வேண்டும் என்று மற்ற மதத்தவர் எதிர்பார்க்க கூடாது.

இந்திய நாட்டில் வாழலாமே தவிர இந்த நாட்டின் குடியுரிமை அவர்களுக்கு கிடையாது.

ஜெர்மனியில் (ஹிட்லர் ஆட்சியில் நடந்ததுபோல) இந்தியாவிலும் ஒரு மதத்தை சேர்ந்தவரே அதிகாரம் செலுத்த வேண்டும். இதர இனங்கள் ஜெர்மனியில் அழித்தொழிக்கப்பட்டதுபோல இந்தியாவில் பிற மதத்தவர் அழித்தொழிக்கப்பட வேண்டும்."

இப்படி போகிறது அந்த புத்தகத்தின் தகவல்கள் . . . . . இந்த பாசிச சிந்தனையோடு வலம்வரும் பா.ஜ.க. எப்படி இந்த குறைந்தபட்ச உதவிகளைக்கூட இஸ்லாமியர்களுக்கு செய்ய அனுமதிக்கும்?

  தமிழ்நாட்டில் 1098 முஸ்லிம் மாணவர்களுக்கும், 1197 கிறிஸ்துவ மாணவருக்கும் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை மொத்தம் எவ்வளவு என்பது சிதம்பர ரகசியம். கடந்த நான்காண்டுகளில் எத்தனை மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது என தமிழக அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டதற்கு இன்றைக்குவரை எவ்வித பதிலும் இல்லை என்பதே உண்மை. வழங்கப்படாத இந்த தொகைக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும். வெட்கங்கெட்ட இந்த மலிவான அரசியலைத்தான் இன்றைக்கு பிஜே.பி. செய்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்த 43,755 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை முழுமையாக கொடுத்தாலும், அது அரசு தன் சாதனைகளைப் பற்றி சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள ஒரு ஆண்டிற்கு இந்திய பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் செய்ய செலவிடும் தொகையைவிட குறைவானதே!

   இந்தியா முழுவதும் சிறுபான்மை மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையைவிட அதிக அளவு தொகையை தலித் மாணவர்கள் 9, 10-ம் வகுப்பினருக்கு மட்டும் சுமார் 42 இலட்சம் பேருக்கு மத்திய அரசு ஆண்டிற்கு 950 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இது பி.ஜே.பி-யின் கண்களுக்கு தெரியவில்லையோ, என்னவோ. இந்து, இந்து என முழங்கும் பி.ஜே.பி. தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதோ என்னவோ!

   மத்திய அரசு மட்டுமல்ல . . . . . . தமிழக அரசும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களிலும், கல்விக் கட்டணத்தை முற்றாக இலவசமாக்கிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதற்குரிய கட்டணத்தை அரசே கொடுத்துவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாது, தமிழக அரசு, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி, கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் உதவித் தொகை வழங்குகிறது. இவர்களையும் இந்துக்கள் பட்டியலிருந்து பி.ஜே.பி. நீக்கி விட்டதோ என்னவோ!

   கல்வி உதவித் தொகை சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பீடி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கும் மத்திய அரசு கொடுக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 2345 பள்ளிகளில் பயிலும் பீடித் தொழில் செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள் 1,22,370 பேருக்கு ரூ.16.50 கோடி ஆண்டிற்கு மத்திய அரசு வழங்குகிறது.

  சுதந்திரம் வாங்கி 68 ஆண்டுகள் கடந்த பின்னரும், தனது மக்களில் ஒருபிரிவினர் உதவித் தொகை வாங்கும் அளவிற்கே இன்னமும் உள்ளனர் என்றால் அதற்காக இங்கே ஆண்ட அரசுகள் வெட்கப்பட வேண்டும். அதை விளம்பரப்படுத்தி பிரச்சாரம் ஆக்கும் கட்சிகள் குறிப்பாக பாரதீய ஜனதா போன்றவை வெட்கப்பட வேண்டும், என்ன செய்வது?

   ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தும் காங்கிரஸ் கட்சி,
  அதை காரணம் காண்பித்தே அரசியல் வயிறு வளர்க்கும் பாரதீய ஜனதா கட்சி!
  இங்கே யாருக்கும் வெட்கமில்லை...

- கே.எம்.சரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)